Search This Blog

Sunday, January 29, 2012

ரஞ்சிப் போட்டியில் சாதிப்பவர்களுக்குத்தான் என்ன மரியாதை இருக்கிறது? ?


இப்போது தோற்றது போல, கடந்த பத்தாண்டுகளில் இரண்டுமுறை ரஞ்சிக் கோப்பை இறுதியாட்டத்தில் தோற்றுப் போயிருக்கிறது தமிழ்நாடு அணி (2003, 2004). இறுதிப் போட்டி வலுவற்ற ராஜஸ்தான் அணியுடன் என்பதால் அதிக நம்பிக்கையுடன் இருந்தார்கள் தமிழ் ரசிகர்கள். பத்ரி, முகுந்த், விஜய், கார்த்திக் என நான்கு தேசிய அளவிலான வீரர்கள் அணியில் பீம பலத்துடன் உள்ளதால், கட்டாயம் சென்னைதான் ஜெயிக்கும் என்று கணிக்கப்பட்டது. ஆனால், ஆட்டம் ஆரம்பித்த முதல் நாளிலேயே எல்லாக் கனவும் தவிடு பொடியானது. அரையிறுதியில் மும்பையைத் தோற்கடிக்கக் காரணமாக இருந்த பந்துவீச்சு, முக்கியமான கட்டத்தில் சொதப்பியதால் முதல் நாளிலேயே ஆட்டத்தின் போக்கு முடிவாகிவிட்டது. தொடர்ந்து இரண்டாவது முறையாகக் கோப்பையைத் தட்டிச் சென்றது ராஜஸ்தான். தமிழகம் கடைசியாக 1988ல் ரஞ்சி சாம்பியனானது. அதன்பிறகு, கடந்த 22 வருடங்களில் ஐந்துமுறை இறுதிப்போட்டிகளில் ஆடி எல்லாவற்றிலும் தோற்றுப்போயிருக்கிறது. இனியும் தமிழ் நாடு ரஞ்சிக் கோப்பையை வெல்லுமா? அடுத்தடுத்த வருடங்களில் மும்பை, ராஜஸ்தான், கர்நாடகம் போன்ற வலுவான அணிகளை எப்படி எதிர்கொள்ளப் போகிறது?இந்த ரஞ்சிக் கோப்பையில் பல நம்பிக்கை நட்சத்திரங்கள் தென்பட்டுள்ளன. முதல் நட்சத்திரம், வேகப்பந்து வீச்சாளர், 21 வயது ஹர்ஷா படேல். இந்திய பிட்சுகள் என்பது வேகப்பந்து வீச்சாளருக்குத் தண்டனை போல. ஆனால், இப்படிப் பட்ட பிட்சுகளில்தான் இரண்டுமுறை 8 விக்கெட்டுகளை எடுத்து சாதித் திருக்கிறார் ஹர்ஷா படேல். அந்தச் சாதனைகளையும் காலிறுதி, அரையிறுதிகளில் நிகழ்த்தியிருக்கிறார். ஆனால், இவரை உடனடியாக ஆஸ்திரேலிய ஒரு நாள் போட்டிக்கு அனுப்பாமல் காத்திருப்போர் பட்டியலில் வைத்து அழகு பார்க்கிறது பி.சி.சி.ஐ. உண்மையில், ரஞ்சிப் போட்டியில் சாதிப்பவர்களுக்குத்தான் என்ன மரியாதை இருக்கிறது? 


ராஜஸ்தான், இரண்டு முறை ரஞ்சிக் கோப்பையை வென்றிருக்கிறது. என்ன பிரயோஜனம்? இந்த அணியிலிருந்து ஒருவர்கூட இந்திய அணியில் இல்லை. வருடா வருடம் தமிழகத்தைச் சேர்ந்த அபினவ் முகுந்த், ரஞ்சியில் மாங்குமாங்கென்று ரன்களைக் குவித்துக் கொண்டிருக்கிறார். ஆனால், இவரை ஆஸ்திரேலியாவுக்கு அனுப்பாத விந்தையை என்னவென்று நொந்துகொள்ள முடியும்? மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான ரெஹனா மாற்றுத் தொடக்க ஆட்டக்காரராக ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடருக்குத் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்!இந்த ரஞ்சியில் பிஸ்ட், சக்சேனா என்கிற இரு ராஜஸ்தான் வீரர்களும் கிட்டத் தட்ட 900 ரன்கள் எடுத்து அதிக ரன்கள் எடுத்த முதலிரண்டு வீரர்கள் பட்டியலில் இருக்கிறார்கள். இவர்கள் சாதனைக்குத்தான் என்ன பலன் கிடைக்கப் போகிறது? இவர்களுக்கும் முகுந்த்துக்கு நேர்ந்த கதிதானா? படே லுக்கு நிகராக ராஜஸ்தானின் ஆர்.ஆர். சிங்கும் பிரமாதமாகப் பந்து வீசியிருக்கிறார். இவருக்கும் 21வயதுதான். ஸ்ரீகாந்த் அண்ட் கோ இந்த இளைஞர்களை எப்படிப் பாதுகாக்கப்போகிறார்கள்? சென்ற வருட ரஞ்சிக் கோப்பையில் (2010- 11) அதிக விக்கெட்டுகள் எடுத்த சகார், பங்கஜ் சிங் (ராஜஸ்தான்) என்ன ஆனார்கள்? சென்ற ரஞ்சியில் அதிக ரன்கள் குவித்த பத்ரிநாத்தைக் கிஞ்சித்தும் கண்டு கொள்ளவில்லையே! ஆனால், ரஞ்சியில் சிறு துரும்பைக்கூடக் கிள்ளிப்போடாத ராகுல் சர்மா, ஐ.பி.எல்.லில் சிறப்பாகப் பந்து வீசியவுடன் உடனடியாக இந்திய அணிக்குத் தேர்வாகி, பஞ்சு மெத்தையில் அமர வைக்கப்படுகிறார் எனில், யாருக்காக, எதற்காக ரஞ்சிப் போட்டிகளில் சாதிக்க வேண்டும்? ஐ.பி.எல். தேர்வுக்கான சல்லடையா ரஞ்சிப் போட்டிகள்?


No comments:

Post a Comment