நீண்ட நெடிய இந்திய வரலாறில் பல நூறு ஆண்டுகளாகவே நாணயங்கள் புழங்கி வந்திருக்கின்றன. என்றாலும் பிரிட்டிஷ்காரர்கள் இந்தியாவுக்கு வந்தபிறகே நாணயங்களின் அதிகாரப்பூர்வ மான வரலாறு தொடங்குகிறது. இந்தியாவில் பிரிட்டிஷ்காரர்கள் ஆட்சி அமைப்பதற்கு முன்பு ஹைதராபாத் நிஜாம், நாணயம் தயாரிக்கும் ஆலை ஒன்றை நடத்தி வந்தார். 1790-ல் பிரிட்டிஷ் அரசாங்கம் அதன் அப்போதைய தலைநகரான கொல்கத்தாவில் நாணயம் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றைத் தொடங்கியது. இதற்காக இங்கிலாந்தில் இருந்து இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டன. என்றாலும், நாணயத் தட்டுப்பாடு தொடர்ந்து இருந்ததால், 1815-ல் மும்பை மாகாண பிரிட்டிஷ் ஆளுநர் ஒருவர் மும்பையில் நாணயம் தயாரிக்கும் ஆலை ஒன்றைத் தொடங்கினார். 1984-ல் டெல்லி அருகே நொய்டாவில் புதிய நாணய ஆலை ஒன்றும் தொடங்கப்பட்டது. தற்போது இந்த ஆலைகள் மூலம் ஓர் ஆண்டுக்கு சுமார் அறுபது லட்சம் நாணயங்கள் உற்பத்தியாகிறது.
நமது நாணயத்தின் கதை இப்படி என்றால் பணத்தின் வரலாறு வேறு மாதிரி. ஆரம்ப காலத்தில் ரூபாய் நோட்டை (1770 - 1832 காலகட்டத்தில்) பேங்க் ஆஃப் ஹிந்துஸ்தான் வெளியிட்டது. பிறகு இங்கிலாந்திலிருந்து பணத்தை அச்சிட்டு இங்கே கொண்டு வந்து கொடுத்தது பிரிட்டிஷ் அரசாங்கம். 10, 20, 50, 100, 1,000 ரூபாய் நோட்டுகள் இந்தியாவில் விக்டோரியா மகாராணியின் பெயரில் வெளியிடப்பட்டன. இந்த ரூபாய் நோட்டுகள் பாதுகாப்பு காரணங்களுக்காக பாதியாக வெட்டப்பட்டு தபாலில் அனுப்பி வைக்கப்படும். அதைக் கொண்டு போய் கொடுத்தால், மீதிப் பணத்தை கொடுக்கும் விநோதமான வழக்கம் அப்போது இருந்தது.
1917-ல்தான் முதன் முதலில் ஒரு ரூபாய் மற்றும் இரண்டு ரூபாய் நோட்டுகள் தயாரித்து வெளியிடப்பட்டன. ஆனால் சில காரணங்களால் 1926-ல் ஒரு ரூபாய் மற்றும் இரண்டு ரூபாய் வெளியிடுவது நிறுத்தப்பட்டது. 1935-ல் கரன்சி பொறுப்பு அனைத்தும் ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியாவின் கைக்கு வந்தது. அதன்பிறகு 500 ரூபாய் நோட்டு கரன்சியை அறிமுகப்படுத்தியது. 1940-ல் மீண்டும் ஒரு ரூபாய் நோட்டுகளை வெளியிட்டது. 1947-ம் ஆண்டுவரை ஆறாம் ஜார்ஜின் உருவம் பொறித்த நோட்டுகள் புழக்கத்தில் இருந்தன. சுதந்திரத்திற்குப் பிறகு இந்திய அரசால் கரன்சி வெளியிடப்பட்டது.
No comments:
Post a Comment