'உலகின் மிக உயரமான மனிதர்!', 'உலகிலேயே அதிக எடையைத் தூக்கிய மனிதர்' இப்படி 'கின்னஸ் விருது' பெற்றவர்களைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்போம். அதிகபட்சமான காரத்துக்காக கின்னஸ் புத்தகத்தில் மிளகாய் ஒன்றும் இடம் பெற்றிருக்கிறது என்றால் ஆச்சரியம்தானே! இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் அதிக அளவில் விளைகிறது, கின்னஸ் பெருமைமிக்க 'பூத் ஜலக்கியா’ எனும் மிளகாய்!
பல நூறு ஆண்டுகளாக இந்த மிளகாய் நம் நாட்டில் பயன்படுத்தப்பட்டு வந்தாலும், அசாம் மாநிலம், தேஜ்பூர், ராணுவ வளர்ச்சி ஆய்வு நிறுவனத்தைச் சேர்ந்த மாத்தூர் எனும் விஞ்ஞானிதான், இது அதிகம் காரத்தன்மை கொண்ட மிளகாய் என்பதைக் கண்டறிந்து முதலில் தெரிவித்திருக்கிறார். என்றாலும், இது உலக அளவில் பரவி, கின்னஸ் அளவுக்கு போவதற்கு பிள்ளையார் சுழியிடப்பட்டது... 2004-ம் ஆண்டில்தான்!
லண்டன் நகரிலிருக்கும் ஓரியன்டல் ஸ்டோரில் 2004-ம் ஆண்டில் இம்மிளகாயை வாங்கியிருக்கிறது இங்கிலாந்தைச் சேர்ந்த ஜாய்மைக்கேல் மைக்கென்ட் தம்பதி. மற்ற மிளகாய்களைக் காட்டிலும் இந்த மிளகாய் அதிகபட்ச காரத்தன்மையுடன் இருக்கவே... அமெரிக்காவில் உள்ள ஒரு சோதனைக் கூடத்துக்கு அதை அனுப்பியிருக்கிறது இத்தம்பதி. ஆய்வின் முடிவில், அந்த மிளகாயின் காரத்தன்மை 9,23,000 எஸ்.ஹெச்.யூ (SHU-Scoville Heat Units)என்ற அளவுக்கு இருக்க, (சாதாரணமாக நாம் பயன்படுத்தும் மிளகாயின் கார அளவு 60 எஸ்.ஹெச்.யூ) ஆச்சர்யப்பட்டுப்போன தம்பதி... 'இதுதான் அதிகபட்ச காரத்தன்மை கொண்ட மிளகாய்' என்று உலகுக்கு அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள்.
இதைத் தொடர்ந்து பல்வேறு ஆய்வுகளின் மூலம் இம்மிளகாயின் காரத்தன்மை 10,00,000 எஸ்.ஹெச்.யூ. என்ற அளவுக்கு மேலும் இருக்கிறது என்பதைக் கண்டறியப்படவே, 2006ம் ஆண்டில் 'உலகின் மிக காரமான மிளகாய்’ என்று கின்னஸ் சாதனையில் இடம்பிடித்துவிட்டது இந்த மிளகாய்! அதற்கு முன்பு வரை, மெக்சிகோ நாட்டைச் சேர்ந்த 'ரெட் சாவினோ’ எனும் மிளகாய்தான், அந்த இடத்தை தக்க வைத்துக் கொண்டிருந்தது. அதைக் காட்டிலும் இருமடங்கு காரத்தன்மையைக் கொண்டிருக்கிறதாம் பூத் ஜலக்கியா!
இம்மிளகாய் பற்றி கூடுதல் தகவல்
''இதன் அறிவியல் பெயர் 'கேப்சிகம் சைனீஸ் பூத் ஜலக்கியா’. 'பூத்’ என்றால் பேய், 'ஜலக்கியா’ என்றால் மிளகாய்.
இதை நம் நாட்டின் வடகிழக்கு மாநிலங்களில் 'பீஹ் ஜலக்கியா’ (விஷ மிளகாய்) அல்லது 'நாகா ஜலக்கியா’ என்றும் அழைக்கிறார்கள். இப்பகுதிகளில் வாழும் போர் குணம் கொண்ட ஆதிவாசிகளின் பெயர்தான் நாகா.
அதிக வெயில் கிடைக்கும் இடங்களில் நல்ல சிவப்பு நிறத்தில் இம்மிளகாய் விளைகிறது. வெயில் குறைந்தால் சிவப்பு வண்ணம் வெளிறி, பச்சை நிறத்துக்கு மாறி விடுகிறது. நிறத்தைப் பொருத்துதான் மிளகாயின் விலை நிர்ணயிக்கப்படுகிறது.
வழக்கமாக அல்சர் நோயாளிகள் மிளகாய் சாப்பிடக் கூடாது என்பார்கள். ஆனால், பூத் ஜலக்கியாவைத் தொடர்ந்து சாப்பிட்டால், அல்சர் நோய் குணமாகிவிடும் என்று சொல்லப்படுகிறது. தவிர, வாய்வுப் பிரச்னை, மூட்டு நோய்கள், அஜீரணக் கோளாறு போன்றவற்றைக் குணப்படுத்தும் மருத்துவ குணங்களும் இம் மிளகாய்க்கு உண்டு.
அசாம் போலவே பருவநிலை நிலவும் நாகாலாந்து, மிசோராம் மற்றும் மணிப்பூர் ஆகிய மாநிலங்களிலும் இது விளைகிறது. இலங்கை மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளிலும் 'பூத் ஜலக்கியா’ விளைவிக்கப்படுகிறது. லண்டன், அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் வெனிசுலா போன்ற நாடுகளில், நம் நாட்டிலிருந்து எடுத்துச்செல்லப்பட்ட விதைகளைப் பயன்படுத்தி பயிரிடுவதற்கான முயற்சிகளைச் செய்து வருகிறார்கள்.
காரத்தைக் கண்டுபிடிப்பது இப்படித்தான் !
No comments:
Post a Comment