Search This Blog

Friday, January 20, 2012

அருள் மழை 10


காஞ்சிப்பெரியவரை தரிசிக்க மடத்திற்கு ஒரு  பக்தர் வந்திருந்தார். அவரது ஊரில் சிவன் கோயிலோ, பெருமாள் கோயிலோ கிடையாது. ஒரே ஒரு பிள்ளையார் கோயில் மட்டும் தான். வந்திருந்த பக்தர் தன்னுடைய ஊரைச் சொன்னதும், பெரியவர் அவரிடம், “”உங்கள் ஊர் பிள்ளையார் கோயிலை, ராமபிள்ளையார் கோயில் என்று தானே கூறுவார்கள்,” என்றார். அவரும்,””ஆமாம் சுவாமி!” என்று சொல்லி தலையசைத்தார்.
சிறிது நேர யோசனைக்குப் பின் பெரியவர் மீண்டும் பக்தரை அழைத்து, “”உங்க கிராமத்தில் அந்த காலத்தில் துக்கிரிப்பாட்டி என்றொருத்தி இருந்தாள் தெரியுமா?” என்று கேட்டார். பக்தரும் பயபக்தியுடன்,””நான் கேள்விபட்டிருக்கிறேன்!” என்றார்.
“”உங்கள் ஊர் துக்கிரிப்பாட்டி பற்றி நானே உனக்குச் சொல்கிறேன்” என்று தொடர்ந்தார்.

“”அந்த காலத்தில் உங்கள் ஊர் பிள்ளையார் கோயிலில் தான் ராமநாமஜெபம் நடக்கும். அதனால் அக்கோயிலுக்கு “”ராம பிள்ளையார் கோயில் ” என்ற பெயர் வந்தது” என்றார். பெரியவர் பேச்சை பக்தர் மெய்மறந்து கேட்கத் தொடங்கினார். பெரியவர், ””அதுசரி! ராமபிள்ளையார் இருக்கட்டும்.
துக்கிரிப்பாட்டி கதைக்கு வருகிறேன்!” என்று தொடர்ந்தார்.

“”துக்கிரிப்பாட்டியின் இளவயதிலேயே கணவர் இறந்து விட்டார். அதனால், அவளை உலகம் பழித்துப்பேசியது. அவளைக் கண்டால் ஆகாது என்று எண்ணி “”அடி! துக்கிரி! துக்கிரி!” என்று திட்டித்தீர்த்தது. விதியின் கொடுமையை எண்ணிய அவள் தன் மனநிம்மதிக்காக ராமநாமாவைச் சொல்லத் தொடங்கினாள். அதுவே ஜபவேள்வியானது. ஆண்டுகள் உருண்டோடின. அவளும் பாட்டியாகிவிட்டாள். ஒரு சந்தர்ப்பத்தில், ஊர் பிரமுகரின் பிள்ளைக்கு உடம்புக்கு முடியாமல் போனது. வயிற்றுவலியால் குழந்தை துடித்தது. வைத்தியம் செய்தும் குணம் கிடைக்கவில்லை. விஷயத்தை அறிந்த துக்கிரிப்பாட்டி தானாகவே பிரமுகரின் வீட்டுக்கு கிளம்பி வந்தாள். ராமநாமத்தை ஜெபித்து, குழந்தையின் நெற்றியில் விபூதியிட்டு, “”பூரண குணம் உண்டாகும்” என்று சொல்லிச் சென்றாள். என்ன ஆச்சர்யம்! அன்றைக்கே வயிற்றுவலி குறைந்து பிள்ளை எழுந்து நிற்கும் அளவு சக்தி பெற்றான். இதன் பிறகு, ராமநாமம் ஜெபிக்கும் அவளை “”துக்கிரிப்பாட்டி” என்று அழைத்தோமே என ஊர்மக்கள் வருந்தினர். “”ராமநாம பாட்டி” என்று பக்தியோடு அழைக்கத் தொடங்கினர். பாட்டியும் செல்வாக்கோடு வாழத் தொடங்கினாள். நீயும் அந்த பாட்டிபோல சதாசர்வ காலமும் ராமநாமத்தை ஜெபித்துவா. எல்லாம் நல்லவிதமாக நடந்தேறும்,” என்று ஆசியளித்து அனுப்பினார். பெரியவரின் பேச்சைக் கேட்ட அனைவரும் ராமநாமத்தின்   மகத்துவத்தை உணர்ந்தனர்.

No comments:

Post a Comment