Search This Blog

Wednesday, January 18, 2012

எனது இந்தியா!( ஐஸ் கட்டிவரலாறு ) - எஸ். ராமகிருஷ்ணன்.


ன்று வீட்டுக்கு வீடு குளிர்சாதனப் பெட்டி யில் ஐஸ் தயாரித்துக்கொள்கிறோம்; வீதிக்கு வீதி ஐஸ்கிரீம் கடைகள் இருக்கின்றன.  ஐஸ் கட்டிகளின் பின்னேயும்கூட கரையாத வரலாறு ஒன்று இருக்கிறது தெரியுமா?175 வருடங்களுக்கு முன், ஒரு சாதாரண மனிதன் ஐஸ் கட்டி வாங்க வேண்டும் என்றால், அவன் டாக்டர் சர்ட்டிஃபிகேட் வாங்கிக்கொண்டு போக வேண்டும். காரணம், ஐஸ் கட்டி அவ்வளவு எளிதாகக் கிடைக்காது. மருத்துவர்களுக்கும் பிரபுக்களுக்கும் மட்டுமே ஐஸ் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. அதுவும், அமெரிக்காவில் இருந்து இறக்குமதியான ஐஸ்.இந்தியாவுக்கு ஐஸ் அறிமுகமானதன் பின்னால் மிகப் பெரிய கதை இருக் கிறது. சென்னையில் வசிக்கும் பலருக் கும் கடற்கரை சாலையில் உள்ள விவேகானந்தர் இல்லம் தெரிந்து இருக்கும். அந்த இடத்தை இன்றும் 'ஐஸ் ஹவுஸ்’ என்றுதான் அழைக்கிறார்கள். அது என்ன ஐஸ் ஹவுஸ்? அங்கே யார் ஐஸ் வணிகம் செய்தது? எப்போது அந்த வணிகம் நடைபெற்றது?இந்தியாவுக்கு ஐஸ் கட்டிகள் அறிமுகமானதன் விளைவு... வெறும் குளிர்ச்சி சார்ந்தது மட்டும்இல்லை, அது இந்தியர்களின் மன இயல்பை பெருமளவு மாற்றியது. அந்த மாற்றத்தின் உச்சபட்சம்தான் இன்று குளிர்சாதன வசதி இல்லாமல் பெரும்பாலான இந்தியர்களால் தூங்க முடியவில்லை. பயணம் செய்ய முடியவில்லை, அலுவலகத்தில் வேலை செய்ய முடியவில்லை. குளிரூட்டப்படாத பானங்களைக் குடிக்க முடியவில்லை. குளிர்ச்சி இல்லாத அத்தனையும் வெறுக்கக்கூடியதாக மாறி இருக்கிறது சூழல்.


வெள்ளையர்களைப் போலவே நமக்கும் இந்திய வெப்பம் எரிச்சல் ஏற்படுத்துகிறது. இந்த மன நிலை மாற்றத்தின் வேர், அமெரிக்காவில் இருந்து கல்கத்தாவுக்கு ஐஸ் கட்டிகள் வந்து இறங்கிய செப்டம்பர் 14-ம் தேதி, 1833-ல் தொடங்குகிறது.அமெரிக்காவின் போஸ்டன் நகரில் இயற்கையாக உருவான பனிக் கட்டிகளை வெட்டி எடுத்து இந்தியாவுக்கு அனுப்பி, வருடத்துக்கு இரண்டு லட்சம் டாலர்கள் பணம் சம்பாதித்த ஃபிரெட்ரிக் டூடரின் கதை, இந்திய வரலாற்றில் மறக்க முடியாதது. ஜனவரி மாதத்தில் அமெரிக்காவில் உள்ள குளங்கள், ஏரிகள் உறைந்துபோய் பனிப் பாளங்கள் ஆகிவிடும். வீணாகக்கிடக்கும் அந்தப் பனிக் கட்டிகளை வெட்டி எடுத்து கப்பலில் வேறு நாடுகளுக்கு அனுப்பி, ஒரு புதிய வணிகத்தை மேற்கொள்ளலாமே என்ற எண்ணம், டூடருக்கு உருவானது. மேற்கிந்தியத் தீவுகளுக்கு ஐஸ் அனுப்பும் வணிகத்தைத் தொடங் கினார். ஆனால், அவர் நினைத்தது போல ஐஸ் கட்டிகளை, உருகாமல் கப்பலில் கொண்டுபோக முடியவில்லை. 100 டன் ஐஸ் கட்டிகளை கப்பலில் அனுப்பினால் போய்ச் சேரும்போது, அதில் 80 டன் கரைந்துபோயிருக்கும். ஆகவே, உருகாமல் பனிக் கட்டிகளை அனுப்புவதற்காக அவர் வைக்கோல் சுற்றிய பெட்டிகளில் அனுப்பத் தொடங்கினார். அப்படியும் பாதி ஐஸ்கட்டிகள் உருகின.1830-ம் ஆண்டு ஐஸ் கட்டிகள் விற்பனையில் இருந்து மாறி, காபி வணிகத்தில் ஈடுபட்ட டூடர் பெருத்த நஷ்டத்தைச் சந்தித்தார். இரண்டு லட்சம் டாலருக்கும் மேலாகக் கடன் அவருக்கு ஏற்பட் டது. அந்தக் கடனைத் திருப்பிக் கொடுக்க முடியத அவர் மீது, கடன்காரர்கள்  வழக்கு தொடுத்தார்கள். சிறையில் அடைக்கப்பட்டார். அதில் இருந்து, தற்காலிகமாக மீண்டு வந்த டூடரிடம் அவரது நண்பரான சாமுவெல் ஆஸ்டின், தான் இந்தியாவில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்வதற்காக ஒரு கப்பல் வைத்திருப்பதாகவும், அது அமெரிக்காவில் இருந்து இந்தியா போகும்போது காலியாகத்தான் போகிறது என்பதால், அதை டூடர் பயன்படுத்திக்கொள்ளலாம் என்றும் உதவ முன்வந்தார்.


ஆஸ்டினை ஒரு பங்குதாரராகச் சேர்த்துக்கொண்டு, இந்தியாவுக்கு ஐஸ் அனுப்பும் வேலையை மீண்டும் தொடங்கினார் டூடர். இவருடைய அப்பா வழக்கறிஞர். மூத்த சகோதரர் வில்லியம் டூடர், ஓர் இலக்கியவாதி. ஹார்வர்டில் படித்த டூடர், இள வயதிலே வணிகம் செய்யத் தொடங்கிவிட்டார்.தனது 23 வயதில் அவர், ஒரு கப்பல் நிறைய ஐஸ் கட்டிகளை ஏற்றுமதி செய்ய முயன்றபோது, அது முழு முட்டாள்தனம் என்று ஊரே அவரைக் கேலி செய்தது. துறைமுகத்தில் இருந்து, பனிக் கட்டிகளைக் கப்பலில் ஏற்றுவதற்குக்கூட யாரும் முன்வரவில்லை. ஆனால், ஐஸ் கட்டி வணிகத்தில் நிறையப் பணம் சம்பாதிக்க முடியும் என்று டூடர் உறுதியாக நம்பினார். ஒரு கப்பல் நிறைய ஐஸ் கட்டிகளை ஏற்றி அனுப்பி, 4,500 டாலர்கள் சம்பாதித்துக் காட்டினார் டூடர்.ஆனால் சில முறை, ஐஸ் கட்டிகள் ஏற்றிச் சென்ற கப்பல் வழியில் கவிழ்ந்துபோய், உயிரிழப்புகளும் ஏற்பட்டன. பனிக் கட்டிகளுடன் சேர்த்து ஏற்றி அனுப்பப்பட்ட பழங்கள் அழுகிப்போயின. அதனால், அவரது கடன் சுமை அதிகமாகி, அதில் இருந்து மீள முடியாமல் சிறை வாசமும் அனுபவித் தார்.கடனில் இருந்து விடுபட உள்ள ஒரே வழி இந்தியாவுக்கு ஐஸ் அனுப்புவதே என்று உணர்ந்துகொண்ட டூடர், அதன் மூலம் சுலபமாகப் பணம் சம்பாதிக்க முடிவு செய் தார். அந்த நாட்களில் பனிப் பாளங்களை அறுவடை செய்வது கஷ்டமான காரியம். அதை முறைப்படுத்தி பனிக் கட்டிகளைச் சதுர வடிவில் வெட்டி, வைக்கோல் சுற்றி அனுப்பினால், அதை நல்ல விலைக்கு விற்று விடலாம் என்று திட்டமிட்டார் டூடர்.அதன்படி, பாஸ்டன் பகுதியில் உள்ள ஏரிகளில் உறைந்த பனிக் கட்டிகளை அறு வடை செய்து கப்பலில் ஏற்றினார். 180 டன் கொள்ளவு உள்ள கிளிப்பர் டுஸ்கானி கப்பல், அமெரிக்காவில் இருந்து 1833-ம் வருடம் மே மாதம் 7-ம் தேதி இந்தியாவுக்குப் புறப்பட்டது. 16,000 மைல்கள் தூரத்தைக் கடந்து, அது கொல்கத்தாவை அடைய வேண்டும். அதற்கு நான்கு மாதங்கள் ஆகும். அது வரை ஐஸ் கட்டிகள் கரையாமல் இருக்க, முறையான பாதுகாப்பு வசதி செய்யப்பட்டு இருந் தது. அதன் கேப்டனாக இருந்தவர் லிட்டில் ஃபீல்டு.  டூடரின் சார்பில் விற்பனைப் பிரதியாக கப்பலில் உடன் வந்தவர் வில்லியம் ரோஜர்ஸ்.  


1833-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் கல்கத்தாவை வந்து அடைந்தது டூடரின் கப்பல். 50 டன்னுக்கும் மேலான ஐஸ், வழியிலே கரைந்துபோய்விட்டது. வங்காள மக்கள் அப்போதுதான் முதன் முறையாக ஐஸ் கட்டிகளைப் பார்த்தார்கள். அவர்களால் நம்பவே முடியவில்லை. தொட்டால் கைகளைச் சில்லிடவைக்கும் அந்த மாயப் பொருளை வியப்போடு பார்த்தார்கள்.கல்கத்தா துறைமுகத்தில், ஐஸ் கட்டிக்கு வரி போடுவதா, வேண்டாமா என்ற விவாதம் நடந்தது. ஐஸுக்கு வரி விலக்கு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டது. அதை  கவர்னர் வில்லியம் பென்டிக் ஏற்றுக்கொண்டார். அத்துடன், ஐஸ் கட்டிகளை ஏற்றி வரும் கப்பலில் இருந்து இரவில் சரக்குகளை இறக்கிக்கொள்வதற்கும் சிறப்பு அனுமதி அளிக்கப்பட்டது.'இந்தியக் கோடையின் வெப்பத்தில் தகித்துப் போயிருந்த வெள்ளையர்களுக்கு, அந்த ஐஸ் கட்டிகள் கடவுள் கொடுத்த அரிய பரிசைப்போல இருந்தது’ என்று எழுதுகிறார் ஹோர்டிங் என்ற ஆங்கில அதிகாரி. ஐஸ் கட்டி இறக்குமதி, அந்தக் காலத்தில் கல்கத்தா நகரில் பரபரப்பாகப் பேசப்பட்டது.நோபல் பரிசு பெற்ற எழுத்தாளரான கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ் தனது 'நூற்றாண்டு காலத் தனிமை’ நாவலில், ஐஸ் கட்டியை முதன்முதலாகப் பார்க்கப் போன சம்பவம் ஒன்றை விவரித்திருப்பார். அதில், ஐஸ் கட்டியைத் தொடும் சிறுவன் 'அது ஒரு விந்தை, இந்த நூற்றாண்டின் மகத்தான கண்டுபிடிப்பு’ என்று சொல்வான். அந்த மன நிலையே கல்கத்தாவுக்கு ஐஸ் வந்தபோது மக்களிடமும் இருந்தது.மருத்துவர்களும் மிகவும் வசதியானவர்களும் மட்டுமே ஐஸ் வாங்க அனுமதிக்கப்பட்டார்கள். ஐஸ் கட்டிகளை எப்படிப் பாதுகாப்பாக வைத்துக் கொள்வது என்று மக்களுக்குத் தெரியவில்லை.  அதை எப்படிப் பயன்படுத்துவது என்பதும் புரியவில்லை. ஐஸ் கட்டியை மண்ணில் முளைக்கவைத்தால், ஐஸ் மரம் வருமா என்றெல்லாம் மக்கள் கேள்வி கேட் டார்கள்.குளிர்பானம், மது, சுவையூட்டப்பட்ட பால் ஏடு, பழச் சாறு ஆகியவற்றுடன் ஐஸ் சேர்க்கப்பட்டு பயன்பாட்டுக்கு வர ஆரம்பித்தது. அதைவிடவும், சமைத்த உணவுகளை இரண்டு நாட்கள் வரை கெட்டுப்போகாமல் ஐஸ் கட்டிகள் பாதுகாத்த விந்தை ஆங்கிலேயக் குடும்பங்களை சந்தோஷத்தில் ஆழ்த்தியது. காய்ச்சல் மற்றும் வயிற்று நோவைப் போக்க மருத்துவர்கள் ஐஸைப் பரிந்துரை செய்ய ஆரம்பித்தார்கள்.

 விகடன் 


No comments:

Post a Comment