Search This Blog

Sunday, January 02, 2011

நம்பிக்கை"கை'கள் நிறைய இருக்கிறது !

பரமேஸ்வரி - இரு கைகளையும் இழந்தவர்; ஆனால், நிறைய நம்பிக்"கை'களுடன் வாழ்பவர்.

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தாலுகா வி.கே.என். புரம், கண்டிகை கிராமத்தில் உள்ள நூறு வீடுகளில், எந்த வீட்டில் கேட்டாலும் பரமேஸ்வரியின் வீட்டில் கொண்டு போய் விடுவர். காரணம், அந்த அளவிற்கு அவர் மீது மரியாதை. இப்போது, 28 வயதாகும் பரமேஸ்வரி, பிறக்கும்போதே இரண்டு கைகளும் இல்லை. தன் குறை தெரிந்த போது கவலைப் பட்டார். பிறகு, கவலைப்பட்டு எதுவும் நடக்கப் போவது இல்லை என்ற எதார்த்தம் புரிந்து போனதும், பிறருக்கு பாரமாக இல்லாமல் இருப்பது மட்டுமின்றி, மற்றவருக்கு உதவியாகவும் இருப்பது என முடிவு செய்தார். ஐந்தாவது வரை படித்தவர். அதற்கு மேல் படிக்க வசதியும், வழியும் இல்லாததால், படிப்பை அத்துடன் முடித்துக் கொண்டார்.  

முதல் காரியமாக தனக்கான வேலைகளை தன் கால்களின் துணையோடு தானே செய்ய பழகிக் கொண்டார். ஆரம்பத்தில் பெரிதும் சிரமமாக இருந்தாலும், விடா முயற்சியால் பழகி விட்டார். பாத்திரம் தேய்ப்பது, காய்கறி வெட்டுவது, துணி துவைப்பது போன்ற விஷயங்களில் உதவியாக இருந்தார். தங்கைகளுக்கு தானே தலைசீவிவிட்டு, பூ வைத்து அழகு பார்ப்பார். தம்பிகளுக்கு புத்தகங்கள் எடுத்து கொடுத்து, படிக்க வைத்து நெகிழ்ந்து நிற்பார். அப்பாவின் சிறிய இட்லி கடையில், சகல உதவியும் செய்து மகிழ்ந்து இருப்பார். மொத்தத்தில் தானும் சுறுசுறுப்பாய் இருந்து, மற்றவர்களையும் சுறுசுறுப்பாக செயல்பட வைப்பார். இப்படி பரமேஸ்வரி தனக்காகவும், தன் குடும்பத்திற்காகவும் மட்டுமின்றி, தான் சார்ந்த கிராமத்து மக்களுக்கும் முடிந்தவரை சேவை செய்து வருகிறார். ஊரில் எந்த நல்லது, கெட்டது என்றாலும் முதல் ஆளாக போய் நிற்பார்.

யார் எந்த தப்பு செய்தாலும் துணிந்து தட்டிக் கேட்பார். இதனால், தனக்கு பாதகம் வரும் என்றாலும் பயப்பட மாட்டார். இதன் காரணமாக, "பரமேஸ்வரி சொன்னால் நியாயமாகத்தான் இருக்கும். ஆகவே, எந்த பிரச்னை என்றாலும் கூப்பிடு பரமேஸ்வரியை' என்றளவிற்கு இன்றைய நிலை உள்ளது. எல்லாவற்றுக்கும் மேலாக துளசி மகளிர் சுய உதவி குழு ஆரம்பித்து, சிரமப்படக்கூடிய பெண்கள் 12 பேருக்கு கடனுதவி வாங்கிக் கொடுத்துள்ளார்.
இவருக்கே என்று ஒரே ஒரு ஆசை உள்ளது. சின்னதாய் ஒரு ஓட்டல் வைத்து, அதன் மூலம் பலருக்கு வேலை கொடுக்க வேண்டும். வரும் வருமானத்தை தன்னைப் போன்ற எளியவர்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் உள்ளது. "பிச்சை எடுத்து கூட வாழ்வோம். ஆனால், உழைக்க மாட்டோம்...' என, எல்லாம் சரியாக இருக்கும் முழு மனிதர்கள் கூட சோம்பேறித்தனத்துடன் வாழும் இந்த உலகில், ஊனமுற்றவர்களை உற்சாகப்படுத்தும் விதத்தில் தானும் வாழ்ந்து, மற்றவர்களையும் வாழ வைக்க நாளும் தன் சொந்த, "கால்களால்' மட்டுமே நின்று உழைக்கும் பரமேஸ்வரிக்கு, "கை' கொடுத்து உதவ விரும்புபவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய எண் : 98438 62951.
நன்றி - தினமலர் மற்றும் எல்.முருகராஜ்

1 comment:

  1. சன் நியூசில் போன வாரம் இவரிப்பற்றி ஒரு தொகுப்பு போட்டிருந்தார்கள். இவர் கால்களால் முகம் கழுவுவதையும் துணி மடிப்பதையும் பார்க்க மிக வருத்தமாக இருந்தது. கால்களிலேயே கோலம் கூடப் போடுகிறார் வாழ்வில் நம்பிக்கை ஊட்டும் இந்த பெண்மணி.

    ReplyDelete