Search This Blog

Sunday, January 09, 2011

எத்தனை காலம்தான் ஏமாற்றுவார்...ஓ பக்கங்கள்! ஞாநி


புது வருடக் கணக்கைத் தொடங்கிவிட்டார் கலைஞர் கருணாநிதி. இந்த வருடத்தின் முதல் பொய் - “முதலமைச்சரை விடப் பெருமைக்குரியவர் ஒரு புலவர் என்பதை இன்று நேற்றல்ல என்றைக்குமே நான் மதித்து அந்தத் தமிழுக்குப் பெருமையைத் தரக்கூடியவன்.”

பாடலாசிரியர் வைரமுத்துவின் நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொள்வதற்காக சென்னை வரும் பிரதமர் மன்மோகன்சிங்கை விமான நிலையத்தில் வரவேற்க வேண்டிய ‘முதலமைச்சரின் கடமையை’ செய்யாமல் வந்துவிட்டதாக கருணாநிதி பேசியிருக்கிறார். இது உண்மையென்றால் அடுத்த நாள் தமிழக அரசு சார்பில் முதல்வர், பிரதமரைச் சந்திக்கச் செல்லாதது ஏன் என்று அளித்த விளக்க அறிக்கையிலும் இதையேதானே சொல்ல வேண்டும்? அதில் “முன்கூட்டியே ஒப்புக் கொண்ட நிகழ்ச்சிக்குச் செல்லவேண்டியதாயிற்று. அங்கே ஒளிவிளக்குகளால் கண்ணில் நீர் கசிந்தது. மருத்துவரைச் சந்தித்துவிட்டு பின்னர்தான் பிரதமரைக் காணச் செல்ல முடிந்தது” என்று விளக்கியிருக்கிறார்கள். “பிரதமரை வரவேற்பதை விட புலவரைக் கௌரவிப்பதே முதன்மையானது என்று முதலமைச்சர் கருதியதால் செல்லவில்லை” என்று தமிழக அரசு அறிக்கையிலும் சொல்ல வேண்டியதுதானே?
கிழிந்து கந்தலாகிக் கொண்டிருக்கும் காங்கிரஸ்- தி.மு.க. கூட்டணியில் ‘கெஞ்சினால் மிஞ்சுவது, மிஞ்சினால் கெஞ்சுவது’ என்ற உத்தியை எப்போதும் பிரயோகித்துவரும் கருணாநிதி, இப்போதும் அதே வேலையைச் செய்திருக்கிறார். அவ்வளவுதான். காங்கிரசுடன் உறவு எப்படியிருக்கிறது என்று நிருபர்கள் கேட்டபோது, “எனக்கும் உங்களுக்கும் (பத்திரிகையாளர்களுக்கும்) உள்ள அளவில் இருக்கிறது” என்று பதில் சொல்கிறார் கருணாநிதி. அவருக்கும் பத்திரிகையாளர் களுக்கும் உள்ள உறவு எப்படி இருக்கிறது? சங்கடமான கேள்விகளைத் தப்பித் தவறி ஏதேனும் ஒரு நிருபர் கேட்டால், “யார்யா நீ?”, “உனக்கு என்ன அதைப் பத்தி?”, “உங்க வீட்டுலயா ரெய்டு நடந்துது?” என்று எரிந்து விழும் உறவுதான் அவருடையது. தானே பதில் சொல்ல விரும்பும் கேள்விகளைக் கேட்பதற்கென்றே நிருபர்களில் ஒரு கோஷ்டியைத் தயார் செய்து வைத்திருப்பது அவரது உறவின் மறுபக்கம். இதே அணுகுமுறைதான் காங்கிரசுடனும் உள்ளது. ரெய்டு, ஸ்பெக்ட்ரம் போன்ற சங்கடமான பிரச் னைகளில் தம் எரிச்சலைக் காட்ட பிரதமரைப் புறக் கணிப்பது; தாம் விரும்பும் அறிக்கைகளை வெளியிட காங்கிரசுக்குள்ளே ஒரு தி.மு.க. - காங்கிரஸ் பிரிவை வைத்திருப்பது. இவைதான் அவரது கூட் டணி அணுகுமுறை.
புலவர்களை எப்போதும் மதிக்கும் ‘மன்னன்’ நான் என்று கருணாநிதி சொல்லியிருப்பது இன் னொரு பொய். தம்மை விமர்சிக்காமல் புகழ்ந்து கொண்டேயிருக்கும் புலவர்களை மதிப்பது என்று அதைத் திருத்தி வாசிப்பதே பொருத்தமாக இருக்கும். வைரமுத்து மட்டும் வேறொருவரைக் கொண்டு தம் நூலை வெளியிட்டிருந்தால், அடுத்த நிமிடமே வேண்டாத புலவராகியிருப்பார் என்பது இருவர் மனசாட்சிக்கும் தெரியும். வாலி புகழ்வதை நிறுத்தின அடுத்த நொடியில் ஆரிய நச்சுப் பாம்பாகிவிடுவார் என்பதும் அவருக்குத் தெரியும்.
ஓரிரு வாரங்கள் முன்பு தான் சாகித்ய அகாதமி பரிசு அறிவிக்கப்பட்டிருக்கிறது. பரிசு பெறும் நாஞ்சில் நாடனைப் பாராட்டி கருணாநிதியிடமிருந்து ஒரு அறிக்கை உண்டா? கேரளத்தில் இப்படிப்பட்ட பரிசுகள் அறிவிக்கப்பட்டால், உடனே முதலமைச்சர், எழுத்தாளர் வீடு தேடிப் போய் பாராட்டுகிறார். இங்கே “யாருய்யா அவன் நாஞ்சில்நாடன்? யாரு ஆளு? கனி(மொழி) கூப்பிட்டா சங்கமத்துக்கு வரமாட்டேங்கறானாமே?” என்றுதான் ‘அரண்மனை’ உரையாடல்கள் நிகழும் வாய்ப்பிருக்கிறது. நாஞ்சில்நாடன் கிண்டலாகச் சொல்வதுபோல, பரிசு பெறும் எழுத்தாளன் தானே ஒரு மஞ்சள் சால்வையும் சிவப்பு சால்வையும் வாங்கிக் கொண்டு தலைமைச் செயலகத்துக்குப் போய் பல மணி நேரம் காத்திருந்து ஒரு சால்வையைப் போர்த்தி இன்னொன்றைப் போர்த்தவைத்து, தன் செலவில் படமும் எடுத்து, பத்திரிகைகளுக்குத் தரவேண்டிய நிலை.
கடந்த ஐம்பது ஆண்டுகளில் சாகித்ய அகாதமி ஏராளமான தமிழ்ப் படைப்புகளைப் பிற இந்திய மொழிகளிலும் பிற மொழிப் படைப்புகளைத் தமிழிலும் வெளியிட்டிருக்கிறது. இது போல ஒரே ஒரு ஆக்கபூர்வமான வேலையையாவது தமிழக அரசு செய்ததுண்டா? எழுத்தாளர் படைப்புகளை நாட்டுடைமையாக்குகிறேன் என்ற பெயரில் தகுதியானவர்களுடன் சேர்த்து, கும்பலோடு கோவிந்தாவாக எந்தத் தகுதியும் இல்லாத வேண்டப்பட்டவர்களின் படைப்புகளுக்குக் காசு கொடுத்ததுதான் ஒரே சேவை. இயல் இசை நாடக மன்றத்தின் கலைமாமணி விருதுகளை 25 ஆயிரம் ரூபாய் ரேட்டுக்கு விற்றுக் கொண்டிருக்கிறார்கள். எழுத்தாளர் பிரபஞ்சன் வாடகைக்குக் குடியிருக்கும் அரசுக் குடியிருப்பு ஒழுகுகிறது. வேறு வீடு மாற்றிக் கொடுங்கள் என்று மனுபோட்டு அலுத்துப் போய்விட்டார் என்று வேதனையுடன் நாஞ்சில் நாடன் ஒரு மேடையில் குறிப்பிட்டார். 

சாகித்ய அகாதமியின் தென் மண்டல அலுவலகம் - நான்கு தென் மாநிலங்களுக்குமானது, சென்னையில்தான் பல காலம் இயங்கி வந்தது. தங்களுக்கென்று தனியே நிலம் ஒதுக்கித் தரும்படி தமிழக அரசைக் கேட்டது சாகித்ய அகாதமி. புலவர்களை மதிக்கும் அரசு, முரசுக்கட்டிலில் புலவரோடு சேர்த்துக் கோப்புகளையும் தாலாட்டு பாடித் தூங்க வைத்துக் கொண்டிருந்த வேளையில், கர்நாடக அரசு முந்திக் கொண்டது. கன்னடப் படைப்பாளிகளும் அரசும் கை கோத்து நின்றதால், தென் மண்டல அலு வலகமே அங்கே போய்விட்டது. இங்கே எஞ்சியது சாகித்ய அகாதமியின் சென்னை அலுவலகம் எனப்படும் விற்பனை நிலையம்தான். அதற்கும் புலவர்களை மதிக்கும் அரசில் ஆபத்து வந்துவிட்டது. தரமணி உலகத் தமிழாராய்ச்சி நிறுவன வளாகத்தில் ஒதுக்கிய இடத்தைக் காலி செய்யச் சொல்கிறது தமிழக அரசு. சாகித்ய அகாதமிக்கு, சென்னையில் அலுவலகம் கூட இல்லாமல் போய்விடும் நிலை.
இலவசங்களை வழங்குவதையே அரசுக் கொள்கையாக வைத்திருக்கும் முதலமைச்சர், இலவசமாக இப்படி வழங்கும் பொய்களுக்கு நாம் தரும் விலை மிகப் பெரியது.
ஏழைகள் இருக்கும்வரை இலவசங்கள் தனது ஆட்சியில் தொடரும் என்று மிகுந்த பெருமிதத்துடன் அறிவித்திருக்கிறார் கருணாநிதி. எவ்வளவு காலத்துக்கு ஏழைகள் ஏழைகளாகவே இருப்பார்கள்? அடுத்த தலைமுறையின் வாரி” அரசுக் கட்டிலில் அமரும்வரையா? அதற்கு அப்புறமுமா? தமிழ்நாட்டில் மொத்தம் ஆறு கோடி 65 லட்சம் மக்கள் இருக்கிறார்கள். வறுமைக்கோட்டுக்குக் கீழே உள்ளவர்களுக்கு இலவச வேட்டி சேலை அளிக்கப்படுகிறது. அதன் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா? மக்கள் தொகையில் ஏறத்தாழ சரி பாதி. மூன்று கோடி 11 லட்சத்து 23 ஆயிரம்! ஐந்து முறை கருணாநிதி முதலமைச்சராக இருந்து சாதித்தது என்ன? தமிழர்களில் சரி பாதி பேரை வறுமைக் கோட்டுக்குக் கீழேயே வைத்திருப்பதுதானா?

சுமார் 15 நாட்களுக்கு முன்பு புதுக்கோட்டை மாவட்டம் கொத்த மங்கலம் கிராமத்தில் இலவச டி.வி. பெட்டி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட தி.மு.க செயலாளர் தலைமையேற்று டி.வி.பெட்டிகளை வழங்கிக் கொண்டிருந்தார். அரசு விழாவில் ஏன் கட்சியின் மாவட்டச் செயலாளர் பெட்டிகளை வழங்குகிறார் என்றெல்லாம் நாம் அசட்டுத்தனமாகக் கேட்கப் போவதில்லை. அங்கே பெட்டி வாங்க வந்த விவசாயி விஜயகுமார் என்பவர் பெட்டியை வாங்கிக் கொண்டு திருப்பி அளித்து விட்டு கூடவே ஒரு கடிதத்தையும் கொடுத்தார். அந்தக் கடிதம் சாதாரணக் கடிதமல்ல; வரலாற்றில் இடம்பெற வேண்டிய கடிதம்.

“மனிதனுக்கு டி.வி. என்பது பொழுதுபோக்கு சாதனம்தான். ஆனால் அதைவிட முக்கியமானது உணவு, உடை, உறைவிடம். தமிழகத்தில் மொத்தம் 88 துறைகள் இருக்கின்றன. இவை தன்னிறைவு அடைந்துவிட்டனவா? குறிப்பாக, விவசாயிகளைப் பாதிக்கும் மின்சாரத் துறை தன்னிறைவு அடைந்துவிட்டதா? துறைகள் எல்லாம் தன்னிறைவு அடைந்த பிறகு மிதமிஞ்சிய பணத்தில் இந்த டி.வி.யை வழங்கியிருந்தால் மகிழ்ச்சியாக இருந்திருக்கும். இதற்கு மட்டும் எங்கிருந்து நிதி வந்தது? இந்தியாவின் முதுகெலும்பான விவசாயிகள் தமிழகத்தில் அதிகம் வசிக்கிறார்கள். டி.வி. வழங்கும் பணத்தை வைத்து விவசாயிகளுக்குத் தேவையான மின்சாரத்தைக் கொடுத்திருக்கலாம்.

தமிழகத்திலேயே மிகவும் பின்தங்கிய மாவட்டத்தைக் கண்டறிந்து போதுமான மின்சாரத்தைத் தடையின்றிக் கொடுத்து அந்த ஒரு மாவட்டத்தையாவது தன்னிறைவு அடையச் செய்திருக்கலாம். இலவசம் என்பது எங்களுக்கு வேண்டாம். தரமான மருத்துவம், கல்வி, மும்முனை மின்சாரம் மற்றும் வேலை வாய்ப்புகளை வழங்கினாலே போதும். அதை வைத்து நாங்களே சம்பாதித்து டி.வி.முதல் கார் வரை அனைத்தையும் வாங்கிக் கொள்வோம். எங்களுக்கு என்ன தேவையோ அதை நாங்களே பூர்த்தி செய்து தன்னிறைவு அடைந்து விடுவோம்.

விலைவாசி உயர்வு, எரிபொருள் விலை உயர்வு, குடிநீர்ப் பற்றாக்குறை, லஞ்சம், ஊழல் என்று ஆயிரக்கணக்கான குறைகள் இருக்கும்போது ஒரு நடமாடும் பிணமாக நான் எப்படி டி.வி. பார்க்க முடியும்? எனவே எனக்கு இந்த டி.வி. வேண்டாம். முதல்வர் கருணாநிதி மீது எனக்கு மிகுந்த மதிப்பும், மரியாதையும், அன்பும் உள்ளது. எனவே, இந்த டி.வி.யை அவருக்கே அன்பளிப்பாகக் கொடுக்க இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்கிறேன். அவர் இதை ஏற்றுக் கொள்ளாவிட்டால் என் மனம் மேலும் வேதனைப்படும். அரசு மற்றும் அதிகாரிகள் தங்கள் கடமைகளைச் சரியாகச் செய்தாலே போதும். இந்தியா வல்லரசாகி விடும்” என்று அந்தக் கடிதத்தில் விஜயகுமார் சொல்லியிருக்கிறார்.

ஒரு பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் அவர் மேலும் சொல்கிறார் : “சாராயத்தைக் குடிச்சுட்டு, ஒரு ரூபாய் அரிசியைத் தின்னுட்டு உழைக்கும் வர்க்கம் சோம்பேறியாகிக்கிட்டிருக்கு. ரொம்ப சீப்பா கணக்குப் போட்டாலும் ஒரு டி.வி. ஆயிரம் ரூபாய்னு வச்சிக்குங்க. தமிழ்நாட்டில் ரெண்டு கோடி குடும்ப அட்டைக்கும் டி.வி. கொடுத்தால் இரண்டாயிரம் கோடி செலவாகும். இதை வைத்துத் துறைகளைத் தன்னிறைவு அடையச் செய்தாலே போதுமே.”

விஜயகுமாரின் கடிதம்... கடிதம் அல்ல; சவுக்கடி. அல்லற்பட்டு ஆற்றாது அழும் ஒருவர் கண்ணீர் விடாமல் ரௌத்ரம் பழகி அரசுக்குக் கொடுத்த சவுக்கடி.

கலைஞர் அவர்களே, நீங்கள் முதல்வராக இருக்கும் காலம் வரையில் “நல்லது செய்தல் ஆற்றீராயினும் அல்லது செய்தல் ஓம்புமின்”. குறைந்தபட்சம், ‘நான் ஒரு கம்யூனிஸ்ட்’, ‘நான் ஏழைகளுக்காகவே வாழ்கிறேன்’, ‘புலவர்களை மதிக்கும் மன்னன்’ மாதிரி பொய்களைச் சொல்லாமல் இருங்கள். 

இந்த வார திட்டு!

சி.பி.ஐ. ரெய்டு செய்த தமிழ் மையம் அமைப்புடன் சேர்ந்து சென்னை சங்கமம் திருவிழா நடத்த அரசுப் பணத்தை ஒதுக்கியிருக்கும் தமிழக அரசின் சுற்றுலாத் துறைக்கு இ.வா.திட்டு. ரெய்டுக்குள்ளான அமைப்பு தொடர்பான வழக்கு விசாரணை முடிந்து குற்றமற்றவர்கள் என்று நிரூபிக்கப்படும்வரை அவற்றுடன் தொடர்பு கொள்ளாமல் ஒதுங்கியிருக்க வேண்டிய தார்மிகக் கடமையைச் செய்யத் தவறியதற்காக இ.வா.தி.

இந்த வாரப் பூச்செண்டு!

சென்ற 2009ல் 321 உடல் உறுப்புகள் மட்டுமே தானமாகக் கிடைத்தன. 2010ல் 523 என்று தமிழக அரசின் உறுப்பு மாற்று திட்ட அமைப்பாளர் டாக்டர் அமலோற்பவநாதன் அறிவித்திருக்கிறார். முன்பைவிட அதிகமாக உடல் (உறுப்பு) தானம் செய்ய முன் வரும் தமிழக மக்களுக்கு இ.வா.பூ.

கல்கி 

No comments:

Post a Comment