கல்கத்தாவில் வரி இல்லாமல் அனுமதிக்கப்பட்ட ஐஸ் கட்டிக்கு, பம்பாய்
துறைமுகம் வரி விதித்தது. தென் மேற்குப் பருவ காலத்தில் ஐஸ் ஏற்றி வரும்
கப்பல்களுக்கு, 110 ரூபாய் வரி விதிக்கப்பட்டது. இதே வரி, வட கிழக்குக்
காற்று வீசும் பருவ காலத்தில் பாதியாகக் குறைக்கப்பட்டு 55 ரூபாய் மட்டுமே
விதிக்கப்பட்டது. அத்துடன், லைட் ஹவுஸ் வரியாக 15 ரூபாயும், காவல் துறை வரி
10 ரூபாயும் விதிக்கப்பட்டது. அன்று, 450 கிராம் எடை உள்ள ஐஸ் கட்டியின்
விலை நான்கு அணா.மதராஸுக்கு ஐஸ் கட்டிகள் வந்து இறங்கியபோது, அதற்கு வரி விதிக்கப்படவில்லை.
முற்றிலும் வரி விலக்கு அளிக்கப்பட்டது. டூடர் தனது ஐஸ் கம்பெனியின்
சேமிப்புக் கிடங்குகளை, கல்கத்தா, பம்பாய் மற்றும் மதராஸ் ஆகிய மூன்று
நகரங்களில் அமைத்தார். அப்படி டூடர் கட்டிய கட்டடம்தான் சென்னையில் இன்று
விவேகானந்தர் இல்லமாக உள்ள ஐஸ் ஹவுஸ்!ஐஸ் ஹவுஸ் கட்டடம், அன்று கடல் அருகே இருந்திருக்கிறது. காலப்போக்கில்
கடல் உள்வாங்கியதால், இது கடலில் இருந்து இன்று தள்ளி இருக்கிறது!அந்த நாட்களில், இந்தக் கட்டடத்தில் ஒரு கண்ணாடிப் பெட்டி ஒன்றில், மக்கள்
பார்த்து மகிழ்வதற்காக பெரிய ஐஸ் கட்டி ஒன்று வைக்கப்பட்டு இருக்குமாம்.
அந்தக் காலகட்டத்தில், விருந்துகளில் ஐஸ் கலந்த பானம் தரப்படுவது மிகப்
பெரிய கௌவரமாகக் கருதப்பட்டது.
மருத்துவக் காரணம் காட்டி ஐஸ் கட்டி வாங்கி, சொந்த உபயோகம் செய்து
ஏமாற்றியதாக ஒருவர் மீது புகார் அளிக்கப்பட்டு இருக்கிறது. 1834-ல் இருந்த
இந்த நிலை அடுத்த ஐந்து ஆண்டுகளில் மாறி, மெள்ள ஐஸ் வணிகம் சூடு பிடிக்க
ஆரம்பித்தது. பம்பாய், கல்கத்தா, மதராஸ் ஆகிய நகரங்களில் புதிய ஐஸ்
வணிகர்கள் உருவானார்கள். அதற்கான பாதுகாப்பு கிடங்குகள் உருவாகின. கோடைக்
காலங்களில் ஐஸ் வாங்க சண்டை, தள்ளுமுள்ளு நடந்ததோடு, விலையும் கடுமையாக
ஏறியது. அன்று தொடங்கிய ஐஸ் கட்டி வணிகம் 1880-ம் ஆண்டு வரை 47 ஆண்டுகள்
மிக முக்கியமான தொழிலாக நடைபெற்றது. இந்த நிலையில் கிழக்கிந்திய
கம்பெனியின் கவர்னர் பென்டிக் - டூடர் ஆகிய இருவரும் ஓர் ஒப்பந்தம்
செய்துகொண்டனர். அதன்படி, டூடரைத் தவிர வேறு யாரும் ஐஸ் கட்டி வியாபாரம்
செய்ய முடியாது. மேலும், ஐஸ் கட்டிகளைப் பாதுகாப்பாக சேமித்துவைக்க
கிழக்கிந்திய கம்பெனியே, டூடருக்கு ஓர் இடம் ஒதுக்கிக் கொடுத்தது.
வில்லியம் பென்டிக் ஒரு படி மேலே போய், ஐஸ் ஏற்றி வந்த கப்பலின்
கேப்டனுக்கு ஒரு தங்கக் கோப்பையைப் பரிசாக அளித்துத் தன் அன்பை
வெளிப்படுத்தினார்.அமெரிக்காவில் இருந்து 1856 முதல் 1882 வரையிலான காலத்தில், நாலு லட்சத்து
75,000 டன் ஐஸ் கட்டிகள் வெட்டி எடுக்கப்பட்டு, கப்பலில் இந்தியாவுக்குக்
கொண்டுவரப்பட்டு உள்ளது. அதில், ஒரு லட்சத்து 21,000 டன் வழியிலேயே
கரைந்துபோனது. மூன்று லட்சத்து 53,450 டன் ஐஸ் கட்டிகள் இந்தியா மற்றும்
அண்டை நாடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டன.இந்த ஐஸ் வியாபாரத்தால், தனது இரண்டு லட்சத்து 10,000 டாலர் கடனைத்
திருப்பிக் கொடுத்த டூடர், ஆண்டுக்கு ஒரு லட்சத்து 85,000 டாலர்கள்
சம்பாதித்து இருக்கிறார். அதனால், இந்தியாவில் அவர் ஐஸ் சேமிப்புக்
கிடங்குகளை உரிய முறையில் கட்டி விற்பனையை அதிகரித்து வந்தார்.இந்த ஐஸ் ஏற்றுமதி விஷயத்தில் இன்னோர் உண்மையும் வெளிப்படுகிறது. அன்று,
அமெரிக்காவுக்கு இந்தியாவில் இருந்தே அதிகமான பொருட்கள் ஏற்றுமதி
ஆகியிருக்கின்றன. அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு வந்த பாதிக்
கப்பல்கள் காலியாகத்தான் வந்து இருக்கின்றன. இன்று, அந்த நிலை
தலைகீழாகிவிட்டது.
ஐஸ் கட்டிகளை இந்தியாவுக்குக் கொண்டுவந்து இறக்கிவிட்டு, பருத்தி, வாசனைப்
பொருட்கள், தேக்கு, சந்தனம், மிளகு ஆகியவற்றை ஏற்றிக்கொண்டு அமெரிக்கா போன
கப்பலில், இந்தியாவில் இருந்த கரப்பான் பூச்சிகளும் போயின. இந்த ஐஸ் வணிகம் பற்றி இயற்கையியலாளர் தோரூ, 'வால்டன்’ என்ற நூலில் விரிவாக
எழுதி இருக்கிறார். அவர், வால்டன் என்ற ஏரியின் அருகில் இயற்கையோடு
இணைந்து வாழ்ந்தவர். வரி கொடாமை, ஒத்துழையாமை போன்ற போராட்டங்களை இவர்தான்
முதலில் நடத்தியவர். இவரைப் பின்பற்றியே அந்த வழிமுறைகளைக் காந்தி
இந்தியாவில் அறிமுகம் செய்தார். வால்டன் ஏரிப் பகுதியில் இருந்து
நாளெல்லாம் பனிப் பாளங்கள் வெட்டி எடுக்கப்பட்டு இந்தியா போவதை, கங்கையும்
வால்டன் தண்ணீரும் ஒன்று சேரும் சங்கமம் என்றே குறிப்பிட்டு இருக்கிறார்.நீராவியைப் பயன்படுத்தி செயற்கை ஐஸ் உருவாக்க முடியும் என்று நிரூபணம்
ஆகும் வரை அமெரிக்காவில் இருந்து ஐஸ் இறக்குமதி செய்யப்பட்டு முக்கிய
வணிகமாக நடைபெற்று வந்தது. 1878-ம் ஆண்டு பெங்கால் ஐஸ் கம்பெனி என்ற
செயற்கை ஐஸ் தயாரிக்கும் கம்பெனி தொடங்கப்பட்டது. ஆகவே, டூடரின் ஐஸ் வணிகம்
சரிவை நோக்கிச் சென்றது. 1882-ல் டூடரின் ஐஸ் வணிகம் முற்றிலும்
நின்றுபோனது.20 ஆண்டு காலம் இந்தியாவின் 'ஐஸ் ராஜா’ என்று கொண்டாடப்பட்ட டூடர்,
கல்கத்தாவில் நிறைய இடங்களை விலைக்கு வாங்கியதோடு, அமெரிக்காவிலும் பெரிய
கோடீஸ்வரராகவே வாழ்ந்தார்.சென்னையில் உள்ள ஐஸ் அவுஸ் 1842-ம் ஆண்டு கட்டப்பட்டது. கப்பலில் இருந்து
இறக்குவதற்கு வசதியாக, கடற்கரையிலேயே பெரிய கட்டடம் ஒன்றை டூடர்
உருவாக்கினார். அங்கே, தினமும் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை ஐஸ்
விற்கப்பட்டது. ஞாயிற்றுக் கிழமைகளில், காலை இரண்டு மணி நேரம் மட்டுமே ஐஸ்
விற்பனை நடந்தது.செயற்கை ஐஸ் வந்த பிறகு, ஐஸ் ஹவுஸை விற்றுவிட முடிவு செய்தார் டூடர்.
அன்று, உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக இருந்த பிலிகிரி அய்யங்கார், ஐஸ்
ஹவுஸை விலைக்கு வாங்கி, குடியிருப்பதற்கு ஏற்றவாறு மாற்றம் செய்து பெரிய
மாளிகையாக மாற்றினார். தனது வழிகாட்டியான, உயர் நீதிமன்ற நீதிபதி கெர்னனின்
நினைவாக, கெர்னன் கோட்டை என்று பெயரும் சூட்டினார்.1897-ம் ஆண்டு சிகாகோவில் இருந்து தாய்நாடு திரும்பிய சுவாமி
விவேகானந்தருக்கு மதராஸ் எழும்பூர் ரயில் நிலையத்தில் மிகுந்த வரவேற்பு
அளிக்கப்பட்டது. விவேகானந்தரின் சீடரான பிலிகிரி அய்யங்கார், அவரைத் தனது
வீட்டில் தங்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். அங்கு தங்கிய விவேகானந்தர்,
தினமும் ஓர் உரை நிகழ்த்தினார்.1906-ல் பிலிகிரி அய்யங்கார் இறந்த பிறகு, அவரது வீடு
விற்கப்பட்டது. விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த ஜமீன்தார் ஒருவர் அந்தக்
கட்டடத்தை விலைக்கு வாங்கினார். பின்னர், 1917-ல் அரசாங்கம் அந்தக்
கட்டடத்தை வாங்கி, கணவனை இழந்த பிராமணப் பெண்களுக்கான இலவசத் தங்கும் இடமாக
மாற்றியது. . பிறகு, அந்தக் கட்டடத்தில் ஆசிரியர் பயிற்சி பெறும் மாணவியர்
தங்கும் விடுதி அமைக்கப்பட்டது.1963-ல் சுவாமி விவேகானந்தரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, அரசு அந்தக்
கட்டடத்தின் பெயரை 'விவேகானந்தர் இல்லம்’ என மாற்றியது. டூடர்,
கல்கத்தாவிலும் பம்பாயிலும் அமைத்து இருந்த ஐஸ் ஹவுஸ்கள் இன்று இல்லை.
ஆனால், சென்னையில் மட்டுமே ஐஸ் ஹவுஸ் இன்னும் ஒரு நினைவுச் சின்னமாக
இருக்கிறது.1,700-களில் குளிர்சாதனக் கருவி குறித்து ஆய்வுகளை மேற்கொண்டவர்
ஸ்காட்லாண்டில் வசித்த வில்லியம் கல்லன். 1805-ல் ஆலிவர் இவான்ஸ் என்ற
அமெரிக்கர் முதன்முதலாக குளிர்சாதனப் பெட்டியை வடிவமைத்தார். ஆனால், அது
மக்கள் பயன்பாட்டுக்கு வரவில்லை. 1834-ம் ஆண்டு ஜேக்கப் பெர்கின்ஸ்
என்பவர், அதன் திருத்தப்பட்ட வடிவத்தை உருவாக்கினார்.ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் 1911-ல், மக்கள் பயன்படுத்தும் குளிர்சாதனப் பெட்டியை அறிமுகப்படுத்தியது. 1918-ல் கெல்வினேட்டர் நிறுவனம் முறைப்படுத்தப்பட்ட
குளிர்சாதனப் பெட்டியை அறிமுகம் செய்தது. 1958-ல்தான் இந்தியாவில்
குளிர்சாதனப் பெட்டிகள் தயாரிக்கப்பட்டு விற்கப்பட்டன. இந்த 50 ஆண்டுகளில்
இந்த ஒரு சாதனத்தின் வழியே, இந்திய மக்களின் வெப்ப மண்டல உணவுப்
பழக்கங்கள் பெருமளவு மாறிவிட்டன. கூடவே, குளிர்ச்சிக்குப் பழகுதல் என்ற
புது வகைத் தகவமைப்பும் இந்தியர்களிடம் உருவாகி இருக்கிறது.
'இந்தியாவில் எதைத் தொட்டாலும் சூடாகவே இருக்கிறது. இவ்வளவு சூடான
நிலப்பகுதியில் வாழ்ந்து கொண்டும், மக்கள் சுடச்சுட உணவை சாப்பிட
விரும்புகிறார்கள். வெக்கை இவர்களுக்கு பிரச்னையே இல்லை. குளிர்ச்சி என்பதை
ஆடம்பரம் என்று இந்திய மக்கள் நினைக்கிறார்கள்’ என்று ரோஜர், தனது 1841-ம்
ஆண்டு நாட்குறிப்பில் எழுதி இருக்கிறார். ஆனால், அந்த மனநிலை இன்று
முற்றிலும் மாறிவிட்டது. குளிர்சாதனக் கருவிகளின் வருகையால் மூடப்பட்ட
ஜன்னல்களும், விலக்கப்பட்ட சூரிய வெளிச்சமும், வெம்மையறியாத உடலும் பல
புதிய நோய்களுக்குக் காரணமாக இருக்கின்றன.ஒருமுறை பிச்சைக்காரன் ஒருவன் கோபத்தில் சொன்னது இன்னமும் நினைவில்
இருக்கிறது. ''இந்த ஃபிரிட்ஜ் வந்த பிறகு பசியோடு வரும் பிச்சைக்காரனுக்கு
மிச்சம் மீதியுள்ள உணவைத் தர மறுக்கிறார்கள். உணவை நான்கு நாட்கள்கூட
ஃபிரிட்ஜில் வைத்துச் சாப்பிடுகிறார்கள்!''அந்தக் குரல் சமூக வரலாற்றில் ஏற்பட்ட மாற்றத்தை காட்டுகிறது. இந்த
விமர்சனக் குரலுக்கு நம்மிடம் பதில் இல்லை. விஞ்ஞானம், மனிதர்களின்
வசதிக்கும் பொருளாதார மேம்பாட்டுக்கும் துணை நிற்பது போலவே, மனித
இயல்புகளைக் கைவிடுவதற்கும், சக மனிதனைப் புறக்கணிப்பதற்கும் காரணமாக
இருக்கிறது என்பதுதான் உண்மை.ஒவ்வொரு கோப்பை ஐஸ்கிரீம் சாப்பிடும்போதும் அதை நாம் கட்டாயம் நினைவில்
வைத்துக்கொள்ள வேண்டும். அதுதான் வரலாறு நமக்கு உணர்த்தும் பாடம்.
விகடன்
அருமையான தகவல். எஸ்.ராவிற்கு நிகர் எஸ்.ராதான்
ReplyDelete