கூடங்குளத்தில் அணு உலை நிறுவியே தீருவோம் என்ற உலைவெறியில் இருக்கும்
இந்திய அரசும் அதன் அணு
சக்தித் துறையும் எதிர்பார்த்தபடியே மீடியா மூலம் பெரும் பொய்ப்பிரசாரத்தை
அவிழ்த்துவிட்டிருக்கின்றன. தொலைக் காட்சிகளில் அவை தரும் விளம்பரங்களில்
அணுமின்
நிலையம் இல்லாத இடங்களில் தான் புற்றுநோய் அதிகம் என்றும் அணு மின்
நிலையம் இருந்தால் புற்றுநோய் அந்த வட்டாரத்தில் குறைந்துவிடுவதாகவும்
தெரிகிறது.
உலக அளவில் இப்படி ஒரு கண்டுபிடிப்பை யாரும் கேள்விப்பட்டிருக்க
மாட்டார்கள்.புற்றுநோய்த் துறையில் பிரபலமான டாக்டர் சாந்தா, ‘புற்றுநோய்க்கும்
கதிரியக்கத்துக்கும் தொடர்பு இல்லை’ என்று அரசின் டி.வி. விளம்பரத்தில்
சொல்லி இருப்பது அதிர்ச்சியாக
இருக்கிறது. கதிரியக்கம் புற்றுநோயை உண்டாக்கும் என்பது உலகம் முழுவதும்
நிரூபிக்கப்பட்ட விஷயம்.
இந்திய அரசு தூண்டிவிட்டிருக்கும் இன்னொரு பொய்ப் பிரசாரம், கூடங்குளம்
அணுமின் நிலையம் வராவிட்டால் தமிழகமே இருண்டுவிடும் என்பதாகும். கூடங்குளம்
உலையிலிருந்து தமிழகத்துக்கு மட்டும் ஆயிரம் மெகாவாட் வருமாம். முதலில் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். அணு சக்தித் துறை ஆயிரம் மெகாவாட்
தயாரிக்கும் திறனுடன் ஒரு உலையை நிறுவினால் அதில் பாதி அளவுகூட
உற்பத்தியைச்
செய்வதில்லை. கல்பாக்கம் உலைகளே கடந்த நான்கைந்து வருடங்களாகத்தான் மொத்த
உற்பத்தித் திறனில் 40 முதல் 50 சதவிகிதத்துக்கு மின்சாரம் தயாரிக்கும்
நிலைக்கு
வந்திருக்கின்றன.ஆய்வாளர் மோகன் சர்மா கணக்கிட்டுள்ளபடி கூடங்குளத்தில் உள்ள இரண்டு
உலைகளும் இயங்க ஆரம்பித்து மொத்த உற்பத்தித் திறனாகிய 2 ஆயிரம்
மெகாவாட்டில் 60 சதவிகித
மின்சாரம் தயாரித்தாலும், 1200 மெகாவாட்தான் வரும். இதில் பத்து சதவிகிதம்
கூடங்குளம் வளாகத்துக்கே செலவாகிவிடும். (வழக்கமாக அணு உலைகள் தங்கள்
உபயோகத்துக்கே 12.5 சதம் செலவழிக்கின்றன.) மீதம் 1080 மெகாவாட்தான். இதில்
தமிழகத்தின் பங்கு 50 சதவிகிதம் எனப்படுகிறது (இதுவும் வழக்கமாக 30
சதவிகிதம்தான்.) ஐம்பது என்றே வைத்தாலும் கிடைக்கப் போவது 540 மெகாவாட்.
இதில் 25 சதவிகிதம் வழக்கமாக தமிழகத்தில் மின் கடத்துவதில் ஏற்படும்
டிரான்ஸ்மிஷன்
இழப்பு. எனவே நிகர மின்சாரம் கிடைக்கக் கூடியது 405 மெகா வாட்தான்.
இதற்கு இத்தனை கோடி செலவு செய்து படு ஆபத்தான வம்பை விலைக்கு வாங்கத்
தேவையே இல்லை. தமிழகம் முழுக்கவும் இருக்கும் குண்டு பல்புகளை மாற்றி,
குழல்
பல்புகளாக்கினாலே 500 மெகாவாட்டுக்கும் மேலே மின்சாரம் மிச்சமாகிவிடும்.
இப்போது டிரான்ஸ்மிஷன்லாஸ் எனப்படும் மின் கடத்துதலில் ஏற்படும் இழப்பால்
இந்தியாவில் நாம்
தயாரிக்கும் மின்சாரத்தில் 25 முதல் 40 சதவிகிதத்தை சுமார் 72 ஆயிரம்
மெகாவாட்டை விநியோகிக்கும்போதே இழந்து கொண்டிருக்கிறோம். ஸ்வீடன் நாட்டில்
இந்த இழப்பு
வெறும் 7 சதவிகிதம்தான். அதுதான் உலக சராசரி. விநியோகத்தில் இழப்பைக்
குறைக்க விஞ்ஞானிகள் வேலை செய் தாலே, சுமார் 60 ஆயிரம் மெகாவாட் மின்சாரம்
நமக்குக் கிடைத்துவிடும். வெறும் பத்து சதவிகிதமாகக் குறைத்தாலே
தமிழகத்தில் 1575 மெகாவாட் மின்சாரம் கிடைக்கும்.இந்த மாதிரி நடை முறைக்கேற்ற மாற்றுவழிகள் இன்னும் நிறையவே இருக்கின்றன.
தமிழ் நாட்டில் மொத்தம் 5500 மெகாவாட் மின்சாரத்தை, காற்றாலைகளிலிருந்து
தயாரிக்கலாம். ஆனால், இதில் 4700 மெகாவாட்தான் இப்போது தயாரிக்கிறோம்.
தமிழ்நாட்டில் இருக்கும் மொத்த வீடுகளில் வெறும் 25 சதவிகித வீடுகளின்
கூரைகளில்
மட்டும் இரண்டு கிலோவாட் மின்சாரம் தயாரிக்கும் சக்தியுடைய சூரிய ஒளி
பேனல்கள் அமைத்தால் அதிலிருந்தே மொத்தம் ஏழாயிரம் மெகாவாட் மின்சாரம்
கிடைக்கும். இதையே
பள்ளிகள், கல்லூரிகள், அலுவலகங்கள், வணிக வளாகங்கள், மருத்துவமனைகள் என்று
பெரிய பெரிய கட்டடங்களின் மேற்கூரைகளில் அமைத்தால் தமிழகத்தில் மின்சாரம்
உபரியாகிவிடும்.காற்றாலைகளிலிருந்து மட்டும் மொத்தம் ஒரு லட்சம் மெகாவாட்
மின்சாரம் தயாரிக்கும் வாய்ப்பு இந்தியாவில் உள்ளது. நீர் சக்தியைப்
பயன்படுத்தி மின்சாரம் தயாரிப்பதற்கான அரசின் தேசியப் புனல்மின் கழகம்
இந்தியாவில் மொத்தமாக
ஒரு லட்சத்து 48 ஆயிரத்து 700 மெகாவாட் தயாரிக்க முடியும் என்றும் இப்போது
அதில் வெறும் 19 சதவிகிதம் மட்டுமே தயாரிக்கிறோம் என்றும்
தெரிவித்திருக்கிறது. சூரியசக்தி பல மடங்கு பிரம்மாண்டமானது. மொத்தம் நான்கு லட்சம் மெகாவாட்
தயாரிக்க முடியும். வருடத்தில் நான்கே மாதம் மட்டும் வெயில் அடிக்கக் கூடிய
ஜெர்மனி,
நார்வே போன்ற நாடுகளில் ஏற்கெனவே மொத்த மின்சாரத்தில் 20 சதவிகிதத்தை
சூரியசக்தியிலிருந்து தயாரிக்கிறார்கள். இந்தியாவில் வருடத்தில் 300
நாட்களுக்கு மொத்தம்
2500 மணி நேரம் தெளிவான வெயில் இருக்கிறது. சூரிய சக்தியிலிருந்து
மின்சாரம் தயாரிக்கும் போட்டோவோல்டேய்க் செல் பேனல்கள் தனது முழுத் திறனில்
வெறும் பத்து
சதவிகிதம் மட்டுமே இயங்கினால் கூட, கிடைக்கும் மின்சாரம் 2015ல்
இந்தியாவில் வீட்டுத் தேவைக்கான மின்சாரத்தை விட ஆயிரம் மடங்கு அதிகம்! சூரியசக்தி மின்சாரம் தயாரிக்க செலவு அதிகம் என்று அணு ஆதரவாளர்கள்
பிரசாரம் செய்வது இன்னொரு பொய். எதை விட இது செலவு அதிகம் ? அணு
மின்சாரத்தின் அசல் விலையை அவர்கள் மூடி மறைத்துவிட்டு மற்றவற்றை விலை
அதிகம் என்று பொய்ப் பிரசாரம்தான் செய்கிறார்கள். ஜெய்தாபூரில் பிரெஞ்ச்கம்
பெனியிடமிருந்து
அணு உலை வாங்கி நிறுவுவதற்கு அவர்கள் போட்டிருக்கும் மதிப்பீடு ஒரு
கிலோவாட்டுக்கு 21 கோடி ரூபாய். ஆனால் ஏழு இடங்களில் சூரிய
சக்தி மின் நிலையங்கள் அமைக்க, தனி யாருக்கு இந்திய அரசு அனுமதி
கொடுத்திருக்கிறது. அங்கே நிறுவும் செலவு ஒரு கிலோ வாட்டுக்கு 12 கோடி
ரூபாய்தான். நிறுவிய
பின்னர் பராமரிப்புச் செலவும் அணு உலையை விடக் குறைவு. ஆபத்து துளியும்
இல்லை. அணு உலையை லட்சக்கணக்கான வருடத்துக்குப் பாதுகாத்தே
திவாலாகிவிடுவோம்.
இப்போது சூரிய சக்தியில் மின்சாரம் தயாரிக்கத் தேவைப்படும் பொருட்களின்
விலை படு வேகமாகச் சரிந்து வருகிறது. சோலார் போட்டோவோல்டேய்க் செல்
தயாரிக்கத்
தேவைப்படும் பாலி-சிலிக்கான் விலை கடந்த மூன்று வருடங்களில் 93
சதவிகிதம் குறைந்துவிட்டது. அதனால் இந்த மின்சாரம் தயாரிக்க முன்வரும்
தனியார் கம்பெனிகள், அரசுக்கு மின்சாரத்தை முன்பைவிடக் குறைந்த விலையில் தர
முன்வந்துவிட்டன.
டிசம்பர் 2011ல் நடந்த ஏலத்தில் இந்திய அரசு ஒரு மெகாவாட்/மணி அளவு
மின்சாரத்தை 15,390 ரூபாய்க்கு வாங்கத் தயார் என்று அறிவித்திருந்தது.
ஆனால், பிரான்சின்
இரண்டாவது பெரிய சூரிய மின்சக்தி உற்பத்தி நிறுவனமான
சோலேர் டைரக்ட் 7,490 ரூபாய்க்கே விற்ப
தாக ஏலம் எடுத்திருக்கிறது. இது ஒரு வருடம் முன்பு இருந்த விலையை விட 34
சதவிகிதம் குறைவு. எனவே 2015க்குள் சூரிய மின்சாரத்தின் விலையும் இப்போது
நிலக்கரியால் தயாரிக்கும் அனல் மின்சாரத்தின் விலையும் சமமாகிவிடும் என்று
கருதுகிறார்கள்.காற்று, சூரியசக்தி மின்சாரத்தையெல்லாம் தேசிய கிரிட்டில் இணைப்பது கடினம்
என்றும் அவற்றைக் கொண்டு 500, 1000, 2000 மெகாவாட் நிலையங்களை நடத்த
முடியாது
என்பது அவர்களின் இன்னொரு வாதம். முதலில் ஏன் எல்லா மின்நிலையங்களையும்
ஆயிரக்கணக்கான மெகாவாட் உற்பத்தி நிலையமாக வைக்கவேண்டும் என்பதையே நாம்
கேள்வி
கேட்கவேண்டும். போக்குவரத்துக்குப் பயன்படும் வாகனங்களை எடுத்துக்
கொள்வோம். சைக்கிள்,
டூ வீலர், கார், ஆட்டோ, பஸ், ரயில், விமானம், கப்பல் என்று வகைவகையாக
இருக்கின்றன. அடுத்த தெருவுக்குச் செல்வதற்கு விமான சர்வீஸ் நடத்தச்
சொல்வோமா ?
இதே போல மின் உபயோகமும்
பலதரப்பட்டது. வீட்டு உபயோகம், விவசாய உபயோகம், தொழிற்சாலை உபயோகம், பொது
உபயோகம், கிராமத் தேவை, நகரத் தேவை என்று மாறுபட்டவை. எல்லாவற்றையும்
கிரிட் மூலம்தான் செய்ய வேண்டும் என்ற அணுகுமுறையே தவறானது. இதனால்தான்
மின்சாரத்தை அனுப்புவதில் டிரான்ஸ்மிஷன்லாஸ் என்பதே பெருமளவு ஏற்படுகிறது. இப்போதுள்ள அனல், புனல் மின் நிலையங்களைக் கொண்டு தொழிற்சாலை தேவைகளைப்
பூர்த்தி செய்யலாம். வீட்டுத் தேவைகள், விவசாயத் தேவைகளில் பெரும்பகுதி
எல்லாம் சிறு மின் நிலையங்களாலேயே பூர்த்தி செய்யக்கூடியவை. கிரிட்
மின்சாரம் இல்லாதபோது மின்வெட்டைச் சமாளிக்க ஒவ்வொரு வீட்டிலும்
இன்வர்ட்டர் வைத்துக்
கொள்வதை விட, சூரியசக்தியில் மின்சாரம் தயாரிக்கும் கருவிகளைப் பொருத்திக்
கொள்ளலாம். மின்சார விநியோக கண்ட்ரோல் அதிகாரத்தை ஒரே இடத்தில் குவித்துவைத்துக்
கொள்ளத்தான் கிரிட் முறை பயன்படுகிறது. சென்னையில் ஒரு மணி நேரம்தான்
பவர்கட்.
அத்திப்பட்டில் ஆறு மணி நேரம் பவர்கட் என்பது கிரிட் அதிகாரத்தால்
நடப்பது. அத்திப்பட்டில் சூரியசக்தி, காற்றாலை மின்சாரம் இருந்தால் அங்கே
ஒரு மணி நேரம்
கூட பவர் கட் இருக்காது.சூரியசக்தி மின்சாரத்தைப் பல விதமாகத் தயாரிக்கலாம். போட்டொவோல்டேய்க்
செல்பேனல் முறை ஒன்று. இன்னொன்று குவிசக்தி முறை. கண்ணாடிகள், லென்சுகளைப்
பயன்படுத்தி, தீவிரமான ஒளிக்கற்றை மூலம் உருக்கிய உப்பை சூடாக்கி அந்த
வெப்பத்திலிருந்து தயாரிப்பதாகும். இந்தியாவில் எல்லா முறைகளையும்
பயன்படுத்த வசதி
இருக்கிறது. ராஜஸ்தான் தார் பாலைவனத்தில் 50 ஆயிரம் சதுர கிலோ மீட்டர்
பரப்பு இருக்கிறது. அங்கே மட்டும் பிரம்மாண்டமான சூரியசக்தி மின்
நிலையங்களை ஏற்படுத்தினால்
15 ஆயிரம் மெகாவாட் வரை தயாரித்து கிரிட்டுக்கே அனுப்பலாம். வெளிநாடுகளில் சூரியசக்தி மின்சாரம் நிலை எப்படித் தெரியுமா? இந்தியாவைப்
போல வருடம் முழுவதும் வெயில் இல்லாத நாடுகள் கூட முன்பே இதில் இறங்கி
விட்டன.
ஸ்பெயினில் இப்போதே 12 சதவிகிதம் சூரிய மின்சாரம்தான். இஸ்ரேலில் 90
சதவிகித வீடுகளில் சூரிய சக்தி ஹீட்டர் வந்துவிட்டது. சீனா
போட்டோவோல்டேய்க் செல்
தயாரிப்பில் உலகத்தில் முதலிடத்தில் இருக்கிறது. உலக அளவில் 3800 மெகா
வாட்டுக்கான சோலார் பேனல்களில் சரி பாதியைத் தயாரித்து ஏற்றுமதி
செய்திருப்பது சீனாதான்.
சில மாதங்களே வெயில் அடிக்கும் ஜெர்மனியில் மொத்த மின்சாரத்தில் 25
சதவிகிதத்தை சூரியசக்தியில் தயாரிப்பதை 2050க்குள் சாதிக்க நடவடிக்கை
எடுக்கப் படுகிறது. இப்போது உலகம் முழுவதும் உற்பத்தியாகும் சூரியசக்தி மின்சாரத்தில் சரிபாதி
அமெரிக்காவில்தான் உற்பத்தி செய்யப்படுகிறது. கலிபோர்னியா மாநிலத்தில்
மட்டும்
2020க்குள் அதன் மொத்த மின் தேவையில் 33 சதவிகிதம் சூரியசக்தியிலிருந்து
பெறுவது என்ற இலக்குடன் திட்டங்கள் நடக்கின்றன. கிரிட்டுக்கே
மின்சாரம் அனுப்பும் திட்டங்களையும் அமெரிக்கா மேற்கொண்டிருக்கிறது.
மூன்றாண்டுகளுக்கு முன்பாகவே சுமார் 500 மெகாவாட் சூரிய மின்சாரத்தை,
கிரிட்டுடன்
இணைத்துவிட்டது.
இன்னொரு பக்கம் தனியார் வீடுகளிலும் அவரவர் அலுவலகங்களிலும் சுயதேவைக்காக
போட்டோவோல்டேய்க் செல் பேனல் அமைத்து மின்சாரம் தயாரித்துக்
கொள்வதை ஊக்குவிக்கிறது. தங்கள் தேவைக்குப் போக உபரி சூரிய
மின்சாரத்தை கம்பெனிக்கு விற்கும் வீடுகள் பெருகிவருகின்றன. மின் கட்டணமாக
2400 டாலர் வரை செலுத்திய ஒரு வீட்டில் 25 ஆயிரம் டாலர் செலவில் சூரிய
மின்சாரத் தயாரிப்பு பேனல் பொருத்தியதும்
அந்த முழு மின்கட்டணம் மிச்சமாகிவிடுகிறது. அமெரிக்காவில் கடந்த 30 வருடங்களாக ஒரு புதிய அணு உலை கூடத் தொடங்கவில்லை என்பதை இத்துடன் சேர்த்துக் கவனிக்க வேண்டும்.
ஏன் இந்திய அரசுக்கு மட்டும் இந்த கொலைவெறியான உலைவெறி?
நண்பருக்கு வணக்கம் ...
ReplyDeleteதங்கள் கட்டுரை எழுதப்பட்டிருக்கும் விதம் அருமை. ஆனால் தங்கள கருத்துகளில் எனக்கு மாற்று கருத்துகள் உள்ளது .
அணுமின் நிலையங்களினால் தான் புற்று நோய் வருவதாக நீங்கள் தெரிவித்துள்ள கருத்துகள் முற்றிலும் அபத்தமானவை . உங்களிடம் ஒரு சின்ன கேள்வியை கேட்க ஆசைப்படுகிறேன் . நீங்கள் சொன்னபடி அணுமின் நிலையங்கள் மூலம் புற்று நோய் உண்டாகிறது என்றால் அணு மின் நிலையங்களில் வேலை பார்க்கும் ஊழியர்கள் அனைவரும் புற்று நோயால் பாதிக்கப்பட்டு இருக்க வேண்டுமே . தற்பொழுது அணுமின் நிலையங்களுக்கு எதிராக போராடும் சில முன்னாள் அணுமின் விஞ்ஞானிகள் 70 வயதை தாண்டியும் எந்த பாதிப்பும் இல்லாமல் இருக்கிறார்களே . அது எப்படி ...? சரி .... ஆப்பிள் நிறுவனர் ஜாப்ஸ் மற்றும் முன்னாள் தமிழக கால்நடை துறை அமைச்சர் திரு . கருப்பசாமி போன்றவர் புற்று நோயால் மறித்து போனார்களே .. எந்த அணுமின் நிலையம் அருகில் வசித்தார்கள் ...?
புற்றுநோய்த் துறையில் பிரபலமான டாக்டர் சாந்தா, ‘புற்றுநோய்க்கும் கதிரியக்கத்துக்கும் தொடர்பு இல்லை’ என்று அரசின் டி.வி. விளம்பரத்தில் சொல்லி இருப்பது அதிர்ச்சியாக இருக்கிறது என்று நீங்கள் சொல்லுகிறீர்கள் . எனக்கு நீங்கள் இப்படி சொல்லுவது அதிர்ச்சியாக இல்லை . ஏன் தெரியுமா .... எல்லா துறைகளிலும் முதன்மையானவர்கள் சொல்லும் கருத்துகளை பைத்தியகாரத்தனம் என்று நீங்கள் சொல்லுவதும் திரு . உதயகுமார் போன்ற சிறந்த அணு விஞ்ஞானிகளை மாத்திரம் நீங்கள் நம்புவதும் வாடிக்கையாகி விட்டது .
//அணு சக்தித் துறை ஆயிரம் மெகாவாட் தயாரிக்கும் திறனுடன் ஒரு உலையை நிறுவினால் அதில் பாதி அளவுகூட உற்பத்தியைச் செய்வதில்லை//
நீங்கள் சொல்லி உள்ள இந்த கருத்தும் தவறானது தான் . கொஞ்ச நாட்கள் தேவையான அளவு எரிபொருள் இல்லாததால் உற்பத்தியின் அளவு குறைந்திருக்கலாம் . ஆனால் இப்பொழுது அரசு பல நாடுகளிடம் செய்துள்ள ஒப்பந்தங்கள் காரணமாக சரியான அளவில் மின் உற்பத்தி நடைபெறகிறது என்பதை நீங்கள் தெரிந்து கொள்ளவேண்டும் ..
சூரிய ஒளி மின்சாரத்தை பயன்படுத்த வேண்டும் என்ற உங்கள் கருது வரவேற்க கூடியது என்பதில் எனக்கு எந்த மாற்று கருத்தும் இல்லை . அரசு கூட எல்லா வகைகளிலும் மின்சாரம் தயாரிக்க தான் முயற்சிக்கிறது என்பதை தாங்கள் கருத்தில் கொள்ளவேண்டும் . உலகின் மிகப்பெரிய சூரிய ஒளி பண்ணையின் மூலம் 240 MWe தான் மின்சாரம் தயாரிக்க முடிகிறது . நீங்கள் தற்பொழுது உள்ள மின் தேவையை மாத்திரம் கருத்தில் கொண்டு இந்த கட்டுரை எழுதி உள்ளீர்கள் . எதிர்கால தேவையை நீங்கள் கருத்தில் கொண்டதாக தெரிய வில்லை . ஒவ்வொரு நாளும் மின் தேவை பெருகி வருவதை நீங்கள் மறுக்க மாட்டீர்கள் என நினைக்கிறேன் . திரு . அப்துல் கலாம அவர்கள் கூட விண்வெளியில் கிடைக்கும் சூரிய ஒளியை பயன்படுத்த ஆராய்ச்சி மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார் என்பதை தங்களுக்கு சுட்டி காட்ட ஆசைப்படுகிறேன் .
எனவே பசுமையான மின்சாரத்தில் ஒன்றான அணுமின்சாரத்தை நாம் ஏன் வரவேற்க கூடாது ? நன்றி