Search This Blog

Sunday, January 01, 2012

முதலுதவி: தெருநாய் கடித்தால் என்ன செய்வது?


தெருநாய் கடித்தால், ‘ரேபீஸ்’ என்னும் ‘வெறிநோய்’ வரும் என்று பலருக்கும் தெரியும். இது உயிருக்கே உலை வைக்கும் ஆபத்து நிறைந்தது. உலகில் வெறிநாய்க்கடியால் இறப்பவர்களில் 80 சதவீதம் பேர் இந்தியர்கள் என்று கூறுகிறது உலக சுகாதார அமைப்பு. அதே நேரத்தில் நாம் சற்றுக் கவனமாக இருந்தால் இந்த நோயைத் தடுப்பதும் எளிது.

வெறிநோய் எப்படி வருகிறது?

‘ரேபீஸ்’ எனும் கொடிய வைரஸ் கிருமிகள் காரணமாக இந்த நோய் வருகிறது. இந்த வைரஸ்கள் தெருநாயின் உமிழ்நீரில் வசிக்கும். வெறிநோயுள்ள தெருநாய்கள் மனிதர்களைக் கடிக்கும்போது, கடிபட்ட நபருக்கு வெறிநோய் வந்துவிடும். 

அறிகுறிகள் என்ன?

இந்த நோயாளிகள் தண்ணீரைக் கண்டாலே பயந்து அலறுவார்கள். இதுதான் இந்த நோய்க்கு முக்கிய அறிகுறி. இவர்களுக்குத் தொண்டைச் சதைகள் சுருங்கிவிடுவதால் தண்ணீர் குடிக்கவோ, உணவு சாப்பிடவோ முடியாது. இன்னும் சொல்லப்போனால், இவர்கள் தண்ணீரைப் பார்த்தாலே தொண்டைச் சதைகள் இறுகி, சுவாசத்தை நிறுத்திவிடும். இதனால் உயிர் போவது போன்ற உணர்வு உண்டாகும். இதற்குப் பயந்துகொண்டு தண்ணீர் குடிக்க மாட்டார்கள். இதற்குத் ‘தண்ணீர் பயம்’ என்று பெயர். சுவாசிக்க சிரமப்படுவார்கள். வலிப்பு வரும். அதைத் தொடர்ந்து உயிருக்கு ஆபத்து வரும்.

என்ன செய்ய வேண்டும்?

நாய் கடித்தவுடன் கடிபட்ட இடத்தை உடனே சோப்பு நீரால் பலமுறை நன்கு கழுவ வேண்டும். 

வேகமாக விழுகிற குழாய்த் தண்ணீரில் காயத்தைக் கழுவுவது இன்னும் நல்லது.

காயம் ஆழமாக இருந்தால் காயத்தை நன்கு விலக்கிச் சுத்தப்படுத்த வேண்டும்.

காயத்தின் மீது டெட்டால் அல்லது ஸ்பிரிட் தடவ வேண்டும்.

தாமதிக்காமல் மருத்துவரிடம் சென்று, முறையான சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும். 

என்ன செய்யக்கூடாது?

காயத்துக்கு கட்டுப் போடக்கூடாது. சூரிய ஒளியில் இந்த வைரஸ் கிருமிகள் இறந்துவிடும் என்பதால் காயத்தை மூடாமல் வைத்திருப்பது நல்லது. திறந்த காயமென்றாலும், ஆழமான காயமென்றாலும் தையல் போட்டு மூடக்கூடாது.
நாய் கடித்த இடத்தில் சுண்ணாம்பு, சந்தனம், சாம்பல், பச்சிலைச்சாறு போன்றவற்றைத் தடவக் கூடாது. அப்படித் தடவினால் கிருமிகள் உடலை விட்டு வெளியேறுவது தடைபடும்.

தடுப்பூசி முக்கியம்!

நாய் கடித்துவிட்டால் உடனே தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். சாதாரண நாய் கடித்தால் ஒரு டெட்டனஸ் தடுப்பூசி போதும். கடித்தது வெறிநாயாக இருந்தால், ‘வீரோரோப்’ எனும் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள வேண்டும். கடித்த நாளில் முதல் ஊசியும், அதன் பிறகு 3, 7, 14, 28-ம் நாள்களில் என்று மொத்தம் 5 முறைத் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். திறந்த காயமென்றால் காயத்தைச் சுற்றிலும் நாய் கடித்த இடத்தைச் சுற்றிலும் ‘இமுனோகுளாபுலின்’ தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள வேண்டும். அப்போதுதான் நாய் கடித்த நபருக்கு வெறிநோயிலிருந்து முழுவதுமாக விடுதலை கிடைக்கும். இந்தத் தடுப்பூசி இலவசமாக அரசு மருத்துவமனைகளில் கிடைக்கிறது. 

நாய்க்குத் தடுப்பூசி:

வீட்டில் நாய் வளர்ப்போர் நாய்க்குட்டிக்கு இரண்டு மாதம் முடிந்ததும் ஒரு தடுப்பூசி, மூன்று மாதம் முடிந்ததும் ஒரு தடுப்பூசி போட்டுவிட வேண்டும். அதன்பிறகு ஆண்டுக்கு ஒருமுறை இதே தடுப்பூசியைப் போட வேண்டும். முக்கியமாக, வீட்டுநாயைத் தெருநாயோடு பழகவிடக்கூடாது. அப்போதுதான் வீட்டு நாய்க்கு வெறிநோய் வராது. 


டாக்டர் கு.கணேசன்


  
    
 
   

No comments:

Post a Comment