அமெரிக்காவின் உடா பகுதியில் அமைந்திருக்கும் இடுங்கிய இடுக்குகளைக்கொண்ட மலைப் பள்ளத்தாக்கு அது. வெட்ட வெளியில் இரண்டு கிலோ கேக்கை எடுத்துவைத்தால்கூட, ஓர் ஈ, எறும்பு, காக்காகூட மொய்க்காமல் கேட்பாரற்றுக்கிடக்கும் பிரதேசம். அந்தப் பிராந்தியத்தில் ஒற்றை ஆளாக மலையேறிக்கொண்டு இருக்கிறார் 28 வயது ஆரன் ரால்ஸ்டன். யாரிடமும் சொல்லிக்கொள்ளாமல், சட்டென்று கிளம்பிச் சென்று இப்படித்தான் எங்கேனும் மலை ஏறிக்கொண்டு இருப்பார் என னைவரும் கூறுகிறார்கள்.
ஒருநாள் அப்படித்தான் இரண்டு மலைத் தொடர்களுக்கு இடையிலான மிகக் குறுகலான ஓர் இடைவெளியில் ஊர்ந்து சென்றுகொண்டு இருந்தார். ஒரு திடுக் நிமிடத் தில் மேலே இருந்து ஒரு பாறை உருண்டு விழுந்தது. கடைசி நிமிடத்தில் சுதாரித்த ஆரன், தலையை விலக்கிக்கொண்டார். ஆனால், அந்தப் பாறை அவரது வலது கையில் நச்சென்று பதிந்து மலைச் சுவரோடு இறுக்கி அழுத்திச் சொருகிக்கொண்டது. ஓர் அங்குலம்கூட 'அங்கிட்டு இங்கிட்டு’ நகர முடியாத இறுக்கம். கை எலும்பு விரிசல் அடைந்ததில் வலி கிளம்பி உடல் முழுக்கப் பரவுகிறது.
'ஹெல்ப் மீ... ஹெல்ப் மீ!’ என்று கூப்பாடு போடுவதன் மூலம் மிச்சம் இருக்கும் சக்திதான் வீணாகும். வலியைப் பொறுத்துக்கொண்டு பாறை இளகும் சமயம், கையை விடுவிப்பதற்காகப் பொறுமையாகக் காத்திருந்தார் ஆரன். ஒரு மணி நேரம், இரண்டு மணி நேரம், ஐந்து மணி நேரம் அல்ல... முழுதாக ஐந்து நாட்கள்!
ஐந்து நாட்களும் ஒரு மில்லிமீட்டர்கூட அசைய முடியாமல் அங்கேயே இருந்தார் ஆரன். தோளில் மாட்டி இருந்த சின்ன தண்ணீர் பாட்டிலில் இருந்து அவ்வப்போது கொஞ்சம் தண்ணீர் குடித்துக்கொண்டார். ஐந்து முழு நாட்கள் கடந்த பிறகு, தீர்க்கமாக ஒரு முடிவு எடுக்கிறார்.
ஜெர்கின் கோட்டுக்குள் இருந்த ஒரு சின்ன கத்தியை எடுத்துத் தனது வலது கையைத் தானே அறுக்கத் தொடங்குகிறார். மிகவும் மொண்ணையான அந்தக் கத்தியால் ஒரு தர்பூசணிப் பழத்தையே வெட்ட முடியாது. ஆனால், வேறு வழி இல்லை. மெதுவாக, மிக மெதுவாக, வலியைப் பொறுத்துக்கொண்டு, சின்னச் சின்ன இளைப்பாறலுக்குப் பிறகு, சக்தியைத் திரட்டி கையை அறுத்துக்கொண்டே இருந்தார். வலித்து, வலியில் மரணித்து, வலி மரத்து... ஒருவழியாகப் பாறையில் இருந்து விடுதலை ஆனார் ஆரன். பள்ளத்தில் இருந்து மேலே ஏறிக் கீழே பார்த்தபோது... அந்த ஒற்¬றக் கையில் இருந்து இன்னும் ரத்தம் வடிந்துகொண்டு இருந்தது!
ஆரன் அந்த மலை இடுக்கில் சிக்கி இருந்த 127 மணி நேரங்களை ஒன்றரை மணி நேர சினிமா ஆக்கியிருக்கிறார்கள். படத்தின் பெயர் '127 Hours’! ஆஸ்கர் விருதுகள் அள்ளிய 'ஸ்லம்டாக் மில்லியனர்’ குழுவின் அடுத்த விருந்து. டேனி பாயிலின் இயக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மானின் அதிரடிக்கும் இசையில் அமெரிக்காவில் பாராட்டுக்களைக் குவித்துக்கொண்டு இருக்கிறது '127 Hours’! கையைத் துண்டித்துத் தப்பி வந்த ஆரன் ரால்ஸ்டனை அதற்குப் பிறகு தேடி வந்தது 'செலிபிரட்டி’ அந்தஸ்து. 'Between a Rock and a Hard Place’ என்ற தலைப்பில் வெளியான ஆரனின் வாழ்க்கை அனுபவத்தைத்தான் டேனி பாயில் படமாக இயக்கி இருக்கிறார். 'டொரன்டோ ஃபிலிம் ஃபெஸ்டிவல்’, 'கோல்டன் குளோப்’, 'லண்டன் திரைத் திருவிழா’ என்று படத்துக்கு வெகுவான வெகுமதிப் பாராட்டுக்கள்! 'ஏ.ஆர்... நம்ப முடியாத ஆச்சர்யமூட்டும் இசை அனுபவத்தை எனது வாழ்க்கைக் கதையில் சேர்த்ததற்கு நன்றி. உங்களுடைய சவுண்ட் ட்ராக் பின்னணியில் ஒலித்துக்கொண்டு இருந்தால், இன்னொரு 127 மணி நேரங்கள் நான் அந்த மலை இடுக்கில் கழிக்கும் தைரியம் வரப்பெற்றிருப்பேன் - ஆரன் ரால்ஸ்டன்’ - இது ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஆரன் எழுதி அனுப்பியிருந்த பாராட்டு வரி!
ஆரன் வேடத்தில் நடித்த ஜேம்ஸ் ஃப்ரான்கோவும் புகழின் உச்சத்தில். 2003-ம் வருடம் தனது கையை இழந்தார் ஆரன். ஆனால், அதன் பிறகு கொலராடோ பகுதியில் இருக்கும் 14,000 அடி உயர சிகரங்கள் அனைத்திலும் ஏறிய முதல் மனிதன் என்ற சாதனையை 2005-ம் வருடம் படைத்துவிட்டார்.
நன்றி : விகடன் குழுமம்
No comments:
Post a Comment