டெல்லியில் இருந்து 50 கிலோ மீட்டர் தூரத்தில்
இருக்கிறது, கிரேட்டர் நொய்டா. பணக்காரர்களின் கும்பமேளாவாகக் கருதப்படும்,
ஃபார்முலா 1 என்ற மிகப்பெரிய கார் பந்தயம் இங்கு நடந்து
முடிந்திருக்கிறது. ஷாரூக்கான், பிரீத்தி ஜிந்தா, தீபிகா படுகோனே, சச்சின்
டெண்டுல்கர், வீரேந்திர சேவாக், சௌரவ் கங்குலி போன்ற உள்ளூர் பிரபலங்கள்
தொடங்கி சர்வதேச கோடீஸ்வரர்களால் திக்குமுக்காடியது பந்தய மைதானம்.
இந்தப் பந்தயத்தைப் பார்க்க டிக்கெட் எவ்வளவு?அதிகம் இல்லை ஜென்டில்மேன், ஒஸ்தி டிக்கெட் என்றால் 40,000, மலிவு விலை 5,000. ஆனாலும் நிற்கவே இடம் இல்லாத அளவுக்கு பந்தய நாளன்று, ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் குவிந்தார்கள்.இந்த கார் பந்தயம் குறித்து மத்திய விளையாட்டுத் துறை அமைச்சரான அஜய்
மக்கேன், ''எனக்கு அழைப்பிதழ்கூட கொடுக்கவில்லை. அதை நான் எதிர்பார்க்கவும்
இல்லை. எனக்கு அழைப்பிதழ் வராது என்று தெரியும். காரணம் நான் ஒரு
நட்சத்திரம் இல்லை...'' என்று சொல்லிவிட்டு கேரளாவில் பி.டி.உஷா நடத்தும்
ஸ்போர்ட்ஸ் ஸ்கூல் நிகழ்ச்சியில் பங்கேற்கப் போய்விட்டார். ''வரி விலக்கு
கேட்டு அவர்கள் கொடுத்த விண்ணப்பத்தை இரண்டு நாட்கள் முன்புதான்
நிராகரித்தேன். அதனால் அவர்களுக்கு என் மீது கோபமாக இருக்கும்...'' என்றும்
அமைச்சர் சொல்லியிருந்தார்.
'இந்தப் பந்தயத்தால் உலக அரங்கில் நமது நாட்டின் பெயரும் பெருமையும்
கூடும். டூரிஸ்ட்களின் எண்ணிக்கையும் நிச்சயம் அதிகரிக்கும் என்பதால்
வருமானமும் அந்நியச் செலாவணியும் பெருகும். நியாயமாகப் பார்த்தால்
கிரிக்கெட் உலகக் கோப்பைக்கும், காமன்வெல்த் போட்டிக்கும் கொடுத்த மாதிரி,
மத்திய அரசு வரிச் சலுகை கொடுத்திருக்க வேண்டும். ஆனாலும் நாங்கள் மத்திய
விளையாட்டுத் துறை அமைச்சருக்கு இரண்டு பாஸ் அனுப்பினோம்...'' என்கிறது,
இந்தப் போட்டியை நடத்தும் ஜெப்பீ ஸ்போர்ட்ஸ் இண்டர்நேஷனல் லிமிடெட் என்ற
தனியார் நிறுவனம்.''நாங்கள் ஏழை நாடு இல்லை, வளர்ந்த நாடு என்பதை உலகத்துக்கு பறைசாற்றத்தான் சீனா, தென் கொரியா, மலேஷியா ஆகிய ஆசிய நாடுகள் கார் பந்தயத்தை நடத்துகின்றன. அந்த
நாடுகளைப் பின்பற்றி ஜெப்பீ நிறுவனம் கார் பந்தயத்தை சிறப்பாக நடத்திக்
காட்டி இருக்கிறது. காமன்வெல்த் போட்டிகள் போன்று எந்த சொதப்பல்களும் இல்லை
என்பதற்காகவே அவர்களைப் பாராட்ட வேண்டும்!'' என்று வாதாடுகிறார்கள் கார்
பந்தய ரசிகர்கள்.
சரி, இந்த ஃபார்முலா 1 போட்டி எப்படி நடந்தது?
12 அணிகளைச் சேர்ந்த கார் ரேஸ் வீரர்கள் 24 பேர் இதில் கலந்து கொண்டனர்.
இதில், சஹாரா ஃபோர்ஸ் இந்தியா என்பது மட்டும்தான் இந்திய அணி. அதாவது,
விஜய் மல்லையாவும் சஹாரா நிறுவனத்தின் சுப்ரத்த ராய் ஆகிய இருவரும்தான்
இந்த டீமின் முதலாளிகள். ஆனால், இந்த டீமில் காரை ஓட்டியவர்களோ, அதை
வடிவமைத்தவர்களோ இந்தியர்கள் இல்லை. இந்தப் போட்டியில் பங்கேற்ற ஒரே
இந்தியர் நரேன் கார்த்திகேயன். ஆனால், அவர் கார் ஓட்டியதும் ஹிஸ்பானியா
ரேஸிங் என்ற வெளிநாட்டு டீம் ஒன்றுக்குத்தான். இந்தப் போட்டியில் வெற்றி
பெற்று மாயாவதி கையால் பரிசு வாங்கி இருக்கிறார், ஜெர்மனியைச் சேர்ந்த
செபாஸ்டியன் வெட்டல்.''உத்தரப் பிரதேச மாநிலத்தில் புத் ரேஸிங் மைதானம் அமைந்திருக்கிறது.
இந்தப் போட்டியை நடத்தும் ஜெப்பீ நிறுவனத்தைச் சேர்ந்த சமீர் கவுர்,
மாயவதியால் ஆசீர்வதிக்கப்பட்டவர். அதனால்தான் மாயாவதி அந்த நிறுவனத்துக்கு
தனது மாநிலத்தில் சகல வசதிகளையும் செய்து கொடுத்திருக்கிறார். இந்த கார்
பந்தய மைதானத்தை நிர்மாணிக்க மட்டும், சமீர் 1,750 கோடி செலவு செய்திருக்கிறார். இது தவிர, பந்தயத்தை நடத்துவதற்காக ஃபார்முலா1 நிறுவனத்துக்கும், சமீர் கவுர்
175 கோடி கொடுத்து இருக்கிறார். மற்ற விளையாட்டுகளைப் போலவே இந்த கார்
பந்தயத்திலும் பஞ்சமே இல்லாமல் அரசி யலும் பிசினஸும் கலந்து இருப்பதுதான்
துரதிர்ஷ்டம்!'' என்பது நடுநிலையாளர்களின் கருத்து.
''ஃபார்முலா 1 என்பது ஒரு விளையாட்டே கிடையாது... முழுக்க முழுக்க ஒரு
வியா பாரம். விளையாட்டு என்றால், போட்டியில் கலந்து கொள்ளும் அனைவரும் ஒரே
மாதிரியான காரைத்தான் ஓட்ட வேண்டும். ஆனால், இதில் அப்படி இல்லை. தங்கள்
கார்களை விற்பனை செய்ய, தங்களிடம்தான் சிறந்த தொழில்நுட்பம் இருக்கிறது
என்பதை உலகுக்கு எடுத்துக்காட்ட, கார் நிறுவனங்கள் நடத்தும் விளம்பர
நிகழ்ச்சிதான் இது. இந்தப் போட்டியில் ஒரு டிரைவர் ஜெயித்தாலும், தோல்வி
அடைந்தாலும் அவருடைய பங்கு 20 சதவிகிதம்தான். 80 சதவிகித வெற்றியின்
சூட்சுமம் காரின் தொழில்நுட்பத்தில்தான் இருக்கிறது. இது பணக்காரர்களின்
விளையாட்டு என்பதால், கிரிக்கெட்டுக்கு ஆபத்து வரும்...'' என்கிறார்கள்,
இந்தப் போட்டிக்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள்.இந்த கார் பந்தயத்தால் அதிக நஷ்டம் தமிழ்நாட்டுக்குத்தான். ஏனென்றால், கார்
ரேஸ் என்றாலே சென்னையில் இருக்கும் இருங்காட்டுக்கோட்டையும் கோவையில்
இருக்கும் கரி மோட்டர் ஸ்பீட்வே ரேஸ் மைதானமும்தான் நினைவுக்கு வரும்.
இப்போது ஃபார்முலா 1 பந்தயம் உத்தரப் பிரதேசத் துக்குப் போய்விட்டதால்,
இந்தப் பெருமையும் போய் விட்டது.
விகடன்
இந்த வாகனங்களின் milage எவ்வளவு சாமி?
ReplyDelete