Search This Blog

Tuesday, November 29, 2011

கற்றது கையளவே..! கற்பதற்கு எவ்வளவு இருக்கிறது!

 
கற்பதற்குத்தான் எவ்வளவு இருக்கிறது இந்த உலகில் என்று நான் அடிக்கடி ஆச்சரியப் பட்டுக்கொண்டு இருக்கிறேன்.சில நாட்களுக்கு முன், இணையத்தில் ஒரு கதை படித்தேன். அதைக் கதை என்பதைவிட, வாழ்க்கைச் சம்பவம் ஒன்றின் வர்ணனை என்பது சரியாக இருக்கும்.  நீங்களும் அதைப் படித்து மகிழுங்கள்.
 
த்துவப் பேராசிரியர் ஒருவர் வகுப்பில் பாடம் நடத்திக்கொண்டு இருக்கிறார். கடவுள் நம்பிக்கை இல்லாதவர் அவர். கடவுளிடம் விஞ்ஞானத்துக்கு உள்ள பிரச்னை பற்றி, மாணவர்களிடம் பேசுகிறார் அவர். தனது மாணவர்களில் ஒருவரை எழுப்பி, ''உங்களுக்குக் கடவுள் நம்பிக்கை உண்டா?'' என்று கேட்கிறார். ''நிச்சயமாக, சார்!'' என்கிறார் மாணவர். உரையாடல் தொடர்கிறது...
'கடவுள் நல்லவரா?''
 
''நிச்சயமாக!''

''கடவுள் எல்லாம் வல்லவரா?''

''ஆமாம்.''

''என் சகோதரர் புற்றுநோயால் இறந்துபோனார். இத்தனைக்கும் கடவுள் நம்பிக்கை உள்ளவர் அவர். தன்னை இந்த நோயிலிருந்து மீட்கும்படி அவர் கடவுளிடம் மனமுருகிப் பிரார்த்தனை செய்தார். ஆனாலும், கடவுள் அவரைக் கைவிட்டுவிட்டார். நோய்வாய்ப்பட்டு இருக்கும் மற்றவர்களுக்கு நாமே ஓடிச் சென்று உதவ முயல்வோம். ஆனால், கடவுள் உதவவில்லை. பிறகு எப்படி, கடவுள் நல்லவர் என்று சொல்கிறீர்கள்?''

மாணவர் இதற்குப் பதில் சொல்லாமல் அமைதியாக இருக்கிறார். பேராசிரியர் விடவில்லை. ''சரி, இதற்குப் பதில் சொல்லுங்கள்; இந்த உலகில் தீங்கானவைகளும் இருக்கிறதுதானே?''

''ஆமாம்!''

''நோய்கள், ஒழுக்கக் கேடுகள், வெறுப்பு, அருவருப்பு... இன்னும் மோசமான விஷயங்கள் எத்தனை இருக்கிறது உலகில்? இவற்றையெல்லாம் உருவாக்கியது உங்கள் கடவுள்தானே?''

இந்தக் கேள்விகளுக்கும் மாணவரிடம் பதில்கள் இல்லை.

''நம்மைச் சுற்றியுள்ள இந்த உலகத்தை கவனித்து, அதை அடையாளப்படுத்திக் கொள்வதற்கு நமக்கு ஐந்து வகையான உணர்வுகள் உள்ளன என்று
விஞ்ஞானம் சொல்கிறது. சொல்லுங்கள்... கடவுளை நீங்கள் உங்கள் கண்ணால் பார்த்திருக்கிறீர்களா?''

''இல்லை, சார்!''

''சரி, உங்கள் கடவுள் பேசியாவது கேட்டிருக்கிறீர்களா?''

''இல்லை, சார்!''

''கடவுளின் வாசனையை நுகர்ந்திருக்கிறீர்களா? தொட்டு உணர்ந்திருக்கிறீர்களா?''

''இல்லை, சார்!''

''அப்படியிருந்தும், கடவுள் இருக்கிறார் என்று இன்னமும் நம்புகிறீர்கள்..?''

''ஆமாம், சார்!''

''அனுபவ சோதனைகள் மற்றும் நிரூபண முறைகள் ஆகியவற்றைப் பொறுத்தவரை, கடவுள் என்று ஒருவர் இல்லை என்கிறது விஞ்ஞானம். இதற்கு நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?''

''எதுவும் சொல்லவில்லை, சார்! என்னிடம் கடவுள் மீதான நம்பிக்கை மட்டுமே உள்ளது.''

''நம்பிக்கை... அதுதான் விஞ்ஞானத்துக்குள்ள பிரச்னை.''

இப்போது மாணவர், ''சார், நான் தங்களைச் சில கேள்விகள் கேட்கலாமா?'' என்கிறார். தொடர்ந்து... ''வெப்பம் என்று ஒரு விஷயம் உள்ளதா, சார்?''
''ஆமாம்.''

''குளிர்ச்சி என்றும் ஒரு விஷயம் உள்ளதா?''

''ஆமாம். உள்ளது!''

''இல்லை, சார்! அப்படி எதுவும் இல்லை'' என்று மாணவர் சொல்ல, அந்த வகுப்பறையே அமைதியில் ஆழ்கிறது.


''சார், நிறைய வெப்பம் இருக்க முடியும்; அதிக வெப்பம், மிக அதிக வெப்பம், மெகா வெப்பம், சாதாரண வெப்பம், குறைவான வெப்பம் அல்லது வெப்பமின்மை எல்லாம் இருக்க முடியும். ஆனால், குளிர்ச்சி என்கிற விஷயமே இல்லை. வெப்பம் குறைந்து கொண்டே வந்து, மைனஸ் 458 டிகிரி வரை கூடச் செல்ல முடியும். ஆனால், அதற்குப் பிறகு நம்மால் போகமுடியாது. வெப்பமின்மையைக் குறிக்கத்தான் குளிர்ச்சி என்கிற வார்த்தையை நாம் பயன்படுத்து கிறோம். குளிர்ச்சியை நம்மால் அளவிட முடியாது. வெப்பம் என்பது ஒரு சக்தி. குளிர்ச்சி என்பது வெப்பத்துக்கு எதி ரானது இல்லை. இயற்பியல் கோட்பாட்டின்படி, குளிர்ச்சி என்று நாம் எதைக் கருதுகிறோமோ, அது உண்மையில் வெப்பமின்மை தான்!''

வகுப்பறையில் மூச்சுவிடும் சத்தம்கூடக் கேட்கும் அளவுக்கு மிக அமைதி.
''சார், இருள் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? இருள் என்று ஏதாவது இருக்கிறதா?''

''ஆமாம். இருள் இல்லையென்றால் இரவு என்பது இல்லையே?''

''மீண்டும் தவறு செய்கிறீர்கள், சார்! குறைந்த வெளிச்சம், சாதாரண வெளிச்சம், பிரகாசமான வெளிச்சம், பளீரிடும் வெளிச்சம் எல்லாம் உண்டு. ஆனால், தொடர்ந்து உங்களுக்கு எந்த வொரு வெளிச்சமும் கிடைக்கவில்லை என்றால், அதையே இருட்டு என்று சொல்கிறீர்கள். உண்மையில், இருள் என்று எதுவும் இல்லை. அப்படி ஒன்று இருந்தால், இருட்டை இன்னும் அதிக இருட்டாக உங்களால் செய்ய முடியும், இல்லையா சார்?''

''சரி, இதிலிருந்து நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள்?''

''உங்கள் தத்துவரீதியான வாதங்கள் எல்லாம் குறைபாடானவை என்கிறேன்!''
''குறைபாடானவையா? எப்படி என்று விளக்க முடியுமா?''

''உங்கள் வாதங்கள் எல்லாம் இரட்டைத்தன்மை கொண்டவையாக உள்ளன. வாழ்க்கை - மரணம், நல்ல கடவுள் - கெட்ட கடவுள் என வாதிடுகிறீர்கள். வரையறுக்கப் பட்ட ஒன்றாக, நம்மால் அளவிடக்கூடிய ஒன்றாக கடவுள் என்பதைப் பார்க்கிறீர்கள். சிந்தனை என்பதைக் கூட விஞ்ஞானத்தால் இன்னும் சரியாக விளக்கமுடியவில்லை. விஞ்ஞானத்தில் மின் சக்தி, காந்த சக்தி எல்லாம் இருக்கிறது. ஆனால், இரண்டையும் யாரும் பார்த்ததில்லை. அவை பற்றி முழுமையாக யாரும் அறிந்ததில்லை.

வாழ்க்கைக்கு எதிரான விஷயமாக மரணத்தைப் பார்ப்பதே அர்த்தமில்லாதது. மரணம் என்கின்ற ஒரு ஸ்தூல விஷயமே இல்லை. அது வாழ்க்கைக்கு எதிரானது அல்ல;

வாழ்க்கையின்மை என்பதுதான் அது. சரி சார், இதைச் சொல்லுங்கள்... குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன் என்று மாணவர் களுக்கு நீங்கள் பாடம் போதிக்கிறீர்கள் அல்லவா?''

''இயற்கையின் பரிணாம வளர்ச்சியை வைத்துப் பார்க்கும்போது, அது சரிதானே?''

''இயற்கைப் பரிணாம வளர்ச்சி என்ன என்பதை நீங்கள் உங்கள் கண்களால் பார்த்திருக்கிறீர்களா? இல்லைதானே? பரிணாம வளர்ச்சி நிகழ்வதை யாருமே ஒருபோதும் கவனித்திருக்கவில்லை; இது தொடர்ந்து நடை பெறும் ஒரு விஷயம் என்பதையும் யாராலும் நிரூபிக்க முடியாது. அப்படியிருக்க, நீங்கள் உங்கள் அபிப்ராயத்தைத்தான் கற்றுக் கொடுக்கிறீர்கள், இல்லையா சார்? நீங்கள் விஞ்ஞானி இல்லை; வெறுமே அறிவுரை கூறுபவர். அவ்வளவுதானே?''

வகுப்பில் பெருத்த ஆரவாரம்!

அடுத்து.... ''நமது பேராசிரியருடைய மூளையை யாராவது பார்த்திருக்கிறீர்களா?'' என்று மாணவர் கேட்க, சிரிப்பொலியால் வகுப்பறையே அதிர்ந்தது. ''அல்லது, அவர் மூளையின் சத்தத்தை இங்கே உங்களில் யாராவது கேட்டிருக் கிறீர்களா, அதைத் தொட்டு உணர்ந்திருக்கிறீர்களா அல்லது அதன் வாசனையையாவது அறிந்ததுண்டா? யாருமே அப்படி எதுவும் செய்ததாகத் தெரியவில்லை. ஆக, சார் சொன்னது போல், அனுபவத்தால் வரையறுக்கப்பட்ட, நிரூபண முறைகளின்படி பார்த்தால், இவருக்கு மூளை இல்லை என்கிறது விஞ்ஞானம். ஆக, மூளை இல்லாத உங்களின் உரைகளை நாங்கள் எப்படி நம்ப முடியும், சார்?''

அறை முழுக்க நிசப்தம்! பேராசிரியர் அந்த மாணவரை உற்றுப் பார்த்தார். அவர் முகத்தில் இனம்புரியாத உணர்ச்சி.

''நான் நிகழ்த்துகிற உரைகளை நம்பிக்கையின் பேரில் நீங்கள் ஏற்க வேண்டும் என்று கருது கிறேன்.''

''அதேதான் சார், கடவுளுக்கும் மனிதனுக்கும் உள்ள இணைப்பு அதுதான். நம்பிக்கை! அதுதான் எல்லாவற்றையும் செலுத்திக்கொண்டு இருக்கிறது; உயிர்ப்புடன் வைத்திருக்கிறது'' என்று முடிக்கிறார் மாணவர்.

வகுப்பில் பலத்த கை தட்டல்!

சண்முக சுந்தரம்
சேர்மன்
South India CA association


விகடன்




1 comment:

  1. வணக்கம்...! இந்த பதிவுலகில் புதியவன். தங்களின் கருத்துக்கள் அருமை. விரும்பிப் படித்தேன். தங்களின் முந்தைய பதிவுகளை படித்துக் கொண்டிருக்கிறேன். தங்களின் பல பகிர்வுக்கு எனது வாழ்த்துக்கள். நான் மனிதர்களைப் பற்றி வேறு விதமாக என் தளத்தில் ஆராய்ந்து கொண்டிருக்கிறேன். நன்றி நண்பரே!
    நம்ம தளத்தில்:
    "மனிதனுக்கு மிகப் பெரிய தண்டனை எது?"

    ReplyDelete