'ஆலவாய்’ மதுரை 'ஆக்கிரமிப்பு’ மதுரையான கதை எல்லோருக்கும் தெரியும். இப்போது 'அமைதி’ மதுரையாக ஆகிவிட்டதா என்று அறியவே அலைந்தேன்!
தகர்ந்தது ஃப்ளெக்ஸ் கோட்டை
மதுரை என்றாலே நினைவுக்கு வருகிற டிஜிட்டல் ஃப்ளெக்ஸ் கோட்டை இப்போது
தகர்ந்திருக்கிறது. அஞ்சா நெஞ்சரே, ஆற்றல் அரசரே, இமயத்தின் இமயமே,
தென்னகமே, தென்னாடுடைய சிவனே, எங்களின் ஹிட்லரே என்று வரைமுறை இல்லாமல்
வாழ்த்துகிற விளம்பரங்களை அறவே காணவில்லை. அ, ஆ... எழுதிப் பழக வேண்டிய
ஆட்கள் எல்லாம், 100 அடி அகலத்தில் 'அ’னாவைப் பற்றி கவிதை பாடியிருந்த
ஃப்ளெக்ஸ் இம்சையில் இருந்து மதுரை மக்களுக்கு முதல் விடுதலை
கிடைத்திருக்கிறது. குறிப்பாக, அழகிரி வீட்டுக்குச் செல்லும் பாதை,
காஷ்மீர் பார்டர் போல இருந்த நிலைமை மாறிவிட்டது. அண்ணனின் பிறந்த நாள்
ஜனவரியில் வருகிறது என்றால், ஆகஸ்ட் மாதமே ஃப்ளெக்ஸ் வைப்பவர்கள் இது
வரையில் சின்ன போஸ்டர்கூட ஒட்டவில்லை. அழகிரி வீட்டுப் பக்கம் இருந்த பாதுகாப்புக் கெடுபிடிகள் காணாமல்
போய்விட்டன. ஆனால், மதுரை அ.தி.மு.க-வில் வெளியில் தெரியும் அளவுக்கு
மூன்று கோஷ்டிகள் இருக்கின்றன. அமைச்சர் செல்லூர் ராஜு கோஷ்டி அடக்கி
வாசித்தாலும்கூட, மற்ற இரு கோஷ்டிகளும் தி.மு.க. பாணியில் கட்டுப்பாடு
இல்லாமல் ஃப்ளெக்ஸ்களை வைத்துக்கொண்டு இருக்கின்றன!
அந்த மூன்று பேருக்கு நன்றி!
தி.மு.க. ஆட்சியின் கடைசி மூன்று ஆண்டுகளில் மதுரைக்கு வாய்த்த உயர்
அதிகாரிகள் மிகத் திறமையானவர்கள். யாருக்கு? யாருக்கோ! கைப்பாவை கலெக்டர்,
கண்டுகொள்ளாத கமிஷனர், பிரச்னை என்றால் எஸ்கேப் எஸ்.பி. ஆகியோரைத் தேர்தல்
நேரத்தில் மாற்றிய எலெக்ஷன் கமிஷன்... கலெக்டர் சகாயம், போலீஸ் கமிஷனர்
கண்ணப்பன், எஸ்.பி. ஆஸ்ரா கர்க் என்று சக்திமிக்க படையை மதுரைக்கு
அனுப்பியது. தேர்தல் கமிஷனால் நியமிக்கப்பட்ட இந்த அதிகாரிகளைப் பழக்க
தோஷத்தில் தூக்கியடிக்காமல் இருக்கிற ஒரு விஷயத்துக்காகவே ஜெயலலிதாவைப்
பாராட்டலாம்!மதுரைக்குப் புதிதாக வருபவர்கள் பளிச்சென்று ஒரு மாற்றத்தைப் பார்க்கலாம்
மாட்டுத்தாவணியில். தி.மு.க. காலத்தில் பெயரின் பொருளுக்கு ஏற்றபடி,
மாட்டுச் சந்தை போலத்தான் இருந்தது மாட்டுத்தாவணி. உட்கார இடம் கிடையாது.
நடைபாதைகளிலும் கடைகள். வியாபாரிகள் போர்வையில் ரௌடிகள். சொன்னதுதான்
விலை... வைத்ததுதான் சட்டம். தவறுதலாகக் கை பட்டுப் பழம் உருண்டால்கூடச்
சரமாரியாக விழும் உதை. திடீர் திடீரென வெடித்துப் பீதி கிளப்பும் கியாஸ்
சிலிண்டர். தொடர் தீ விபத்து. தப்பித்து ஓட வழி இல்லாமல்
சந்துபொந்துகளிலும் எண்ணெய் கொதிக்கும் வடை சட்டிகள்.ஐ.எஸ்.ஓ. தரச் சான்று பெற்ற தென்னகத்தின் மிகப் பெரிய பேருந்து நிலையத்தின்
இந்த நிலையைக் கண்டு அதிர்ந்தார் சகாயம். 'பஸ் நிலைய ஆக்கிரமிப்புகளையும்
குறைகளையும் ஏழு நாட்களுக் குள் சரிசெய்யாவிட்டால், தமிழ்நாடு மோட்டார்
வாகன விதி எண் 245(1)ன்படி பஸ் நிலைய நிர்வாகத்தினை மாநகராட்சியிடம்
இருந்து அரசே எடுத்துக்கொள்ளும்!’ என்று அவர் எச்சரிக்க, வருவாய்த் துறை,
காவல் துறை, மாநகராட்சி என்ற முப்படைத் தாக்குதலில் தூள்தூளாகின
ஆக்கிரமிப்புகள். ஆச்சர்யம்... ஆக்கிரமிப்புகளை அகற்ற அகற்ற...
மாட்டுத்தாவணியில் மாயமாகி இருந்த பயணிகள் காத்திருக்கும் அறை, பொருட்கள்
பாதுகாப்பு அறை, காவல் நிலையம், தபால் நிலையம், சுகாதார மையம் போன்றவை
எல்லாம் கடைகளுக்குள் இருந்து வெளிப்பட்டன!
சி.டி. கடைகள் ஒழிப்பு!
திருட்டு சி.டி-க்களின் தலைநகரமான மதுரையில், பாண்டி பஜாரில் 70 சி.டி.
கடைகள், மீனாட்சி பஜாரில் 20 கடைகள் பரபரப்பாகச் செயல்பட்டுக்கொண்டு இருந்
தன. தவிர, பிரதான சாலைகள் அனைத்தி லும் டீக்கடைகள் போலவும், ஒவ்வொரு தெரு
முனையிலும் ஆவின் பால் பூத் போலவும் சி.டி. கடைகள் சக்கைப் போடு
போட்டுக்கொண்டு இருந்தன. அதற்கு எதிரான நடவடிக்கையில் இறங்கினார் கமிஷனர்
கண்ணப்பன். புதுப் பட,ஆபாசப் பட சி.டி-க்களை அள்ளி வந்து அழித்த தோடு, அதனை
விற்பவர்கள் மீது கடுமை யான நடவடிக்கைகள் எடுத்தார். இப்போது பாண்டி
பஜார், மீனாட்சி பஜார் உட்பட மாநகரில் ஒரு இடத்தில்கூட சி.டி. கடைகள்
இல்லை. அத்தனையும் செல்போன் கடைகளாக மாறிவிட்டன. ஒரு காலத்தில்
தமிழகத்துக்கே திருட்டு சி.டி. சப்ளை செய்த வளமான நகரான மதுரை, இப்போது 10
வருடங்களுக்கு முன்பு வெளியான படங்களைக்கூட 60-க்கு வாங்க வேண்டிய துர்பாக்கிய நிலைக்குப் போய்விட்டது!
''சார், புதுப் படம், ஆபாசப் படம் விக்க மாட்டோம் சார். பிற மொழிப் படங்களை
மட்டுமாவது விற்க அனுமதி கொடுக்கக் கூடாதா?'' என்று கெஞ்சிய பாண்டி பஜார்
வியாபாரிகளிடம், ''முதல்ல, உங்களுக்கு டி.வி.டி. போட்டுக் கொடுக்
கிறவங்களோட பட்டியலைக் கொடுங்க. அப்புறமா அனுமதி கொடுக்கிறதைப் பத்தி
யோசிப்போம்!'' என்று விரட்டி அடித்து விட்டார் கமிஷனர். தமிழகத்திலேயே
திருட்டு சி.டி. ஒழிக்கப்பட்ட மாநகரம் மதுரைதான் என்று நெஞ்சை நிமிர்த்திச்
சொல்லலாம்!
25 கோடி நிலங்கள் மீட்பு!
நில அபகரிப்பு தொடர்பாக மாவட்டக் குற்றப் பிரிவுக்குக் கடந்த செப்டம்பர்
மாதம் வரையில் வந்த மொத்தப் புகார்களின் எண்ணிக்கை 221. எடுத்ததும்
எஃப்.ஐ.ஆர். போடாமல், உண்மையான புகார்தானா என்று விசாரித்து, 111 மனுக் களை
நிராகரித்த எஸ்.பி., எஞ்சிய 110 புகார்கள் மீது மட்டும் எஃப்.ஐ.ஆர். பதிவு
செய்யவைத்தார். விசாரணையின்போதே, 'எதற்கு வம்பு?’ என்று சமாதானமாகப்
போய்விட்டவர்களின் எண்ணிக்கை 28. இதேபோல, 'செஞ்சது தப்புதான்’ என்று ஒப்புக்கொண்டு, பலர் அந்த சொத்துக்களை
உரியவரிடமே வழங்கிவிட்டார்கள். இப்படி மீட்கப்பட்ட சொத்தின் மதிப்பு
மட்டும் 25 கோடி. இடத்தைத் தர மறுத்து வீம்பு செய்த 50 பேர், இப்போது
கம்பிக்குள். எஸ்.பி. ஆஸ்ரா கர்க்கின் இந்த அதிரடியால், புறநகர்ப்
பகுதியில் போலி பட்டா போட்டு நிலம் விற்பவர்கள் பயத்தில் இருக்கிறார்கள்.
அதே நேரத்தில், புதிதாக நிலம் வாங்குபவர் கள், ஏற்கெனவே வாங்கிப்போட்டவர்
களும் பயம் இல்லாமல் இருக்கிறார்கள்!
மாறிய கரை வேட்டிகள்!
கலெக்டர் அலுவலகமும், காவல் நிலை யங்களும் முன்பு ஆளும் கட்சியினரின்
சொர்க்கபுரியாக இருந்தன. டூ வீலர் திருடர்களை மீட்கக்கூட கரை வேட்டிகள்
வந்தன. இப்போது, அந்த நிலை இல்லை. எவ்வளவு பெரிய விஷயமாக இருந்தாலும்
போலீஸ் ஸ்டேஷனுக்கோ, எஸ்.பி., கமிஷனர் ஆபீஸுக்கோ போவதற்குப் பதறுகிறார்கள்
அ.தி.மு.க-வினர்.ஆனால், கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள கனிம வளத் துறை அலுவலகத் துக்கு இப்போதும் கரை வேட்டிகள் படைஎடுக்கின்றனமுன்பு சென்ட்ரல் மார்க்கெட் முழுவதையும் தி.மு.க. புள்ளிகள்,
கவுன்சிலர்களின் பினாமிகள் மொத்தமாக ஆக்கிரமித்து இருந்தார்கள். கடையை
உள்வாடகைக்குவிட்டு ராஜபோகமாக வாழ்ந்தவர்களை அங்கிருந்து விரட்டிவிட்டு,
இப்போது அதே வேலையை அ.தி.மு.க-வினர் செய்கிறார்கள். கிராமத்துப்
பெரியவர்களுக்கு ஓ.ஏ.பி. வாங்கிக்கொடுப்பது போன்ற வேலைகளுக்குக்கூட
தி.மு.க. கரை வேட்டிகள் சிபாரிசுக்காக கலெக்டர் ஆபீஸ் பக்கம் வர,
அ.தி.மு.க. கரை வேட்டிகள் கமிஷன் பெரிய தொகை என்றால் மட்டுமே ஆஜர்
கொடுக்கிறார்கள்!
நடுரோட்டில் கொலைகள்!
ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு மதுரையில் கொலைகளின் எண்ணிக்கை அதிகரித்து
இருப்பது கசப்பான உண்மை. 'தா.கிருட்டிணன் கொலை, தினகரன் அலுவலகம் எரிப்பு
போன்றவை மதுரையில் சட்டம் - ஒழுங்கு கெட்டுவிட்டதாக வெளியுலகத் துக்குக்
காட்டியது. ஆறடி உயர காம்பவுண்ட் சுவர், உள்ளே அல்சேஷன் நாய், அதற்குள்
கேட் போட்ட வீடு என்று கருவறைக்குள் இருக்கும் கடவுள் போல வாழும் மேல்தட்டு
மக்கள் டி.வி. சேனலைப் பார்த்துவிட்டு அடித்த 'கமென்ட்’தான் அது. ஆனால்,
அன்றைய தினம் மதுரை வீதிகளில் எந்தப் பதற்றமும் இல்லை. தினகரன் அலுவலகம்
எரிக்கப்பட்டபோது, அது கருணாநிதியின் குடும்பச் சண்டை என்றும்,
தா.கிருட்டிணன் கொல்லப்பட்ட போது, அது தி.மு.க-வின் உட்கட்சிப் பிரச்னை
என்றும் பேசிக்கொண்டார்களே ஒழியே, மதுரையில் யாரும் பதற்றப்படவில்லை.ஆனால், இந்த ஆட்சியில் 6 மாதங்களுக்குள் 15-க்கும் அதிகமானோர்
பட்டப்பகலில், நடுரோட்டில் ஓட ஓட விரட்டிக் கொலை செய்யப்பட்டு
இருக்கிறார்கள். போக்குவரத்துப் பாதிப்பு, பதறி ஓடும் பெண்கள், கடை
அடைப்பு, ஒரு வாரத்துக்கு அந்த வழியாகப் பள்ளி செல்லத் தயங்கும் குழந்தைகள்
என்று சட்டம் - ஒழுங்கு சந்தி சிரிப் பது இந்த ஆட்சியில்தான்!'' என்கிறார்
ஒரு பொது நல ஆர்வலர். மதுரையின் டிராஃபிக் பிரச்னை மாற்றம் இன்றித் தொடர்கிறது. இங்கே பல
விபத்துக்களை ஏற்படுத்தி வரும் ஷேர் ஆட்டோக்களை ஒழிக்க போலீஸ் தயங்குகிறது.
''தி.மு.க. ஆட்சியில் குற்றங்களில் ஈடுபட்டுக்கொண்டு இருந்தவர்களுக்கு
எல்லாம், ஆட்டோ பெர்மிட் கொடுத்துவிட்டார் கள். இப்போது, தவறு செய்யும்
ஆட்டோக்களைப் பறிமுதல் செய்தால், அவர்கள் பழையபடி தொழிலுக்குத்
திரும்பிவிடுவார்கள். ஏற்கெனவே குற்றம் அதிகம் நடக்கிறது. இவர்கள் வந்தால்
நிலைமை இன்னும் மோசமாகிவிடும்'' என்கிறார் ஓர் உயர் அதிகாரி.
மற்றபடி, மதுரை சில விஷயங்களில் மாறி இருக்கிறது... பல விஷயங்களில் 'அ’னா
லேபிள் இல்லாமல் காரியங்கள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன என்றுதான்
சொல்ல வேண்டும்!
விகடன்
அருமையான பதிவு.
ReplyDeleteஇது இன்று ஆனந்த விகடனில் வந்த கட்டுரையாச்சே, யார் ஒரிஜினலாக எழுதியது?
ReplyDeleteவிகடன் நியூஸ் என்று குறிப்பிட்டு உள்ளேன்
ReplyDelete