Search This Blog

Saturday, November 05, 2011

அமெரிக்காவில் கம்யூனிஸம்! - ஓ பக்கங்கள், ஞாநி

 கடந்த ஓராண்டில் துனீஷியா, எகிப்து, லிபியா என்று வெவ்வேறு நாடுகளில் மக்கள் திரளாகக் கூடி ஆட்சியாளர்களுக்கு எதிராகப் போராட்டம் நடத்தியபோது அமெரிக்க அரசு அதை ‘ஆஹாவென்று எழுந்தது பார்யுகப் புரட்சி’ என்று வரவேற்றது. ஜனநாயகத்தை உருவாக்குவதற்கும் சர்வாதிகாரத்தை எதிர்த்தும் நடக்கும் இந்தப் போராட்டங்களுக்கெல்லாம் தன் ஆதரவு உண்டு என்று அறிவித்தது. இப்போது போராட்டம் அமெரிக்காவிலேயே ஆரம்பமாகிவிட்டது. ஒரே ஒரு வித்தியாசம்தான். போராட்டம் உண்மையான ஜனநாயகம் வேண்டும் என்பதற்காகத்தான். குறிப்பிட்ட ஆட்சியாளர்களை எதிர்த்து அல்ல. யார் ஆட்சிக்கு வந்தாலும் அவர்களை ஆட்டிவைக்கும் பெரும் பணக்காரர்களுக்கு எதிராக அமெரிக்கப் பொருளாதாரத்தையும் உலகப் பொருளாதாரத்தையும் கட்டுப்படுத்தும் நிதி நிறுவனங்கள், வங்கிகள், பன்னாட்டு நிறுவனங்கள் முதலியவற்றின் தலைமை அலுவலகங்கள் இருக்கும் இடம் அமெரிக்காவின் நியூயார்க் நகரின் வால் ஸ்ட்ரீட். இதில் குடியேறுவோம் என்ற முழக்கத்துடன் செப்டெம்பர் 17ஆம் தேதி தொடங்கிய போராட்டம் இப்போது பரவி, அமெரிக்காவிலேயே இன்னும் 70 நகரங்களில் நடக்கிறது. உலகம் முழுவதும் சுமார் 800 நகரங்களில் நடக்கிறது. 


வால் ஸ்ட்ரீட்டில் உள்ள சக்கோட்டி பார்க் எனப்படும் விடுதலை சதுக்கப் பூங்கா ஒரு தனியார் சொத்து. (தனியார் கைக்குச் சென்றதும் கம்பெனி தலைவர் சக்கோட்டியின் பெயரை வைத்துக் கொண்டார்கள்.) பொது உபயோகத்துக்குத் தருவோம் என்ற அடிப்படையில் நகராட்சியிடம் இருந்து தனியார் நிறுவனம் பெற்று நிர்வகிக்கும் இடம். உண்மையில் இது மரங்கள், சோலைகள் நிறைந்த பூங்கா அல்ல. சுற்றிலும் பிரம்மாண்டமான அலுவலகக் கட்டடங்கள் இருக்க, நடுவில் இருக்கும் திறந்தவெளி. மண் இல்லாமல் தரையும் பெஞ்சுகளும் போடப்பட்டு இளைப்பாறும் இடம். பொருளாதாரத்தைக் குட்டிச் சுவராக்கியிருக்கும் வால்ஸ்டீரீட் அலுவலகங்களில் மக்கள் குடியேறி அவற்றை மாற்றியமைத்தால்தான் பொருளாதாரத்தைக் காப்பாற்றமுடியும் என்ற முழக்கத்துடன் போராட்டக்காரர்கள் செப்டெம்பர் 17ல் உள்ளே புகுந்தார்கள். ஒரு சில நாட்களில் வெளியேறிவிடுவார்கள் என்று அரசு நினைத்தது. ஆனால் இரவு பகலாக இரு மாதங்களாகப் போராட்டம் வலுவாகிவிட்டது. நன்கொடை வசூலித்து எல்லாருக்கும் உணவு தருகிறார்கள். இதுவரை நன்கொடைகள் மூலம் போராட்டத்துக்கு 5 லட்சம் டாலர்கள் வந்திருக்கின்றன.  

போராட்டக்காரர்களின் கோரிக்கை என்ன? யார் தலைமையில் போராட்டம்?  

‘நாங்கள்தான் இந்தச் சமூகத்தின் 99 சதவிகிதம் மக்கள். மீதி ஒரு சதவிகிதம் பேர் எங்கள் தலையில் ஏறி சவாரி செய்வதை நிறுத்துங்கள்’ என்பதுதான் கோரிக்கை. அமெரிக்க சமூகத்தின் செல்வம், சொத்து எல்லாம் வெறும் ஒரு சதவிகிதம் பேரிடமே குவிந்திருக்கிறது. அவர்களுக்குக் குறைவான வரி போடுவது, அவர்களுக்கு மேலும் மேலும் சலுகைகள் தருவது, அவர்களின் வியாபார நலன்களுக்காக அரசு ஒத்துழைப்பது, அவர்கள் திவாலானால், அரசு மானியம் கொடுத்துக் காப்பாற்றுவது எல்லாவற்றையும் நிறுத்துங்கள். கடந்த 30 வருடங்களில் ஒரு சதவிகிதப் பணக்காரர்களின் வருமானம் 275 சதவிகிதம் உயர்ந்திருக்கிறது. ஆனால் நடுத்தர வகுப்பினரின் வருமானம் வெறும் 40 சதவிகிதம்தான் அதிகரித்தது. சராசரி அமெரிக்கனின் வருமானம் 30 வருடங்களில் 900 டாலர் குறைந்திருக்கிறது. ஆனால் ஒரு சதவிகிதப் பணக்கார அமெரிக்கனின் வருமானமோ ஏழு லட்சம் டாலர் அதிகரித்திருக்கிறது. அமெரிக்காவின் பெரும் பணக்காரர்கள் 400 பேரின் வருமானம் மட்டும் 392 சதவிகிதம் கூடியிருக்கிறது. ஆனால் அவர்கள் கட்டும் வரியின் அளவு 37 சதவிகிதம் குறைந்திருக்கிறது.  போராடத் தூண்டியது எது? புஷ் ஆட்சியின் கடைசிகாலத்தில் வீட்டுக் கடன் கொடுத்து திவாலான வங்கிகளால் அமெரிக்கப் பொருளாதாரமே சீர்குலைந்தபோது, பாதிக்கப்பட்ட ஏழை, நடுத்தர மக்கள் வீடு இழந்தார்கள். ஆனால் திவாலான நிதி நிறுவன அதிகாரிகள் எல்லாரும் வருடம் தோறும் தங்கள் சம்பளங்களை மூன்று மடங்கு நான்கு மடங்கு என்று உயர்த்திக் கொண்டே போனார்கள். ஒபாமா ஆட்சிக்கு வந்ததும் பொருளாதாரம் சீராகும் என்ற எதிர்பார்ப்புகள் பொய்யாகிவிட்டன. எந்த அரசாங்கம் வந்தாலும், யார் செனட், காங்கிரஸ் உறுப்பினராக ஆனாலும், கார்ப்பரேஷன்கள் எனப்படும் பிரம்மாண்டமான கம்பெனிகளுக்கு சாதகமாகவே சட்டங்களையும் அரசு திட்டங்களையும் கொள்கைகளையும் வளைப்பதை எதிர்த்தே இப்போதைய போராட்டம் நடக்கிறது. ஆனால், அமைதியான எதிர்ப்பு. வன்முறை கூடவே கூடாது என்பதில் விழிப்போடு இருக்கிறார்கள். அதனாலேயே இவர்களைச் சமாளிப்பது அமெரிக்க அரசுக்கும் போலீசுக்கும் சிக்கலாக இருக்கிறது. இப்போது நியூயார்க்கில் உறை பனி விழத்தொடங்கும் வேளை. போராட்டக்காரர்கள் கொண்டு வந்து இயக்கும் ஆறு டீசல் ஜெனரேட்டர்களை போலீஸ் கைப்பற்றிவிட்டது. கூடாரங்கள் அமைக்க போலீஸ் அனுமதிக்காததினால், கெட்டியான கம்பளிப் பைகளுக்குள் உடலை நுழைத்துக் கொண்டு இரவில் போராட்டக்காரர்கள் தூங்குகிறார்கள். தினசரி வருகை தரும் ஆதரவாளர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது. 


இந்த இயக்கத்துக்கென்று தனியே தலைமை இல்லை. போராட்டம் நடக்கும் ஒவ்வொரு நகரிலும் இரு தினங்களுக்கொரு முறை போராட்டக்காரர்கள் எல்லாரும் கூடும் பொது அசெம்பிளியை நடத்துகிறார்கள். அதில் முடிவுகள் எடுக்கப்படுகின்றன. பொறுப்புகள் ஒப்படைக்கப்படுகின்றன. இந்தப் போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்து பல கலைஞர்கள், எழுத்தாளர்கள், திரைப்பட இயக்குனர்கள், கல்வியாளர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளனர். அறிஞர் நோம் சாம்ஸ்கி பெரும்பணம் அரசியலைத் தீர்மானிப்பதை மக்கள் எதிர்ப்பதை ஆதரித்திருக்கிறார். புஷ் அரசுக்கெதிரான பல ஆவணப்படங்கள் தயாரித்த மைக்கேல் மூர் ஓவ்வொரு ஊராகப் போய் போராட்ட பூங்காவில் பேசிவருகிறார். ஒவ்வொரு ஊரிலும் நூற்றுக்கணக்கானவர்கள் கைது செய்யப்படுகிறார்கள். ஆனாலும் போராட்டம் தொடர்கிறது. பல அமெரிக்க நகர்களில் போராட்டக்காரர்களைக் கைது செய்யக் கூடாது என்றும் பூங்காவிலிருந்து வெளியேற்றக் கூடாது என்றும் நீதி மன்றங்களில் தடை வாங்கியிருக்கிறார்கள்.  உலகத்தின் 99 சதவிகித மக்களைச் சுரண்டிக் கொண்டு ஒரு சதவிகிதப் பணக்காரர்கள் வாழ்கிறார்கள். அவர்களுக்கு சாதகமாகவே அரசாங்கங்கள் செயல்படுகின்றன. அவர்கள்தான் அரசாங்கங்களையே திரைமறைவில் நடத்துகிறார்கள்.இந்தக் கருத்துகள் எல்லாம் கம்யூனிஸ்டுகள் பல காலமாகச் சொல்லி வருபவைதான். ஆனால் முதன்முறையாக கம்யூனிஸ்ட் அல்லாத பொதுமக்கள் உலக முதலாளித்துவத்தின் தலைநகரமான அமெரிக்காவில் இதே கருத்துகளைச் சொல்லிக் கொண்டு தெருவுக்கு வந்திருக்கிறார்கள். இதற்குத் தீர்வு வேண்டுமென்று அவர்கள் ஆயுதங்களை இன்னும் கையில் எடுக்கவில்லை. வன்முறை இல்லாதபோதும் கூட ஆங்காங்கே போலீஸ் தன் வன்முறையைப் பயன்படுத்துகிறது.சாதாரண மக்களின் நீண்ட நாள் கோபம், அதிருப்தி, ஆற்றாமை, எல்லாம் அடக்கி வைத்திருந்தவை இப்போது இந்தப் போராட்டத்தின் மூலம் வெளிப்படுகிறது. முதலில் இளைஞர்கள், வேலை இழந்த இளைஞர்கள், மாணவர்கள் போராட்டத்துக்கு வந்தார்கள். மெல்ல மெல்ல நடுத்தர வயதினர் பலரும் கலந்து கொள்ள, போராட்டம் முழு சமூகத்தையும் பிரதிபலிப்பதாக ஆகிவிட்டது. அதாவது 99 சதவிகித சமூகத்தை.ஒரு சதவிகித சமூகத்திலிருந்தும் சில ஆதரவுக் குரல்கள் வந்துள்ளன. வாரன் பஃப்பெட் போன்ற பெரும் பணக்காரர்கள் சிலர் ஏற்கெனவே பணக்காரர்களுக்கு அதிக வரி விதிக்கும்படி சொல்லியிருக்கிறார்கள்.


போராட்டம் எப்படிப்பட்ட வெற்றியைப் பெறும் என்று இப்போது சொல்ல முடியாது. ஏனென்றால் துல்லியமான கோரிக்கை, தெளிவான தலைமை என்று எதுவும் இல்லை. அதுதான் இதன் பலம், பலவீனம் இரண்டுமேயாகும்.ஆனால் சில செய்திகள் மட்டும் தெளிவாக இந்தப் போராட்டத்தில் சொல்லப்பட்டு விட்டன. சமூகத்தில் ஒரு சிலர் மட்டும் பெரும் பணக்காரர்களாகவும் இதர பெரும்பாலோர் அதற்காக உழைத்துவிட்டு தாங்கள் மட்டும் சாதாரண நிலையில் இருப்பதையும் இனி சகித்துக் கொள்ளமாட்டார்கள் என்ற செய்திதான் அது. இதை சரி செய்யவேண்டிய அரசாங்கம் பணக்காரர்களின் கைப்பாவையாக இருப்பதையும் சகித்துக் கொள்ளமாட்டோம் என்பது இன்னொரு செய்தி. நாங்கள் இதையெல்லாம் அமைதியாக அகிம்சை முறையில் சொல்லும்போதே கேட்டு உங்களை மாற்றிக் கொள்ளுங்கள் என்பது மூன்றாவது செய்தி.இப்போது ஏற்பட்டிருக்கும் மக்கள் எழுச்சியை அடுத்த அமெரிக்க அதிபர் தேர்தலில் பிரதிபலிக்கச் செய்ய வேண்டும் என்பது பல போராளிகளின் கருத்து. உலகில் சுமார் 800 நகரங்களில், ‘மக்கள் வசப்படுத்துவோம்’ போராட்டங்கள் இப்போது நடக்கின்றன. இந்தியாவைத் தவிர! போராட்டத்துக்கான காரணங்கள் அனைத்தும் இந்தியாவிலும் பலமாக உள்ளன. பெருமுதலாளிகள், பணக்கார கம்பெனிகள் சார்பாகத்தான் அரசாங்கம் இயங்குகிறது என்பதற்கு ஸ்பெக்ட்ரம் ஊழலே அண்மை காலச் சான்று. ஒரு பக்கம் விவசாயிகளின் தற்கொலைகள். மறுபக்கம் கோடிக்கணக்கான ரூபாய்கள் கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு வரிச்சலுகை. கட்டுப் படுத்தவே முடியாத பணவீக்கம். சொகுசு கார் வாங்கக் கடனுக்குக் குறைந்த வட்டி; விவசாயத்துக்கு அதைவிடக் கூடுதல் வட்டி! இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம். 

ஆனாலும் ஏன் இந்தியாவில் இப்படிப்பட்ட எழுச்சி சாத்தியமில்லாமல் இருக்கிறது? முதல் காரணம், அரசின் ஒடுக்குமுறை. வால்ஸ்ட்ரீட் பூங்கா போல இங்கே எந்த நகரத்திலும் ஒரு பூங்காவிலும் ஒரு மணி நேரம் கூட இப்படி ஓர் எதிர்ப்பு நிகழ்ச்சியை அரசு அனுமதி இல்லாமல் நடத்த முடியாது. ராம் லீலா மைதான நிகழ்வுக்கு நீதிமன்ற உத்தரவு வாங்க வேண்டியிருந்தது. மெரீனாவில் எதிர்ப்புத் திருவிழாவை நீதிமன்றமே அனுமதிக்காது. இந்த மாதிரி அம்சங்களில் இந்திய ஜனநாயகத்தை விட அமெரிக்க ஜனநாயகம் மேல் என்பது கசப்பான உண்மை.இரண்டாவதாக இங்கே மக்களின் அதிருப்தி, ஆற்றாமை எல்லாவற்றுக்கும் வடிகாலாக, பக்தி பயன்படுத்தப்படுகிறது. மேற்கத்திய சமூகத்தில் பக்தி தனி நபர் நம்பிக்கையாக மட்டுமே செயல்படுகிறது. இங்கே சேது சமுத்திரத் திட்டம் போன்ற சூழலுக்கு ஆபத்தான திட்டங்களை எதிர்க்கும் போதுகூட, சூழல் அடிப்படையிலான குரலைவிட பக்தி அடிப்படையிலான குரலே மேலோங்குகிறது. கூடன் குளம் போராட்டத்தில் கிறித்துவ, இந்து சமயத் தலைவர்களை இணைத்துக் கொண்டுதான் மக்களைத் திரட்ட வேண்டியிருக்கிறது. ஊழல் எதிர்ப்புக்கு ராம்தேவும் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கரும் வந்து கூட்டம் சேர்க்க வேண்டியிருக்கிறது.இந்திய விடுதலைப் போராட்டத்தின்போது குடியிருக்க வீடு மறுக்கப்பட்ட போராளிகள் சார்பில் கடலூர் அஞ்சலையம்மாள் போலீஸ் கமிஷனர் அலுவலகத்திலேயே குடியேறி அடுப்பு வைத்து, சமையல் செய்த எதிர்ப்பு வரலாறு இங்கே மறக்கடிக்கப்பட்டுவிட்டது. அமெரிக்க மக்களே மார்க்கெட் முதலாளித்துவம் தோற்றுவிட்டது என்று குரலெழுப்பும் வேளையில், அதை இங்கே பிடிவாதமாக, கொண்டு வந்தே தீருவேன் என்று பேசும் மன்மோகன், அலுவாலியாக்களுக்கு இப்போதாவது உறைத்தால் சரி.





1 comment:

  1. அவர்களுக்கு உரைக்கப் போவதில்லை... ஏனென்றால் நீங்கள் சொல்வது அனைத்தும் அவர்களுக்கு தெரியும்... தெரியாத நமக்கு தான் உரைக்க வேண்டும்... உரைக்கும் படி காரமாக தான் எழுதி இருக்கிறீர்கள்... அருமை

    ReplyDelete