இந்த நாட்டில் ஏழை, எளிய மக்கள் இருக்கும் வரை இலவச உதவிகள் வழங்கப்படும் என்ற தமிழக முதல்வர் மு. கருணாநிதியின் பேச்சு வரவேற்கத்தக்கதா அல்லது வருந்தத்தக்கதா என்று தெரியவில்லை. உழைப்புக்குப் பெயர் பெற்ற தமிழர்கள் தற்போது இலவசம் என்ற பெயரில் அரசிடம் கையேந்தி நிற்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
இலவசம் என்றால் எதைப் பற்றியும் கவலைப்படாமல் கிடைப்பதை விடக் கூடாது என்ற நோக்கத்கோடு, அனைத்தையும் கைப்பற்ற வேண்டும் என்ற மனப்பான்மை தற்போது தமிழக மக்களிடம் அதிகரித்துவிட்டது.
இந்த மனப்போக்கை மனதில் கொண்ட அரசியல் கட்சியினர் இலவசத் திட்டங்களை அறிவித்து, அதன்மூலமாக ஆட்சியைப் பிடித்துவிடலாம் என்று கணக்கிடுகிறார்கள். அதற்கு முன்னோட்டமாகத்தான் முதல்வரின் இந்தப் பேச்சும் அமைந்திருக்கிறது.
இலவசங்களை வழங்கும் அரசுகள் இந்த இலவசங்கள் உண்மையில் மக்களுக்குப் பயன்படுகிறதா என்பதைச் சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும். இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி வழங்கும் திட்டத்தில், பலர் தங்களது வீடுகளில் தொலைக்காட்சிப் பெட்டிகள் இருந்த போதிலும் அரசு கொடுத்த டி.வி.யை வாங்கி, அதைக் குறைந்த விலைக்கு விற்றுவிட்டனர். மேலும், சிலர் வீட்டினுள் பத்திரப்படுத்தியுள்ளனர்.
இதனால், யாருக்கு என்ன பயன் ஏற்பட்டுவிட்டது. மின்சாரச் செலவு கூடுதலானதும், கேபிள் இணைப்புக்குக் கட்டணம் செலுத்தியதோடு, குறிப்பிட்ட சில டி.வி. சானல்களின் ரேட்டிங் உயர்வுக்கு மட்டுமே இந்தத் திட்டம் உதவியுள்ளது. அதேநேரத்தில், இலவச டி.வி.க்காக வழங்கப்பட்ட தொகையைத் தொழிற்துறையில் செலவிட்டிருந்தால் பல குடும்பங்கள் வாழ்ந்திருக்கும்.
உதாரணமாக, 1,500 குடும்ப அட்டைகள் கொண்ட ஒரு கிராமத்தில் இலவச டி.வி.க்காக அரசு தோராயமாக ரூ. 37.50 லட்சம் செலவிடுகிறது. இந்தத் தொகையின் மூலமாக அந்தப் பகுதியைச் சேர்ந்த விவசாயப் பொருள்களை மதிப்புக்கூட்டப்பட்ட பொருள்களாக மாற்றும் தொழிற்சாலைகளைத் தொடங்கும்பட்சத்தில் விவசாயிகளின் வாழ்வாதாரம் உயர்வதோடு, நூற்றுக்கணக்கானவர்களுக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புக் கிடைத்திருக்கும். விவசாயிகளுக்கும் தங்கள் தொழில் மீது நம்பிக்கை ஏற்பட்டிருக்கும்.
இலவசமாகக் கொடுக்கப்படும் பொருள் நமது வரிப் பணத்திலிருந்தும், நமது தலையை அடமானமாக வைத்து நபார்டு வங்கி, உலக வங்கி மற்றும் தனியார் நிதிநிறுவனங்களிடமிருந்து பெறப்பட்ட தொகைதான் என்பது நமக்கு மறைக்கப்படுகிறது.
இதை உணர்ந்தவர்களும், பணக்காரர்களும் அரசின் இலவசங்கள் நமது பணம்தான் என்பதால் அதைப் பெறுவதிலும் தயக்கம் காட்டுவதில்லை. இதனால்தான் சென்னையில் சுனாமி தாக்குதலுக்கு உள்ளானவர்களுக்கு வழங்கப்பட்ட உதவித் தொகையைப் பெறுவதற்கு ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் உயிரிழந்தவர்களில் பணக்காரர்களும் இடம் பெற்றிருந்தனர்.
இலவசம் என்பது ஒரு நாட்டின் கெüரவக் குறைச்சல் என்பதை பள்ளியில் நாம் படிக்கும்போது பாட்டி கதை மூலமாக விளக்குவார்கள். அந்தக் கதை இப்போது நமக்குத் தேவையாக இருக்கிறது. ""ஒரு மன்னன், பக்கத்து நாட்டு மன்னனைச் சந்தித்தபோது, தனது நாட்டைப்பற்றிப் பெருமையாகக் கூறினான். தனது நாட்டில் திரும்பிய பக்கமெல்லாம் அன்னசத்திரங்கள் திறக்கப்பட்டிருக்கின்றன. அதில், தினமும் ஏராளமானவர்கள் உணவருந்துகிறார்கள். அதேபோல, என்னைப் பார்ப்பதற்காக தினமும் வரும் ஏழைகளுக்குப் பொன்னையும், பொருளையும் வாரி வழங்குகிறேன். அதை அவர்கள் தினமும் பெற்றுச் செல்கிறார்கள். இதைப் பெறுவதற்காக அவர்கள் என் அரண்மனை முன் தினமும் காத்திருப்பார்கள்'' என்று பெருமைப்பட்டான்.
அதற்கு மற்றொரு மன்னன், ""என் நாட்டில் பிச்சைக்காரர்கள் இல்லை. அவரவர்கள் உழைக்கிறார்கள், சாப்பிடுகிறார்கள். அதற்குத் தேவையானவற்றை அரசு செய்து கொடுக்கிறது என்றானாம். அதன்பிறகுதான், தற்பெருமை பேசிய அரசனுக்கு நமது குடியின் கீழிருக்கும் மக்களைப் பிச்சைக்காரர்களாக்கியது தனது தவறு என்பதை உணர்ந்தான்'' என்று பாட்டி கதை கேட்டிருக்கிறோம்.
இப்போது நமது நாட்டில் அன்னசத்திரங்களும், அரசின் இலவசத் திட்டங்களும் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன. இது அரசின் வளர்ச்சியல்ல. மக்களின் வறுமைக்கோடு உயர்ந்துகொண்டே செல்கிறது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.
தமிழகத்தில் 2010-ம் ஆண்டு கணக்கின்படி தோராயமாக 6.63 கோடி மக்கள் இருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது. இவர்களில், தற்போது தமிழக அரசு வழங்கும் இலவச, வேஷ்டி சேலை வறுமைக்கோட்டுக்குக் கீழே இருப்பவர்களுக்கு வழங்கப்படுவதாகும். அந்தக் கணக்கின்படி பார்த்தால் தமிழகத்தில் 3 கோடியே 11 லட்சத்து 23 ஆயிரம் பேருக்கு இலவச வேட்டி, சேலைகள் வழங்கப்படுகின்றன. இவ்வளவு மக்களும், அவர்களின் குடும்பங்களும் வறுமைக்கோட்டுக்குக் கீழே இருப்பதாகத்தானே தமிழக அரசு கூறுகிறது. இவ்வாறு மக்கள் தொகையில் பாதிக்கும் மேற்பட்டோர் வறுமைக்கோட்டுக்குக் கீழே இருக்கும்போது, அவர்களின் வாழ்வை மேம்படுத்தும் திட்டங்களைத் தீட்டினால்தான் அவர்களின் வாழ்வு உயரும். அதைவிட்டு, இலவசத் திட்டங்கள் தீட்டப்பட்டு, அதற்காக வாங்கப்படும் கடன் தொகை அரசை நெருக்கும்போது அரசே திவாலாகும் நிலை ஏற்படும்.
இவ்வாறு திவாலாகும் நிலையைத் தடுக்க அரசு கையிலெடுத்திருக்கும் மதுபான விற்பனை, மணல் விற்பனை போன்றவற்றால் மக்களின் உடல்நலமும், இயற்கை வாழ்வாதாரமும் கெட்டு, தமிழக மக்கள் உண்மையில் இலவசங்களையும், அரசின் நிரந்தர உதவியையும் மட்டுமே எதிர்பார்க்கும் நிலைக்குத் தள்ளப்படுவார்கள் என்பதில் ஐயமில்லை. கான்கிரீட் வீடு கட்டும் திட்டத்தில் வழங்கப்படும் மானியத் தொகை குறைவால், ஒரு வேளை உணவாவது நிம்மதியாகச் சாப்பிட்ட ஏழைத் தொழிலாளிகூட, தான் வாங்கிய கடனுக்கு கந்து வட்டி கட்டும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார். அதே நிலை தொடரும்போது, குடியிருக்கும் வீட்டை நிலத்துடன் விற்றுவிட்டு அரசின் இலவசத்தை மட்டுமே எதிர்பார்க்க வேண்டிய நிலைதான் ஏற்படும்.
எனவே, ஏழைகள் இருக்கும் வரை இலவசங்கள் தொடரும் என்ற எண்ணத்தைத் தமிழக முதல்வர் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் கைவிட்டுவிட்டு, ஏழைகள் இலவசங்களைப் பெறுவதற்காகப் பிறந்தவர்கள் அல்லர் என்பதை உணர்ந்து அவர்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தும் திட்டங்களைத் தீட்ட முன்வந்தால்தான் தமிழகம் உண்மையான வளர்ச்சியை எட்டும்.
No comments:
Post a Comment