நமக்கு ஒரு கெட்ட பழக்கம்... நிறைய பேர்கள் ஒரு பொருளை வாங்க ஆரம்பித்தால் உடனே ஓடிப்போய் நாமும் அதை வாங்கிவிடுவோம்... சமீபகாலமாக அப்படி ஒரு பொருளை எல்லோரும் கண்ணை மூடிக்கொண்டு வாங்குகிறார்கள் என்றால் அது டச் ஸ்கிரீன் மொபைல் போன்தான்!
உங்களுக்கும் டச் மொபைல் வாங்கும் எண்ணம் இருந்தால் இதை முதலில் படித்துவிட்டு அதன்பிறகு செயலில் இறங்குங்கள்...
வசதிகள்
டச் ஸ்கிரீன் மொபைல் போனை முதன் முதலில் அறிமுகப்படுத்தியது ஹெச்.டி.சி. நிறுவனம்தான். சாதாரண மொபைல் போனை விட டச் ஸ்கிரீன் போன் விலை கொஞ்சம் அதிகமாகவே இருக்கிறது. காரணம் இதில் இருக்கும் டச் பேட். பிராண்டட் டச் போன்கள் என்று போனால் குறைந்தபட்சம் 4,000 ரூபாயாவது தேவைப்படும். அதற்கு குறைந்து வேண்டுமென்றால் சீன, லோக்கல் தயாரிப்புகளைத்தான் நாட வேண்டியதிருக்கும்.
கேமராவைப் பொறுத்த வரை மற்றவகை போன்களில் இருக்கும் அதே கிளாரிட்டிதான் இருக்கும். ஆனால் இதில் எல்.சி.டி. ஸ்கிரீன் இருப்பதால் படங்கள் பளிச்சென இருக்கும். டச்சில் இருக்கும் கலர்களும் பளிச்சென இருக்கும். எழுத்துக்கள் படிப்பதற்கு சுலபமாக இருக்கும். தேவையெனில் குவாட்டரி கீபோர்டு ஆப்ஷனையும் பயன்படுத்திக் கொள்ளலாம். டாக்குமென்ட்டுகள், பி.டி.எஃப். ஃபைல்கள், எக்செல், வை-பைஃவ் வசதி, 3ஜி, வேகமான இன்டர்நெட் வசதி இருக்கிறது. மேலும் வேறு சாஃப்ட்வேர்கள் தேவையெனில் அவற்றையும் டவுன்லோட் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம். ஸ்கிரீன் பெரிதாக இருப்பதினால் வெப் பிரவுஸிங் செய்வதற்கும், போட்டோக்கள், திரைப்படங்கள் பார்ப்பதற்கும் வசதியாக இருக்கும்.
பிரச்னைகள்
போனை லாக் செய்யா விட்டால் கைபட்டு தெரியாமல் யாருக்காவது அழைப்பு போய் விடும்.ஸ்கிரீன் சிறியதாக இருக்கும் பட்சத்தில் நீங்கள் நினைக்கும் ஆப்ஷனுக்குச் செல்லாமல், தவறுதலாக வேறு ஆப்ஷனுக்குப் போய்விடும் வாய்ப்பிருக்கிறது.
ஸ்கிராச் கார்டு, பவுச் போன்றவை இல்லாமல் டச் போனைப் பயன்படுத்துவது பாதுகாப்பானது அல்ல. காதில் வைத்து பேசும்போது வியர்வை பட்டாலோ, மழைக் காலத்தில் சிறிது தண்ணீர் பட்டால் கூட டச் வீணாகி உச் கொட்டவேண்டிய தாகிவிடும். கீழே போட்டுவிட்டால் அவ்வளவுதான்! சில பேர் தங்களின் கோபத்தை போனில் காட்டுவார்கள். அவர்களுக்கு டச் போன் நிச்சயமாக ஒத்துவராது. பெரிய ஸ்கிரீன் என்பதால் பேட்டரியின் லைஃப் குறைவாக இருக்கும். டச், டிஸ்ப்ளே போய்விட்டாலே மொத்த டச் பேடையும் மாற்ற வேண்டியது வரும். கேரன்டி பீரியட் முடிந்துவிட்டால் இதற்கு ஆயிரக்கணக்கில் செலவாகும். எனவே எதையும் பாதுகாப்பாகக் கையாள்பவர்களுக்கு மட்டுமே ஏற்ற போன் இது.
பார்க்க ஸ்டைலாக இருக்கிறது என்பதற்காக டச் போனை வாங்காமல் அதிலிருக்கும் பிரச்னைகளையும் அறிந்து உங்கள் பயன்பாட்டைப் பொறுத்து, யோசித்து வாங்கவும்.
No comments:
Post a Comment