தமிழகப் பொதுப்பணித் துறையில் 34 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி ஓய்வுபெற்றவர், சமீபத்தில் மறைந்த பழ. கோமதிநாயகம். தமிழக நீர்ப்பாசனம் பற்றிய தொலைநோக்கு பார்வை கொண்ட அவருடைய எண்ணங்கள் 'தமிழக பாசன வரலாறு' எனும் தலைப்பில் சமீபத்தில் நூலாக வெளிவந்துள்ளது.
அதிலிருந்து சில துளிகள் இங்கே...
கி.மு. 10 ஆயிரம் மற்றும் கி.மு. 4ஆயிரம் இந்த ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தை, 'புதிய கற்காலம்' என்று வரையறுத்துள்ளனர் வரலாற்று ஆய்வாளர்கள். புதிய கற்காலத்தின்போது, கால்நடை மேய்ச்சல் நாகரிகத்தைத் தாண்டி, வேளாண்மை செய்து வாழும் நாகரிகத்துக்கு வந்துவிட்டனர் தமிழர்கள். இதற்கு ஆதாரமான கருவிகள் பல கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவற்றில் பெரும்பாலானவை பெரிய பெரிய ஏரிகளை ஒட்டியே கிடைத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
நாகரிகத்தின் வளர்ச்சிப் படிகளில் முதலில் மழையை மட்டுமே நம்பி விவசாயம் செய்தனர். அதன் பிறகே மழைநீரைச் சேமிக்க நீர்நிலைகள் உருவாக்கப்பட்டன. மழை இல்லாத காலங்களில் அருகில் உள்ள ஆற்றிலிருந்து நீர் கொண்டு வந்தனர். ஆற்று வெள்ளத்தைத் தடுத்து சிறிய கால்வாய்கள் மூலமாக அருகில் உள்ள நிலங்களுக்குப் பாய்ச்சுவதற்காக கொரம்புகள் கட்டும் தொழில்நுட்பம் முதலில் தோன்றியது. வளர்ச்சியடைந்த நிலையில் பாசனக் கட்டுமானங்கள் அமைக்கப்பட்டுப் பெரிய அளவில் பாசனமும் வேளாண்மையும் நடைபெற்றன. அப்படி சங்க காலத்தில் கட்டப்பட்டது... கல்லணை!
குளம் தொட்டு, கோடு பதித்து, வழி சீத்து
உளம் தொட்டு, உழு வயல் ஆக்கி, வளம் தொட்டுப்
பாகுபடும் கிணற்றோடு என்று
இவை பாற்படுத்தான்
ஏகும் சுவர்க்கம் இனிது
உளம் தொட்டு, உழு வயல் ஆக்கி, வளம் தொட்டுப்
பாகுபடும் கிணற்றோடு என்று
இவை பாற்படுத்தான்
ஏகும் சுவர்க்கம் இனிது
- சிறுபஞ்சமூலம்
'குளம்; மிகை நீர் வழிந்து செல்ல கலிங்கு; குளத்துக்கு வரும் வரத்துக்கால்; விவசாயத்துக்குத் தண்ணீர் வழங்கும் மதகு, தூம்பு, கலிங்கிலிருந்து வெள்ளம் வெளியேறும் பாதை; பாசனம் பெறும் பகுதியை உழுது வயலாக்குதல்; தண்ணீர்க் குறைவின்போது பயன்படுத்த ஊர்ப் பொதுக் கிணறு அமைத்தல்... இதையெல்லாம் செய்பவன், சொர்க்கத்துக்குப் போவான்' என்பதுதான் இதன் பொருள். இது, ஏரிப் பாசன அமைப்பு குறித்த வரைபடத்தையே நமக்குத் தருவதாக அமைந்திருக்கிறது.
ஏரிப் பாசனத் தொழில்நுட்பம் தமிழர்களிடையே 2,000 ஆண்டுகளுக்கு முன்பே மிக வளர்ந்த நிலையில் இருந்திருக்கிறது. தமிழ்நாட்டிலும் தமிழீழத்திலும் இன்றும் பயன்படும் ஆயிரக்கணக்கான ஏரிகள் மற்றும் குளங்களே இதற்கு சாட்சி. இலங்கைத் தொல்லியல் அறிஞர்களின் கருத்துப்படி 'பசவக்குளம்’ கி.மு.300-ம் ஆண்டு கட்டப்பட்டது.
திண்டுக்கலிலிருந்து 20 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது ஆத்தூர். அங்கு கருங்குளம், பகடைக்குளம், புல்வெட்டிக்குளம் என்று மூன்று அடுக்கில் குளங்கள் உள்ளன. ஒரே கண்மாயில் இரண்டு குறுக்குக் கரைகள் அமைத்து மூன்றாகப் பிரிக்கப்பட்ட இந்த கண்மாய், மிகச்சிறந்தத் தொழில்நுட்பம் கொண்டது.
மூன்று கண்மாய்களும் ஒன்றைவிட ஒன்று உயர்ந்த நீர்மட்டம் கொண்டவை. பாசனம் பெறும் ஆயக்கட்டுப் பகுதியின் நிலமட்டங்களுக்கு ஏற்ற வகையில் கண்மாயின் நீர்மட்டம் கொண்டவை. இந்தக் கண்மாய் இருக்குமிடத்துக்கு அருகில் முதுமக்கள்தாழிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. எனவே, இந்தக் கண்மாய்கள் 2,100 ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க காலத்தவை எனத் தொல்லியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இதேநிலையில், தற்போதும் இந்தக் குளங்கள் பயன்பாட்டிலிருப்பது... அதன் தொழில்நுட்பச் சிறப்பைக் காட்டுகிறது.
தனியாக இருக்கும் குளங்களைவிட, சங்கிலித் தொடராக இருக்கும் குளங்களே மழைநீரைச் சேமிக்கப் பெரிதும் உதவும். இதுபோன்ற தொடர்களின் தொடக்கத்திலுள்ள குளம், மழை வடிமுகத்திலிருந்து வரும் நீரை ஏந்துவதால் 'ஏந்தல்’ எனப்பட்டது. அதைத் தொடர்ந்து பின்னுள்ள குளங்கள்... ஏந்தலிலிருந்து வடியும் வெள்ளம் மற்றும் கூடுதல் நீரைத் தாங்குவதால் 'தாங்கல்’ எனப்பட்டன. இன்றும் ஏந்தல், தாங்கல் என முடியும் ஊர்ப்பெயர்கள் தமிழகத்தில் வழக்கத்தில் உள்ளன.
ஏரிகள் ஒன்றன்பின் ஒன்றாகத் தொடராக அமைந்திருப்பதால், இடைப்பட்ட நிலங்கள் பாசனம் செய்ய உதவுவதுடன், பாசன வயல்களிலிருந்து வடியும் நீரையும் தாங்குகின்றன. பாலாறு அணைக்கட்டிலிருந்து நான்கு கால்வாய்கள் மூலம் 318 குளங்கள் சங்கிலித் தொடராக உள்ளன. இதேபோன்று பல தொடர் குளங்கள் தமிழகமெங்கும் உள்ளன. கடைசிக் குளம் பெரும்பாலும் கோயில் குளமாக இருக்கும். அந்தக் குளம் நிரம்பி, அந்தத் தண்ணீரில் கோயில் தெய்வத் திருமேனிக்கு அபிஷேகம் செய்யப்பட்ட பிறகே, தலைமடை முதல் கடைமடை வரை விவசாயப் பணிகளைத் தொடங்குவதென்பது நடைமுறையில் இருந்தது (பழையாற்றில் கடைசிக் குளம்... கன்னியாகுமரிக் குளம்; தாமிரவருணியின் கடைசிக் குளம்... திருச்செந்தூர்க் குளம்).
ஏரிப்பாசன அமைப்புகளை உருவாக்குவதில் மட்டுமன்றி நிர்வகிப்பதிலும் தமிழர்கள் சிறந்து விளங்கினர். ஏரிகளில் சேமிக்கப்படும் தண்ணீரை எல்லா நிலங்களுக்கும் பகிர்ந்தளிக்க; குறைவாக இருக்கும் சமயங்களில் பகிர்ந்து கொள்ள; ஏரிகளின் கரைகள், மதகுகள் மற்றும் கலிங்கு போன்ற கட்டுமானங்களைப் பராமரிக்க அமைப்புகள் இருந்தன. ஏரிப்பட்டி விளைச்சலில் வரும் வருமானத்தை ஏரிப் பராமரிப்பு தவிர வெறெதற்குப் பயன்படுத்தினாலும் ஏரி வாரியப் பெருமக்களாக இருந்தாலும், அபராதம் விதிக்கப்பட்டது.
ஆற்றிலிருந்து நீர் எடுத்து வரும் வாய்க்காலுக்கு மேல் பகுதியில் புதிதாக வேறொரு வாய்க்கால் வெட்டக் கூடாது என்பதை, 'காலுக்கு மேல் கால் கல்லலாகாது’ என்று ஸ்ரீவல்லப பாண்டியனின் பதினாறாம் ஆட்சியாண்டில் பொறிக்கப்பட்ட குருவித்துறை பெருமாள் கோயில் கல்வெட்டு கூறுகிறது. மேல் பகுதியில் புதிய வாய்க்கால் வெட்டுவது, ஏற்கெனவே கீழேயுள்ள பழையப் பாசனதாரர்களின் உரிமையைப் பாதிக்கும் என்பதாலேயே இக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. உலகெங்கும் இன்று ஏற்றுக்கொள்ளப்படும் கீழமை பாசனதாரர்களின் 'முன்னுரிமை’ (Riparian right of lower down ayacut) என்ற உரிமை பற்றி அன்றே கூறியிருப்பது தமிழர்களின் தொலைநோக்குப் பார்வையைக் காட்டுகிறது.
No comments:
Post a Comment