Search This Blog

Wednesday, November 23, 2011

போக்குவரத்து துறை லாபம் அடையுமா? - ''இப்போது கிடைத்திருப்பது ஆக்ஸிஜன் மட்டும்தான்!''

 
''கடன் சுமையால் மூழ்கிக்கொண்டு இருக்கும் போக்குவரத்துக் கழகங்களைக் காப்பாற்றவே பேருந்துக் கட்டணத்தை உயர்த்தி இருக்கிறேன்'' என்கிறார் முதல்வர். ஆனால், ''கட்டண உயர்வு, ஆபத்தில் இருக்கும் போக்குவரத்துக் கழகங்களுக்கு ஆக்ஸிஜன் கொடுக்கும் முதலுதவி சிகிச்சைதான். போக்குவரத்துக் கழகங்களை இந்த நடவடிக்கையால் எல்லாம் காப்பாற்ற முடியாது'' என்று திகில் கிளப்புகிறார்கள் சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினர்! ''பேருந்துக் கட்டணத்தை உயர்த்த வேண்டும், அல்லது போக்குவரத்துக் கழகங்களை அரசே ஏற்று நடத்த வேண்டும். இல்லா​விட்​டால், அவை திவாலாகிவிடும்'' - கடந்த 10 மாதங்களுக்கு முன்பே, சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினர் ஜூ.வி. மூலமாக இப்படி எச்சரிக்கை மணி அடித்தனர்.
 
''எட்டுக் கோட்டங்கள், 23 மண்டலங்கள், சுமார் 206 டெப்போக்களைக்கொண்ட தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் தினமும் சுமார் 20 ஆயிரம் பேருந்துகளை இயக்குகின்றன. இதன்  மூலம் தினமும் சுமார் 2 கோடி பேருக்கு சேவை அளித்து நாள் ஒன்றுக்கு சுமார் 22 கோடியை வருவாய் ஈட்டுகிறது. இதற்கு முன் 2001-ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியில்தான் கடைசியாக பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டது. கடந்த 10 வருடங்களில் இதுவரை எத்தனையோ முறை டீசல் விலை உயர்த்தப்பட்டபோதும், பேருந்துக் கட்டணம் உயர்த்தப்படவில்லை. லிட்டருக்கு ஒரு ரூபாய் டீசல் விலை உயர்ந்தாலே, போக்குவரத்துக் கழகங்களுக்கு தினமும் 20 லட்சம் நஷ்டம் ஏற்படும். அப்படியானால், 10 வருடங்களில் இழப்பு எவ்வளவு இருக்கும் என்பதை நீங்களே ஊகித்துக்கொள்ளுங்கள். போக்குவரத்துக் கழகங்கள் எவ்வளவுதான் நஷ்டத்தைச் சந்தித்தாலும், அரசுக்கு சேர வேண்டிய வரிகளை மட்டும் பைசா பாக்கி இல்லாமல் வசூலித்துவிடுகிறார்கள். ஆனால், அரசிடம் இருந்து போக்குவரத்துக் கழகங்களுக்கு வரவேண்டிய கட்டணங்கள் மட்டும் ஒழுங்காக வரவில்லை. இலவச பஸ் பாஸ் திட்டங்களின் மூலமாக அரசிடம் இருந்து ஆண்டுக்கு சுமார் 240 கோடி வரவேண்டும். கடந்த தி.மு.க. ஆட்சியில் ஆண்டுக்கு 150 கோடி மட்டுமே கொடுத்தார்கள். டீசல் சப்ளை செய்ததற்காக இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனுக்கு சுமார் 15 கோடி வரை கடன். ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க போக்குவரத்துக் கழகங்களுக்குச் சொந்தமான சொத்துக்களில் பெரும் பகுதியை வங்கிகளில் அட​மானம் வைத்திருக்கிறார்கள். 206 டெப்போக்களுமே இப்போது அடமானத்தில்தான் இருக்கின்றன. மேற்கொண்டும் சிக்கலைச் சமாளிக்க சில இடங்களில் பஸ் ரூட்களையும் அடமானம்வைத்த அவலங்களும் நடந்திருக்கிறது. 
 
 
இந்தக் கடன்களுக்கான வட்டியையே கட்ட முடியாமல் திண்டாடுகிறார்கள். சில இடங்களில் இந்த வட்டியைக் கட்டுவதற்கு, புதிதாய் கடன் வாங்குகிறார்கள். இரண்டு ஆண்டுகளாக போக்கு​வரத்துக் கழக ஊழியர்களின் பி.எஃப். பணத்தை பி.எஃப். அலுவலகத்தில் செலுத்தாமல், அதையும் வேறு எதற்கோ பயன்படுத்தினார்கள். கடந்த ஆறு மாதங்களாக, தொழிலாளர்களின் சம்பளத்தில் பிடிக்கப்பட்ட இன்​ஷூரன்ஸ் பிரிமியத்தையும் கட்டாமல் செலவழித்துவிட்டனர். சில மாதங்களாக தொழிலாளர்களின் பென்ஷனுக்காகப் பிடிக்கப்பட்ட பணமும் பென்ஷன் டிரஸ்ட்டுக்கு போய் சேரவில்லையாம். நஷ்டஈடு வழக்குகளில் கோர்ட்டால் ஜப்தி செய்யப்பட்ட பேருந்துகளை மீட்பதற்கே சுமார் 100 கோடி தேவைப்படும்'' என்று அடுக்கியவர்கள் தொடர்ந்து, ''பேருந்துக் கட்டணங்களை உயர்த்தாமல் இருந்திருந்தால், இன்னும் ஆறே மாதங்களில் உதிரிப் பாகங்கள் வாங்கக்கூட பணம் இல்லாமல் ஆங்காங்கே பேருந்துகள் பிரேக்டவுன் ஆகி நின்றிருக்கும். தொழிலாளிக்கு சம்பளம் கொடுக்க முடியாத நிலை வந்து, போராட்டங்கள் வெடித்திருக்கும். ஆனால், இந்தக் கட்டண உயர்வும் போக்குவரத்துக் கழகங்களை ஆபத்தில் இருந்து முழுமையாகக் காப்பாற்றாது. இப்போது 70 சதவிகிதம் வரை கட்டண உயர்வு அமல்படுத்தி இருந்தாலும், வருமானம் என்னவோ 50 சதவிகிதம்தான் கூடி இருக்கிறது. இதைவைத்து அத்தியாவசியத் தேவைகளை ஓரளவுக்கு சமாளிக்கலாமே தவிர, 6,150 கோடி கடன் சுமையைக் குறைக்கவோ, அதற்காக வட்டி கட்டவோ முடியாது. போக்குவரத்துக் கட்டணங்களை இன்னும் ஒரு மடங்கு கூட்டினால், பிரச்னையை ஓரளவுக்கு சமாளிக்கலாம். ஆனால், அது மக்களை வெகுவாகப் பாதிக்கும். எனவே இந்தக் கடனை அரசே வழங்கிவிட்டு, போக்குவரத்துக் கழகங்களை அரசுடமையாக்க வேண்டும். இல்லாவிட்டால், போக்குவரத்துக் கழகங்​களை எந்தக் காலத்திலும் காப்பாற்ற​வே முடியாது'' என்று அழுத்தமாக சொன்​னார்கள்.
 
தி.மு.க. ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த கே.என்.நேரு, ''பேருந்து கட்டணத்தை உயர்த்தாமலேயே போக்குவரத்துக் கழகங்கள் காப்பாற்றப்படும்'' என்றார். ஆனால், ''திவாலாகும் நிலையில் இருந்து போக்குவரத்துக் கழகங்களை காப்பாற்றவே பேருந்து கட்டணங்களை உயர்த்தினேன்'' என்கிறார் முதலமைச்சர் ஜெயலலிதா.  
 
விகடன் 

No comments:

Post a Comment