Search This Blog

Saturday, November 12, 2011

பெண் கொடுமையில் இந்தியாவுக்கு இடம் 4 - அதிரவைக்கும் ஐ.நா. அறிக்கை

 
லகத்தின் மக்கள் தொகையில் சரி பாதி பெண்கள். வீட்டின் வளர்ச்சியிலும் நாட்டின் வளர்ச்சியிலும் பெண்களின் பங்களிப்பு நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. ஆனால், இந்தியாவில் பெண்களின் நிலை நாளுக்கு நாள் இறங்குமுகமாகவே இருக்கிறது என எச்சரிக்கிறது 'யு.என்.டி.பி-’யின் அறிக்கை. 'பங்களாதேஷ், நேபாளம், இலங்கையைவிட இந்தியாவில் ஆண் - பெண் பாலின சமத்து​வம் மோச​மான நிலையில் இருக்கிறது’ என்று அதிர்ச்சியைக் கொடுக்கிறது, அறிக்கை! ''ஐ.நா. இந்த அறிக்கையை ஒவ்வோர் ஆண்டும் வெளி​யிட்டு வருகிறது. இந்தியாவில் பெண்களின் நிலைமை தொடர்ந்து அபாயகரமான இடத்திலேயே இருக்கிறது. கடந்த வருடம் 128-வது இடத்தில் இருந்த இந்தியா, இந்த வருடம் 129-வது இடத்தைப் பிடித்திருக்கிறது. உண்மையில் இது வெட்கப்படவேண்டிய விஷயம்.
 
 
பெண் குழந்தை பிறப்பு சதவிகிதம், பிரசவத்தின்போது பெண் இறப்பு, தொழில் வளர்ச்சியில் பெண்களின் பங்களிப்பு, பெண் ஊழியர்களுக்குக் கொடுக்கப்படும்  ஊதியம், அரசியலில் பெண்களின் இடம் போன்றவற்றின் அடிப்ப​டையில்தான் இந்தக் கணிப்பு நடத்தப்படுகிறது. பிறந்த பெண் குழந்தைகளைக் கொல்வதும், கருவிலேயே பெண் குழந்தையை அழிப்பதும் இன்னமும் இந்தியாவில் குறையவில்லை என்ற உண்மையை முகத்தில் அறைந்து சொல்கிறது இந்த அறிக்கை. இந்த அறிக்கையின் அடிப்படையில்தான், பெண்கள் வாழ்வதற்குப் பாதுகாப்பற்ற நாடுகளின் வரிசையில், இந்தியாவுக்கு 4-வது இடத்தைக் கொடுத்தது ஐ.நா.பெண்கள் படித்து வேலைக்குப் போக ஆரம்பித்து​விட்டார்கள் என்றாலும், அவர்கள் மீதான பாலியல் வன்முறை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. சாரசரியாக நான்கு நிமிடங்களுக்கு ஒரு பெண் வன்முறைக்கு ஆளாக்கப்படுகிறாள். அடிதடி, திட்டு, போதிய உணவு இன்மை, மருத்துவ வசதிக் குறைபாடு போன்று பல இன்னல்களுக்கு தினமும் பெண் ஆட்படுகிறாள். தமிழகத்தில் பெரம்பலூர், அரியலூர், கடலூர், திருவண்ணாமலை, தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் 1,000 ஆண்களுக்கு 827 பெண்கள்தானே இருக்கிறார்கள்? இந்த நிலை நீடித்தால் வன்முறை இன்னும் இன்னும் அதிகரிக்கும். 
 
பெண்கள் மீதான வன்முறைகளைத் தடுக்கும் வழிகள்  
 
''குடும்ப வன்முறைத் தடுப்புச் சட்டம் 2005 பற்றிய முழுமையான தெளிவு, இதைக் கையாளும் எந்த அதிகாரிகளுக்கும் இல்லை.  அதனாலேயே அதை முழுமையாக செயல்படுத்துவதில் பல சிக்கல்கள். அடுத்து, பணிபுரியும் இடத்தில் பெண்கள் மீதான பாலியல் வன்முறையைத் தடுக்கும் மசோதா இன்னும் சட்டம் ஆக்கப்படவில்லை. தமிழ்நாட்டில், சரிகா ஷா மீது நடத்தப்பட்ட வன்முறைக்குப் பிறகு கொண்டுவரப்பட்ட 'பெண்கள் மீதான வன்முறைத் தடுப்புச் சட்டம் - 1998,’ 'கருவில் இருக்கும் குழந்தை அழிப்பதைத் தடுக்கும் சட்டம் - 1994’ எனப் பெண்களைப் பாதுகாக்க பல சட்டங்கள் இருக்கின்றன. சட்டங்கள் மட்டும் வன்முறையைத் தடுத்துவிடாது. ஆரம்பக் கல்வியில் இருந்து பெண்ணை சக மனுஷியாக நடத்த வேண்டும் என்ற மானிடக் கல்வியை ஒவ்வொரு குழந்தைக்கும் கற்றுத் தரவேண்டும். பெண் கல்வி, ஆரோக்கியம், அரசியல் பங்களிப்பில் சம உரிமை, காணாமல்போகும் பெண் குழந்தைகள், கடத்தல் போன்ற எல்லாவற்றிலும் அரசு கவனம் செலுத்த வேண்டும் என்பதையே இந்த அறிக்கை உணர்த்துகிறது. சுருக்கமாகச் சொன்னால், ஆண் - பெண் முன்னேற்றம் சமமாக நிகழ வேண்டும். ஒரு பக்கம் மட்டும் வளர்ந்தால், அது வளர்ச்சி அல்ல...''
பெண்களைக் கடவுளாகக் கும்பிடும் இந்த நாட்டில்தான், பெண்களுக்கு இத்தனை இடர்ப்பாடுகள் என்றால்... எப்படி நாம் திருந்தப்போகிறோம்?
 
 
- நாச்சியாள், வே.கிருஷ்ணவேணி
 
விகடன் 



No comments:

Post a Comment