துப்பாக்கி சுடாமல், வெடிகுண்டு வெடிக்காமல், ரத்தம் காட்டாமல் தீவிரவாதத்தின் பாதிப்பைக் காட்ட முடியுமா?
முடிந்த வரை வன்முறையைக் காட்டிவிட்டு இறுதியில் வன்முறை வேண்டாம் என்று சொல்லும் நமது திரைப்படங்கள் இருக்கையில், ஒரு துளி ரத்தம் கூட இல்லாமல், ஒரு மனிதனின் இறப்பைக் கூடக் காட்டாமல் தீவிரவாதத்திற்கு எதிராகக் குரல் கொடுக்கும் ஒரு திரைப்படம் தான் “Paradise Now".
இஸ்ரேல், பாலஸ்தீன் பிரச்சனையை மையமாகக் கொண்ட திரைப்படம் இது.காலெத், சயித் என்ற இரண்டு பாலஸ்தீன நண்பர்களின் வாழ்க்கையில் 48 மணி நேரங்களில் நடக்கும் நிகழ்வுகள் தான் இந்தப் படத்தின் திரைக்கதை.
பிரான்ஸிலிருந்து தன் சொந்த ஊருக்குத் திரும்பும் சுஹா என்ற பெண் பாலஸ்தீனின் எல்லைக்குள் நுழைவதில் இருந்து ஆரம்பிக்கிறது இந்தத் திரைப்படம். எல்லைப்படையின் தீவிர சோதனைக்குப் பின் உள்ளே அனுமதிக்கப்படுகிறாள் அவள். அங்கிருந்து டாக்ஸி பிடித்து அவளுடைய ஊருக்குப் போய் இறங்குகிறாள். சில வினாடிகளில் எங்கோ துப்பாக்கிக் குண்டுகள் வெடிக்கும் சத்தம் கேட்கிறது. ஓரிரு வினாடிகள் அனைவரும் நின்று விட்டு அவரவர் வேலையைத் தொடர்கின்றனர். இதிலிருந்து அங்கிருக்கும் மக்களுக்கு துப்பாக்கிச் சத்தம் பழகிப்போன ஒன்றாய்த் தெரிகிறது.
காலெத்,சயித் இருவரும் சிறு வயதிலிருந்தே நண்பர்கள் மற்றும் இருவரும் கார் மெக்கானிக். காலெத் எளிதில் கோபம் அடைபவனாய் இருக்கிறான். வாடிக்கையாளர் ஒருவருடன் ஏற்பட்ட சண்டையில் காலெத்திற்கு வேலை போய்விடுகிறது. அந்த நேரம் சுஹா வந்து அவளுடைய காரை அங்கிருந்து எடுத்துச் செல்ல வருகிறாள். அவளுக்கும், சயித்திற்கும் ஒரு ஈர்ப்பு இருப்பதாய் தெரிகிறது. மாலையில் நண்பர்கள் இருவரும் நகரத்தில் மலை போல் இருக்கும் ஒரு மேடான பகுதியில் அமர்ந்து புகை பிடிக்கிறார்கள். பின் சிறிது நேரம் கழித்து வீடு திரும்புகிறார்கள்.
வீட்டிற்குத் திரும்புகையில் சயித் ஜமாலை சந்திக்கிறான். ஜமால் காலெத்தும், சயீத்தும் இயக்கத்தின் அடுத்தகட்ட நடவடிக்கைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டதாகச் சொல்கிறான். சயித்தும் கடவுளின் விருப்பம் அதுவானால் மகிழ்ச்சி என்கிறான். அன்று இரவு ஜமால் சயித்தின் வீட்டிலேயே தங்குகிறான். இதே போல் காலெத்தின் வீட்டிலும் வேறு ஒருவன் தங்குகிறான்.
அன்று இரவு சயித் அவனது அம்மாவிடம் தனக்கு இஸ்ரேலின் டெல் அவிவ் (Tel Aviv) நகரத்தில் வேலை கிடைத்திருப்பதாகவும் மறுநாள் ஜமாலுடன் கிளம்புவதாகவும் சொல்கிறான். அவளும் அதற்கு சம்மதிக்கிறாள். இருவரும் காலையில் வீட்டிலிருந்து கிளம்புகின்றனர். அங்கு காலெத்தின் அம்மா அவனுக்கு வழியில் சாப்பிட உணவு கொடுத்து வழியனுப்பி வைக்கிறாள். நடந்து போகையில் ஜமால் சயித்திடம் போராடுவது குற்றமில்லை என்று போதிக்கிறான். சுதந்திரத்திற்காக போராடுபவன் அதற்காக உயிரை இழக்கலாம் என்று கூறி அழைத்துச் செல்கிறான்.
சிறிது நேரத்தில் அவர்கள் ஒரு டைல் ஃபேக்டரியில்(Tile Factory) அவர்களது சகாக்களுடன் சந்திக்கிறார்கள். அவர்களில் ஒருவன் ஒரு வீடியோ கேமராவுடன் இருக்கிறான்.
காலெத் முதல் உறுதிமொழி எடுக்க அழைக்கப்படுகிறான். அவனிடம் உறுதிமொழி அடங்கிய ஒரு காகிதம் கொடுக்கப்படுகின்றது. ஒவ்வொரு போராளியும் தான் இறக்கும் முன் உறுதிமொழி எடுப்பதை வீடியோவாக எடுத்துக்கொள்கிறார்கள். காலெத் உறுதிமொழி எடுக்கும் காட்சி மிகவும் தத்ரூபமாகவும், உணர்வுப்பூர்வமாகவும் எடுக்கப்பட்டுள்ளது. காலெத் ஒருவிதமான பதற்றத்துடன் உறுதிமொழியைக் கூற ஆரம்பித்து பின்னர் கொஞ்சம் கொஞ்சமாய் உணர்வுப்பூர்வமாய் மாறுவது மிகவும் அருமை.
பின்னர் நண்பர்கள் இருவரின் தலைமுடி வெட்டப்படுகிறது. அவர்களது தாடி,மீசை மற்றும் உடலில் இருக்கும் முடிகளும் சவரம் செய்யப்படுகின்றன. பின் அவர்களது உடலில் வெடிகுண்டு பொருத்தப்படுகிறது. இருவருக்கும் நாகரீகமான கோட், சூட் வழங்கப்படுகிறது. வழியில் யாராவது கேட்டால் ஒரு திருமண விழாவிற்குச் செல்வதாக சொல்லச் சொல்லி அறிவுறுத்தப்படுகிறார்கள். இஸ்ரேல், பாலஸ்தீன் எல்லை நோக்கிக் காரில் போய்க்கொண்டிருக்கையில் வெடிகுண்டை எப்போது இயக்கவேண்டும் என்று ஜமால் கூறுகிறான். சயித் வெடிகுண்டை இயக்கிய பிறகு தங்களுக்கு என்ன நேரும் என்று ஜமாலைப் பார்த்து கேட்கிறான். ஜமால் ஓரிரு வினாடிகள் பார்த்துவிட்டு வானிலிருந்து இரண்டு தேவதைகள் வந்து அவனைக் கூட்டிச் செல்வார்கள் என்கிறான்.
இரண்டு நண்பர்களும் இஸ்ரேல் எல்லையின் அருகே இறக்கி விடப்படுகிறார்கள்.
இஸ்ரேலின் எல்லையில் இவர்கள் இருவரையும் கூட்டிச் செல்ல அபு சபாப் என்ற இஸ்ரேலியன் காத்திருப்பதாக ஜமால் கூறுகிறான். இருவரும் இஸ்ரேல் எல்லையினுள் நுழைகிறார்கள். சிறிது தூரத்தில் அபுசபாப் ஒரு காரில் காத்துக்கொண்டிருக்கிறான். திடீரென்று இஸ்ரேல் எல்லைப்படையினர் அங்கு வர இரண்டு நண்பர்களும் திரும்பவும் பாலஸ்தீன் எல்லைக்குள் ஓடிவருகிறார்கள், இருவரும் வேறு வேறு திசையில் பிரிந்து விடுகிறார்கள்.
காலெத் திரும்ப அவர்களது இயக்கத்தினர் இருக்கும் இடத்திற்கே திரும்புகிறான். அனைவரும் உடனடியாக அந்த இடத்தைவிட்டு காலிசெய்கிறார்கள். காலெத் சயித்தைத் தேடி அழைத்து வருவதாகக் கிளம்புகிறான். மறுபுறம் சயித் அவன் முன்பு மெக்கானிக்காக வேலை செய்த இடத்திற்கே திரும்புகிறான். அங்கு சுஹாவை சந்திக்கிறான். அவள் அவனைக் கூட்டிச் செல்கிறாள். காலெத் அந்தக் கார் வொர்க் ஷாப்பிற்கு வந்து சயித்தைப் பற்றி விசாரிக்கிறான். சயீத் சுஹாவுடன் சென்றிருப்பதை அறிந்து சுஹாவின் வீட்டிற்குச் சென்று காத்திருக்கிறான். அந்த நேரத்தில் இரு சிறுவர்கள் பட்டம் விட்டு விளையாடுவதைப் பார்த்து காலெத் அவனுடைய சயித்துடனான பழைய நாட்களை நினைத்துப் பார்ப்பது போல் தெரிகிறது.
இடையில் சுஹாவிற்கும், சயித்திற்கும் இடையே அவர்களின் போராட்டம் பற்றிய விவாதம் தொடர்கிறது. சயித்தின் அப்பா இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனுக்கும் பேச்சுவார்த்தை நடத்தும் நடுவர் மன்றத்தில் இருந்ததால் கொல்லப்பட்டார் என்கிறான். இஸ்ரேலியர்களைக் கொல்வது தப்பில்லை என்கிறான். சயித் திடீரென்று மனம் மாறியவனாய் திரும்பவும் இஸ்ரேல் செல்வதற்காக அங்கிருந்து ஓடி விடுகிறான். சுஹா சிறிது நேரத்தில் அவளது வீட்டை அடைகிறாள். அவளுடன் சயித் இல்லாதது கண்டு அவன் எங்கே போயிருக்கிறான் என்று வினவுகிறான் காலெத். சுஹா காலெத்தைக் கூட்டிக் கொண்டு சயித்தை இறக்கிவிட்ட இடம் நோக்கிப் புறப்படுகிறாள். வழியில் சுஹாவிற்கு இவர்கள் இருவரும் மனித வெடிகுண்டாய் மாறியிருப்பது தெரிந்து இருவருக்கும் வாக்குவாதம் நடக்கிறது. சுஹா காலெத்திடம் சொர்க்கம் வேறு எங்கும் இல்லை அது அனைவரது மனதில் தான் இருக்கிறது என்கிறாள்.
சயித் அவனது அப்பாவின் சாமதியின் அருகே படுத்திருப்பதைப் பார்க்கிறார்கள். காலெத் அவனிடம் இந்தத் திட்டத்தைக் கைவிட வலியுறுத்திகிறான். சயித் அதை மறுத்து அவர்களிடம் இருந்து தப்பி ஓடுகிறான். காலெத் அவனைப் பிடித்து அவர்களது சகாக்களிடம் கூட்டி வருகிறான். அங்கு அபு கரீம் என்ற போராளியுடனான பேச்சுவார்த்தைக்குப் பின் சயித் மறுபடியும் இஸ்ரேல் செல்ல முடிவெடுக்கிறான். காலெத் வேறு வழியில்லாமல் நண்பனை விட்டுப் பிரிய மனமில்லாமல் அவனுடன் இஸ்ரேலுக்குச் செல்கிறான். அங்கு இம்முறை அபுசபாப் வந்து கூட்டிச் செல்கிறான்.
இருவரும் நகரின் ஒரு பகுதியில் இறக்கிவிடப்படுகிறார்கள். அவர்களிடம் ஒரு செல்போன் கொடுக்கப்படுகிறது. காலெத்தும், சயித்தும் நகரத்திற்குள் செல்ல ஆரம்பிக்கிறார்கள். காலெத் பலமுறை இந்தத் தற்கொலைத் தாக்குதல் வேண்டாம் என்று கெஞ்சவே சயித் திரும்பிச் செல்ல சம்மதிக்கிறான். காலெத் அபுசபாப்பை செல்போனில் தொடர்பு கொண்டு அவர்களை வந்து கூட்டிச் செல்லுமாறு அழைக்கிறான். அபுசபாப் வந்தவுடன் சயித் காலெத்தை காருக்குள் தள்ளிவிட்டு அபுசபாப்பை காரை எடுக்கச் சொல்லிவிட்டு அங்கிருந்து நகருகிறான்.
காலெத் அழுது கொண்டே காரில் எல்லை நோக்கிச் செல்கிறான். இஸ்ரேலில் சயித் ஒரு பேருந்துக்குள் உட்கார்ந்திருக்கிறான். அவனது கை வெடிகுண்டை இயக்கும் ஒரு வயரை நோக்கிச் செல்வது போல் படம் முடிவடைகிறது.
படம் முடிந்தவுடன் நமது மனம் கனம் ஆவதை நம்மால் உணர முடியாமல் இருக்க முடியாது. உறுதிமொழி எடுக்கும் போதும், கடைசியில் நண்பனைப் பிரிந்து காரில் அழுது கொண்டு வரும் போதும் காலெத்தின் உணர்வுப்பூர்வமான நடிப்பு அனைவரையும் கண்டிப்பாய் ஈர்க்கும். அதே போல் அமைதியாய் முகத்தை வைத்துக் கொண்டு அடுத்து என்ன செய்யப்போகிறான் என்ற ஒருவித பதற்றம் கலந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் சயித்தின் நடிப்பும் அருமை.
இந்தப் படத்தின் டிரெய்லர் “From the most unexpected place Comes a bold call for Peace” என்று தொடங்குகிறது. அது உண்மை தான்.
எந்தவித அருவருப்பும்,உயிரிழப்பும் காட்டாமல் தீவிரவாதத்தின் கொடுமையைக் காட்டும் இந்தத் திரைப்படம் கட்டாயம் அனைவரும் பார்க்க வேண்டியதே.
“Sometimes the most courageous act is what you don’t do” என்பதை வலியுறுத்துகிறது இந்தத் திரைப்படம்.
இந்தப் படத்தின் டிரெய்லர் பார்க்க:
No comments:
Post a Comment