Search This Blog

Saturday, January 21, 2012

பொன்னுத்தாயி - முதல் பெண் நாகஸ்வர வித்வான்

ப்பேர்ப்பட்ட சாதனையாளரையும் கலைஞனையும்கூட காலம் மறந்துபோவது உண்டு. முதல் பெண் நாகஸ்வர வித்வான் மதுரை எம்.எஸ்.பொன்னுத்தாயின் வாழ்க்கையும் அப்படித்தான். அவர் கடந்த 17-ம் தேதி  இறந்துபோன பிறகுதான், எல்லோருக்கும் மீண்டும் அவர் ஞாபகம் வருகிறது! பொன்னுத்தாயின் பாட்டி பாப்பம்மாள் அந்தக் காலத்தில் பிரபலமான மிருதங்க வித்வான். எம்.ஆர்.ராதாவின் நாடகக் கம்பெனியில் அவர்தான் ஆஸ்தான வித்வான். பாட்டியின் இசை வாரிசாக பொன்னுத்தாயும் மதுரை மீனாட்சியம்மன் கோயிலின் ஆஸ்தான வித்வானாக இருந்த பி.நடேச பிள்ளையிடம் நாகஸ்வரம் கற்றார். இசையமைப்பாளர் ஜி.ராமநாதன் உள்ளிட்ட மேலும் ஆறு பேரிடம் பிற்காலத்தில் தம் இசை அறிவை பட்டை தீட்டிக் கொண்டார்.


மதுரை சித்திரைத் திருவிழா தசாவதார நிகழ்ச்சியில் 9 வயதில் பொன்னுத்தாயின் அரங்கேற்றம். அதன் பிறகு எத்தனையோ மேடைகள்; எண்ண முடியாத பட்டங்கள். 23 தங்கப் பதக்கங்களை வாங்கிக் குவித்தவர். ஜனாதிபதி, பிரதமர், தமிழக முதலமைச்சர்கள் உள்ளிட்ட  பெருந்தலைகளால் பட்டம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டவர். மதுரை காந்தி மியூஸியம் திறப்பு விழாவுக்கு பிரதமர் நேரு வந்தபோதும் இவரது கச்சேரிதான். அப்போதெல்லாம் மதுரைக்குச் சினிமா இசைக் கலைஞர்கள் யார் வந்தாலும் இவர் வீட்டுக்கு வந்து விருந்து சாப்பிடுவது வழக்கம். பொன்னுத்தாயின் கணவர் சிதம்பர முதலியார், சுதந்திரப் போராட்ட தியாகி. காமராஜர், பக்தவத்சலம் ஆகியோருக்கு நெருக்கம். காங்கிரஸ் கட்சியின் ஜில்லா போர்டு தலைவராகவும் எம்.எல்.சி-யாகவும் இருந்தவர். மதுரை முனிசிபாலிட்டி சேர்மன், மீனாட்சி அம்மன் கோயில் அறங்காவலர் பதவிகளையும் அலங்கரித்தவர்.


பொன்னுத்தாயிக்கு பூர்வீகச் சொத்துக்கள் ஏராளம். அத்தனையும் போய், அவரது மகனும் இரண்டு மகள்களும் இப்போது வாடகை வீட்டில்தான் இருக்கிறார்கள்.அப்பெல்லாம் கச்சேரிக்குப் போயிட்டு வந்தாங்கன்னா அவங்களோட பட்டுச் சேலைகளை மடிச்சு வைக்கிறதுக்கே தனியா ரெண்டு பேரை வெச்சிருப்பாங்க. எம்.எஸ்.விஸ்வநாதன் கல்யாணத்துல இவங்கதான் நாகஸ்வரம் வாசிச்சாங்க. நாகஸ்வரக் கலைஞர்கள் சங்கத் தலைவரா இருந்தப்ப, மத்த கலைஞர்களுக்கு எல்லாம் வீட்டுமனை வாங்கிக் கொடுத்தவங்க, தனக்கு வந்த மனையை வேண்டாம்னு திருப்பிக் குடுத்துட்டாங்க. கடைசியா, அரசாங்கம் குடுத்த 1,000 ரூபாய் பென்ஷனைத் தவிர, எந்தச் சலுகையையும் அவங்க அனுபவிக்கலை'' என்று உணர்ச்சிவசப்படுகிறார் பொன்னுத்தாயின் மாமன் மகன் பரஞ்சோதி மணி.

வாழும்போது, 'நாத கான அரசி’ பட்டம் பெற்ற பொன்னுத்தாயி, சாகும் தருவாயில் தனக்கென சொந்தமாக வைத்திருந்தது ஒரே ஒரு பொடி டப்பா மட்டுமே... அதுவும் காலியாக! 

விகடன் 



2 comments:

  1. கர்நாடக சங்கீதப் பாடத்தில் கேள்விப்படாத விஷயத்தை இதுல தெரிஞ்சுகிட்டேன். மிகவும் நன்றி.

    ReplyDelete
  2. நல்ல பதிவு.
    நன்றி.

    ReplyDelete