Search This Blog

Wednesday, August 10, 2011

ஒரு நோயாளியின் டைரிக் குறிப்பு! - ஓ பக்கங்கள், ஞாநி


வாழ்க்கை முழுவதும் ஒருவர் மூன்று இடங்களுக்குச் செல்ல வேண்டிய அவசியமே இல்லாமல் வாழ்ந்தால் அவர் நிறைவான வாழ்க்கையை வாழ்ந்தார் என்று சொல்லலாம் என்று எனக்குத் தோன்றும். ஒன்று மருத்துவமனை; அடுத்தது காவல் நிலையம்; மூன்றாவது நீதிமன்றம். கடைசி இரண்டிலிருந்து தப்பிப்பவர்கள்கூட முதலாவதிலிருந்து தப்பிக்க முடிவதில்லை.டாக்டரைப் பார்க்கச் செல்வதே எனக்குப் பிடிக்காது. பெரியவனானதும் டாக்டர் ஆவேன் என்று ஒருபோதும் நான் அறியாப் பருவத்தில் அறியாமல்கூட சொன்னதில்லை.

சிறு வயதில் குடும்ப டாக்டர் வரதராஜனிடம் காய்ச்சல் போன்றவற்றுக்கு அழைத்துச் செல்வார்கள். அவரை எனக்கு மிகவும் பிடிக்கும். அவர் எதற்கெடுத்தாலும் ஊசி போட மாட்டார். முற்றிலும் மரத்தாலான பொருட்களே நிரம்பிய பெரிய கூடம்தான் அவரது க்ளினிக். நான் போகிறபோதெல்லாம் அவர் பெரிய வேலைப்பாடுகள் நிரம்பிய மர மேசையின் பின்னால் இருக்கும் அழகான நாற்காலியில் உட்கார்ந்திருக்க மாட்டார். பக்கத்து வராந்தாவில் இருக்கும் பழங்கால ஈசிசேரில் உட்கார்ந்து பேப்பர் படித்துக் கொண்டிருப்பார்.  வட்டக் கண்ணாடியும் வழுக்கைத் தலையும் பொன்னிற மேனியுமாக அவர் மேசைக்குப் பின்னால் வந்து உட்கார்ந்து கூரையிலிருந்து மேசைக்கு நேர் மேலாகத் தொங்கும் விளக்கை சங்கிலியால் தமக்கு நெருக்கமாகக் கீழே இழுத்துக் கொண்டு ப்ரிஸ்க்ரிப்ஷன் எழுதுவதைப் பார்த்தால், ஏதோ ஐரோப்பிய ஓவியத்தில் விஞ்ஞானியைப் பார்ப்பதுபோல இருக்கும். என்ன சிக்கலுடன் சென்றிருந்தாலும் அவரது கம்பவுண்டர் ஒரு பிங்க் நிற மிக்சர்தான் கொடுப்பார். ஒரு பொன்விழா காலத்துக்குப் பிறகும் இன்னமும் என் நாக்கில் அந்தச் சுவை எஞ்சியிருக்கிறது. அந்த மிக்சரில் நோய் குணமாகாமல் இருந்ததே இல்லை என்பதையும் அழுத்தமாகச் சொல்ல வேண்டியிருக்கிறது. 

அதன்பிறகு வாழ்க்கையில் பல மருத்துவ மனைகளுக்கு நான் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் செல்ல வேண்டியவனாகி விட்டேன். மற்றவர்களுக்காக. மாமா, அம்மா, பெரியம்மா, அப்பா, தங்கை, நண்பர்கள் என்று ஒவ்வொருத்தர் நிமித்தமும் சென்ற ஒவ்வொரு அனுபவமும், பிரசவ வைராக்கியம், மயான வைராக்கியம் போல மருத்துவமனை வைராக்கியத்தை என்னிடம் ஏற்படுத்தின. ஆனாலும் தொடர்ந்து போய்க் கொண்டுதான் இருக்கிறேன், மற்றவர்களுக்காகச் சென்ற ஒவ்வொரு முறையும், எனக்காக இங்கே வரும் நிலை வந்துவிடக் கூடாது என்று உள்ளூரப் பதற்றம் ஏற்படும். ஆனால், கடந்த சில வருடங்களில் எனக்காகவும் அடிக்கடி மருத்துவமனைக்குச் செல்ல வேண்டியவனாகி விட்டேன். அப்படிச் சென்றதில் எனக்குப் பெரு மகிழ்ச்சியை ஏற்படுத்திய ஒரே அனுபவம் கேட்டராக்ட் அறுவை சிகிச்சைக்காகச் சென்றதாகும். காரணம், கேட்டராக்ட் சிகிச்சை முடித்து கண்ணில் ஐ.ஓ.எல். எனப்படும் செயற்கை லென்ஸ்கள் பொருத்தியதில் சிறுவயது முதல் என்னைப் பெரிதும் பாதித்து வந்த பார்வைக் குறைபாடு அதிசயம் போல நீங்கியதுதான்.

எந்தச் சந்தோஷமும் முழுமையாகக் கிடைப்பதில்லை. கூடவே சின்ன வருத்தங்களும் கலந்து வந்து விடுகின்றன. இரு கண்களிலும் கேட்டராக்ட் சிகிச்சைக்குப் பின் சிறப்பான பார்வை கிட்டிய போதும் ஒரு கண்ணில் சிறிய சிக்கல் ஏற்பட்டு விட்டது. ஒரு சின்ன தகவல் எனக்குச் சொல்லப்படாததே காரணம்.இது தகவல் யுகம். எதைப் பற்றியும் எல்லா தகவல்களும் கிடைக்கும் காலம். ஆனால், நம்மைச் சுற்றி தகவல்கள் குவிந்து கிடந்தால் போதாது. நமக்குத் தேவையானவை நமக்குக் கிட்டியாக வேண்டும். என் முதல் கண் அறுவை சிகிச்சை முடிந்ததும், அந்தச் சின்ன தகவல் எனக்குத் தெரியாததால், கண்ணில் சிக்கல் ஏற்பட்டது. புரை நீக்குவதற்காக கண்ணில் இட்ட ஓட்டை அடைபடாமல் உள்விழி அதனூடே பிதுங்கத் தொடங்கியது.


அறுவை சிகிச்சை முடிந்து ஓட்டை மூடப்பட்ட பிறகு திறந்துகொள்ள என்ன காரணம்? மலச்சிக்கல்தான். அறுவை சிகிச்சைக்குப் பின்னர் ஒவ்வொரு முறை கழிப்பறைக்குச் செல்லும் போதும், மலச் சிக்கல் இருந்தால், மலத்தை வெளியேற்ற சிரமப்படக் கூடாது. அப்படிச் சிரமப்படுத்தினால், அது கண் அழுத்தத்தைப் பாதிக்கும் என்பதுதான் எனக்குச் சொல்லப்படாமல் விட்டுப்போன தகவல்.  மருத்துவர்களிடம் செல்லும்போது பொதுவாக நிறைய கேள்விகள் கேட்டு முடிந்தவரை பெருமளவு தகவல்களைத் திரட்டிக் கொள்வது என் வழக்கம். பதில் சொல்லத் தயங்கும் மருத்துவருடன் கடுமையாகச் சண்டையிட்டதும் உண்டு. நோயாளிக்கு முழுமையாகத் தகவல்கள் தெரிவிக்கப்பட வேண்டும் என்ற பார்வை அண்மைக் காலமாக மருத்துவர்களிடம் அதிகரித்திருக்கிறது.சில சமயங்களில் சில எளிய அடிப்படைத் தகவல்கள் நோயாளிக்கே தெரிந்திருக்கும் என்று கருதி அவற்றை மருத்துவர்கள் சொல்லாமல் விட்டுவிடுவதும் உண்டு. எனக்கு அப்படித்தான் நேர்ந்திருக்க வேண்டும்.எளிய தகவல் ஆனாலும் அதை நோயாளிக்குச் சொல்லாமல் விட்டால் பெரும் சிக்கல்கள் ஏற்படக் கூடும் என்பதற்கு ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது. அதுவும் கண் தொடர்பானதுதான். 


புகழ்பெற்ற கண் மருத்துவர் ஒருவர், புகழ்பெற்ற ஓர் சமயப் பெரியவருக்கு கண் அறுவை சிகிச்சை செய்தார். மருத்துவர் பெரியவரின் தீவிர பக்தர். பக்தி மேலோங்க, சிகிச்சை முடிந்ததும், ஒரு தகவலைச் சொல்லாமல் விட்டு விட்டார். பெரியவர் தம் ஆசாரங்களின் படி, தலைக்குக் குளித்தார். அறுவை சிகிச்சை செய்த கண் பாதிப்புக்கு உள்ளாயிற்று. இந்தச் சம்பவம் பற்றிப் பல வருடங்கள் முன்பு கேள்விப் பட்டேன். அது உண்மைதானா என்று அந்த மருத்துவரிடமே கேட்கும் வாய்ப்பு சென்ற வருடம், அவரை ஒரு இணைய தளத்துக்காகப் பேட்டி எடுக்கும்போது கிடைத்தது. உண்மைதான் என்றார் நேர்மையான அவர்! அடுத்த ஆபரேஷன்போது பக்தராக நடந்துகொள்ளாமல் மருத்துவராக நடந்துகொண்டதையும் குறிப்பிட்டார்.எனவே, தகவல் இன்மையால் சிக்கல் ஏற்பட்டது எனக்கு மட்டுமல்ல. பலருக்கும் இது சாத்தியமே.சுமார் ஐந்தாண்டுகளாகப் பெரும் பிரச்னையாகாமல் இருந்து வந்த என் வலது கண் அண்மையில் ஒழுகத் தொடங்கி யது. அப்படியே விட்டால், அது முழுமையாகப் பார்வை இழப்புக்குக் கொண்டு சென்றுவிடும் என்று எச்சரித்த மருத்துவர்கள், அறுவை சிகிச்சை செய்யச் சொன்னார்கள். சென்ற வாரம் என் கண்ணுக்கு பஞ்சர் பார்க்கப்பட்டது. எளிமையாகச் சொல்வதானால் அது அப்படிதான். கண்ணில் ஏற்பட்ட ஓட்டையை மூட அதன் மீது ஒரு சிறு துண்டாக இரவல் கார்னியாவை ஒட்டித் தைத்து பஞ்சர் ஒட்டும் அறுவை சிகிச்சையை பேட்ச் கிராஃப்ட் என்கிறார்கள்.


ஜகத்குரு காஞ்சி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி நேத்ர நிலையம் என்று இப்போது அழைக்கப்படும் முன்னாள் விலிங்டன் மருத்துவமனையில் இந்த ஆபரேஷன் நடந்தபோது பிரமித்துப் போனேன். அந்த நிலையம் ஒரு பாரத விலாஸ் மாதிரி இருக்கிறது. இந்தியாவின் எல்லா பாகங்களிலிருந்தும் நோயாளிகள் வந்து குவிகிறார்கள். மருத்துவமனை ஊழியர்கள் பெரும்பாலோர் மூன்று மொழிகளேனும் பேசுகிறார்கள். அறுவை சிகிச்சை நடைபெறும் தளத்தில் காத்திருப்புக் கூடத்தில் ஒரு மணி நேரத்துக்கு மேல் இருந்தபோது ஒரு பக்கம் ஆப்பரேஷன் முடிந்தவர்களும் மறுபக்கம் காத்திருப்பவர்களுமாக சுமார் இருபது பேரை உற்று கவனிக்க முடிந்தது. எந்த ஒரு மருத்துவமனையில் ஒரு மணி நேரம் இருந்து நோயாளிகளை உற்று கவனிக்க முடிந்தாலும் ஏன் சித்தார்த்தன் புத்தனானான் என்று புரிந்து கொண்டுவிட முடியும். என் வழக்கம் போல ஆபரேஷன் போது டாக்டருடன் பேசிக்கொண்டே இருந்தேன். முகத்தை மூடி ஆக்சிஜன் டியூப்களை மூக்கில் மாட்டினாலும், நாம் பேசுவதை நிறுத்தமுடியாதல்லவா... டாக்டரும் பேசிக் கொண்டேதான் ஆபரேஷன் செய்தார். என்னோடு மட்டுமல்ல. கூட பணி புரிபவருடன். ஒவ்வொரு கட்டத்திலும் அவர் என்ன செய்கிறார், உதவியாளர் என்ன செய்ய வேண்டுமென்று சொல்லிக் கொண்டே செய்தார். நடுவே செல்ஃபோன் வந்தது. அதிலும் பேசினார். கையென்னவோ என் கண் மீதுதான். மருத்துவமனை நிர்வாகி ஒருவர் நடுவே வந்து டாக்டரிடம் ‘இப்போது பேசலாமா? என்று கேட்டுவிட்டு அலுவலகப் பிரச்னையை விவாதித்துவிட்டுப் போனார்.


ஒரு மணி நேர ஆபரேஷனுக்குப் பின்னர் மறுநாள் காலையிலிருந்து வழக்கம் போல கம்ப்யூட்டர், செய்தித் தாள்கள், டி.வி., நண்பர்கள் என்று சகஜ வாழ்க்கைக்குத் திரும்பிவிட்டேன். சுஸ்ருதர் கண் புரையை நீக்க பழுக்கக் காய்ச்சிய இரும்பை கண்ணில் ஒற்றி எடுத்த நாட்க ளில் நல்லவேளை நான் இருந்திருக்கவில்லை. ஒரு நாளைக்கு ஆறு முறை மூன்று விதமான சொட்டு மருந்துகளை ஊற்றிக் கொள்வதே அலுப்பாக இருக்கிறது.நவீன மருத்துவம் மிகப் பெரும் வளர்ச்சியை அடைந்திருக்கிறது. அந்த வளர்ச்சி சென்னைக்கு உடனுக்குடன் வந்துகொண்டிருக்கிறது என்பதன் அடையாளத்தை மருத்துவமனையில் பார்த்தேன். வட இந்தியாவின் பல மூலைகளிலிருந்து நோயாளிகள் வந்து உட்கார்ந்திருக்கிறார்கள். அங்கெல்லாம் இது போன்ற மருத்துவமனைகள் இல்லையா என்று கேட்டால், இல்லை என்றே பதில் வருகிறது. மருத்துவத்தில் நிச்சயம் தெற்கு தழைக்கிறது. வடக்கு வாடுகிறது.சாதாரண கேட்டராக்ட் மட்டும் இல்லை. ஒருவர் பல்லை எடுத்து அதிலிருந்து ஒரு திசுவை அவர் கன்னத்தில் பதித்து வளர்த்து, பின்னர் அதைக் கண்ணில் பொருத்தி, கண்பார்வையற்றவரைப் பார்க்கவைக்க உதவும் modified osteo-odonto-keratoprosthesis எனப்படும் சிகிச்சைகள் எல்லாம் இன்று சென்னையில் நடக்கின்றன.

எல்லாவற்றுக்கும் ஒரு விலை இருக்கிறது. பொருளில்லார்க்கு இவ்வுலகு இல்லை; இல்லவே இல்லை. என் ஆப்பரேஷனுக்கு ஒரு பெருந்தொகை (எனக்கு அது பெருந்தொகைதான்) சொன்னார்கள். நான் வாரக் கூலி எழுத்தாளன். மெடிகல் இன்சூரன்ஸ் இல்லாதவன் என்று விண்ணப்பித்ததும் கொஞ்சம் குறைத்துக் கொண்டார்கள். எனக்கு உதவ மகனும், நண்பர்களும் இருப்பதால் தப்பித்துக் கொண்டேன்.ஆனால், இன்றைய வாழ்க்கை டாக்டர் வரதராஜன் க்ளினிக்கின் மிக்சர் காலத்து எளிமையான வாழ்க்கையாக இல்லை. ஆயுள் இன்சூரன்ஸ் வேண்டாம்; மெடிகல் இன்சூரன்ஸ் வேண்டாம்; முடிந்தால் வங்கிக் கணக்கு கூட வேண்டாம் என்று எழுபதுகளில் நானும் என்னைப் போன்றவர்களும் ‘வந்ததை வரவில் வைப்போம். சென்றதைச் செலவில் வைப்போம்’ எனப் பாடி வாழ்ந்த வாழ்க்கை சாத்தியம் இல்லை. ஒவ்வொரு குடிமகனுக்கும் இன்சூரன்ஸ், மெடிகல் இன்சூரன்ஸ் தேவைப்படுகிறது. சாதாரண, எளிய மனிதர்களுக்கு, நோயாளிகளாக இருக்கக்கூட தகுதி இல்லை. அதற்குக் கூட பணம் தேவைப்படுகிறது.

எல்லா குடிமக்களுக்கும் தரமான கல்வியையும் மருத்துவத்தையும் இலவசமாகக் கொடுக்கக்கூடிய அரசுக்காக ஏங்குகிறேன். நமக்கு வாய்த்ததெல்லாம் மிக்ஸியும், டி.வி.யும் கொடுக்கிற அரசுகள் தான்.

இந்த வார சந்தேகம்!

சன் பிக்சர்ஸ் சக்சேனா மீதான மோசடி வழக்குகள் ஒவ்வொன்றாக நீதிமன்றத் துக்கு வெளியே சமரசமாகி, புகார்களையும் வழக்கையும் திரும்பப்பெறுவது நடந்து வருகிறது. எனக்குத் தர வேண்டிய பணத்தைக் கொடுக்காமல் ஏமாற்றினார் என்ற புகாரைச் சொல்பவர், புகாரைக் கொடுத்ததும் தனக்கு வரவேண்டிய பணம் வந்துவிட்டது என்று சொல்லி வாபஸ் பெறுவது மட்டுமா நடக்கிறது? என்னை அறையில் அடைத்து வைத்து மிரட்டினார்கள். கொலை மிரட்டல் செய்தார்கள். குடும்பத்தையே அழிப்பதாக எச்சரித்தார்கள் என்றெல்லாம் புகார்களில் சொன்னதெல்லாம் என்ன ஆயிற்று? நீதிபதி அவற்றை விசாரிக்க வேண்டாமா? பணம் திரும்பி வந்துவிட்டால், மிரட்டல் குற்றமும் இல்லாமல் போய்விடுமா? மிரட்டல் குற்றமே பொய்க் குற்றச்சாட்டு என்றால், பொய்ப் புகார் கொடுத்து நீதிமன்ற நேரத்தை வீணடித்தவருக்குத் தண்டனை கிடையாதா? 

 

1 comment: