Search This Blog

Tuesday, January 31, 2012

அருள் மழை - 22 & 23

மெட்ராஸ் ராணிப்பேட்டையை சேர்ந்த பக்தர்களிடம், காமாக்ஷிக்கு பாச, அங்குசம் பண்ணித் தரும்படி பெரியவா சொன்னார். எத்தனை நல்ல தெய்வீக பணியானாலும், "நிதி" என்று வரும்போதுதான் அதை திரட்டும் கஷ்டம் தெரியும்!

"காஞ்சிபுரம் காமாக்ஷிக்கு..ன்னா அந்த ஊர்லேயே வசூல் பண்ணிக்கலாமே! இங்க வந்து யாசகம் கேக்கணுமா என்ன?"

"அவனவன் சோத்துக்கு வழி இல்லாம திண்டாடிண்டு இருக்கான்.......அம்பாளுக்கு பாசமாம், அங்குசமாம்"

மக்கள் சேவையே மகேசன் சேவை...ஆஸ்பத்திரி, பள்ளிக் கூடம், அனாதை ஆஸ்ரமம், முதியோர் இல்லம்...ன்னு செலவுக்கு குடுத்தா, மக்களுக்கு அது பிரயோஜனப்படும். அதை விட்டுட்டு, அம்பாளுக்கு பாசம், அங்குசம் இல்லேன்னா ஏதும் நஷ்டமா என்ன?"

இன்னும் இதைவிட மஹா மோசமான வார்த்தைகளை கேட்க வேண்டியிருந்தது. ஆனாலும், ஒன்றே ஒன்றுதான் மஹா பலத்தையும் குடுத்துக் கொண்டிருந்தது...........அது," பெரியவாளுக்காக பண்ணுகிறோம்" என்ற சந்தோஷம்! பெரியவாளுடைய சங்கல்பம் நடக்காமல் போகுமா? பாசாங்குச கைங்கர்யம் நினைத்ததை விட மிகச் சிறப்பாக நடந்தது. அதை முக்கியமாக முன்னின்று நடத்திய ஒரு பக்தரிடம் பெரியவா சொன்னார்......"பண வசூலுக்காக ரொம்ப பேர்கிட்ட போயிருப்பே....எல்லாரும் மனசார குடுத்திருப்பா...ன்னு சொல்ல முடியாது. சில பேர் ரொம்ப தாறுமாறாக் கூட பேசி ஒங்க மனஸை ரொம்ப புண்படுத்தியிருப்பா......"ஏண்டாப்பா இந்த வேலைய ஏத்துண்டோம்? பேசாம ஆயிரமோ, ரெண்டாயிரமோ யதா சக்தி குடுத்துட்டு ஒதுங்கிண்டிருக்கலாமோ?...ன்னு கூட தோணியிருக்கும்......

ஆனா, இந்த மாதிரியான பொதுக் கார்யங்கள்ள ஈடுபடரப்போ, நாலு பேர் நாலு விதமா சொல்லத்தான் சொல்லுவா. அதையெல்லாம் லக்ஷியமே பண்ணப்டாது. அம்பாளுக்கு பண்ற கைங்கர்யம்..ன்னு மனஸ்ல உறுதி இருக்கணும். இந்த எண்ணம் வந்துடுத்துன்னா....மனஸ் சமாதானம் ஆய்டும்"

எத்தனை சத்யமான உபதேசம்!


தஞ்சாவூர் அருகிலுள்ள நல்லிச்சேரி கிராமத்தில், வேதபண்டிதர் சாம்பசிவ ஸ்ரௌதிகள் என்பவர் வசித்தார். அவர் சந்நியாசம் வாங்கிக் கொண்டு கிளம்பி விட்டார். அவருக்கு ஒரே ஒரு ஆண்பிள்ளை மட்டும் தான். அவரும் வேதபண்டிதர். ஆனால், அவருக்கு இருதய நோய் என்பதால், வேதபாராயணத்தை தொடர்ந்து செய்ய முடியாமல் போனது. வருமானம் இல்லாமல் குடும்பம் மிகவும் சிரமப்பட்டது. அம்மாவும், பிள்ளையும் அன்றாடத் தேவைக்கே அல்லல்பட்டனர்.


தஞ்சாவூரில் இருந்த சந்தானராமன் என்பவர், காஞ்சிப்பெரியவரின் பக்தராக இருந்தார். அவரிடம் சாம்பசிவ ஸ்ரௌதிகளின் மனைவியும், பிள்ளையும் சென்றனர். காஞ்சிமடத்திற்குச் செல்வதற்கு பணம் வாங்கிக்கொண்டு பெரியவரைத் தரிசிக்க கிளம்பினார்கள். தங்கள் நிலைமையை எடுத்துச் சொல்லி எப்படியும் உதவி பெறவேண்டும் என்பது அவர்களின் நோக்கம். சந்தானராமனும் அவர்களது பயணச் செலவிற்கு பணம் கொடுத்து வழியனுப்பி வைத்தார். பெரியவருக்கு ஏற்கனவே சாம்பசிவ ஸ்ரௌதிகளின் மனைவியையும், பிள்ளையையும் நன்றாகத் தெரியும். அவர்களிடம் நலம் விசாரித்த பெரியவர் மடத்திலேயே சிலநாட்கள் தங்கும்படி அவர்களுக்கு உத்தரவிட்டார்.


 ஏதாவது உதவி செய்யத்தான், பெரியவர் இங்கு தங்கும்படி சொல்கிறார் என்று எண்ணி நம்பிக்கையோடு அவர்கள் இருந்தனர். சிலநாட்கள் கழித்து சிரௌதிகளின் பிள்ளையிடம்,”"நீயும் உன் தாயாரும் நல்லிச்சேரிக்கு கிளம்புங்கள். உங்கள் தேவைகளை மடம் கவனித்துக் கொள்ளும்,” என்று கூறி வழிச்செலவுக்கு பணம் கொடுத்து அனுப்பி வைத்தார். சிரௌதிகளின் பிள்ளைக்கு அவநம்பிக்கை உண்டானது. தஞ்சாவூர் சந்தானராமனைச் சந்தித்து, “”மகாசுவாமிகள் என் நிலையை நன்குதெரிஞ்சும் “கைவிரிச்சுட்டா! என்னையும் என் தாயாரையும் நல்லிச்சேரிக்கு திரும்பிச் செல்லும்படி அனுப்பிச் சுட்டா! இனிமேல் நான் என்ன செய்வேன். நானும் அம்மாவும் இரண்டுநாட்கள் தஞ்சாவூரில் தங்கிவிட்டு நல்லிச்சேரிக்கு கிளம்புறோம்,” என்று சொல்லி வேதனைப்பட்டார். 


இந்த சந்தர்ப்பத்தில் தஞ்சாவூர் மிராசுதார் ஒருவர் காஞ்சிபுரம் மடத்திற்கு வந்திருந்தார். அவருக்கு ஆசியளித்து பரிபூரண அனுகிரகம் செய்தார் பெரியவர். அவரிடம் காஞ்சிப்பெரியவர், “”எனக்கு ஒரு உதவி செய்வியா?” என்று கேட்டார். “”சாமி! உங்க உத்தரவுப்படியே நடக்கிறேன். என்னவென்று சொல்லுங்கள்,” என்றார்.


“”நல்லிச்சேரி கிராமத்தில் சாம்பசிவ ஸ்ரௌதிகள் குடும்பம் உள்ளது. அவ்வீட்டில் அவரது பிள்ளையும், மனைவியும் வறுமையில் மிகவும் சிரமப்படுகிறார்கள். ஒரு வருஷத்திற்கு தேவையான அரிசி,பருப்பு, பலசரக்குகளை ஒரு வண்டியில் அனுப்பிவை. இதை உடனே செய்தால் எனக்கு சந்தோஷம்” என்று மிராசுதாரிடம் கேட்டுக்கொண்டார். மிராசுதாரும் பெரியவர் விருப்பத்தை உடனே நிறைவேற்றும் வகையில் ஒரு வண்டிநிறைய அரிசி, பருப்பு, உப்பு,புளி, மிளகாய் என்று அத்தனையும் வந்து சிரௌதிகளின் வீட்டிற்கு அனுப்பி வைத்தார். ஆனால், சிரௌதிகளின் வீடோ பூட்டியிருந்தது. வீட்டின் முன்னர் பொருட்களை குவித்துவிட்டு வேதபண்டிதரின் மனைவிக்கு தகவல் தந்தனர்.


 அம்மாவும், பிள்ளையுமாக சந்தானராமன் வீட்டில் இருந்து நல்லிச்சேரிக்கு கிளம்பி வந்தனர். அப்போது சந்தானராமனிடம், “”பெரியவாளின் நல்ல மனசை புரிஞ்சுக்காமல் இப்படித் தவறா நினைத்துவிட்டேனே!” என்று மிகவும் வருந்தினர். பெரியவரின் பக்தரான சந்தானராமனும் விபரத்தை அறிந்து கண்ணீர் வடித்தார்.

1 comment: