எப்படியாவது, 'டாக்டர்’ பட்டம் வாங்கிப் பெயருக்கு
முன்னால் போட்டுக்கொள்ளத் துடிக்கும் அரசியல்வாதிகளை நமக்குத் தெரியும்.
10-ம் வகுப்பு பரீட்சையில் கோல்மால் செய்ததாகச் சர்ச்சையில் சிக்கிய
அரசியல்வாதியையும் தெரியும். ஆனால், உண்மையிலேயே படித்து பி.ஹெச்டி. பட்டம்
வாங்கி இருக்கிறார்கள் சில அரசியல்வாதிகள். சென்னை பல்கலைக்கழகத்தின் 154-வது பட்டமளிப்பு விழா சமீபத்தில் நடந்தது.
அப்போது, 'இணைய இதழ்கள்’ என்ற தலைப்பில் அருப்புக்கோட்டை அ.தி.மு.க.
எம்.எல்.ஏ. வைகைச்செல்வனும், 'கல்வி நிலையங்களில் கலைஞர் உரைகள்’ என்ற
தலைப்பில் தி.மு.க-வின் திருவிடைமருதூர் எம்.எல்.ஏ கோவி.செழியனும்
ஆராய்ச்சி செய்து, கவர்னர் ரோசய்யாவிடம் இருந்து பி.ஹெச்டி. பட்டம்
வாங்கினார்கள்.
வைகைச்செல்வன்
பச்சையப்பன் கல்லூரியில் பி.ஏ., மற்றும் எம்.ஏ. முடித்ததும், சென்னை சட்டக்
கல்லூரியில் பி.எல். படித்தார் வைகைச்செல்வன். இலக்கிய ஆர்வலர். இதுவரை 14
புத்தகங்கள் எழுதி இருக்கிறார். 'திருக்குறள் நவீன உரை’, 'காதல் மனப்பாடப்
பகுதி’ ஆகியவை குறிப்பிடத்தக்க படைப்புகள். திரைப்படத் துறையிலும்
இயக்குநர் மகேந்திரன் மூலம் கால் பதித்தார். 'சேனா’, 'விசில்’, 'வயசுப்
பசங்க’ என்று 30 படங்களுக்குப் பாடல்கள் எழுதி இருக்கிறார். அ.தி.மு.க-வின்
ஸ்டார் பேச்சாளர்களில் ஒருவர். கடந்த தேர்தலில் தி.மு.க-வின் ஸ்டார்
வேட்பாளர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரனை வீழ்த்தி சட்டசபைக்குள்
நுழைந்தார். 'கம்பரின் இலக்கிய நெறி’, 'பாரதிதாசனின் பா நெறி’ என்று
பி.ஹெச்டி. ஆய்வுக்கு வழக்கமாகத் தேர்வு செய்யப்படும் தலைப்புகளைத் தேர்வு
செய்யாமல், 'இணைய இதழ்கள்’ என்று எடுத்துக்கொண்டார். இந்தத் தலைப்புக்கான
ஆய்வுப் பணியை 2001-ல் தொடங்கி, கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் உழைத்து டாக்டர்
பட்டம் வாங்கி இருக்கிறார்.வழக்கமான இணைய இதழ்கள் தவிர ட்விட்டர், ஃபேஸ்புக் போன்ற சமூகத் தளங்களையும்
ஆய்வுக்கு எடுத்திருக்கிறார். ட்விட்டர் போன்ற ஆங்கில வார்த்தைகளுக்கு
தமிழ்ச் சொற்கள் தேடுவதிலும், கலைச் சொற்கள் உருவாக்குவதிலும் நிறைய
நாட்கள் உழைத்திருக்கிறார். 'இணைய இதழ்களின் பங்களிப்பைப் பார்க்கும்போது,
இன்னும் சில ஆண்டுகளில் ஆசியாவின் நுழைவு வாயிலாக தமிழ் இணைய இதழ்கள்
இருக்கப்போகின்றன என்பது புரிகிறது. ஆரம்பத்தில் சிறிது அளவு பணம் போட்டுத்
தொடங்கப்பட்ட இணைய இதழ்கள், பிறகு தாக்குப்பிடிக்க முடியாமல் மூடப்பட்டன.
ஆனால், இப்போது, அப்படிப்பட்ட நிலை இல்லை. செய்திகளை டி.வி. அல்லது
செய்தித் தாள்களில் மட்டுமே பார்க்க முடியும். ஆனால், நடப்பு விஷயங்களை
உடனுக்குடன் வெளியிடுவதோடு, அதுபற்றிய விவாதத்தையும் மின்னல் வேகத்தில்
முன்வைக்கின்றன இணைய இதழ்கள். அறிவு ஜீவிகள் வட்டாரம் மட்டுமே படித்து
வரும் இந்த இதழ்கள், அடித்தட்டு மக்களிடையே எந்த பாதிப்பையும்
உண்டாக்கவில்லை என்பது நிஜம்! ஆனால், உலகம் முழுவதும் அதிர்வலைகளை
ஏற்படுத்துகிறது...’ என்று ஆய்வில் சொல்லி இருக்கிறார் வைகைச்செல்வன்.
கோவி செழியன்
இவர் தி.மு.க-வின் முக்கியப் பேச்சாளர். ஸ்டாலினுக்கு மிக நெருக்கமானவர்.
எம்.ஏ., பி.எல்., பட்டம் பெற்று இருக்கும் கோவி செழியன், 'முரசொலி இதழும்
கலைஞர் கடிதமும்’ என்ற தலைப்பில் ஏற்கெனவே ஒரு பி.ஹெச்டி. பட்டம்
வாங்கியவர். இப்போது அடுத்த டாக்டர் பட்டம் வாங்கிவிட்டார். ''கலைஞரின்
உரைகள் எல்லாமே ஆய்வுக்கு உட்பட்டதுதான். அவரின் உரையைவைத்து நிறைய ஆய்வுக்
கட்டுரைகள் எழுதப்பட்டு இருப்பதால், 'கல்வி நிலையங்களில் கலைஞர் உரைகள்’
என்ற தலைப்பைத் தேர்வு செய்தேன். மேடைப் பேச்சாளர்களில் முக்கியமான
இடத்தில் இருக்கும் கலைஞர், பள்ளிப் பருவம் தொடங்கி இடைவிடாது 70
ஆண்டுகளுக்கும் மேல் உரையாற்றி வரும் ஆளுமைமிக்க தலைவராக இருக்கிறார்.
1951-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரை அரசியல் மேடை, இலக்கிய மேடை, திருமண
மேடை, ஆய்வரங்க மேடை என்று பல மேடைகளில் கலைஞர் உரையாற்றி இருக்கிறார்.
பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் என முறைப்படுத்தி அவற்றில் ஆற்றிய
உரைகளை மட்டும் தொகுத்து ஆய்வு செய்தேன். சென்னை, அவ்வையகம் பள்ளி விழாவில்
1965-ம் ஆண்டு கலைஞர் ஆற்றிய உரையில் இருந்து ஒன்றுவிடாமல் இந்த ஆய்வில்
சொல்லி இருக்கிறேன். இதற்காக விடுதலை, நம்நாடு, முரசொலி இதழ்களைத் தேடி
எடுத்தேன். மலேசிய நூலகத்திலும் சில தகவல்கள் திரட்டினேன்.161 கல்வி நிறுவனங்களில் அவர் ஆற்றிய உரைகளை இந்த ஆய்வில் தொகுத்து
இருக்கிறேன். மாணவர் கடமைகள், தமிழர் பெருமை, சமூகப் பார்வை, பெற்றோர்
பங்களிப்பு என 20 பகுதிகளாகப் பிரித்து, இந்த ஆய்வை மேற்கொண்டேன். சுமார்
1,600 பக்கங்களை ஆராய்ந்து, 240 பக்க ஆய்வை சமர்ப்பித்தேன். மாணவர்களுக்கு
கலைஞர் ஆற்றிய அறிவுரைகள், காலாகாலத்துக்கும் நிலைத்து நிற்கக்கூடியவை!''
என்றார் கோவி. செழியன்.
விகடன்
No comments:
Post a Comment