Search This Blog

Saturday, January 14, 2012

தமிழ்ப் புத்தாண்டுத் துவக்கம் “தை”யா – “சித்திரை”யா

கண்ணைத் திறப்பாரா கருணாநிதி? 

சாமி. தியாகராஜன்

தமிழ்ப் புத்தாண்டு தை மாதத்தில் தொடங்குகிறது என்று முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி ஒரு சட்டம் கொண்டு வந்து நிறைவேற்றினார்.
இந்நாள் முதலமைச்சர் ஜெயலலிதா, தமிழ்ப் புத்தாண்டு சித்திரையில்தான் தொடங்குகிறது என்று ஒரு சட்டம் கொண்டு வந்து நிறைவேற்றி,கருணாநிதியின் சட்டத்தை நீக்கிவிட்டார்.

சட்டத்தின் வழி வரக்கூடியதா தமிழ்ப் புத்தாண்டுத் தொடக்கம். அதற்கென ஒரு வழி இருக்க வேண்டுமே என்ற கவலையில் அது பற்றி அறியத் தக்கவர்களை நாடி, அது தொடர்பாகச் சென்னையில் ஓர் ஆய்வரங்கம் நடத்துவது என்ற முடிவிற்கு வந்தது கும்பகோணம் மூவர் முதலிகள் முற்றம்.
தமிழ்ப் புத்தாண்டு சித்திரையில் தொடங்குகிறதா? அல்லது தையில் தொடங்குகிறதா?  என்பது பற்றித் தங்கள் ஆய்வுக் கருத்தை எங்களுக்கு 2011 நவம்பர் 20௦ ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டுகிறேன் என்று செப்டம்பர் 2011இல் மூ.மு.முற்றத் தலைவர் ந.பன்னீர் செல்வம் பலருக்கு வேண்டுதல் கடிதங்கள் அனுப்பினார்.

கருணாநிதி தொடங்கித் தமிழ்க் குடிதாங்கி, தமிழ்த் தலைவர், தமிழினத் தலைவர் என்னும் பல பட்டங்களைச் சுமந்து திரிபவர்களுக்கும் குறிப்பாகக் கருணாநிதியின் கருத்துக்கு ஆதரவாக நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தந்தவர்களுக்கும் இந்த இந்த அறிஞர்களை இதுபற்றிக் கேட்டேன் என்று கருணாநிதி சொல்லியவர்களுக்கும் வேண்டுதல் கடிதங்கள் அனுப்பப்பட்டன.
சமயத் தலைவர்கள், நாத்திகர்கள் எனச் சொல்லிக் கொள்வோர், தமிழ்ப் பேராசிரியர்கள், தொல்லியல்துறை வல்லுனர்கள், வானவியல் நிபுணர்கள், வரலாற்று வல்லுனர்கள் என்று முற்றம் அறிந்த வரையில் கடிதங்கள் அனுப்பப் பட்டன.

பல்வேறு பணிகளிலும், கவலைகளிலும் ஆழ்ந்து கிடக்கும் கருணாநிதி மூ.மு.முற்றத்தின் கடிதத்தை ஒதுக்கி விட்டார். அவர் பக்கத்தில் நின்று ஆட்சி அதிகார சுகத்தை அனுபவித்த தமிழ் அறிஞர்களும் பிரமாணப் பத்திரம் தந்தவர்களும் கூட ஒதுங்கி விட்டார்கள். அவர்களுள் ஒருவர் கூடத் தை மாதம் தான் வருடம் பிறக்கிறது என்று கட்டுரைகள் எழுதவில்லை.

இவர்கள் இப்படி ஒதுங்க சித்திரை மாதம்தான் தமிழ் வருடம் பிறக்கிறது எனப் பலர், பல காரணங்களுடன் கட்டுரை அனுப்பியுள்ளனர். அவற்றுள் சிலவற்றைப் பார்ப்போம்.


1) இலக்கியச் சான்று
கருணாநிதி பிறந்து வளர்ந்த திருவாரூரில் அவரது முன்னோராக சுமார் 500௦௦ ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியவர் கமலை ஞானப்பிரகாசர் என்னும் தவசீலர். அவர் இயற்றிய நூல்களில் ஒன்று புட்பவிதி. சிவபெருமானுக்கு எந்தெந்த மாதங்களில் எந்தெந்த மலரைச் சிறப்பாகக் கொண்டு வழிபாடு செய்ய வேண்டும் என்பதைக் கூறம் நூல் புட்பவிதி . இந்த நூலில் எந்த எந்த மாதங்கள் எனப் பட்டியலிடும் கமலை ஞானப்பிரகாசர் சித்திரையைத்தான் முதல் மாதமாகக் கொள்கின்றார். சித்திரை முதலாக் கொள்க சிறந்திடு மாத புட்பம் என்பது அவரது வாக்கு. (பாடல் 20-04).
கமலை ஞானப்பிரகாசர் வாக்கிலிருந்து 500௦௦ ஆண்டுகளுக்கு முன்னரே ஆண்டின் தொடக்கமாகச் சித்திரையே இருந்தது என்பது தெரிகிறது.

அவர் காலத்துக்கு முன்பிருந்த வழக்கத்தைச் சொல்கிறார். 
தமது காலத்துக்கு முன்பிருந்த வழக்கத்தைத்தான் கமலை ஞானப்பிரகாசர் சொல்கிறார் என்பதற்கு என்ன ஆதாரம் என்றால், அதற்கான ஆதாரத்தைத் தருகிறார் தொல்லியல்துறை அறிஞர் சரித்திரச் செம்மல் ச. கிருஷ்ணமூர்த்தி.
2) கல்வெட்டுச் சான்று
சித்திரை விஷு மேஷ ராசியில் சூரியன் புகும் காலம் என்று ஒரு சாசனம் கூறுகிறது. காலம் கி.பி. 869(S.I.I. Vol.VII-525) சித்திரை விஷு என்ற சொற்றொடர் தமிழ் மரபிற்கேற்பச் சித்திரை விடு என்று ஒரு கல்வெட்டுக் குறிப்பிடுகின்றது. சித்திரை விடு தோறும் குடிநீர் சாத்தி என்பது கல்வெட்டு வாசகமாகும் (T.A.S. VIII P 43-45) காஞ்சி உலகளந்த பெருமாள் கோயிலில் உள்ள கல்வெட்டொன்று சித்திரை விஷுவை வெகு விமரிசையாகக் கொண்டாட சத்திரியர் தொடங்கி 96 ஜாதியினரும் ஒன்று கூடி முடிவெடுத்ததைச் சொல்கிறது.

கமலை ஞானப்பிரகாசர் காலம் மட்டும் அல்லாமல் அவர் காலத்துக்கு 500௦௦ ஆண்டுகளுக்கு முன்பு அதாவது இன்றைக்குச் சுமார் 1,000 ஆண்டுகளுக்கு முன்பே தமிழ்ப் புத்தாண்டு சித்திரையில்தான் தொடங்குகிறது என்பதைத் தெரிந்து கொள்கிறோம்.
3) வானியல் சான்று
ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட கல்வெட்டுக் காலத்தில் மட்டும்தான் சித்திரை வருடப் பிறப்பு மாதமாக இருந்ததா?  அல்லது அதற்கு முன்பே வழக்கத்தில் இருந்ததா என்னும் கேள்விக்கான பதிலையும் அது தொடர்பாக மேலும் சில செய்திகளையும் விண்வெளி விஞ்ஞானி நெல்லை சு.முத்து தருகிறார்.

திண்ணிலை மருப்பின் ஆடு தலையாக 
விண்ணூர்பு திரிதரும் வீங்கு செலல் மண்டிலத்து
முரண்மிகு சிறப்பின் செல்வனொடு நிலை இய
உ ரோகிணி நினைவினல் நோக்கி நெடிதுயிரா (நெடு நெல்வாடை 160-163).

திண்ணிய கொம்பு உடைய மேஷம் முதலான உடுக்கணங்களின்  ஊடாகச் சூரியன் இயங்கும் வான் மண்டலத்தில் (Zodiac)  சூரியனுக்கு முரணான சந்திரன் உ ரோகிணி (Aideberan) விண்மீன் அருகில் தோன்றுவது கண்டு காதலில் நெகிழ்கிறாள் என்னும் இந்த வரிகளில் சங்க காலத் தமிழர் சூரிய வீதியின் (Ecliptic Path) முதலாவதான ஆடு (Aries) உடுக்கணத்தையே  முன்னிறுத்துகின்றனர்.

இது பண்டைத் தமிழரின் புத்தாண்டுத் தொடக்கத்தைக் காட்டுகிறது என்று சொல்லும் விஞ்ஞானி முத்து, பண்டைக் காலத்தில் வசந்த சம நோக்கு நாள் விஷு ஆடு போன்ற வடிவம் கொண்ட மேஷ உடுக்கணத்தில் இருந்தது என்கிறார்.

மேலும் சூரியன் மேஷ உடுக்கணத்தில் இயங்கும் அந்த மாதத்தில் இரவு வானில் சந்திரம் முழு நிலவாகத் தோன்றும் கன்னி (Virgo) உடுக்கணத்தில் ஆல்பா வெர்ஜினிஸ் என்னும் விண்மீனே நாம் கூறும் சித்திரை. இதற்க்கு வானவியலில் ஸ்பைக்கா என்பது பெயர். அதுவே பண்டைய சித்திரை ஆண்டுத் தொடர்க்கம். அதுவே சித்திரை விஷு என மழங்கப்படுகிறது என்று சொல்லும் முத்து சங்கத் தமிழர்கள் சித்திரை மாதத்தை ஆண்டுத் தொடக்கமாகக் கொண்டு வாழ்ந்தனர் என்று முடிவு காண்கிறார்.

ஆக, கல்வெட்டில் காணப்படும் சித்திரை விஷுவும், சங்க இலக்கியத்தில் சொல்லப்படும் விஷுவும் ஒன்றே என்பதில் ஐயமில்லை.

இங்கே நாம் கொண்டிருக்கும் ஆய்வு சித்திரையா தையா என்பதுதான். பண்டைத் தமிழர் இடைக்காலத் தமிழர் தற்காலத் தமிழர் என அனைவரும் ஏற்பது சித்திரையே.
4) பஞ்சாங்கச் சான்று.
மறைமலை அடிகளின் நண்பர் அறிஞர் இ.மு.சுப்ரமணிய பிள்ளை ‘செந்தமிழ்ச் செல்வி’ சிலம்பு 06-பரல்-12 இல் எழுதியுள்ள செய்தியைத் திருபனந்தாள் காசித் திருமடத்துத் தலைவர் தாம் அனுப்பியுள்ள கட்டுரையில் எடுத்துக் காட்டியுள்ளார்.

சூரியன் மேஷ ராசியில் புகும்போது பூமி அதற்கு நேர் ஏழாவது வீடாகிய துலாத்தில் இருக்கும்.அதனால் துலாத்தின் முதல் நட்சத்திரமாகிய சித்திரை என்ற பெயர் மேஷ ஞாயிற்றுக்குக் கொடுக்கப் பெற்றது.

சூரியன் ரிஷபத்தில் புகும் போது அதன் ஏழாவது வீடாகிய விருச்சிகத்தில் பூமி புகும். அதனால் அம்மாதம் அவ்விருச்சிகத்தின் முதல் நட்சத்திரமாகிய விசாகத்தின் பெயரால் வைகாசி என அழைக்கப் பெற்றது. இவ்வாறே எழைய மாதங்களும் பெயர் பெற்றன” என்கிறார்.

பஞ்சாங்கம் என்பது எதோ ஒரு குறிப்பிட்ட ஜாதியினருக்கு மட்டுமே உரியது என்ற கருத்துடைய கருணாநிதி, அவர் ஆட்சிக் காலத்தில் கோயில்களில் பஞ்சாங்கம் படிக்கத் தடை விதித்தார் என்பதையும் இங்கே நினைத்துப் பார்க்கலாம்.

தமிழறிஞர் இ.மு.சுப்பிரமணிபிள்ளையின் கூற்று; விண்வெளி விஞ்ஞானி நெல்லை.சு.முத்துவின் கருத்து; ச.கிருஷ்ணமுர்த்தி எடுத்துக் காட்டும் கல்வெட்டுச் சான்று; கமலை ஞானப்பிரகாசரின் வாக்கு ஆகியவை அனைத்தும் தமிழ்ப் புத்தாண்டு சித்திரை மாதத்தில்தான் தொடங்குகிறது என்பதைச் சந்தேகம் இல்லாமல் உறுதி செய்கின்றன.

இங்கே காட்டப்பட்டுள்ள சான்றுகள் போன்று எவ்விதப் புறவய ஆதாரமும் இல்லாமல் சொல்லாமல் கருணாநிதி தன்னிச்சையாகத் தை மாதம்தான் தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கம் என்று சொல்லிக் கொண்டிருப்பது அறிஞர் சபை ஏறாது. அறிவியலார் சபையிலும் ஏறாது.

மூவர் முதலிகள் முற்றத்தின் சார்பில் வெளியிட இருக்கின்ற ஆய்வாளர்கள் கட்டுரைகளப் படித்தாவது,  தான் மூடிக் கொண்டிருக்கும் கண்களைக் கருணாநிதி திறக்க வேண்டும் . திறப்பாரா.

‘கல்லாத மேற்கொண்டொழுகல் கசடற
வல்லதூ உம் ஐயம் தரும்’ என்கிறது வள்ளுவம்.

இக்கட்டுரை 11/01/2012 தேதியிட்ட துக்ளக்கில் வந்துள்ளது.
 

No comments:

Post a Comment