அண்மையில் தென் கொரியாவின் குவான்கிஜு நகரில் நடந்தது
ஒரு மாபெரும் மாநாடு. உலகம் முழுவதிலும் இருந்து வந்திருந்த பல
விஞ்ஞானிகளும் சமூக ஆர்வலர்களும் அங்கே விவாதித்தது, எதிர்கால
உலகத்துக்குத் தேவையான மாற்று (எரி)சக்தி பற்றி. குறிப்பாக, நீர் மற்றும்
அனல் மின்உற்பத்தி நிலையங்கள் மூலம் கிடைக்கும் மின்சாரத்தின் தட்டுப்பாடு
கூடிக்கொண்டே வரும் நிலையில்... சூரிய ஒளி உள்ளிட்ட வேறு என்னென்ன வகைகளில்
மின்சாரத்தைப் பெறுவது கட்டுப்படியாகவும் சாத்தியமாகவும் இருக்கும் என்பதே
விவாதத்தின் முக்கியப் பொருள்!
மலேசியாவைச் சேர்ந்த சமூக ஆர்வலரான ஏ.வி.எம். ஹாஜா, இந்த மாநாட்டில் கலந்துகொண்ட ஆராய்ச்சியாளர்களில் ஒருவர். 'சூரிய - காற்று - பூமி மறுசுழற்சி சக்திகள்'
என்பது இவர் அங்கே சமர்ப்பித்த ஆய்வுரை. கூடங்குளம் உட்பட உலகின் பல
பாகங்களிலும் அணு உலைகளுக்கு எதிராகக் கவலைகள் நிலவி வரும் நிலையில்,
இந்தியாவின் இப்போதைய வளர்ச்சி நிலை, எதிர்காலத் தேவைகள் மற்றும் மின்சார
உற்பத்தியில் கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்களை இந்தக் கட்டுரையில் அவர்
விவாதித்து உள்ளார்.
அதன் சாராம்சம் இதுதான்...
''கதிரியக்கத்தை அணு உலைகள் உண்டாக்குவது குறித்து விழிப்பு உணர்வுப்
பிரசாரங்கள் நடந்து வரும் அதே சமயம், தினந்தோறும் நம்மைச் சுற்றி இயற்கையான
கதிரியக்கங்கள் நிகழ்ந்துகொண்டே இருப்பதையும் அறிய வேண்டும். காற்றில்,
மண்ணில், பாறைகளில்... ஏன் நம் உடம்பிலேயே கதிரியக்கப் பொட்டாசியம்
இருக்கிறது. இன்னொரு மனிதன் அருகே நீங்கள் தூங்கும்போது கதிரியக்கம் 10
விழுக்காடு அதிகமாகிறது. விடுமுறையை நீங்கள் கடற்கரையில் கழிக்கும்போது,
அங்கே இருந்து வெளியாகும் கதிரியக்கம், நீங்கள் தூங்கும்போது உருவாகும்
கதிரியக்கத்தைவிட இரண்டு மடங்கு இருக்கும். ஒரு கிலோ நிலக்கரி சாம்பலில்
மட்டும் 2000 Bq ( கதிரியக்க அளவு) இருக்கிறது.இன்னொரு செய்தி - உலகில் இயற்கையாகவே அதிக கதிரியக்கம் உள்ள இடங்களில்
கேரளா ஒன்றாக கூறப்பட்டுள்ளது. ஈரான் உள்ளிட்ட இந்தப் பகுதிகளில் ஒரு
மனிதன் ஒரு வருடத்துக்கு சராசரியாக 15 மில்லி சிவ்வெர்ட் அளவுக்கு காமா கதிரியக்கத் தாக்கத்துக்கு
ஆளாகிறான் என்று கணக்கிடப்பட்டு இருக்கிறது (ஆதாரம்: Natural Background
Radiation) இது இயற்கை கதிரியக்க அளவைவிட எட்டு மடங்கு கூடுதலாகும்.எது இருப்பினும், கதிர் வீச்சின் பயத்தோடு நாம் ஏன் வாழ வேண்டும்... அதனைத்
தவிர்க்க முடியாதா? வேறு மின் நிலையங்கள் மூலமாக நம் மின்சாரத் தேவையைப்
பூர்த்தி செய்ய முடியாதா என்ற எண்ணம் மிகச் சரியானதே!
எது இருப்பினும், கதிர் வீச்சின் பயத்தோடு நாம் ஏன் வாழ வேண்டும்... அதனைத்
தவிர்க்க முடியாதா? வேறு மின் நிலையங்கள் மூலமாக நம் மின்சாரத் தேவையைப்
பூர்த்தி செய்ய முடியாதா என்ற எண்ணம் மிகச் சரியானதே!
1. அனல் மின் நிலையங்கள்: அனல் மின் நிலையங்கள் நிலக்கரி,
இயற்கை எரிவாயு, டீசல் போன்ற எரிபொருட்களை உபயோகிப்பவை. இந்தியாவில்,
பூமிக்கு அடியில் 92 பில்லியன் டன் நிலக்கரி புதைந்து இருக்கிறது. 217
வருடங்களுக்குப் போதுமான தடை இல்லாத சப்ளை இது. ஆனால், பூமிக்கு அடியில்
புதைந்திருக்கும் நிலக்கரியை எல்லா இடங்களிலும் தோண்டி எடுக்க முடியாது.
அப்படி எடுத்தால், காடுகள், கிராமங்கள், நகரங்கள் பல வகைகளிலும்
பாதிக்கப்படும். வருடந்தோறும் 397 மில்லியன் டன் நிலக்கரியை இந்தியா வெட்டி
எடுக்கிறது. ஆனாலும், நூற்றுக்கணக்கில் இருக்கும் அனல் மின்
நிலையங்களுக்கு இது போதவில்லை. 37 மில்லியன் டன் இன்னும் தேவையாக
இருக்கிறது. இதனாலேயே, இந்தோனேசியா போன்ற நாடுகளில் இருந்து இறக்குமதியும்
செய்யப்படுகிறது.உலகிலேயே நிலக்கரி உற்பத்தியில் மூன்றாவது இடத்தில்
இருக்கும் இந்தியாவுக்கே இந்த அளவுக்குப் பற்றாக்குறை. இந்த
நிலையில் இன்னும் 173 அனல் மின் நிலையங்களை இந்தியா கட்ட இருக்கிறது! நிலக்கரி தோண்டி எடுத்ததில் இருந்து அது அனல் மின் நிலையங்களுக்கு சென்று
சேரும் வரை... போகும் வழியெல்லாம் தூசியையும் சாம்பலையும் காற்று
மண்டலத்தில் பரப்பிக்கொண்டே போகிறது. நிலக்கரி சுரங்கங்களில் வேலை
செய்பவர்கள் மற்றும் அதன் அருகே வசிப்பவர்களின் ஆயுள் சராசரியாக 10
வருடங்கள் குறைவதாக 'இந்திய ஆரோக்கிய ஆய்வு'க் குழு கவலை தெரிவித்து
இருக்கிறது. நிலக்கரியை மின்நிலையங்கள் எரிக்கும்போது 88% கரியமில வாயுவை
அது காற்று மண்டலத்தில் கலக்கிறது. இதனால், அனல் மின் நிலையங்களில் இருந்து 30 கிலோ மீட்டர் தூரம்
வரை வசிப்பவர்கள் நுரையீரல் நோய்களால் பாதிக்கப்படுகின்றனர். அணு உலைகளில்
பயன்படும் யுரேனியத்தின் ஒரு கிலோ கிராம் எரிப்பு என்பது 5,000 டன்
நிலக்கரி எரிப்புக்கு சமமான எரிசக்தியை அளிக்கிறது.
2. நீர் மின் நிலையங்கள்: புகை கக்காத மின்உற்பத்தி
என்றால் நீர் மின் நிலையத்தைச் சொல்லலாம். இந்தியாவில் 21.53% மின்சாரம்
நீர் மின் நிலையங்களில் உற்பத்தி ஆகிறது. ஆனால், இவற்றை இன்னும் எத்தனை
காலத்துக்கு, எந்த அளவுக்கு நம்பியிருக்க முடியும்? நீர் மின்
நிலையங்களுக்கு ஆறுகள் தேவை; பெரும் அணைக்கட்டுகளும் தேவை. இந்தியாவின்
பெரும்பான்மை ஆறுகள், பருவ கால மழையை நம்பி இருப்பவை. அணைக்கட்டுகளின்
தண்ணீர் மட்டம் குறைந்தால், மின் உற்பத்தியில் தடை ஏற்படும். மேலும், புதிய அணைக்கட்டுகளை அமைப்பதால் சுற்றுச்சூழல் பாதிப்பு
ஏற்படுகிறது என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறுவதையும் கவனிக்க வேண்டும்.
புதிய அணைகளுக்கு இடம் கொடுத்துவிட்டு, தலைமுறை தலைமுறையாக அங்கு வாழும்
மக்கள் இடம் பெயர வேண்டி வரும். வளமான காடுகள் இந்தத் திட்டங்களுக்காக அழிய
வேண்டியிருக்கும். இதையெல்லாம்விட, நீர் மின் நிலையங்களைக் கட்டுவதற்கான
செலவு மற்ற மின் நிலையங்களைவிட மூன்று மடங்கு கூடுதலானது!
3. காற்றாலை மின்சாரம்: இந்தியாவில் இப்பொழுது
காற்றாலைகள் 12,000 மெகா வாட்ஸ் மின்உற்பத்தி செய்கின்றன. காற்றாலைகள் மின்
உற்பத்தியைத் தொடர்ச்சி யாகக் கொடுக்க முடியாது. 'காற்றுள்ளபோதே
தூற்றிக்கொள்’ என்ற பழமொழி இதற்கு நன்றாகவே பொருந்தும். அதோடு காற்றாலை
அமைப்பதற்கு மற்ற மின் நிலையங்களைவிட நான்கு மடங்கு அதிகமான பரந்தவெளி
தேவை. மகாராஷ்டிராவின் மேற்கு மலைத் தொடர் அருகே 194.66 ஹெக்டேர் நிலத்தில்
442 டர்பைன்களைக்கொண்டு 113 மெகா வாட்ஸ் மின் உற்பத்தி செய்யும் திட்டம்
தயாரானது. அந்த இடம் பறவைகள் சரணாலயம் என்பதால், மக்கள் பெரும் எதிர்ப்பைத்
தெரிவித்தார்கள். அந்தக் காற்றாலை அமைக்க மூன்று லட்சம் மரங்கள்
வெட்டப்பட்டதும் கண்டனத்துக்கு ஆளானது.
4. சோலார் அல்லது சூரிய மின் அமைப்புகள்: இவற்றுக்கும்
பெரிய இடங்கள் தேவையாக இருக்கின்றன. இதை அமைப்பதற்கான செலவும் அதிகம். ஒரு
மெகா வாட் உற்பத்தி செய்ய ஐந்து ஏக்கர் நிலம் தேவையாக இருக்கிறது.
தொடர்ச்சியான மின் உற்பத்தியை சோலார் தகடுகளால் தர முடியாது. மேகமூட்டம்,
மழைக்காலம், இரவு போன்ற சமயங்களில் மின் உற்பத்தியை எதிர்பார்க்க முடியாது.
பாலைவனங்கள் சூரிய சக்தி உற்பத்திக்கு உகந்த இடமாகக் கருதப்படுகிறது. அதே
நேரத்தில் பாலைவனத்தில் காற்று கொண்டுவந்து கொட்டும் புழுதி மண், சோலார்
தகடுகளை முற்றாக மூடிவிடும் என்பதால் பராமரிப்புச் செலவு அதிகரிக்கும். ஒரு பக்கம் மின்வெட்டால் பாதிக்கப்படுவர்களின் பரிதாபக் குரல்கள்; மறு
பக்கம் மின் நிலையங்கள் அமைப்பதற்கு எதிர்ப்பு. இந்தியா, தேவைக்கும்
எதிர்ப்புக்கும் இடையிலான நிலையில் உள்ளது. மின்சாரம் இல்லாத நாட்டில்
எப்படி வெளிநாட்டு தொழிற்சாலைகள் இயங்க முடியும்?அண்மையில்கூட ஜப்பான் வணிக வெளியுறவுக் கழகம் விடுத்த அறிக்கையில்... மின்
உற்பத்தி நிலையைக் காட்டி, 'புதிய தொழிற்கூடங்கள் அமைக்க இந்தியா சாதகம்
இல்லாத நாடு’ என்று அறிவித்து இருக்கிறது. தென் கொரியாவும், தமிழ்நாட்டில்
தொடர்ந்து தொழிற்சாலைகள் அமைப்பது சரிதானா என்று யோசிக்கிறது. இவற்றை
எல்லாம் மனதில்கொண்டு பார்க்கும்போது... எப்படிப்பட்ட மின் உற்பத்தி
'ஸ்ட்ராட்டஜி'யை இந்தியா மேற்கொள்ள வேண்டும் என்பதில் பாரபட்சமற்ற ஒரு
திட்டமிடல் தேவையாக இருக்கிறது.
வளரும் நாடான இந்தியா ஒரே கூடைக்குள்ளேயே மின் உற்பத்திக்கான மொத்தத்
தீர்வையும் வைத்திருந்தால், அது சிக்கலில் போய் முடியும்! அணு உலைகள்
குறித்த எச்சரிக்கை உணர்வைக் காட்டும் அதே நேரத்தில், ஏதாவது ஒரு
குறிப்பிட்ட வகை மின் உற்பத்தியை மட்டுமே எதிர்காலத்தில் நம்பி இருப்பது
தொழில் முடக்க ஆபத்தைக் கொண்டுவந்து விடும். ஒரு வகை எரிபொருள் உற்பத்தி
தடைபட்டாலும், மற்றொரு வழியில் மின் உற்பத்தி நடந்துகொண்டே இருக்க
வேண்டும்.தொழில் வளர்ச்சி அதிகரிக்கவும், வாழ்க்கைத் தரம் உயரவும் முக்கியக்
காரணியாக இருப்பது... இருக்கப்போவது மின்சாரம்தான். இந்தியாவின் தேவையை
தொலைநோக்கோடு பார்த்துக் கணக்கிட்டால், அனல் மின் நிலையங்கள் 50%, நீர்
மின் நிலையங்கள் 20%, அணு மின் நிலையங்கள் 15% மற்றும் மறுசுழற்சி மூலமாக
மின் உற்பத்தி 15% என்ற விகிதாசாரத்தில் இருந்தால்தான், இந்தியாவின் மின்
உற்பத்தி தடையின்றி இருக்கும். இத்தகைய சீரான திட்டமிடுதலுடன் நாம் பயணம் செய்தால் மட்டுமே... வரும் காலம் வெளிச்சமாக இருக்கும்!
விகடன்
No comments:
Post a Comment