ஆதி காலத்தில் இருந்து மனிதன் பயன்படுத்தி வருகிற ஒரு சில பொருள்களை நாம்
இன்றும் பயன்படுத்துகிறோம். அதில் ஒன்று குடை. இன்று மழைக்காகப் பெரிதும்
பயன்படுத்துகிற குடையை ஆரம்பக் காலத்தில் வெயிலின் உக்கிரத்திலிருந்து
தப்பிப்பதற்கே மக்கள் பயன்படுத்தினார்கள். முதன்முதலில் வெயிலில் இருந்து
எப்படிப் பாதுகாத்துக்
கொள்வது என்ற சிந்தனை தோன்றியது மரங்களைப் பார்த்துதான். கிளைப் பரப்பி
நிற்கும் மரங்களுக்கு அடியில் நிழல் குளு குளுவென்றிருந்தது. மரத்தைப்
போன்ற ஒரு
பொருளை வெயிலுக்காகப் பிடிக்கலாம் என்று யோசனை வந்தது. அதன் பிறகு வாழை,
பனை போன்ற மரங்களின் இலைகளைக் குடையாகப் பிடிக்க ஆரம்பித்தனர். இந்த
இலைகள் பார்ப்பதற்கும் பயன்படுத்துவதற்கும் வசதியாக இல்லை. பனை இலையின்
நடுவில் ஒரு குச்சியைச் செருகி, ஓலைகளை அளவாக வெட்டிப் பயன்படுத்தினார்கள்.
இதன்மூலம் வெயிலில் இருந்து ஓரளவு பாதுகாப்பு கிடைத்தது.
இலை குடைகள் விரைவில் கிழிந்து போக ஆரம்பித்தவுடன், கிழியாத பொருள்களைக்
கொண்டு குடை செய்ய பலரும் முயன்றனர். விலங்கின் தோல்கள், துணிகளை வைத்து,
திமிங்கலங்களின் எலும்புகளையும் மரக்குச்சிகளையும் இணைத்து குடைகள் செய்ய
ஆரம்பித்தனர். இந்தக் குடைகள் மிகவும் பெரியதாகவும் எடை மிகுந்ததாகவும்
இருந்தன.
பலரும் சின்னச் சின்ன முன்னேற்றங்களைக் கொண்டுவந்து, குடையை எளிதாகப்
பயன்படுத்தும் விதத்துக்குக் கொண்டுவந்தனர். செய்வது கடினமாக இருந்ததாலும் செலவு அதிகம் பிடித்ததாலும் குடைகளின்
மதிப்பு உயரத்தில் இருந்தது. அதனால் பணக்காரப் பெண்கள் மட்டுமே குடைகளைப்
பயன்படுத்தினார்கள். அதன் பிறகு மன்னர்கள், மத குருமார்கள், பணக்காரர்கள்
பயன்படுத்த ஆரம்பித்தனர். குடை என்பது செல்வாக்கின் அடையாளமாக மாறிப்
போனது.
விழாக்களின் போது போப்பாண்டவர் நடந்து வரும்போது குடை பிடிக்கப்பட்டது.
மன்னர்கள் ரதங்களில் பவனி வரும்போது ராட்சத குடைகள் பிடிக்கப்பட்டன.
இந்தியாவில்
கடவுள்களை வீதியில் மக்கள் தரிசனத்துக்காகக் கொண்டுவரும்போது குடைகள்
பிடிக்கப்பட்டன. இன்றும் பிள்ளையார் சதுர்த்தியன்று ஒவ்வொரு வீட்டிலும்
பிள்ளையாருக்கு குடை
வைக்கப்படுகிறது. கேரளாவில் திருச்சூர் மாவட்டத்தில் நடைபெறும்
திருவிழாக்களில் அலங்கரிக்கப்பட்ட யானைகள் மேல் கண்கவரும் குடைகள்
வைக்கப்படுகின்றன.
அதேபோல கிரேக்கத்தில் ஏதனா கடவுளுக்கும் பர்மாவில் வெள்ளை யானைக்கும்
குடைகள் பிடிக்கப்பட்டன. கி.மு. பதினோராம் நூற்றாண்டிலேயே சீனர்கள் குடைகளைப் பயன்படுத்த
ஆரம்பித்துவிட்டதாகச் சொல்கிறார்கள். அதே போல மிகப் பழங்காலத்திலேயே இன்றைய
இராக்கிலும்
எகிப்திலும் குடைகள் பயன்படுத்தப்பட்டிருப்பதை அவர்களின் சிற்பங்கள் மூலம்
அறிய முடிகிறது. குடைகள் இரண்டு விதங்களில் பயன்படுத்தப்பட்டன. ஒன்று
நிழலுக்காக,
இன்னொன்று மழைக்காக. இந்தியாவிலும் பழங்காலத்திலேயே குடைகள் பயன்பாட்டில்
இருந்தன.
சீனர்கள்தான் முதன்முதலில் தண்ணீர்ப் புகாத குடைகளைக் கண்டு பிடித்தனர்.
அதன் பிறகே மழையில் இருந்து காத்துக்கொள்ளவும் குடைகள் பயன்பட்டன.
குடைகளின்
பயன்பாடு அதிகரித்தது. 1830களில் பாரசீகப் பயணியும் எழுத்தாளருமான ஹான்ஸ்வே
லண்டனில் குடையுடன் எப்போதும் காணப்பட்டார். அதன் பிறகே ஆண்களும் குடையின்
மீது ஆர்வம் காட்டினர். 1852-ம் ஆண்டு சாமுவேல் ஃபாக்ஸ் இரும்புக்
கம்பிகளை வைத்து குடைகளை உருவாக்கினார். அடுத்து வந்த ஒரு நூற்றாண்டில்
குடை பலப் பரிணாமங்களைப்
பெற்றது.இன்று பலவித வண்ணங்களிலும் டிசைன்களிலும் குடைகள் கிடைக்கின்றன. இரண்டடி
நீளக் குடையிலிருந்து அரையடி குடை வரை கையடக்கமாக வந்துவிட்டன. அதன் பயன்பாடும் பல்வேறு விதங்களில் அதிகரித்துவிட்டன.பெரிய குடையின் கீழ் பொருள்களை வைத்து வியாபாரம் செய்யும் வழக்கம் இந்தியா
உள்ளிட்ட பல நாடுகளில் இன்றும் இருக்கிறது. கடற்கரைகளில் சன் பாத்
எடுப்பதற்கு குடைகள்
பயன் படுகின்றன. காக்டெயில் குளிர்பானங்களில் அலங்காரத்துக்காகச் சிறிய
காகிதக் குடைகள் வைக்கப்படுகின்றன. புகைப்படங்கள் எடுக்கும்போது
வெளிச்சத்தைச் சரி செய்ய குடைகள் பயன்படுகின்றன. சீனர்களும்
ஜப்பானியர்களும் பாரம்பரிய உடைகளை
அணியும்போது மிகவும் அழகான குடைகளைப் பயன்படுத்துகிறார்கள்.
இன்று குடை உற்பத்தியில் முதலிடம் வகிப்பது குடையைக் கண்டுபிடித்த சீனர்களே.
என்ன இன்னிக்கு எல்லா இடத்திலும் வரலாற்று பதிவுகளா இருக்கு.. குடை பற்றி புது தகவல்.. குடை குடை ன்னு குடஞ்சி எடுத்து இருக்கீங்க போல
ReplyDeleteநல்ல தகவல்
ReplyDelete