Search This Blog

Saturday, August 27, 2011

தோனி,அவ்வளவுதானா?


இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி இவ்வளவு தூரம் அவமானப்பட்டு நிற்கும் என்று யாருமே எண்ணிப் பார்க்கவில்லை. கண்மூடித் திறப்பதற்குள் கோட்டையைக் கலைத்து விட்டது இங்கிலாந்து அணி. டெஸ்ட் தொடரில் ஏற்பட்ட இந்தத் தோல்வி, பல கேள்விகளை எழுப்பியுள்ளது.

எதனால் இந்தத் தோல்வி?


முழுமுதற் காரணம், இங்கிலாந்து அணியின் பௌலர்கள்தான். ஒருவர் கூட சுமாராகப் பந்து வீசவில்லை. உழைப்பில் சமரசம் செய்துகொள்ளவில்லை. ஆண்டர்சன், பிராட், ப்ரெஸ்னன், ட்ரம் லெட், ஸ்வான் ஆகிய ஐந்து பௌலர்களுக்கிடையே கடுமையான போட்டி மனப்பான்மை நிலவுகிறது. ஒருவரையொருவர் மிஞ்ச நினைப்பதன் பலனாக எதிரணியினர் திக்குமுக்காடிப் போய்விடுகிறார்கள். இவர்கள் பலத்தால் பேட்டிங்கும் கூடுதல் பலம் பெற்று, இங்கிலாந்து அணியை அசைக்கமுடியாமல் செய்துவிடுகிறது. இவர்களின் அசுரப் பலத்தை எதிர்கொள்ள இந்திய வீரர்களுக்குத் தைரியமும் உடல்வலிமையும் இல்லாமல் போனதுதான் அணிக்குப் பெரிய பின்னடைவை ஏற்படுத்தி விட்டது. 

இந்தத் தோல்விக்குப் பிறகு, உடனடியாகச் செய்ய வேண்டியது என்ன?  


சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலால் 2003ல் அறிமுகம் செய்துவைக்கப்பட்ட டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில், முதல் ஆறு வருடம் ஆதிக்கம் செலுத்திய அணி, ஆஸ்திரேலியா. பிறகு, நான்கு மாதங்கள் அந்தப் பதவியில் சொகுசு கண்ட தென் ஆப்பிரிக்க அணியைக் கீழிறக்கி எல்லோருக்கும் இன்ப அதிர்ச்சியளித்தது இந்திய அணி. 2009 நவம்பர் முதல் இந்த ஆகஸ்ட் வரை, கடந்த இருபது மாதங்களாக முதலிடம் வகித்த இந்திய அணி, இங்கிலாந்துடனான டெஸ்ட் தொடரில் படு தோல்வியடைந்ததைத் தொடர்ந்து அதன் கௌரவம் பிடுங்கப்பட்டுள்ளது.

நான்கு வருடங்களுக்கு முன்பு, ஆஸ்திரேலியாவுடனான ஆஷஸ் தொடரில் 5-0 என்கிற கணக்கில் தோல்வி கண்டது இங்கிலாந்து அணி. உடனே, இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம், என்கொயரி கமிஷன் வைத்து நிலைமையைச் சீராக்கியது. அதன் பலன்தான், இன்று, இங்கிலாந்தை உச்சியில் அமரவைத்திருக்கிறது. அதேபோல, இந்த வருடத் தொடக்கத்தில், இங்கிலாந்துடனான ஆஷஸ் தொடரில் படு தோல்வி கண்டது ஆஸ்திரேலிய அணி. இப்போது அங்கும் தோல்விக்கான காரணங்கள் என்கொயரி கமிஷனால் கண்டறியப்பட்டு தூர் வாரப்பட்டு வருகிறது. இந்த நெருக்கடி நிலைமையில், இந்தியாவும் அதே பாணியைத்தான் பின்பற்ற வேண்டும். தோனி, ஸ்ரீகாந்த், ப்ளட்சர் போன்ற தலைமை நிர்வாகிகள் எடுத்த தவறான முடிவுகளைக் கேள்வி எழுப்ப வேண்டிய நேரமிது. எல்லாம் தானாகச் சரியாகிவிடும் என்றால் இந்தத் தோல்வி முடிவாக இருக்காது. பெரிய சறுக்கலுக்கான தொடக்கப் புள்ளியாக இருந்துவிடுகிற அபாயத்தைத் தவிர்க்க, உடனடியாக கமிஷன் அமைக்கப்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.  

சீனியர்கள் ஓய்வுபெற வேண்டுமா?

அவசியமில்லை. அவர்களால்தான் இந்திய அணி நெ.1 பதவியை அடைந்தது. அதேசமயம், கிரிக்கெட் ஆடாத காலகட்டங்களில் இவர்கள் பயிற்சிக்காக முதல்தரப் போட்டிகளில் கலந்து கொள்ள வேண்டும். மேலும், காயத்தால் ஓய்வுபெறுகிற வீரர்களும் தங்கள் உடல்தகுதியை முதல்தரப் போட்டிகளில் கலந்து கொண்டு நிரூபிக்க வேண்டும்.   

தோனியின் விசேஷத்தன்மை அவ்வளவுதானா?

எல்லா சாதனையாளர்களும் சறுக்கும் இடமொன்று உண்டு. ரஷ்ய போல்வால்ட் வீரர் செர்ஜி புப்கா, 35 முறை உலக சாதனை படைத்தவர் என்றால் அவர் எத்தனை ஒலிம்பிக் தங்கப்பதக்கங்கள் வாங்கியிருக்க வேண்டும்? 1988ல் ஒரு ஒலிம்பிக் தங்க மெடல் வாங்கிய புப்கா, அதன் பிறகு பங்கேற்ற 3 ஒலிம்பிக் போட்டிகளிலும் சல்லி மெடல்கூட இல்லாமல் வெளியேறினார். இத்தனைக்கும் 1994ல் அவர் தாண்டிய 6.14மீ உயரத்தை இன்றுவரை யாரும் மிஞ்சமுடியவில்லை. புப்காவுக்கு ஒலிம்பிக் போல தோனிக்கு இங்கிலாந்து டெஸ்ட் தொடர். 

இப்போது, தோனியின் ஈடுபாடு பற்றியும் அவருடைய உபயோகம் பற்றியும் எல்லோருக்கும் சந்தேகம் வந்துவிட்டது. தோனிக்கு வாழ்க்கை முன்போலில்லை. சவால்கள் தலை வாயிலில் காத்திருக்கிறது. ‘நெ.1 இடத்தை இழந்ததில் பிரச்னை எதுவுமில்லை, அது யாருக்கும் நிரந்தரமில்லை’ என்று தத்துவார்த்த ரீதியாகத் தோல்வி குறித்துப் பேசியிருக்கிறார் தோனி. இந்தப் படுதோல்வி, இனி அவர் என்னென்ன செய்ய வேண்டும், என்னென்ன செய்யக் கூடாது என்று நிறையக் கற்றுக் கொடுத்திருக்கும்.  


1 comment: