Search This Blog

Saturday, January 21, 2012

சச்சின் முதல் வைகோ வரை - மக்கள் கணிப்பு! , ஓ பக்கங்கள், ஞாநி


சென்னையில் நடக்கும் புத்தகக் கண்காட்சிக்குத் தொடக்கம் முதல் 35 வருடங்களாக இடை விடாமல் சென்று வருகிறேன். சுமார் ஒன்பது ஆண்டுகளாக நானே அங்கே ஒரு கடையையும் நான் பதிப்பித்திருக்கும் என் புத்தகங்களை விற்பதற்காக நடத்தி வருகிறேன்.

என் அரங்கில் தினசரி தேர்தல் நடத்துவது வழக்கம். அரசியல், கலாசார, இலக்கியம், நடப்பியல் சார்ந்த ஒரு விஷயத்தில் கேள்வி கேட்டு அதற்கு இரண்டு மூன்று பதில்களைச் சொல்லி எந்த பதிலை நீங்கள் ஆதரிக்கிறீர்களோ அதற்கு வோட்டுப் போடும்படி வாசகர்களைக் கேட்கிறோம். மறுநாள் அதே இடத்தில் அறிவிப்புப் பலகையில் வாசகர் தீர்ப்பு விவரங்களையும் அறிவிக்கிறோம். 

ஒவ்வோராண்டும் வாசகர்கள் உற்சாகமாகப் பங்கேற்கிறார்கள். சென்ற புத்தகக் கண்காட்சியில் ஜனவரியிலேயே அடுத்த ஆட்சி அ.தி.மு.க.தான் என்று 66 சதவிகிதம் பேர் வாக்களித்துக் கருத்துத் தெரிவித்தது மே மாதத்தில் நிஜமாயிற்று. படித்தவர்கள் வோட்டு தி.மு.கவுக்கு எதிராகச் சென்றதால்தான் அது தோற்றது. படித்தவர்களின் மன நிலையை ஒவ்வொரு வருடமும் என் அரங்கின் தேர்தல்களில் உணரமுடிகிறது. 

இந்த வருடம் நடந்த தேர்தல்களில் வந்த சில முடிவுகளைப் பார்க்கலாம். 


பாரத் ரத்னா இந்திய அரசின் மிக உயரிய விருது. அதை சச்சின் டெண்டுல்கருக்குத் தரவேண்டும் என்று ஓர் ஆதரவுப் பிரசாரம் பலமாக நடந்துவருகிறது. இது பற்றி வோட்டெடுப்பு நடத்தினோம். சச்சினுக்குத் தரலாம் என்றவர்கள் 23%. செஸ் மேதை விஸ்வநாதன் ஆனந்துக்குத் தரலாம் என்றவர்கள் இன்னொரு 23 %. பாரத் ரத்னா விருதை விளையாட்டு வீரர்களுக்கெல்லாம் தரக்கூடாது என்றவர்கள்தான் அதிகம் - 54% !முல்லைப் பெரியாறு சிக்கலுக்கு என்ன தீர்வு? பழைய அணையை பலப்படுத்தினாலே போதும் என்பதற்குத்தான் அதிக ஆதரவு 54% வோட்டு. புது அணை கட்ட வேண்டும் என்பதை ஆதரித்தவர்கள் வெறும் ஒரு சதவிகிதம் பேர். எந்த அணையாக இருந்தாலும் அதை மத்திய அரசு வசம் தரவேண்டும் என்று சொன்னவர்கள் 26%. அணை பலம் பற்றிய பயத்தைப் போக்க, பழைய அணையில் நீர் அளவைக் குறைத்துவிட்டு, அதற்குச் சமமான நீரைத் தமிழ்நாட்டுக்குள்ளேயே தேக்கிவைத்துக் கொள்ள, பல தேக்கங்கள் கட்டலாம் என்ற தீர்வை ஆதரித்தவர்கள் 19 சதவிகிதம் பேர். சசிகலாவை ஜெயலலிதா வீட்டை விட்டு அனுப்பியது சென்ற ஆண்டின் மிகப் பெரிய அரசியல் நிகழ்வு. முப்பது ஆண்டுகளாக உடன் இருந்த சசிகலாவையும் அவர் உறவினர்களையும் அ.இ.அ.தி.மு.க. விலிருந்து ஜெயலலிதா நீக்கியது ஏன் என்று காரணங்களை வெளியிடவேண்டும் என்று கருதியவர்கள் 43%. காரணம் சொல்லத் தேவையில்லை என்றவர்கள் வெறும் 12%. காரணம் தெரிவித்தாலும் தெரிவிக்காவிட்டாலும், இது மக்களைப் பாதிக்கும் விஷயமே அல்ல என்று கருத்துச் சொன்னவர்கள்தான் அதிகம். 45%! இந்த முடிவு எனக்கு ஆச்சர்யமாக இருக்கிறது. ஜெயலலிதா - சசிகலா நட்பு மக்களைப் பாதிக்கவில்லை என்று அர்த்தமா? ஒய் திஸ் கொலைவெறிடீ பாடல் உலகப் புகழ் பெற்றிருப்பது தமிழ் மொழி, திரைத் துறைக்கெல்லாம் பெருமை என்று நினைப்பவர்கள் 11%! இந்தப்பாடலினால் தமிழ் மொழி, திரைத் துறைக்கெல்லாம் அவமானம் என்று குமுறியவர்கள் 28%. இது வியாபாரம். இதில் மான-அவமானம் எதுவும் கிடையாது என்று கருதுபவர்கள் 61 சதவிகிதம் பேர். ஒரு விஷயத்தில் பொதுப் புத்தி எப்படிச் செயல்படுகிறது என்பதை அவ்வளவு லேசில் கணிக்க முடியாது என்பதற்கு இது சிறந்த உதாரணம். காசு, பண வியாபாரத்துக்காக, தமிழகத்தில் செய்யப்படும் பலவற்றில் நாம் மான, அவமானம் பார்க்க வழியில்லை என்பதுதான் இங்கே யதார்த்த நிலை என்று மக்களே நினைக்கிறார்கள்.


வழக்கமாக மன்மோகன்சிங் எந்த விஷயத்திலும் கடுமையாகக் கருத்துத் தெரிவிக்கமாட்டார். அவரே ஒரு விஷயத்தில் இது ஒரு தேசிய அவமானம் என்று சொன்னது ஆச்சர்யமாக இருந்தது. 42 சதவிகிதக் குழந்தைகள் ஊட்டச் சத்துக் குறைவோடு இருப்பது தேசிய அவமானம் என்கிறார் பிரதமர் மன்மோகன்சிங். உண்மைதான். எல்லோரும் அவமானப்படவேண்டிய விஷயம்தான் இது. ஆனால் இந்த அவமானத்துக்கு யார் பொறுப்பு? இதை வாசகர்களிடம் கேட்டோம். தனிப்பட்ட குடும்பங்களின் விழிப்புணர்வு இன்மையினால் தான் குழந்தைகளுக்கு ஊட்டச் சத்துக் குறைவு ஏற்படுகிறது என்று நினைப்பவர்கள் வெறும் 29 சதவிகிதத்தினர்தான். இந்த தேசிய அவமானம் ஏற்படக் காரணமாக இருந்தது அரசாங்கங்களின் பொருளாதாரக் கொள்கைகள் தான் என்று சொன்னவர்கள் மிக அதிகம் - 71%.இந்தப் புத்தகக் கண்காட்சியில் மனத்தை நெகிழவைத்த இரண்டு நிகழ்ச்சிகளைச் சந்தித்தேன். தமிழறிஞரும் எழுத்தாளருமான மா.சு.சம்பந்தம் சில மாதங்கள் முன்னால் காணாமல் போய்விட்டார். எண்பது வயதைத் தாண்டிய அவர் சென்னையில் தினமும் ஏதேனும் ஓர் இலக்கியக் கூட்டத்துக்கோ, பொது நிகழ்ச்சிக்கோ பஸ் பிடித்து, தாமே தனியாகச் செல்லும் வழக்கம் உடையவர். அப்படி ஒரு நிகழ்ச்சிக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை.அச்சுக கலை, சென்னை நகர வரலாறு போன்ற பல அருமையான புத்தகங்களை எழுதியிருக்கும் அவர் ஒருவேளை புத்தகக் கண்காட்சிக்கு வந்தால் உடனே தகவல் சொல்லுங்கள் என்று அவர் படத்துடனான கோரிக்கைச் சீட்டுகளை அவருடைய மகன், கடைகள் தோறும் விநியோகித்துக் கொண்டிருந்தார். தந்தையைத் தேடும் மகனைச் சந்தித்த மறுநாளே மகனைக் காப்பாற்றப் போராடும் தாயையும் கண்காட்சியில் சந்தித்தேன். ராஜீவ் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டு இருபதாண்டுகளாகச் சிறையில் இருந்து வரும் பேரறிவாளனின் தாய் அற்புதம் அம்மாள், மரண தண்டனைக்கெதிராகக் குரல் கொடுத்து, தம் மகன் உயிரைக் காப்பாற்ற உதவும்படி பலரையும் கண்காட்சியில் சந்தித்து வேண்டிக் கொண்டிருந்தார். ஒரு சில இளைஞர்கள் அவருக்கு உதவியாக இருந்தபடி, பேரறிவாளன் எழுதிய நூலையும் பிரசுரங்களையும் விநியோகித்தனர். பத்தொன்பது வயதில் சிறை சென்ற பேரறிவாளன் சிறையில் இருந்தபடி படித்து கணினித் துறையில் பட்டதாரியாகியுள்ளார். தமிழகச் சட்டமன்றமே ராஜீவ் கொலையில் பேரறிவாளன் உள்ளிட்ட நால்வரின் மரண தண்டனையைக் குறைக்கத் தீர்மானம் நிறைவேற்றியும், முடிவு காலதாமதமாகிக் கொண்டே இருக்கிறது. 


அடுத்த வருடப் புத்தகக் காட்சியில் மா.சு.சம்பந்தனும் பேரறிவாளனும் ஒவ்வொரு கடையாகச் சென்று தமக்கு விருப்பமான நூல்களைத் தேடும் காட்சியைக் காண முடிந்தால் நிச்சயம் மகிழ்வேன். என் அரங்கில் நடத்திய தேர்தலில் மரண தண்டனை குறித்து மக்கள் கருத்தைக் கேட்டேன். எல்லாக் கொலைகளுக்கும் மரண தண்டனைதான் சரி என்றவர்கள் 23%தான். மரண தண்டனை முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும் என்றவர்களோ 36%. சுயநலம் சாராத, அரசியல், கொள்கை சார்ந்த கொலைகளுக்கு மட்டும் மரண தண்டனையை ஒழிக்கலாம் என்றவர்கள் 41%.மிகுந்த பாதுகாப்புடன்தான் நடத்துவோம். உச்ச நீதிமன்றம் தெரிவிக்கும் அத்தனை பாதுகாப்பு ஏற்பாடுகளையும் உறுதி செய்வோம். ஜல்லிக்கட்டை அனுமதியுங்கள் என்று நீதிமன்றங்களில் தமிழக அரசும் ஜல்லிக்கட்டு அமைப்பாளர்களும் மன்றாடிக் கேட்டு அதை நடத்தி வருகிறார்கள். என்ன பாதுகாப்பு ஏற்பாடு செய்தாலும், மறுநாள் காலை பத்திரிகைச் செய்தியில் 60 பேர் படுகாயம். இருவர் மரணம். நால்வர் கவலைக்கிடம் என்றுதான் வருகிறது. இந்நிலையில் மக்கள் என்ன நினைக்கிறார்கள்? ஜல்லிக் கட்டு தமிழர்களின் வீர விளையாட்டு. பண்பாட்டின் அடையாளம். எனவே தடை செய்யக் கூடாது என்று கருதுவோர் 41%. மனிதனையும் விலங்கையும் கொடூரமாக மோதவைக்கும் குரூரமான ஜல்லிக்கட்டை தடை செய்ய வேண்டும் என்போர் 59%.சென்ற வருடத்தை விட இந்த ஆண்டு கணினி, இணைய உபயோகம் அதிகரித்திருக்கிறது. குறிப்பாக ஃபேஸ்புக் போன்ற சமூக உறவாடல் தளங்களில் வலம் வரும் படித்தோர் எண்ணிக்கை கூடியிருக்கிறது. கூடவே இவற்றில் ஆபாசம், அவதூறு எல்லாம் கலந்தே வருகின்றன. ஆபாசம், அவதூறு முதலியவற்றைத் தடுக்க ஃபேஸ்புக், கூகுள், இணையதளங்கள் அனைத்துக்கும் முன் தணிக்கை தேவை என்கிறது இந்திய அரசு. ஆமாம், இது நியாயமான பிரச்னை. எனவே முன்தணிக்கை தேவைதான் என்று வாக்களித்தவர்கள் 20%. இல்லை; இது தவறு. அரசியல் உள்நோக்கம் உடையது. எனவே கூடாது என்றவர்கள் 17%. முன் தணிக்கையெல்லாம் இந்தத் தொழில்நுட்பத்தில் நடை முறை சாத்தியமில்லை. சுய கட்டுப்பாடு தான் தீர்வு என்று வாக்களித்தவர்கள்தான் அதிகம் - 63%. அரசு நடவடிக்கை பல சமயங்களில் தேவை என்றாலும், அதில் கலந்து வரும் அசட்டுத்தனமும், அதிகார வெறியும் நடவடிக்கை இல்லாமல் இருந்தாலே பரவாயில்லை என்று கூட தோன்ற வைத்துவிடும். சுமார் ஒரு கோடி ரூபாய் செலவழித்து, தேர்தல் ஆணையம் உத்திரப் பிரதேசத்தில் மாயாவதி கட்சி சின்னமான யானைச் சிலைகளையெல்லாம் துணி போட்டு மறைத்தது, அந்த மாதிரி ஒரு நடவடிக்கைதான் என்று எனக்குத் தோன்றியது. மக்கள் என்ன நினைக்கிறார்கள்? மாயாவதி, கன்ஷிராம், கட்சி சின்னமான யானைச் சிலைகளைத் துணி போட்டு மூடும் படி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது முற்றிலும் நியாயமானது என்று ஏற்றவர்கள் 31%. அது அர்த்தமற்ற அசட்டு உத்தரவு என்று (என்னைப் போலவே) நினைப்பவர்கள் 26%. எல்லாக் கட்சிகளின் தலைவர்கள், சின்னங்களின் சிலைகளையும் தேர்தல் ஆணையம் மூடச் சொல்ல வேண்டும் என்றோர் 42%. 

புத்தகக் கண்காட்சி நடந்து கொண்டிருந்த சமயத்தில் ஒரு நாள் காலை ஒரு டி.வி. நிகழ்ச்சிக்குச் சென்றேன். என்னுடன் அதில் கலந்துகொண்டவர் ஒரு மூத்த அரசியல் பிரமுகர். சும்மா அரட்டை அடித்துக் கொண்டிருந்தபோது, இந்திய அரசியலையே குழப்பிச் சிக்கலாக்கிக் கொண்டிருப்பவர்கள் மூன்று பெண்கள் என்றார். மூவரும் திருமணம் செய்யாமல் குடும்பப் பொறுப்பு தெரியாமல் இருப்பவர்கள். எனவே பக்குவமும் இல்லை என்றார். பெண் விரோதக் கருத்துகளான அவற்றுடன் எனக்கு உடன்பாடில்லை. ஆனால் இந்த மன நிலை பலரிடமும் இருப்பதைக் கவனிக்கிறேன். அடுத்த நாள் பத்திரிகைகளில் இதே போன்ற பெண் விரோதக் கருத்துகளுக்குப் புகழ் பெற்ற ஒரு பத்திரிகையாளர் பிரதமராகும் தகுதி உடையவர் ஜெயலலிதா என்று சொல்லியிருந்தார்! சரி. மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்று என் அரங்கில் இதைத் தேர்தலாக்கினேன்.மூன்று மாநிலப் பெண் முதல்வர்களில் உங்கள் பார்வையில் பிரதமர் பதவிக்கு ஏற்றவர் யார்? என்று கேட்டதற்கு ஜெயலலிதா என்றவர்கள் 46%. மாயாவதி என்றவர்கள் 15%. மம்தா பேனர்ஜிக்கு ஆதரவு தெரிவித்தோர் 39%. இதில் என்னைக் கவர்ந்த அம்சம் மம்தாவுக்கு விழுந்த வோட்டுதான். வெளி மாநிலத்தில் அவருக்கு இவ்வளவு ஆதரவு கிடைக்கிறது. ஜெயலலிதாவுக்கு மேற்கு வங்கத்தில் இந்த அளவு ஆதரவு கிடைக்குமா என்பது சந்தேகம்தான்.ஒவ்வொரு புத்தகக் கண்காட்சியிலும் நான் வோட்டெடுப்பில் வைக்கும் ஒரு கேள்வி: தமிழகத்தில் தி.மு.க., அ.இ.அ.தி.மு.க. இரு கட்சிகளுக்கும் மாற்றாக எது வரவேண்டும் என்று விரும்புகிறீர்கள்? இந்த முறை வந்த பதில்கள் இதோ: ம.தி.மு.க. - 65%. பா.ம.க. - 6%. தே.மு.தி.க. - 18%. காங்கிரஸ் - 11%. இதில் ஆச்சர்யமானது பா.ம.க.வின் குறைவான செல்வாக்கும் ம.தி.மு.க.வின் எதிர்பாராத பெரும் செல்வாக்கும்தான். என் அரங்குக்கு வந்த ஒரு தே.மு.தி.க., எம்.எல்.ஏ. இந்த முடிவுகளைப் படித்துவிட்டு, மீடியா ஆதரவு அண்மைக்காலமாக வைகோவுக்கு அதிகம் இருப்பதால் இப்படி வோட்டு விழுந்திருக்கிறது என்று ஒரு கருத்து சொன்னார். எனக்கென்னவோ, உள்ளாட்சித் தேர்தல் பங்கேற்பு, முல்லைப் பெரியாறு, கூடங்குளம் பிரச்னைகளில் களத்தில் எடுத்த நடவடிக்கைகள்தான் ம.தி.மு.க.வுக்கு மறுபடி ஒரு கவனம் பெற்றுத் தந்திருப்பதாகத் தோன்றுகிறது. 

கடைசி நாள் வைத்த வாக்கெடுப்புக் கேள்வி : அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் நீங்கள் யாரைத் தேர்ந்தெடுப்பீர்கள்? காங்கிரஸ் 8% வாங்கியதில் எனக்குப் பெரிய ஆச்சர்யமில்லை. பா.ஜ. க.- 42% எடுத்ததுதான் ஆச்சர்யம். அண்ணா ஹசாரே படித்தவர்கள் மத்தியில் காங்கிரசுக்கு எதிராக ஏற்படுத்திய தாக்கம் பா.ஜ.க.வுக்குப் பயன்படுகிறது என்று தோன்றுகிறது. ஆனால் எனக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்திய தகவல் மூன்றாவது அணிக்கு 50% வாக்குகள் விழுந்ததுதான். மூன்றாவது அணி எதையும் தில்லியில் இப்போதைக்குக் காணோம். ஆனாலும் அப்படி ஒன்று இருந்தால் அதை ஆதரிக்க மக்கள் விரும்புகிறார்கள் என்பது காங்கிரசுக்கும் பா.ஜ.க.வுக்கும் முக்கியமான எச்சரிக்கைச் செய்தி.





1 comment:

  1. அருமையான பதிவு.
    நன்றி ஐயா.

    ReplyDelete