Search This Blog

Wednesday, January 11, 2012

தண்ணீரில் மூழ்கியவருக்கு முதலுதவி

தண்ணீரில் மூழ்கியவருக்கு முதலுதவி:


நீச்சல் தெரியாமல் தண்ணீரில் இறங்குவதால் இந்த ஆபத்து நிகழ்கிறது. தண்ணீரில் மூழ்கும்போது மூச்சுக்குழாய்க்குள் தண்ணீர் நுழைந்து விடுவதால், காற்று இருக்க வேண்டிய இடத்தில் தண்ணீர் புகுந்து கொள்கிறது. இதனால் மூளைக்கும் இதயத்துக்கும் பிராண வாயு கிடைக்காமல் இறப்பு நிகழ்கிறது.

என்ன செய்ய வேண்டும்?

உங்கள் கண்ணெதிரில் ஒருவர் தண்ணீரில் மூழ்குகிறார் என்றால் உடனே அவரைக் காப்பாற்ற என்ன செய்ய வேண்டும் என்பதைப் பார்ப்போம்:

தண்ணீரில் மிதக்கக்கூடிய பொருள்களான மரக்கட்டை, ரப்பர் டியூப், பெரிய பலூன், கால்பந்து, போன்றவற்றை அவருக்குப் பக்கத்தில் எறிய வேண்டும். இவற்றைப் பற்றிக் கொண்டு அவர் தண்ணீரிலிருந்து வெளியேறிவிடலாம். 

நீளமான கயிற்றின் ஒரு முனையை நீங்கள் பிடித்துக் கொண்டு, மறுமுனையை தண்ணீரில் மிதக்கும் நபருக்கு எறிந்து அதைப் பிடித்துக் கொள்ளச் செய்து, நீங்கள் கயிற்றை இழுத்து, அவரைக் காப்பாற்றலாம்.

தண்ணீரில் மூழ்குபவர் உங்களுக்கு மிக அருகில் இருப்பாரானால், உங்கள் சட்டையின் ஒரு முனையை அவரிடம் கொடுத்து மறுமுனையை நீங்கள் இழுத்து அவரைக் காப்பாற்றலாம்.

இது மிக முக்கியம்!

தண்ணீரில் மூழ்குபவரைக் காப்பாற்றும்போது, காப்பாற்றுபவர் அவருக்கு மிக அருகில் செல்லக்கூடாது. ஏனென்றால், மூழ்குபவர் பயத்தாலும், எதையாவது பற்றிக்கொண்டு வெளியே வந்துவிடவேண்டும் என்ற துடிப்பாலும், காப்பற்றும் நபரையே தண்ணீருக்குள் இழுத்துவிட்டுவிடுவார். இதன் விளைவாக, காப்பாற்றச் செல்லும் நபரும் தண்ணீரில் மூழ்கி விட வாய்ப்புண்டு. ஆகவே, தண்ணீரில் மூழ்குபவரைக் காப்பாற்ற நீச்சலும் தெரிந்திருக்க வேண்டும். நல்ல தேர்ச்சியும் வேண்டும்.

என்ன முதலுதவி செய்வது?

தண்ணீரில் மூழ்கியவர்கள் அதிகமாகத் தண்ணீரைக் குடித்து விடுவார்கள். எனவே இந்தத் தண்ணீரை வெளியேற்றுவதற்கு வேகமாகவும் விவேகத்துடனும் செயல்பட வேண்டும்.

தண்ணீரில் மூழ்கியவரைக் குப்புறப்படுக்க வைத்து, தலையைப் பக்கவாட்டில் திருப்பி வைத்துக் கொண்டு, முதுகையும் வயிற்றையும் அமுக்க வேண்டும். இவ்வாறு பத்து நிமிடங்களுக்குத் தொடர்ந்து செய்ய வேண்டும். 

தண்ணீரில் மூழ்கியவருக்கு சுவாசம் நின்றிருந்தால், செயற்கை சுவாசம் ஊட்ட வேண்டும்.

மூழ்கியவரை மல்லாக்கப் படுக்க வைக்க வேண்டும்.

பற்களுக்கிடையே மரக்கட்டை அல்லது துணியை மடித்து வைத்து, வாயைத் திறந்தபடி வைத்துக்கொள்ள வேண்டும்.

பாதிக்கப்பட்டவரின் வாயில் முதலுதவி செய்பவரின் வாயை வைத்து பலமாக ஊத வேண்டும். இதனால் அவருடைய மார்பு உயரும். அப்போது முதலுதவி செய்பவர் வாயை எடுத்துவிட வேண்டும். மீண்டும் ஊத வேண்டும். இவ்வாறு நிமிடத்துக்கு 12 முறை ஊத வேண்டும். 

குழந்தையாக இருந்தால் நிமிடத்துக்கு 30 முறை ஊத வேண்டும்.

சுவாசத்துக்கு வழி செய்யும் அதேநேரத்தில் இதயத்துடிப்புக்கும் வழி செய்ய வேண்டும். நாடித் துடிப்பு குறைந்திருந்தால் அல்லது இல்லாமல் இருந்தால், நடுநெஞ்சில் உங்கள் உள்ளங்கைகளை ஒன்றன் மேல் ஒன்றாக வைத்து பலமாக அழுத்த வேண்டும். நிமிடத்துக்கு 80 அழுத்தம் என்று மொத்தம் 12 முறை தொடர்ந்து செய்ய வேண்டும். இதனால் இதயம் துடிக்க ஆரம்பிக்கும்.

காலதாமதம் ஏற்படாமல் உடனடியாக மருத்துவச் சிகிச்சைக்கும் ஏற்பாடு செய்ய வேண்டும். அப்போதுதான் தண்ணீரில் மூழ்கியவரை முழுமையாகக் காப்பாற்ற முடியும். இதற்கு 108 ஆம்புலன்ஸ் உதவும். 


No comments:

Post a Comment