மதுரை அருகே உத்தப்புரத்தில் நேற்று (10/11/11) ஆலய பிரவேசத்திற்கு வந்த
தாழ்த்தப்பட்ட மக்களை மற்றொரு சமுதாயத்தினர் வரவேற்று கோயிலுக்குள் அழைத்து
சென்றனர். கல்வீச்சு, துப்பாக்கிசூடு என 30 ஆண்டுகளாக கலவரபூமியாக
காட்சியளித்த நிலையில் வரலாற்று சிறப்பு மிக்க இச்சம்பவம் மிகவும்
உணர்ச்சிகரமான அமைந்தது.மதுரை மாவட்டம் எழுமலை அருகேயுள்ளது உத்தப்புரம். இங்கு 30 ஆண்டுகளாக இரு
பிரிவினரிடையே ஆலய பிரவேசம் உள்ளிட்ட பிரச்னைகளில் கருத்து வேறுபாடு
ஏற்பட்டது. நீறுபூத்த நெருப்பாக இருந்து, நாளடைவில் இரு தரப்பிலும் பெரும்
தாக்கத்தை ஏற்படுத்தி மன ரீதியில் பெரிய விரிசலை உண்டாக்கியது.
இந்நிலையில், 2006 ஜனவரியில், இவ்வூரில் தீண்டாமை சுவர் என கூறப்பட்ட
சுவரின் ஒரு பகுதியை அரசு இடித்து பாதை ஏற்படுத்தி தந்தது. இதை தொடர்ந்து
இருபிரிவினரிடையே மோதல், கல்வீச்சு என பெரும் கலவரம் வெடித்தது. போலீசார்
நடத்திய துப்பாக்கி சூட்டில் சுரேஷ் என்பவர் இறந்தார். 500க்கும் மேற்பட்ட
போலீசார் இவ்வூரில் குவிக்கப்பட்டனர். நூற்றுக்கணக்கானோர் மீது வழக்கு
பதிவு செய்யப்பட்டது. 144 தடை உத்தரவு மாதக்கணக்கில் அமலில் இருந்தது.
ஆனாலும் அவ்வப்போது வாய் தகராறு, கல்வீச்சு, மோதல் என பதற்றமான சூழல்
நிலவியது. இரு தரப்பிலும் ஏற்பட்ட கலவரம் தொடர்பாக எழுமலை போலீஸ் ஸ்டேஷனில்
ஏராளமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
உத்தப்புரத்திலுள்ள முத்தாலம்மன், மாரியம்மன் கோயிலில்
ஆலயபிரவேசம், வழிபாடு, பஸ் நிழற்குடை அமைத்து தர வேண்டும் என ஒரு தரப்பில்
கோரிக்கை வைக்கப்பட்டது. இதை நிறைவேற்றாவிட்டால் ஆலய நுழைவு போராட்டம்
நடத்தப்படும் என மார்க்சிஸ்ட் கட்சி அறிவித்தது. இதற்கு மற்றொரு தரப்பினர்
எதிர்ப்பு தெரிவித்ததால் ஊரில் பதற்றம் மேலும் அதிகரித்தது. இதனால்
மீண்டும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதுடன் கடந்த ஜனவரியில் கோயில்
மூடப்பட்டது.இந்நிலையில் இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தி, பிரச்னைக்கு
முற்றுப்புள்ளி வைக்கும் பணியை மதுரை எஸ்பி. அஸ்ரா கார்க் மேற்கொண்டார்.
கூடுதல் எஸ்பி மயில்வாகனன், எழுமலை இன்ஸ்பெக்டர் தினகரன் தலைமையில், இரு
சமுயத்தை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் அடங்கிய குழுவினரிடம் பேச்சு
நடத்தினர். பல நாட்களாக தொடர்ந்து நடந்த பேச்சுவார்த்தையில் சமூக தீர்வு காணப்பட்டது.தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினர் ஊர் கோயிலுக்குள் நுழைய மற்றொரு சமுதாயத்தினர்
சம்மதித்தனர். இவர்கள் நேற்று கோயிலுக்குள் நுழையும் நிகழ்ச்சிக்கு
ஏற்பாடு செய்யப்பட்டது. இதையடுத்து உத்தப்புரத்தில் ஏராளமான போலீசார்
குவிக்கப்பட்டனர்.பூஜை
பொருட்களுடன் தாழ்த்தப்பட்ட சுமுதாயத்தினர் நூற்றுக்கணக் கானோர் அவர்கள்
வசிக்கும் பகுதியிலிருந்து ஊர்வலமாக நேற்று மாலை கோயிலுக்கு வந்தனர்.
அவர்களை மற்றொரு சமுதாயத்தினர் மரியாதை அளித்து வரவேற்று கோயிலுக்குள்
அழைத்துச்சென்றனர். கோயில் பூசாரி பாண்டிமுருகன் சிறப்பு பூஜை நடத்தி
தீபாராதனை காட்டினார். இந்த தீபாராதனை மரியாதை தாழ்த்தப்பட்ட மக்களுக்கு
அளிக்கப்பட்டு, அவர்கள் அனைவரும் தரிசனம் செய்தனர். அரைமணி நேரத்திற்கும்
மேலாக நீடித்த இந்நிகழ்ச்சி மிகவும் உணர்ச்சிகரமாக அமைந்தது.
நன்றி.தினகரன் மதுரை பதிப்பு
No comments:
Post a Comment