Search This Blog

Thursday, November 03, 2011

அணு மின் நிலையம்: சர்ச்சைகளும், தீர்வுகளும் – 2



6. “நிலநடுக்கம்  உண்டாகும் சாத்திமுள்ள பகுதியில் அணுமின் நிலையம் அமைவது ஆபத்தை மேலும் அதிகரிக்கிறது”

“2003 பிப்ரவரி 9ம் தேதி இரவு 9.45 மணி அளவில் திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டையில் ஒரு மெலிதான நிலநடுக்கம் ஏற்பட்டது. 2006 மார்ச் 19ம் தேதி மாலை 6.50 மணிக்கு கூடங்குளத்தை சுற்றியுள்ள கன்னன்குளம், அஞ்சுகிராமம், அழகப்புரம், மயிலாடி, சுவாமிதோப்பு போன்ற கிராமங்களில் நில அதிர்வு உண்டானது. வீடுகளின் சுவர்களிலும், கூரைகளிலும் கீறல்களும், விரிசல்களும் தோன்றின.”

நிலநடுக்கம் ஏற்படக் கூடிய பகுதியில் இந்த அணு மின் நிலையம் கட்டப் படுவதினால் நில நடுக்கம் வரும் பொழுது பெரும் விபத்து ஏற்பட்டு பேரழிவை உண்டாக்கும் என்கிறார்கள்.

இவ்வளவு பெரிய ஒரு திட்டத்தை, இருபதினாயிரம் கோடி ரூபாய்களை விழுங்கும் ஒரு திட்டத்தினை இந்த இடத்தில் அமைக்க திட்டமிடும் முன்னால், இந்த எளிய பாதுகாப்புப் பிரச்சினையைக் கூடவா இதைத் திட்டமிட்டவர்கள் அலசியிருக்க மாட்டார்கள்? அது நம் விஞ்ஞானிகளின், பொறியாளர்களின் அடிப்படை அறிவையே கேலிக்குள்ளாக்கும் ஒரு குற்றசாட்டு அல்லவா?

தமிழ் நாட்டின் தென் பகுதிகளில் எத்தனை முறை எந்த அளவில் கடந்த 200 ஆண்டுகளில் நில நடுக்கம் ஏற்பட்டுள்ளன? அப்படியே ஒரு குற்றசாட்டை வைத்தாலும் அதன் உண்மையைப் பற்றிப் பேசக் கூடிய தகுதி உள்ளவர்கள் நிலவியலாளர்களும், கட்டிட நிபுணர்களும், பாதுகாப்பு பொறியாளர்களும் அல்லவா? இந்தக் குற்றசாட்டை வைத்து அப்பாவி மக்களைப் பயமுறுத்தும் முன்னால் எத்தனை நிபுணர்கள் கலந்தாலோசிக்கப் பட்டார்கள்?

அமெரிக்காவின் மேற்குக் கடற்கரை முழுவதுமே நிலநடுக்கப் பகுதிகள்தான். அங்கு நில நடுக்கம் அடிக்கடி நிகழ்கின்றன. அதே பிரதேசத்தில் ஏராளமான அணு சக்தி நிலையங்களும் ஆராய்ச்சி சாலைகளும் அமைக்கப் பட்டுள்ளனவே? கடந்த 50 ஆண்டுகளில் பெரும் நிலநடுக்கம் ஏற்பட்டாலும் இந்த அணு நிலையங்களுக்கு எவ்வித ஆபத்தும் ஏற்படவில்லையே? அதே பாதுகாப்பை இங்கு செய்திருக்கிறார்களா? அது எவ்வளவு அளவைத் தாங்கும் என்பதைப் பற்றி மட்டுமே கேள்வி எழுப்பப் பட்டு அதற்கு உரிய வல்லுனர்களால் மட்டுமே பதில் அளிக்க வேண்டும். போகிற போக்கில், இந்தத் துறையென்று இல்லாமல் எந்தத் துறையிலும் முறையான எந்தவொரு அறிவும் இல்லாத அரசியல்வாதிகளும், பாதிரியார்களும் இவை போன்ற ஆதாரமில்லாத வதந்திகளைப் பரப்பக் கூடாது.

இதை விட அதிக நில நடுக்க வாய்ப்புள்ள அமெரிக்காவின் மேற்குக் கடற்கரையோரப் பகுதிகளில் இதை விட அதிக அளவிலான அணு மின் உலைகள் நிறுவப் பட்டு பாதுகாப்புடன் செயல் பட்டு வருகின்றன. நில நடுக்கப் பகுதிகளில் கட்டப் படும் அணு மின் உலைகள் அதற்கான உறுதியுடனும் பாதுகாப்புடனுமே கட்டப் படுகின்றன. இதை ஒரு ஆய்வு மூலம் மக்களின் திருப்திக்காக உறுதி செய்து கொள்ளலாம்.

மாறாக அப்படி பாதுகாப்பு ஏதுமே இருக்காது என்ற அவநம்பிக்கையான வதந்தியின் அடிப்படையில் இவ்வளவு பெரிய ஒரு திட்டத்தை நிறுத்த எந்தவொரு முகாந்திரமும் கிடையாது.

7. “அணு உலைக் கழிவுகளால்  ஆபத்து”

”அணு உலைக் கழிவு ஒரு பெரிய பிரச்சனை. கூடங்குளம் அணுமின் நிலைய கழிவு ரசியாவுக்கு எடுத்துச் செல்லப்படும் என்றுதான் முதலில் ஒப்பந்தம் செய்யப்பட்டது. பின்னர் அது மறு சுழற்சி செய்யப்படும் என்றும், கூடங்குளத்திலேயே அதற்கான உலை நிறுவப்படலாம் எனவும் தெரிவித்தனர். கூடங்குளம் அணு உலைகள் ஆண்டுக்கு சுமார் 30 டன் யுரேனியத்தை பயன்படுத்தும். ஏறத்தாழ 30 ஆண்டுகள் இயங்கும் போது 900 டன் கழிவு வெளியாகும். பயங்கரமான கதிர்வீச்சை வெளியிடும் இந்த கொடிய நச்சை 24,000 ஆண்டுகள் நாம், நமது குழந்தைகள், நமது பேரக்குழந்தைகள் அவரது வழித் தோன்றல்கள் போற்றிப் பாதுகாக்க வேண்டும். அபாயகரமான இந்தக் கழிவுகளை தேக்கி வைத்திருப்பதாலும், மறு சுழற்சி செய்வதாலும் நிலத்தடி நீரும், காற்றும் பாதிக்கப்படும்.”

இது எதிர்ப்பாளர்களின் வாதம்.

இதற்கான பதிலை வெறும் வதந்திகளின் அடிப்படையில் தர முடியாது. அணு விஞ்ஞானிகளின் குழு ஒன்றை கூடங்குளத்திற்கு அனுப்பி இந்த ஆபதுக்களையெல்லாம் அவர்கள் எப்படிக் கையாள உத்தேசித்திருக்கிறார்கள், அதற்கான உறுதி மொழிகள் யாவை என்பதை விளக்கச் சொல்லலாம். அவர்கள் சொல்வதை நாம் நம்பியே ஆக வேண்டும்.  நாம் நம் மருத்துவர்கள் சொல்லும் மருத்துவ சிகிச்சையை எப்படி  நமது அறிவுக்கு எட்டிய அளவில் ஆராய்ந்து பார்த்து விட்டு பிறகு பின்பற்றுகிறோமோ,  எப்படி நமது விண்வெளி விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகளை நம்பி ஏற்றுக் கொள்கிறோமோ,  அது போலவே நம் அணு விஞ்ஞானிகளையும் நம்பி ஏற்றுக் கொள்ளவே வேண்டும். இதற்கான உரிய பதில்களை அவர்கள் தர மறுத்தாலோ அல்லது இவற்றை அவர்களும் அரசும் உறுதி செய்ய மறுத்தாலோ அன்றி, இதைக் காரணமாகக் காண்பித்து இந்த திட்டத்தை நிறுத்துவதை ஏற்றுக் கொள்ள முடியாது.

8.  “நீர்வளம்  சுரண்டப் படும்”.

தாமிரவருணியில் இருந்து அதிகமாக நீர் பயன் படுத்துவார்கள் என்றும் அதனால் தாமிரவருணி விவசாயிகள் பாதிக்கப் படுவார்கள் என்றும் அதனால் இது வரக் கூடாது என்றும் ஒரு எதிர்ப்பு.

இது ஒரு பெரிய பிரச்சினை அன்று. இந்த அணு மின் நிலையம் உற்பத்தி செய்யப் போகும் மின்சாரத்தில் ஒரு சிறு அளவைக் கொண்டு கடல் நீரைச் சுத்திகரித்து அதையே இந்த அணுமின் நிலையத்தில் பயன் படுத்திக் கொள்ளலாம். விவசாயத்திற்கு உதவும் நதி நீர்ப் பயன் பாட்டைத் தவிர்த்து விடலாம். இதை ஒரு காரணமாக காட்டி இதை நிறுத்த வேண்டிய அவசியம் கிடையாது. இது விவசாயிகளைத் தூண்டுவதற்கான ஒரு வாதம் மட்டுமே


9.  “அணு மின் நிலையங்கள் திறமையாக இயங்குவதில்லை. அதன் மின்சார உற்பத்தித் திறன் மிகவும் மோசமாக உள்ளது.”

இது ஒரு உண்மையான குற்றசாட்டே. அணு சக்தி நிலையங்களில் மின்சாரம் தயாரிப்பது தவிர பிற பாதுகாப்புத் துறை சார்ந்த ஆராய்ச்சிகளும் நடை பெறுவதினால் இந்தக் குறை பாட்டை பெரிதாகக் கொள்ள முடியாது. இருந்தாலும் நிவர்த்திக்க வேண்டிய குறைபாடே.  ஆனால் இதை வைத்துக் கொண்டு,  திட்டத்தையே முடக்க முயல்வது சரியானதல்ல.

*************


இனி, இந்த அணுமின் நிலையத்துக்கு எதிராகக் கிளப்பப் பட்டிருக்கும் போராட்டத்தின் அரசியல் பரிமாணங்களைப்  பார்ப்போம்.

போராட்டத்தினை முன்னிறுந்து நடத்துபவர்களில், முக்கியமாக கத்தோலிக்கப் பாதிரியார்களும், இந்திய எதிர்ப்பையே நோக்கமாகக் கொண்டுள்ள சில்லரை அரசியல்வாதிகளும், அமெரிக்காவில் ஆராய்ச்சி முடித்து விட்டு இந்தியாவில் தன்னார்வமாக அணு உலை எதிர்ப்புப் போராட்டத்தை நடத்த வந்திருக்கும் எஸ்.பி. உதயகுமார் என்பவரும் இருக்கிறார்கள்.

இவர் எழுதி வெளியிட்டுள்ள புத்தகங்களில் சில 
:
- ‘Om-made’ History: Preparing the Unlettered for the Future Hindu Rashtra
- Historicizing Myth and Mythologizing History: The Ayodhya Case in India
- Mapping the ‘Hindu’ Remaking of India
- Betraying a Futurist: The Misappropriation of Gandhi’s Ramarajya

இவர் கடுமையாக எதிர்த்து ஆராய்ச்சி செய்து நூல்கள் வெளியிடும் பாரதிய ஜனதாவின் வாஜ்பாயியின் தலைமையிலான அரசுதான் பொக்ரானில் அணு குண்டு சோதனையை நடத்தியது. அந்த அரசைப் பற்றி இவரது புத்தகம் என்ன சொல்கிறது என்று  இவரது புத்தகங்களுக்கு பாராட்டி மதிப்புரை வழங்குபவர்கள் இப்படி கூறுகிறார்கள்  (Amazon.com தளத்திலிருந்து) -


Endorsement From Joseph E. Schwartzberg, Professor Emeritus, University of Minnesota:


”Rewriting the history of India to promote the fundamentalist Hindu nationalist agenda has been a major project of the so-called Sangh Parivar, a still potent collectivity of exclusivist political, social and cultural entities that flourished under the aegis of India’s recently deposed BJP-led government. In this trenchant and salutary work, S.P. Udayakumar exposes the methods employed by the revisionists and demonstrates their remarkable similarity to those developed so effectively under the European Fascist and Nazi regimes more than half a century ago.”

Endorsement From Johan Galtung, Professor of Peace Studies & Director, TRANSCEND Rector, TRANSCEND Peacre University:


”Presenting the Past has two very basic ramifications. The BJP-led government in Delhi was substituting Nehruvian secularism with its virulent Hindutva, a fundamentalist ideology that put Muslims and other minorities in India on a collision course with the “Hindus.” It also sought to replace another Nehruvian principle, Non-alignment, and create a sort of Asian NATO with the United States against China. If the reader wants to know the background, this is the best book.”


அணு மின் நிலையம் என்பது வெறும் மின்சார உற்பத்திக்காக மட்டுமே ஏற்படுத்தப் படுவதல்ல. இந்தியாவைச் சுற்றியுள்ள சீனாவும், பாகிஸ்தானும் இந்தியாவை விட பல மடங்கு அதிகமான நியூக்ளியார் போர்க் கருவிகளும் பிற சாதனங்களும் தயார் செய்து கொண்டிருக்கின்றன.  இந்நிலையில் இந்தியாவில்  ஒட்டுமொத்தமாக அணுசக்தி தொடர்பான அறிவியல் ஆய்வுகளுக்கு இவை போன்ற அணு மின் நிலையங்களும்  பயன் படுத்தப் படலாம்.  இந்தியாவை அத்தகைய ஆராய்சிகளில் இறங்க விடாமல் செய்து, தொடர்ந்து பிற நாடுகளின் தயவிலேயே தக்கவைக்கவே,  இத்தகைய எதிர்ப்புகள் மறைமுகமாக நிகழ்த்தப் பெறுகின்றன.இந்த அணு மின் நிலையத்தை வெறும் மின்சார உற்பத்தி நிலையமாக மட்டும் நாம் கருத முடியாது. இதில் மின்சார உற்பத்தி என்பது ஒரு பயன் பாடே அன்றி, அது தவிர இந்தியப் பாதுகாப்பு நோக்கத்திற்கான ஆராய்ச்சிகளும் இங்கு நடக்கக் கூடும். உதய குமார்களும், பாதிரிகளும் மக்கள் பாதுகாப்பு நலன்  என்ற போர்வையில்  அணுசக்தி ஆய்வுகளை எதிர்ப்பதன் நோக்கம் இந்தியா ஒரு வலிமையான வல்லரசாக மாறி விடக் கூடாது என்பதே. கூடங்குளம் அணு நிலையத்தில் ஒரு சில பாதுகாப்பு ஆராய்ச்சிகளும் நடக்கக் கூடும் என்பதினால் இது தேசிய முக்கியத்துவம் பெறுகிறது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

இந்த விஷயத்தில் மத்திய, மாநில அரசுகளும் பெரும் தவறுகளைச் செய்துள்ளன. இவை போன்ற முக்கியத்துவம் வாய்ந்த திட்டங்களை உரிய முன்யோசனை, பாதுகாப்புகள், மக்களிடம் விழிப்புணர்வு, மக்களின் நம்பிக்கையைப் பெறுதல் ஆகியனவற்றை முறையாகச் செய்த பின்னரே ஆரம்பித்திருக்க வேண்டும். ஆனால் நம் அரசு அதிகாரிகளிடமும், நிர்வாகிகளிடமும், அரசியல்வாதிகளிடமும் நிலவும் ஆணவமும், திமிரும், அலட்சியமும் மக்க்ளை மதிக்காத போக்குகளுமே இத்தனை பெரிய சிக்கலில் இந்தத் திட்டத்தைக் கொண்டு வந்து விட்டுள்ளது.மக்களிடம் ஆரம்பம் முதலே நெருங்கிச் சென்று இதன் சாதக பாதகங்களை வெளிப்படையாகச் சொல்லியிருந்திருந்து அவர்களைத் தயார் செய்திருக்க வேண்டும். குறிப்பாக அந்தப் பகுதி வாழ் பள்ளி கல்லூரி மாணவர்களிடம் இது குறித்த போதிய அறிவை ஏற்படுத்தியிருக்க வேண்டும் அவர்கள் மூலமாக அவர்கள் பெற்றோர்களிடம் நம்பிக்கையை ஊட்டியிருக்க வேண்டும். அணு சக்தி என்பது அபாயகரமானது, பல தலைமுறைகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்த வல்லது என்னும் பொழுது,  தாம் எத்தகைய பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்கிறோம் என்பதை சந்தேகத்துக்கு இடமின்றி மக்களிடம் தொடர்ந்து எடுத்துச் சொல்லியிருந்திருக்க வேண்டும். இவ்வளவு பெரிய ஒரு திட்டத்தை அறிவித்து செயல் படுத்தினால் மட்டும் போதாது. மத்திய அமைச்சர்களும், விஞ்ஞானிகளும், மாநில முதல்வரும் அதிகாரிகளும் தொடர்ந்து மாதம் ஒரு முறை மக்களைச் சந்தித்திருக்க வேண்டும்.நாளைக்கு இந்தத் திட்டம் ஆரம்பிக்காமலேயே வீணாகுமானால் அதற்கு முழு முதற் காரணம் மத்திய மாநில அரசுகள் மட்டுமே. அணுசக்தித் துறை விஞ்ஞானிகளும் இந்த விஷயத்தில் தங்கள் பொறுப்பைத் தட்டிக் கழித்து விட முடியாது. அவர்கள் பிரபலமான விஞ்ஞானிகளான எம்.ஆர்.ஸ்ரீநிவாசன், டாக்டர் சிதம்பரம், ராஜா ராமண்ணா போன்றோரை அனுப்பி மக்களிடம் விளக்கியிருந்திருக்க வேண்டும். அப்துல் கலாம் அவர்கள் மீது மக்களுக்கு பெருத்த அபிமானமும், நம்பிக்கையும் உண்டு. அவரை உரிய விதத்தில் பயன் படுத்தியிருந்திருக்க வேண்டும். மாறாக, உச்சாணிக் கொம்பில் உட்கார்ந்து கொண்டு அதிகாரம் செய்து பலப்பிரயோகத்தினால் மட்டுமே மக்களை அடக்கி விடலாம் என்ற எண்ணம் மட்டுமே இத்தகைய பெரும் சிக்கலில் இந்தத் திட்டத்தைக் கொண்டு வந்துள்ளது.



>>> இடப் பெயர்வு செய்ய வேண்டியது அவசியமானால், அதை மக்களிடம் தெளிவாகவும், நேர்மையாகவும் எடுத்துச் சொல்ல வேண்டும். அப்படி மக்களை இடம் பெயர்ப்பது அவசியம் என்றால் அவர்களுக்கு இரண்டு மடங்கு கூடுதல் நிவாரணமும், நிலமும், வீடும், வேலையும் அளிக்க வேண்டும்.


>>> அணுக் கழிவுகளை எப்படிக் கையாளப் போகிறார்கள் என்பதை விளக்கி மக்களின் அச்சத்தைத் தீர்க்க வேண்டும்.


>>> இதை ஒரு நிரந்தர ஏற்பாடாக முன்னிறுத்தக் கூடாது. வருங்காலத்தில் சூரிய சக்தி போன்ற மாற்று எரிசக்தி முறைகளின் செலவு கட்டுப் படும் பொழுது இந்த அணு மின் நிலையம் அகற்றப் படும்;  அதுவரை இது ஒரு தற்காலிகத் தீர்வே என்பதையும் விளக்க வேண்டும்.


>>> இது தேசப் பாதுகாப்புக்கும் அவசியமான ஒன்று என்பதையும், நீர் மின்சாரம் மூலமாகவும், அனல் மின்சாரம் மூலமாகவும் ஏற்படும் பிற சுற்றுச் சூழல் பாதிப்புகளையும் வன அழிப்புகளையும் மக்களுக்குப் புரியும் வண்ணம் எடுத்துச் சொல்ல வேண்டும். பிரச்சாரப் படங்கள் மூலமாக மக்களை அணுகியிருந்திருக்க வேண்டும்.


இந்தத் திட்டம் தோல்வி அடையுமானால், அது அனைவருக்கும் தோல்வியாக அமையும். இதில் ஜெயிக்கப் போவது இந்திய எதிர்ப்புச் சக்திகள் மட்டுமே.

இந்தத் திட்டம் தோல்வி அடையுமானால், அது ஒரு மாபெரும் பொதுத் தொடர்புப் பிரச்சாரத் தோல்வியாகவும் இருக்கும்.

பொதுவாக மக்களிடம் அரசாங்கத்திடமும், தனியார் நிறுவனங்கள் மீதும் பெருத்த அவநம்பிக்கை ஏற்பட்டு விட்டது. ஊழலும் திறமையின்மையும் நிரம்பிய நம் அரசு அமைப்புகளினால் எதையும் பொறுப்புடன் பாதுகாப்பு உணர்வுடன் செய்ய முடியாது என்று மக்கள் தீர்மானமாக நினைக்க ஆர்மபித்து விட்டார்கள். அது ஜனநாயகத்தின் மீதான அவநம்பிக்கை. அதற்கு நம் அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் பெரும் பொறுப்பை ஏற்க வேண்டும். அதே நேரத்தில் நம் மக்கள் நமது பொறியாளர்களின், நமது விஞ்ஞானிகளின் சாதனைகளையும் வெற்றிகளையும் நினைவில் கொண்டு, அவர்களிடமாவது ஒரு நம்பிக்கையை வைக்க வேண்டும். செயற்கைக் கோள்கள் ஏவுவதிலும், மருத்துவத்திலும் நமது அறிவியலாளர்களின் சாதனைகளை நாம் குறைத்து மதிப்பிட்டு விட முடியாது. அதே நம்பிக்கையை நாம் இந்த அணு சக்தித் துறையின் மீதும் வைக்க வேண்டும். அந்த நம்பிக்கையை மக்களிடம் அரசும் விஞ்ஞானிகளும் ஏற்படுத்த வேண்டும்.


***********

இறுதியாக, அணு மின்சாரம் நிச்சயமாக அபாயகரமானதே. அது நிரந்தரத் தீர்வு அல்ல. இந்தியா மாற்று எரிசக்தி ஆராய்ச்சிகளில் பெரிய முதலீடு செய்ய வேண்டும்.


இந்தியாவில் சாதாரணமாக மக்கள் சாலைகளில் செல்வது கூட ஆபத்தான ஒரு விஷயமாவே உள்ளது, ரயில் விபத்துக்களிலும், குண்டு வெடிப்புக்களிலும், விமான விபத்துக்களிலும், சாலை விபத்துக்களிலும், தீ விபத்துக்களிலும், உணவு விஷமாவதிலும், உரிய சுகாதாரமின்றியும், மருத்துவ வசதி இன்றியும், நில நடுக்கத்திலும் இன்னும் இந்தியாவில் தினம் தோறும் நிகழும் ஆயிரக்கணக்கான விபத்துக்களின் மூலமாகவும் இறக்க நேர்பவர்களை விட ஒரு அணு உலை விபத்தினால் இறப்பவர்கள் நிச்சயம் குறைவானவர்களாகவே இருப்பார்கள். இந்தியாவின் மோசமான பாதுகாப்பில்லாத ரசாயனத் தொழிற்சாலைகளையும், மாசுக் கேட்டை ஏற்படுத்தும் தொழிற்சாலைகளையும், மின் உற்பத்தி நிலையங்களையும் விட இந்த அணு மின் நிலையத்தின் விபத்து குறைவாகவே இருக்கும்.


இருந்தாலும், அப்படி ஒரு விபத்து நேரும் பட்சத்தில், அதன் பாதிப்பு எதிர்காலத் தலைமுறையையும் பாதிக்கும் என்ற அச்சமே இந்த அணு நிலையங்களுக்கு இவ்வளவு பெரிய எதிர்ப்பை ஏற்படுத்துகின்றது. அதை உணர்ந்து, மக்களின் அச்ச உணர்வை உணர்ந்து, அரசாங்கம் தாங்கள் மேற்கொள்ளவிருக்கும் பாதுகாப்பு முய்ற்சிகளில் எவ்வித சமரசமும் ஊழலும் இன்றி செயல் பட்டு, அவற்றை மக்களிடம் விளக்கவும் செய்ய வேண்டும். அது மத்திய மாநில அரசுகளின் பொறுப்பு.


இவ்வளவு தூரம் செலவு செய்து விட்டதையும், இந்தியாவின் மின் தேவைகளையும், இந்தியாவின் அணு ஆயுத பாதுகாப்பு அவசியங்களையும் கருத்தில் கொண்டு, இந்தத் திட்டத்தை உரிய பாதுகாப்புக்களை பலப் படுத்திய பின்னர், அதை மக்களிடம் விளக்கிய பின்னர், துவங்குவதே விவேகமான ஒரு செயலாக இருக்கும்.


(முற்றும்)

 விஸ்வாமித்ரா

3 comments:

  1. நல்லா எழுதி இருக்கிறார்... ஆனா அந்த அணுக் கழிவை என்ன செய்யப் போகிறார்கள் என்பதற்கு இது வரை எங்கும் பதில் இல்லை என்பதும், இன்னும் விஞ்ஞானிகள் யோசித்து கொண்டிருக்கிறார்கள் என்பது தான் உண்மை... இதை ஒரு concrete தொட்டிக்குள் போட்டு பூமிக்குள் புதைப்பதாக பேச்சு இருந்தது... இந்தியாவில் கல்பாக்கம் அருகே புதைப்பதாக இந்திய அரசு முடிவெடுத்து இருப்பதாக தெரிகிறது... ஆனால் tectonic plate நகர்வால் எதாவாது ஆபத்து வருமா என்ற கேள்விக்கு வரும் வராது என்று முடியை பிய்த்துக் கொண்டு இருப்பதாக இனைய தகவல்கள் தெரிவிக்கின்றன...
    வெறும் ஒரு வருஷமோ இரண்டு வருஷமோ போராடும் தலைவர்களை வைத்து மதச் சாயம் பூசாதீர்கள், கடந்த 24 வருடமாக பாமரன், ஞானி போன்றவர்கள் போராடிய போராட்டம் இது...

    மாற்று வழியே இல்லையா, அணு மின்சாரம் மட்டும் தான் தீர்வா? அப்படின்னு கேட்டா, நீ சொல்லு என்று கேட்பதும்... சொன்னால் அதை பற்றி மீண்டும் பேசாமல் சுற்றி சுற்றி வருவதும் ஏங்க?

    ReplyDelete
  2. அணுமின் நிலையங்களை குறித்து மேலும் அறிந்து கொள்ள என் பதிவையும் பாருங்கள்
    http://naanoruindian.blogspot.com/2011/10/blog-post_22.html

    கதிரியக்கத்தை குறித்த தகவல்களுக்கு
    http://naanoruindian.blogspot.com/2011/10/blog-post_18.html

    அணுமின்சாரம் தேவையா என்ற தகவலுக்கு
    http://naanoruindian.blogspot.com/2011/10/blog-post_16.html

    நன்றி

    ReplyDelete
  3. அணு மின் நிலையம் பற்றிய அருமையான பதிவு.
    ஆழ்ந்து படிக்க வேண்டிய பதிவு.

    ReplyDelete