புஷ்டி, போஷாக்கு என்ற வார்த்தைகள் பொங்கி நிறைந்து வளர்ந்து வளமை அடைவதைக் குறிக்கின்றன. இந்த வார்த்தைகளுக்குத் தாது ‘புஷ்’ என்பது, புஷ்யம் என்பது ஒரு நக்ஷத்திரம். ‘பூசம்’ என்று சொல்வது அதைத்தான் ஒரு மாஸத்தில் பௌர்ணமியை ஒட்டி எந்த நக்ஷத்திரம் வருகிறதோ அதையே மாஸத்தின் பெயராக வைப்பதால், தை மாஸத்தில் பூர்ணிமை பெரும்பாலும் புஷ்யத்தில் வருவதால் இதற்குப் புஷ்ய மாஸம் அல்லது பௌஷ்ய மாஸம் என்றே பேர். அதாவது இந்த மாஸத்தின் முதல்நாள் மட்டுமின்றி மாஸம் முழுதுமே, வளர்ந்து வளமாகிப் பொங்கி நிறைவதான ‘பொங்கல்’ என்ற பொருள்கொண்ட புஷ்யப் பேரை வைத்துக் கொண்டிருக்கிறது!
நடராஜர் பொங்குகிற ஆனந்தத்தோடு நர்த்தனம் செய்தது தைப்பூசத் திருவிழாவில்தான்! அது ஸாக்ஷாத் பரமேச்வரனின் பொங்கல், ராமலிங்க ஸ்வாமிகள் விழாவாகவும் அது இருக்கிறது.
தமிழிலே ஏன் புஷ்ய மாஸத்துக்குத் ‘தை’ என்று பேர் வந்தது? மற்ற மாஸங்களைப் பார்த்தால், ஸம்ஸ்கிருதத்தில் சித்ரா, வைசாகி, ஆநுஷி, ஆஷாடி, ச்ராவணி, ப்ரோஷ்டபதி, பால்குனி என்ற பெயர்கள் தமிழிலும் கிட்டத்தட்ட அதே ரூபத்தில் சித்திரை, வைகாசி, ஆனி, ஆடி, ஆவணி, புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை, மார்கழி, மாசி, பங்குனி என்று இருக்கின்றன. ஆனால், இந்தத் ‘தை’ என்பது மட்டும் ‘பௌஷ்ய’ என்பதன் ஸம்பந்தமே இல்லாமலிருக்கிறது. இது ஏன்?
புஷ்யத்துக்கே ‘திஷ்யம்’ என்றும் இன்னொரு பேர் உண்டு. புஷ்யம் குறித்தது ‘பௌஷ்யம்’ என்கிற மாதிரி, திஷ்யம் குறித்தது ‘தைஷ்யம்’. அதுதான் தமிழில் முதலெழுத்து மட்டும் நின்று ‘தை’ என்றாகியிருக்கிறது!
நடராஜா ‘தை தை’ என்று ஆடிப் பொங்கின மாதிரி - அவர் பொங்கினதாலேயே - லோகமெல்லாம் பொங்குகிற மாஸமாக இருப்பதால் இதற்குப் பொங்கல் பேர் பொருத்தமாயிருக்கிறது. பயிர்கள் பொங்கி விளைந்து அறுவடைக்கு வருவது இந்த மாஸத்தில்தானே? அதுவும் எல்லாமே புஷ்டியையும் சித்த சுத்தியையும் லக்ஷ்மீகரத்தையும் தரும்படியான பயிர்களாகவே இம்மாஸத்தில் விளைகின்றன. பொங்குவதற்குப் பதில் ஆரோக்கியம், செல்வம், மனம் எல்லாவற்றையுமே மங்கச் செய்கிற புகையிலையும் கஞ்சாவும் இந்த மாஸத்தில் விளைவதில்லை; மார்கழி முழுதும் வாசற் கோலத்தில் சாணியில் வைத்த பறங்கிப் பூவும், பூசணிப் பூவும் இந்தப் பூச மாஸத்தில்தான் காய்த்து வருகின்றன. ரூபத்தில் வளப்பத்தைக் காட்ட அவற்றைவிடப் பெரிய காயே இல்லை. அதோடு அவற்றுக்கே இனிப்பு உண்டு. புஷ்டி தருகிற மருத்துவ ஸத்து உண்டு. அதனால்தான் கூச்மாண்ட லேஹியம் என்று பண்ணப்படுகிறது.
வளர்ப்போடு இனிப்பும் சேர்ந்த மாஸம் இது. இதற்குப் பெரிய அடையாளமாக, ஸகலத் தித்திப்பு வகைகளுக்கும், ஆதாரமான வெல்லத்தையும் சர்க்கரையையும் தருகிற கரும்பு இப்போதுதான் விளைந்து வருகிறது. மற்றும் சம்பா நெல்லும், துவரை, பயறு, உளுந்து, மொச்சை முதலான புன்செய்த் தானியங்களும் இப்போதே அறுவடையாகி, வந்து வளர்ப்பைத் தருகின்றன. இஞ்சிக் கொத்து ஆரோக்கியம், மஞ்சள் கொத்து லக்ஷ்மீகரம், ஸௌபாக்கியம்.
மார்கழிக் குளிரும், நீண்ட இரவுப்போதும் போய் ஸூரியன் மகரப் பிரவேசம் பண்ணியவுடன் இம்மாஸத்தில் சீதோஷ்ணம் ஆரோக்கியமாகவும், ஆத்ம க்ஷேமகரமாகவும் ஆகிறது. ‘உத்தராயணம்’ என்று இம்மாஸத்தில் தொடங்கும் பாதி வருஷத்தில் ஜீவயாத்திரை முடிந்தால் ஜீவன் உத்தம கதி அடைகிறது. இருப்பதற்கு மட்டுமில்லாமல் இறப்பதற்கும் சிலாக்யமான மாஸம்!
இதனாலெல்லாந்தான் நாம் மகிழ்ச்சியில் பொங்கிப் ‘பொங்கலோ பொங்கல்’ என்று பண்டிகை கொண்டாடப்படுகிறது.
எங்கே படித்தேன் என்று என்னால் நினைவு குற இயலவில்லை ...
No comments:
Post a Comment