Search This Blog

Friday, November 18, 2011

கிங்ஃபிஷர் விமான கம்பெனி

 
விஜய் மல்லையா இந்தியாவின் மிகப் பெரிய பணக்காரர்களில் ஒருவர். அவரது கிங்ஃபிஷர் விமான கம்பெனிக்குக் கடந்த வாரம் பெட்ரோல் நிறுவனங்களும், விமான நிலையங்களும் வழங்கிக் கொண்டிருந்த கடன் வசதியை நிறுத்திவிட்டதால் 50 விமானங்கள் ரத்து செய்யப்பட்டு பயணிகள் விமான நிலையங்களில் தவித்தனர். ஏன் இந்த நிலை?
 
விமானப் பயணங்கள் விலையுயர்ந்தது. அது பணக்காரர்கள், கம்பெனி நிர்வாகிகள், அரசு அதிகாரிகள் போன்றவர்கள் மட்டுமே அனுபவிக்கக்கூடிய ஆடம்பரம் என்ற நிலையை மாற்றி, 90களின் பிற்பகுதியில் சாதாரண இந்தியனும் மிகக் குறைந்த கட்டணத்தில் பறக்கலாம் என்பதை ஒரு புரட்சியாகவே அறிமுகப்படுத்தியவர் கேப்டன் கோபிநாத். புதிய பொருளாதாரக் கொள்கையின் ஒரு அங்கமாக அறிவிக்கப்பட்ட விமானத் துறையில், தனியார்களின் அனுமதியை மிகத் துணிவுடன் பயன்படுத்தி, தன்னம்பிக்கையுடன் ‘டெக்கான் ஏர் லைன்ஸ்’ என்று ஒரு விமான சர்வீஸைத் தொடங்கி, இந்தத் தேசம் அதுவரை பார்க்காத ஆச்சர்யமான கட்டணங்களை அறிவித்தார். விமான சர்வீஸ்களில் குறைந்த கட்டணச் சேவை என்பதை இந்தியாவில் அறிமுகப்படுத்தியவர்.பயணங்களில் தரப்படும் சாப்பாடுகளுக்கு ரூ 500 வரை டிக்கெட்டில் சேர்க்கப்படும். விளம்பரங்கள், அச்சிட்ட டிக்கெட்டுகள் போன்ற செலவுகளினாலும் டிக்கெட்டின் விலை அதிகமாகும். இந்த நிலையை மிக புத்திசாலித்தனமாகக் கையாண்டு விளம்பரம், அச்சிட்ட டிக்கெட், விற்பனை அலுவலகம், விமானத்தில் சாப்பாடு போன்ற செலவுகள் இல்லாமல் குறைவான கட்டணத்தை 50% சீட்டுகளுக்கு நிர்ணயித்து, மீதி 50% சீட்டுகளை மிகக் குறைந்த விலையில் 10%க்கும் குறைந்த விலையில் சில டிக்கெட்டுகளை ரூ 500 ரூபாய்க்குக்கூட ஒரு மாதத்துக்கும் முன்னதாகவே ஆன்லைனில் விற்று, காசு பார்த்தது டெக்கான். 
 
 
இந்த வெற்றி பல புதிய நிறுவனங்களை விமானத் துறையில் இறங்க வைத்தது.  7 ஆண்டுகளில் கிங்ஃபிஷர், ஸ்பைஸ்ஜெட், இண்டிகோ, ஸகாரா போன்ற 8 புதிய கம்பெனிகள் இதே மாடலைப் பின்பற்றி, சலுகை விலையில் டிக்கெட்டுகளை அறிவிக்கத் தொடங்கியது. இந்திய விமானத் துறையின் ஏகபோக உரிமையாளராக இருந்த இந்தியன் ஏர்லைன்ஸின் பிஸினஸ் 17 சதவிகிதமாகக் குறைந்தது. நாடு முழுவதும் பல சிறிய நகரங்களிலிருந்த விமான நிலையங்கள் கூட பிஸியாயின. நிறைய சாமானிய இந்தியர்கள் பறக்கத் தொடங்கினர். பட்ஜெட் விமானப் பயணம் என்பது மிக சாதாரண விஷயமாயிற்று. மிக வேகமாக வளர்ந்த ஏர்டெக்கான் 8 கேந்திரங்களிலிருந்து இந்தியா முழுவதும் பறந்து இந்தியன் ஏர்லைன்ஸின் இடத்தைப் பிடித்தது. ஆனால், லாபம் அதிகமில்லை. மிகப்பெரிய அளவில் அதிக முதலீடு தேவைப்பட்ட அந்த நேரத்தில் உதவ முன் வந்தவர் விஜய் மல்லையா. பெயரை, சின்னத்தை மாற்றக் கூடாது, சலுகை டிக்கெட்டுகள் தொடரப்பட வேண்டும் என்ற கேப்டன் கோபிநாத்தின் கோரிக்கையை ஏற்று, முதலீடு செய்தது அவரது கிங் ஃபிஷர் நிறுவனம். ஆனால், ஒரு ஆண்டுகளுக்குள்ளாகவே சொன்னதையெல்லாம் மாற்றி, பல விஷயங்களைச் செய்தனர். நிறுவனம் ‘கிங்ஃபிஷர் ரெட்’ ஆயிற்று. விமானங்களில் கிங்ஃபிஷரின் சின்னமான மீன் கொத்தி பொறிக்கப்பட்டது. மெல்ல கட்டணங்களும் சீரமைக்கப்பட்டன. இறுதியில் கடந்த மாதம் மலிவு விலை கட்டண சர்வீஸை இந்த ஆண்டுக்குள்ளாக நிறுத்தப்போகிறாம் என்ற அறிவிப்பை மல்லையா வெளியிட்டிருக்கிறார். சொல்லப்பட்ட காரணம்: குறைந்த கட்டணச் சேவையினால் அளவுக்கு அதிகமான நஷ்டம். இந்திய விமானத்துறையில் இரண்டாவது இடத்திலிருக்கும் கிங்ஃபிஷர், தொடர்ந்து அடுத்த இடத்திலிருக்கும் ஜெட் நிறுவனமும் இப்படி அறிவித்திருக்கிறது. விரைவில் மற்ற நிறுவனங்களும் இம்மாதிரி சர்வீஸ்களை நிறுத்தப் போகும் அறிகுறி. இனி குறைந்த கட்டண விமானப் பயணம், மெல்ல மெல்லப் பழங்கனவாகிவிடப் போகிறது என்பது துறைசார்ந்த பலரின் பரவலான கருத்து. 
 
உண்மை நிலை என்ன?  
 
 
மிக அதிகமாகிக் கொண்டிருக்கும் விமான எரிபொருளின் விலை, பைலட்களின் சம்பளம், விமான நிலையங்களின் வரிகள், அதிகரிக்கும் விளம்பர, நிர்வாகச் செலவுகளால் உலகின் பல விமான சர்வீஸ்கள் நஷ்டத்தில்தான் இயங்குகின்றன என்றாலும் கிங்ஃபிஷர் நிறுவனம் 2005ல் தொடங்கியதிலிருந்தே லாபம் ஈட்டியதில்லை. பெட்ரோல் நிறுவனங்களும், விமான நிலையங்களும் கட்டணங்களை ஒழுங்காகச் செலுத்தாததால் கடன் வசதியை நிறுத்தி விட்டார்கள். பல பைலட்டுகள் ராஜினாமா செய்து விட்டார்கள். எந்த நேரத்திலும் நிறுவனம் மூடப்படலாம் என்ற வதந்தியால் ஷேர்களின் விலை சரிந்து கொண்டேயிருக்கிறது. ஏர் இந்தியாவுக்கு உதவியதுபோல அரசு உதவ வேண்டும் என்கிறார் மல்லையா.வங்கிகள் கடன் கொடுக்க வேண்டுமெனச் சொல்கிறார் விமானத்துறை அமைச்சர் வயலார் ரவி. கொடுத்த கடனுக்கே வட்டி கட்டாத நிறுவனத்துக்கு மீண்டும் அதிக கடன் வழங்கத் தயங்கும் வங்கிகளிடம் இந்த நிறுவனத்தின் 25% பங்குகள் இருக்கின்றன. விமானப் பயணிகளின் வளர்ச்சிவீதம் ஆண்டுக்கு 20%க்குமேல் அதிகரித்துக் கொண்டிருக்கும் இந்தியாவில் இனி பட்ஜெட் சேவையைக் கொடுக்காமல் விமான கம்பெனிகள் இயங்க முடியாது. கிங்ஃபிஷரின் நிலைக்கு அவர்களது நிர்வாக முறைதான் காரணம் என்று சொல்கிறார் ஒரு முன்னாள் விமானத்துறை அதிகாரி. கிங்ஃபிஷர் ரெட் மூடப்போவதான அறிவிப்பு வெளியான நாளிலிருந்து ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனம் (இதன் பெறும் பங்குகளை வைத்திருப்பவர் கலாநிதி மாறன்) சலுகைக் கட்டணப் பயணங்களின் விளம்பரங்களை அதிகம் வெளியிடுகிறது. புதிய தடங்களையும் அறிவித்துக் கொண்டிருக்கிறது. கடந்த ஆண்டே ஐஐஎம் அஹமதாபாத்தின் மார்க்கெட்டிங் துறை மூத்த பேராசிரியர் மைதிஷ் வர்ஜா தன் மாணவர்கள் சிலருடன் சேர்ந்து ‘கிங்ஃபிஷர் ரெட்’ ஏன் வெற்றிகரமாக இயங்கவில்லை என்பதை ஆராய்ந்து அறிக்கையை அந்த நிறுவனத்துக்கே கொடுத்திருக்கிறார். இந்தக் குழு சொல்லியிருக்கும் பல காரணங்களில் முக்கியமான காரணம் கிங் ஃபிஷர், விஜய் மல்லையா என்ற பெயர்களே; ஆடம்பரம், விலை அதிகம் என்ற உணர்வை மக்களிடம் ஏற்படுத்தியிருப்பது. மேலும் ஒரே நிறுவனம் வெவ்வேறு பெயர்களில் இரண்டு விதமான விமான சர்வீஸை நடத்துவது வெற்றிகரமாக இருக்காது. இரண்டு வகையான ஊழியர்கள், ஒரே நிறுவனத்தில் ஒரே மாதிரி வேலைகளைச் செய்ய வேண்டிய நிலை பல பிரச்னைகளை உருவாக்குகிறது என்று சொல்கிறது இவர்களது அறிக்கை. இது சொல்லும் இன்னொரு முக்கியமான விஷயம் சலுகைக் கட்டண விமானங்களுக்கு, சில நாடுகளில் அளிப்பதுபோல, விமான நிலையங்களில் ஒதுக்கப்படும் இடம், கட்டணம், வரிகள் போன்றவற்றில் குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு சலுகை தரப் பட வேண்டும். இப்போது எல்லாவகை விமான நிறுவனங்களுக்கும் ஒரே கட்டணம்தான். இது நிர்வாகச் செலவை அதிகரிக்கிறது. விமானப் பயணிகளை அதிகரிக்க அரசும் உதவ வேண்டும் என்ற கருத்து பேசப்படுகிறது. 
 
அரசு செய்தாலும் சரி, ஆராய்ச்சியாளர்கள் சொல்வதைக் கேட்டு விமான கம்பெனிகள் மாறுதல்களைச் செய்தாலும் சரி, குறைந்த கட்டண விமானப் பயணங்கள் வசதி நிறுத்தப்படாமல் தொடரப்பட வேண்டும் என்பதுதான் மக்களின் எதிர்பார்ப்பு. 
 
ரமணன் 
 

2 comments:

  1. விமானம் என்பது வானளாவிய கனவாய் இருந்த நடுத்தர வர்க்கத்தையும் வானில் நீந்த வைத்த நிறுவனங்கள் பிரச்னை மீண்டு வெளி வர வேண்டும். வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. ஆட்டோ டிரைவர்கள் கூட இதே போல் குறைந்த கட்டணத்தில் இயக்கி கடன் பட்டால் உதவ அரசு முன் வருமா? இல்லை அரசு முன் வர வேண்டும் என்று ரமணன் போன்றவர்கள் கேட்பார்களா?

    ReplyDelete