Search This Blog

Wednesday, May 09, 2012

எனது இந்தியா! (மதுரையை சூறையாடிய மாலிக் கபூர் !) - எஸ். ராமகிருஷ்ணன்....


குத்புதீன் ஐபக் ஆரம்பித்து கட்டி முடிக்​காமல் போன மினாரையும் இல்ட்டுமிஷ் கட்டி முடித்தார். வெள்ளி நாணயத்தை அமல்​படுத்தி நாடெங்கும் ஒரேமுறை பணப் பரிமாற்றம் இருக்கும்படி செய்தவர் இல்ட்டுமிஷ். இவரது மகன்கள் அரசாட்சி செய்யத் திறமையற்றவர்கள் என்பதால், அவருக்குப் பின் அவரது மகள் ரஷியா பேகம், டெல்லி சுல்தான் ஆனார்.குத்புதீன் ஐபக்கின் வாழ்க்கை கோரி முகமது​வால் மாற்றம் அடைந்ததைப் போல... மாலிக் கபூரின் வாழ்க்கை, அலாவுதீன் கில்ஜியால் எழுச்சி அடைந்தது. மாலிக் கபூர் என்றால் எஜமானனுக்கு உரி​யவர் என்றுபொருள். அவர் ஓர் அரவாணி. இவர் எங்கே பிறந்தார்? பெற்றோர் யார்? என்பதைப் பற்றிய தெளிவான ஆதாரங்கள் இல்லை. ஒரு வேசியின் பிள்ளை என்றும், இந்து வணிகரின் மகன் என்றும் இருவிதமான தகவல்கள் இருக்கின்றன. ஜலாலுதீன் கில்ஜியின் மருமகனான அலாவுதீன் கில்ஜி, தன் மாமனைக் கொன்று ஆட்சியைக் கைப்பற்றினார். 1296 முதல் 1316 வரை டெல்லியை ஆட்சி செய்தார் கில்ஜி. அலாவுதீன் கில்ஜியின் அவையில் புகழ்பெற்ற பாரசீகக் கவிஞர் அமீர் குஸ்ரு அரச கவியாக இருந்தார். இவர்தான், சிதார் இசைக் கருவியை உருவாக்கியவர். குஸ்ரு...  வரலாற்று ஆசிரியரும்கூட! இவர் எழுதிய 'தாரிக்கி அலாய்’ என்ற நூல் கில்ஜியின் அரசாட்சியைப் பற்றி விரிவாகப் பேசுகிறது.

குஜராத்தில் உள்ள காம்பத் நகரை அலாவுதீன் கில்ஜியின் படை வெற்றிகொண்டபோது, மன்னருக்குப் பரிசளிக்க ராணி கமலாதேவியைத் தூக்கிச் சென்றனர். அப்படி ராணியோடு அனுப்பப்பட்ட அடிமைகளில் ஒருவர்தான் மாலிக் கபூர். காம்பத் நகரில் உள்ள ஒரு வணிகரின் வீட்டில் அவர் அடிமையாக இருந்தார். ஆயிரம் நாணயம் தந்து வாங்கப்பட்டதால் அவரை ஹசார் தினார் என்று அழைத்தனர் எனவும் ஒரு வரலாற்றுக் குறிப்பு இருக்கிறது.கில்ஜியின் ஆட்சிக் காலத்தில் டெல்லியில் மது தடை செய்யப்பட்டு இருந்தது. காபூலில் இருந்து மது கடத்திக் கொண்டுவந்தவர்களைப் பிடித்து, உயிரோடு மண்ணில் புதைத்த சம்பவங்களும் நடந்து இருக்கின்றன. பெண்கள் மீது கில்ஜி அதீத மோகம்கொண்டவர் என்றும் கூறப்படுகிறது. அதனால், கமலா தேவியை மதமாற்றம் செய்து திருமணம் செய்துகொண்டதோடு அவளோடு கொண்டுவரப்பட்ட அடிமை மாலிக் கபூரை தனது படுக்கைத் தோழனாக வைத்துக்கொண்டார்.கில்ஜியின் ஆட்சியில் பொது மக்களின் அன்றாடத் தேவைக்கான தானியங்கள், உணவுப் பொருட்களின் விலை ஏற்றத்தைக் கட்டுப்படுத்துவதற்காக ஏழு முக்கிய உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன. இதுபற்றி, பேராசிரியர் அருணன் தனது கட்டுரை ஒன்றில் விரிவாகக் குறிப்பிட்டு இருக்கிறார்.கில்ஜியின் முதல் உத்தரவானது​ கோதுமை, பார்லி, அரிசி உள்ளிட்ட ஆறு தானியங்களுக்கான அடிப்படை விலையை அரசே தீர்மானிக்கும் என்பதுதான். மழை பெய்தாலும் பொய்த்துப்​போனாலும் விலை மாறவே மாறாது. அதுபோலவே, கள்ளச் சந்தையை தடுக்க சந்தைகளின் கட்டுப்பாட்​டாளர் என்ற அதிகாரி நியமிக்கப்பட்டு அவரது கண்காணிப்பில் விற்பனை நடக்கும். தானியங்களைப் பதுக்கியவருக்கு மட்டும் இல்லாமல், அதைக் கண்டுபிடிக்காத அதிகாரிகளுக்கும் கடும் தண்டனை அளிக்கப்படும். அதுபோலவே, வரி செலுத்துவோரில் ஒரு பகுதியினர் தானியமாகத் தரும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அந்தத் தானியம், சேமிப்புக் கிடங்கில் பாதுகாக்கப்பட்டு, தேவைப்படும் நேரத்தில் விநியோகிக்க உத்தரவு இடப்பட்டது.விவசாயிகள், தங்கள் பொருட்களை நேரடியாகத் தாங்களே விற்பனை செய்துகொள்ளும் சந்தை உருவாக்கப்பட்டது. எல்லாவற்றையும்விட, அன்றாடப் பொருட்களின் சந்தை நிலவரம் பற்றி அரசுக்கு நேரடியாகத் தகவல்கள் ஒவ்வொரு நாளும் தரப்பட வேண்டும் என்றும் கில்ஜி உத்தரவிட்டார். இதன் காரணமாக, தானிய விலை கட்டுக்குள் இருந்தன.


அதுபோலவே, தனது படையில் உள்ள ஒட்டுமொத்தப் படை வீரர்களின் பெயர் விவரங்களை முறையாகப் பட்டியலிட்டு, அவர்களுக்கு மாதச் சம்பளம் தரும் முறையும் கில்ஜி அறிமுகம் செய்தார். ஒரு பக்கம் இதுபோன்ற சீர்திருத்தங்களைச் செய்த கில்ஜி, மறு பக்கம் கோயில்களை இடித்துக் கொள்ளையிட்டு பொருட்களைக் குவிப்பதிலும் ஆர்வம் காட்டினார். இவரது ஆட்சிக் காலம் முழுவதும் படையெடுப்புகளால் நிரம்பி இருக்கிறது.அடிமையாக வந்து சேர்ந்த மாலிக் கபூர், கில்ஜி​யின் காதலியைப் போல நெருக்கமாக இருந்தார். அதை, வெளிப்படையாகவே கில்ஜி​யின் மனைவி கண்டித்தார். ஆனால், கில்ஜி கண்டு​கொள்ளவில்லை. தனக்கு விருப்பமான அவரைப் படைப் பிரிவின் உதவி அதிகாரியாக நியமித்தார். சில ஆண்டுகளுக்குள் மாலிக் கபூர், கில்ஜியின் தளபதிகளில் ஒருவரானது அவரது நெருக்கமான உறவால்தான் என்கிறார்கள்.டெல்லியைச் சுற்றியுள்ள பகுதிகளைத் தன்வசப்​படுத்திச் சூறையாடிய கில்ஜி, தென்னிந்திய அரசுகளை ஒடுக்கி செல்வத்தைக் கொள்ளையடிக்க மாலிக் கபூர் தலைமையில் தனது படையை அனுப்பிவைத்தார். தேவகிரி ராஜ்ஜியம், மைசூர், வாரங்கல், துவாரசமுத்திரம் எனச்  சூறையாடி ஆயிரக்கணக்கான மக்களைக் கொன்று குவித்தான் மாலிக் கபூர்.அப்போது, பாண்டிய நாட்டு மன்னராக இருந்த மாறவர்மன் குலசேகர பாண்டியனுக்கு, சுந்தரபாண்டியன், வீரபாண்டியன் என இரண்டு வாரிசுகள் இருந்தனர். அவர்களுள் சுந்தரபாண்டியன், பட்டத்தரசியின் மகன். வீரபாண்டியன், ஆசை​நாயகியின் மகன். வீரபாண்டியனுக்கு இளவரசுப் பட்டம் சூட்டியதை எதிர்த்த சுந்தர பாண்டியன், தனது தந்தையைக் கொன்றுவிட்டு மதுரையில் முடி சூட்டிக்கொண்டான். இதனால், சகோதரர்களுக்கு இடையே போர் மூண்டது.

இதில், சுந்தரபாண்டியன் தோல்வி அடைந்து ஓடிவிட்டான். பிறகு, அரசாட்சியை மீட்க மாலிக் கபூரின் உதவியை நாடினான். மாலிக் கபூர் தனது படையுடன் வந்து வீரபாண்டியனை வெற்றிகொண்டதோடு, சுந்தரபாண்டியனையும் அடிமைப்படுத்தினான் என்பதும் குறிப்​பிடத்​தக்கது.மாலிக் கபூர், மதுரையைத் தாக்கியபோது மதுரை கோயிலில் யானை மட்டுமே மிஞ்சி இருந்தது. அதைக் கைப்பற்றியதோடு, கோயிலுக்குத் தீ வைத்துவிட்டு அதுவரை கைப்பற்றிய பெரும் செல்வத்துடன் டெல்லி புறப்பட்டான். 312 யானைகள், 20 ஆயிரம் குதிரைகள், கோகினூர் வைரம், தங்க நாணயங்கள், முத்து, மரகதம், மாணிக்கம் என்று கொள்ளையடித்த பொருட்களுடன் டெல்லி வந்த மாலிக் கபூருக்கு பெரும் வரவேற்பு அளிக்கப்பட்டது.பரிசாகக் கொண்டுவந்த பொருட்களை அனை​வரும் காணும்படியாக பொது தர்பார் நடத்தினார் சுல்தான் அலாவுதீன். இதற்குப் பிறகு, 'மாலிக் நைப்’ என்ற புதிய பட்டம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டு, மன்னரின் பிரிக்க முடியாத துணையாக மாறினான் மாலிக் கபூர். 1316-ல் அலாவுதீன் கில்ஜியின் உடலில் கொப்பளங்கள் ஏற்பட்டு படுக்கையில் வீழ்ந்தார். அதன் தொடர்ச்சியாக, அவரது நினைவாற்றல் குறையத் தொடங்கியது. அவர், அரசாட்சியில் இருந்து ஒதுங்கத் தொடங்கவே, நாட்டில் நிர்வாகக் குழப்பங்கள் ஏற்பட்டன. இந்த நிலையில், அவர் விஷம் கொடுத்துக் கொல்லப்பட்டார். மாலிக் கபூர், ஆட்சியைக் கைப்பற்றத் திட்டமிட்டான். கில்ஜி வாரிசுகளின் கண்களைக் குருடாக்கிவிட்டு மீதம் இருந்த சிறுவனை கைப்பொம்மை போல அரியணையில் அமர்த்தி, தானே டெல்லியை ஆளத் தொடங்கினார்.


அடிமையாக, ஒரு வேளை உணவுக்குக்கூட அடுத்தவரை நம்பி இருந்த மாலிக் கபூருக்கு, அதிகார போதை மட்டுமே ஆறுதல் தருவதாக இருந்தது. எதிர்ப்பவர்களை எல்லாம் கொடூரமாகக் கொன்று குவித்த மாலிக் கபூர், டெல்லியைத் தனது கட்டுபாட்டுக்குள் வைத்துக்கொண்டார். ஆனால், கில்ஜியின் குடும்பத்தினர் ஒன்று சேர்ந்து, மாலிக் கபூர் உயிரோடு இருக்கும் வரை தங்களால் நிம்மதியாக வாழ முடியாது என்று, அவனது பாதுகாவலர்களைக்கொண்டே அவனை மடக்கினர்.டெல்லியில் தனி அரண்மனையில் படுக்கையில் இருந்த மாலிக் கபூரை, நள்ளிரவில் சுற்றி வளைத்த கில்ஜியின் விசுவாசிகள், கை வேறு கால் வேறாக வெட்டித் தலையை தனியே எடுத்தனர். டெல்லி கோட்டையின் ஒவ்வொரு வாசலிலும் ஒவ்வொரு உறுப்புகளைத் தொங்கவிட்டு பழிதீர்த்துக்கொண்டனர்.எதிர்ப்பே இல்லாமல் பெரும் படை நடத்திச் சென்று, இந்தியாவை நடுங்கச் செய்த மாலிக் கபூர், அடையாளமே இல்லாமல் அழித்து ஒழிக்கப்பட்டான். ஓர் அடிமையாகத் தொடங்கி ஆட்சி அதிகாரம் வரை உயர்ந்த இரண்டு பேரின் பெரும் எழுச்சியும் வீழ்ச்சியும் கண்டது சரித்​திரம் எனும் பேராறு. இவை, காலத்தின் வெறும் சுழிப்புகள்தான் என்பதுபோல அந்த ஆறு நிசப்தமாக ஓடிக்கொண்டு இருக்கிறது.அதிகாரத்துக்கான பேராசை தற்காலிகமாக ஒருவனை உயர்த்திவிடக்கூடும். ஆனால், அவனது வீழ்ச்சி எப்போதுமே படுமோசமானதாக இருக்கும் என்பதுதான் வரலாறு கற்றுத்தரும் பாடம்! 

விகடன் 

1 comment:

  1. ஓர் அடிமையாகத் தொடங்கி ஆட்சி அதிகாரம் வரை உயர்ந்த இரண்டு பேரின் பெரும் எழுச்சியும் வீழ்ச்சியும் கண்டது சரித்​திரம் எனும் பேராறு.

    சரித்திரப் பகிர்வுக்கு பாராட்டுக்கள்..

    ReplyDelete