Search This Blog

Sunday, August 28, 2011

எகிறப் போகுது செல்போன் கட்டணம் - செலவை குறைக்க ஆலோசனைகள்

செலவைக் குறைக்க சூப்பர் பிளான்!


''செல்போன் மற்றும் தொலைபேசிகளுக்கான கட்டணம் 17  சதவிகிதம் வரை உயரப்போகிறது...''பத்திரிகைகளில் வெளியான இந்த செய்தியைப் படித்து விட்டு பதறிப் போனவர்கள் பல ஆயிரம் பேர். காரணம், நடுத்தர வர்க்கத்து வீடுகளின் பட்ஜெட்டில் முக்கியமான இடம் பெற்றிருப்பது செல்போன்களுக்கான செலவு. ஒவ்வொரு வீட்டிலும் மூன்று, நான்கு செல்போன்களாவது இருக்கும் நிலையில், அடுத்த மாத பட்ஜெட்டில் எவ்வளவு ரூபாய் எகிறப் போகிறதோ என்று தவித்துக் கொண்டிருக்கிறார்கள் சாமானியர்கள்.

ரு காலத்தில் பணக்காரர்களின் அடையாளங்களில் ஒன்றாக இருந்த தொலைபேசி, காலப்போக்கில் அனைவரது அத்தியாவசியப் பொருளில் ஒன்றாகிப் போனது! 1990-களின் இறுதியில் செல்போன் அறிமுகமான போது இன்கம்மிங் கால்களுக்கும் கட்டணம் செலுத்த வேண்டி இருந்தது. அதன் பிறகு இன்கம்மிங் கால்களுக்கான கட்டணம் படிப்படியாகக் குறைய ஆரம்பித்து, ஒருகட்டத்தில் இலவசமானது. அடுத்தகட்டமாக இன்னும் நிறையபேர் செல்போனை பயன்படுத்த வேண்டும் என்று நினைத்து அவுட் கோயிங் கால்களுக்கான கட்டணத்தையும் குறைத்தார்கள். இரவில் போன் செய்தால் எந்தவிதக் கட்டணமும் இல்லை என்பதில் ஆரம்பித்து, இலவச எஸ்.எம்.எஸ்-வரை பல்வேறு சலுகைகளைக் கொடுத்து மக்களை இழுத்தன செல்போன் நிறுவனங்கள். 

அப்படி இதுவரை சலுகைகளைக் கொடுத்து வந்த செல்போன் நிறுவனங்கள், இப்போது கட்டணங்களை உயர்த்த ஆரம்பித்திருக்கின்றன. தமிழ்நாட்டில் ஏர்செல்லும், டாடா டொகோமோவும் ஏற்கெனவே கட்டணத்தை உயர்த்திவிட்டன. மற்ற மாநிலங்களில் ஏர்டெல், ஐடியா, வோடோஃபோன் நிறுவனங்கள் கட்டணத்தை உயர்த்தி இருக்கிறது. கூடிய விரைவில் இந்நிறுவனங்கள் தமிழ்நாட்டிலும் உயர்த்தலாம் என்கிறார்கள்.

செல்போன் நிறுவனங்கள் இப்போது திடீரென கட்டணத்தை உயர்த்த என்ன காரணம்?

இந்தியாவில் சுமார் 60.6 கோடி செல்போன் வாடிக்கையாளர்கள் இருக்கிறார்கள். (ஆதாரம்: செல்லூலார் ஆபரேட்டர் அசோசியேஷன் ஆஃப் இந்தியா- ஜூலை 2011 வரை). செல்போனைப் பயன்படுத்தும் பழக்கம் இந்த வாடிக்கையாளர்களிடம் நன்றாக ஊறிவிட்டது. இனிமேல் இவர்களால் செல்போனை பயன்படுத்தாமல் இருக்க முடியாது என்பதால், கட்டணத்தைக் கொஞ்சம் உயர்த்தினாலும் கண்டுகொள்ள மாட்டார்கள் என்று நினைக்கின்றன செல்போன் நிறுவனங்கள்.

அடுத்து முக்கிய காரணம், மொபைல் நம்பர் போர்ட்டபிலிட்டி. இந்த ஆண்டின் ஆரம்பத்தில் அறிமுகமானது இந்த வசதி. ஒரு நிறுவனத்தின் சேவை பிடிக்கவில்லை என்பவர்கள் அடுத்த நிறுவனத்துக்கு மாறிக்கொள்ளலாம் என்ற இந்த வசதியை விரும்பியவர்கள் ஏற்கெனவே தாவி முடித்திருப்பார்கள். இப்போது கட்டணத்தை உயர்த்தினால் அவர்கள் இன்னொரு நிறுவனத்துக்குச் செல்வதற்கான வாய்ப்பு குறைவு என்றும் செல்போன் நிறுவனங்கள் நினைக்கின்றன.

மூன்றாவது, செல்போன் நிறுவனங்களின் செலவு. கடந்த சில காலாண்டுகளாகவே செல்போன் நிறுவனங்களின் வருமானம் குறைந்து கொண்டே வருகிறது. ஒவ்வொரு நிறுவனமும் பல ஆயிரம் கோடி ரூபாயை 3ஜி லைசென்ஸுக்காகச் செலவு செய்துள்ளன. ஆனால், 3ஜி சேவை மூலம் செல்போன் நிறுவனங்களின் வருமானம் இதுவரை உயரவில்லை. எனவே,  கட்டணத்தை உயர்த்துவதன் மூலம் வருமானத்தைப் பெருக்க வேண்டிய கட்டாயம் அவர்களுக்கு.


இவை எல்லாவற்றையும்விட முக்கியமான இன்னொரு காரணமும் இருப்பதாக சொல்லப்படுகிறது. அதாவது கட்டணங்கள் குறைவாக இருப்பதால் அனைவரும் அதிகமாக செல்போனைப் பயன்படுத்துகிறார்கள். இதனால் நெருக்கடி அதிகமாகி, அதிக நபர்கள் பயன்படுத்த முடியாமல் போகிறது. இப்போது கட்டணத்தை அதிகரித்தால் செல்போன் நிறுவனங்களுக்கு இரண்டு விதத்தில் லாபம் கிடைக்கும். நடுத்தர மக்கள் செல்போனுக்கு என ஒரு பட்ஜெட் வைத்திருப்பார்கள், அதைத் தாண்டி அவர்கள் பேச மாட்டார்கள்.இதனால் நெருக்கடி குறையும். அதே சமயத்தில் கட்டணத்தை அதிகரித்தாலும் அதுபற்றி கவலைப்படாத மேல்தட்டு வாடிக்கையாளர்களுக்கு அதிக சேவை தரமுடியும். அவர்கள் அதிகம் பேசினால், செல்போன் நிறுவனங்களின் வருமானம் கணிசமாக அதிகரிக்கும் என்று நினைத்துதான் கட்டணத்தை உயர்த்துகிறார்கள் என்று சொல்லப்படுகிறது.இந்த கட்டண உயர்வை நம்மால் தடுக்க முடியாது என்றாலும், இதை எப்படிச் சமாளிக்கலாம், எந்த பிளானை எடுத்துக் கொண்டால் செலவைக் குறைக்க முடியும்.

''இப்போதிருக்கும் திட்டங்களில் சிறந்தது எது என்று சொல்ல முடியாது. செல்போனைப் பயன்படுத்துகிறவரின் தேவையை வைத்துதான் எந்த பிளான் சிறந்தது என்பது மாறும். ஆனால், எல்லோருக்கும் பொருந்தி வருகிற மாதிரி, செல்போனுக்காக நாம் செய்யும் செலவை எப்படி எல்லாம் குறைத்து பணத்தை மிச்சப்படுத்தலாம் என்பதை பார்க்கலாம் .


காலர் டியூன் வைத்திருந் தால் தயவு செய்து நீக்கிவிடுங்கள். அதன் மூலம் மாதம் 30 ரூபாய் மீதமாகும். இதை வைத்துக் கொண்டு குறைந்தபட்சம் 40 நிமிடங்கள் பேசலாம். (ஒரு நிமிடத்துக்கு 0.72 பைசா என்றால்). அதேபோல அடிக்கடி பாடல்களை மாற்றாதீர்கள். இதற்கு ஒவ்வொரு முறையும் டவுன்லோடு கட்டணம் செலுத்த வேண்டி இருக்கும்.

கம்ப்யூட்டரில் இன்டர்நெட் வசதி இருப்பவர்கள், பேஸ்புக், கூகுள் டாக், ஸ்கைப் போன்றவற்றைப் பயன்படுத்தி செலவில்லாமல் தகவல்களைப் பரிமாறிக் கொள்ளலாம்.

இலவச எஸ்.எம்.எஸ்.களை முழுமையாகப் பயன்படுத்தலாம். இலவச எஸ்.எம்.எஸ்.களை வைத்துக் கொண்டு போன் செய்வது கூடுதல் செலவுக்குத்தான் வழி வகுக்கும்.

நிமிடத்துக்கு ஒரு கட்டணம், நொடிக்கு ஒரு கட்டணம் என்பதுபோல இரண்டு வகையான திட்டங்கள் இருக்கிறது. நீங்கள் அதிக நேரம் பேசுபவராக இருந்தால் நொடிக்கு கட்டணம் இருக்கும் திட்டங்களை தவிர்த்துவிடுங்கள். ஒரு நொடிக்கு 1.2 பைசா என்றால், ஒரு நிமிடத்துக்கு 72 பைசா. ஆனால், ஒரு நிமிடத்துக்கு என்றால் 60 பைசா என்று கட்டணம் இருக்கும் பட்சத்தில் ஒரு நிமிடத்துக்கு 12 பைசா நஷ்டம். நீங்கள் எத்தனை நிமிடம் அதிகம் பேசுகிறீர்களோ, அவ்வளவு நிமிடத்துக்கும் 12 பைசா நஷ்டம்.

 உங்களுடைய பிளானில் பழைய பில்களை சரிபாருங்கள். யாருக்கு அதிகம் பேசி இருக்கிறீர்கள் என்பதைக் கண்டுபிடியுங்கள். உங்கள் நெட்வொர்கில் இருக்கும் நண்பர்களுடனா அல்லது வேறு நண்பர்களுடனா, வெளி மாநிலமா, வெளிநாடா என்று பார்த்து, அதற்கேற்ப பிளானை மாற்றுங்கள்.

இதைத் தாண்டி சந்தையில் புதிய பிளான்கள் வரும் பட்சத்தில் அந்த பிளானில் இருக்கும் சிம்மை வாங்கிக் கொள்ளலாம் அல்லது அந்த சர்வீஸ் புரவைடருக்கு நம்பர் போர்ட்டபிலிட்டி மூலம் மாறிக் கொள்ளலாம்''. 


தேவைப்பட்டால் மட்டுமே செல்போனில் பேசும் பழக்கத்தை நீங்கள் உருவாக்கிக் கொண்டால், செலவு நிச்சயம் குறையும் என்பதில் சந்தேகமே இல்லை. முயற்சி செய்தால் முடியாதது எதுவும் இல்லையே!



வா.கார்த்திகேயன்.

2 comments:

  1. தேவைப்பட்டால் மட்டுமே செல்போனில் பேசும் பழக்கத்தை நீங்கள் உருவாக்கிக் கொண்டால், செலவு நிச்சயம் குறையும் என்பதில் சந்தேகமே இல்லை. முயற்சி செய்தால் முடியாதது எதுவும் இல்லையே!

    நல்ல பதிவு.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. ரொம்ப நல்ல பதிவுங்க :)தேவைக்கேற்ற மாதிரி பயன்படுத்திக்கொண்டால் பிரச்சினை இல்லை. அதே மாதிரி எஸ்.எம்.எஸ் களைப் பயன்படுத்திகொண்டால் ரொம்ப அதிக அளவு குறைக்கலாம்!

    ReplyDelete