Search This Blog

Tuesday, November 29, 2011

வெள்ளச் சேதத்தைத் தவிர்க்க சில யோசனைகள்..!


தமிழகம் முழுவதும் வெளுத்து வாங்கிய வடகிழக்குப் பருவமழை, மிகப் பெரிய பாதிப்பை ஆங்காங்கே ஏற்படுத்தி வைத்திருக்கிறது. குறிப்பாக... டெல்டா மாவட்டங்கள், குமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் நெற்பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கி மிகப் பெரிய மகசூல் இழப்பு ஏற்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக தமிழக அரசு நிவாரண உதவிகளையும் வழங்கி வருகிறது.கடந்த பல ஆண்டுகளாகவே... மழை, வெள்ள பாதிப்பு... அதையட்டிய நிவாரணங்கள் என்றே காலம் ஓடிக் கொண்டிருக்கிறது! அதன் தொடர்விளைவாக, 'வெள்ள பாதிப்புகளுக்கு நிரந்தரத் தீர்வு... தடுப்பு அணை கட்ட 100 கோடி ஒதுக்கீடு! தூர் வார 300 கோடி ஒதுக்கீடு' என்று படாடோப அறிவிப்புகள் வெளியிடப்பட்டு, கோடிகளும் கரைக்கப்படுகின்றன. ஆனால், 'நிரந்தரத் தீர்வு' என்பதுதான் கேள்விக்குறியாகவே இருக்கிறது.

முன்பெல்லாம் இப்போது பெய்வதைவிட அதிகளவு மழை பெய்தது. அந்த சமயங்களில் விவசாய நிலங்களும் அதிகம். ஆனாலும், பாதிப்புகள் வந்ததில்லை. அதற்கான காரணம், மன்னராட்சி காலங்களில் கடைபிடிக்கப்பட்ட சிறந்த நீர் நிர்வாக முறைகள்தான். ஏரி, குளங்களில் குறிப்பிட்ட கொள்ளளவைத் தாண்டி நீர் மட்டம் உயரும்போது... வெளியேற வசதியாக மறுகால் அமைப்புகள் இருந்தன. மறுகால் வழியாக வெளியேறும் தண்ணீர், ஆறு, கடல் என கலந்துவிடும். தற்போது மறுகால் பகுதிகள் முழுவதும் ஆக்கிரமிப்பில் இருக்கின்றன. அதனால்தான் குளங்கள், ஏரிகளில் உடைப்பு ஏற்படுகிறது. கொஞ்சம் பெரிய மழை பெய்தாலும், நம்மால் சமாளிக்க முடிவதில்லை.பொதுப்பணித்துறை விதிகளின்படி, நீர் வரும் வாய்க்காலின் இரு கரைகளிலும் வாகனங்கள் போகும் அளவுக்கு இட வசதி (பாதை) இருக்க வேண்டும். வாய்க்காலில் உடைப்பு, விரிசல் ஏற்பட்டால் இந்த இடைவெளி மூலமாகத்தான் சீரமைக்க வேண்டிய பொருட்களை எடுத்துச் செல்வார்கள். விவசாயிகளும் இந்தப் பாதைகளைப் பயன்படுத்தி வந்தார்கள். தற்போது வாய்க்காலின் கரைகள்கூட பட்டா நிலங்களாக மாறியிருக்கின்றன. அப்படி ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களில் மின் இணைப்புகள்கூட கொடுக்கப்பட்டிருப்பதுதான் வேதனை.முந்தையக் காலங்களில் நீர் வரத்து வாய்க்கால்கள், வடிகால்கள் போன்றவற்றை முறையாகப் பராமரித்தார்கள். அதில் நாம் தற்போது கோட்டை விட்டிருப்பதுதான் பாதிப்புகளுக்கு முக்கிய காரணம்.


வருவாய்த் துறை பதிவேட்டின்படி தமிழகத்தில் நாற்பதாயிரத்துக்கும் அதிகமான நீர் ஆதாரங்கள் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. ஆனால், பத்தாயிரத்துக்கும் குறைவான நீர் ஆதாரங்கள்தான் பயன்படுத்தும் நிலையில் இருக்கின்றன. சென்னையைச் சுற்றி மட்டும் 240 ஏரி மற்றும் குளங்கள் இருப்பதாக பதிவேட்டில் உள்ளது. ஆனால், 40 நீர்நிலைகளைத்தான் பார்க்க முடியும்.குளம், மடை, கால்வாய், ஆறு போன்றவற்றின் உறுதித்தன்மையைத் தொடர்ந்து கவனித்து வருவதற்காக, 'லஷ்கர்’ என்கிற பதவி பொதுப்பணித்துறையில் முன்பு இருந்தது. தன் கட்டுப்பாட்டுக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள அனைத்து நீர் நிலைகளையும் கவனித்து, பிரச்னைகள் இருந்தால் உடனே உயர் அதிகாரிகளின் கவனத்துக்குக் கொண்டு செல்வார் லஷ்கர். அதன் மூலம் பல விஷயங்கள் சரி செய்யப்பட்டு வந்தன. அந்தப் பதவியில் இருந்தவர்கள் ஓய்வு பெற்ற பிறகு, புதிய ஆட்கள் நியமிக்கப்படவே இல்லை.இப்படி முன்னோர்கள் கடைபிடித்த பழைய முறைகள் பலவும் மறைந்துபோனதன் விளைவுதான்... பேரிடர்களுக்குக் காரணமாக இருக்கிறது. அவற்றையெல்லாம் மீண்டும் கையில் எடுத்தால் மட்டும்தான், இனி வரும்காலங்களில் பாதிப்புகளைத் தவிர்க்க முடியும். அதை விடுத்து ஒவ்வொரு ஆண்டும் மழைக்குப் பிறகு வெறுமனே நிவாரணம் கொடுப்பதில் அர்த்தமேயில்ல.


விகடன் 

No comments:

Post a Comment