Search This Blog

Sunday, January 01, 2012

2012 என்ன செய்ய வேண்டும்?

 
2011-ம் ஆண்டு முடிந்து, 2012-ம் ஆண்டு பிறந்து விட்டது. 2011-ம் ஆண்டு முடிந்ததே தவிர, பொருளாதார ரீதியாக மகிழ்ச்சியாக முடிந்ததென்று சொல்ல முடியாது. 2008-ம் ஆண்டு நடந்தது போல 2011-லும் பலவிதமான இழப்புகளை சந்திக்க வேண்டியிருந்தது. முடிந்தது முடிந்துவிட்டது, இனிவரும் 2012-ல் நாம் எந்தெந்த விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும் என பல்துறை நிபுணர்கள் அலசி ஆராய்ந்து கொடுத்த ஆலோசனைகளின் தொகுப்பு இனி...
 
எந்த நாடு இன்ஃப்ரா துறைக்கு அதிகமாகச் செலவு செய்கிறதோ, அந்த நாட்டில் வளர்ச்சி அதிகமாக இருக்கும். இன்ஃப்ரா துறை என்றால் புதிது புதிதாக ரோடு போடுவது மட்டுமே அல்ல. புதுப்புது துறைமுகங்கள், தொழிற்சாலைகளைக் கொண்டு வருவது. இத்துறையில் பணத்தைச் செலுத்துவதன் மூலம் நிறைய வேலைவாய்ப்புகள் உருவாகும்.இந்தியாவில் இத்துறையின் வளர்ச்சி ஆமை வேகத்தில் இருக்கிறது. சரக்கு ரயில்களின் சராசரி வேகம் மணிக்கு 20 கி.மீ., சீனாவில் மணிக்கு 120 கி.மீ. ஓடுகிறது. இந்த ஆமை வேகம் காரணமாக சரக்கு போக்குவரத்து மிகவும் பாதிப்படைந்து வருகிறது.ஆனால், சீனாவில் பயணிகள் ரயிலின் வேகம் சராசரியாக மணிக்கு 200 கி.மீ. இந்த வேகத்தையும் தாண்டிச் செல்ல அங்கு முயற்சி நடந்து வருகிறது. அந்த வேகத்தில் நம் நாட்டில் ரயில் செல்லுமெனில், சென்னையில் இருந்து சேலம் மற்றும் திருச்சிக்கு 90 நிமிடத்தில் சென்றுவிடலாம். தினமும் திருச்சியில் இருந்தே சென்னைக்கு வேலைக்கு வந்து போகலாம். ஆனால், நாம் இன்னும் ரயில் பாதைகளை முழுமையாக மின்மயமாக்கவில்லை. சில நகரங்களில்தான் மெட்ரோ ரயில் வசதி வந்திருக்கிறது. சென்னையில் மெட்ரோ ரயிலுக்கான வேலை இப்போதுதான் ஆரம்பித்திருக்கிறது.வரும் ஆண்டுகளில் ஒரு நாளைக்கு 20 கி.மீ. தூரம் சாலை அமைக்க போவதாகவும், இன்ஃப்ரா துறைக்கு ஒரு டிரில்லியன் டாலர் செலவிடப் போவதாகவும் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்திருக்கிறார். ஆனால், தற்போதைய பிரச்னையிலிருந்து தப்பிக்க எடுக்கும் ஒரு அவசரமான முடிவாக இல்லாமல், எதிர்காலத் தேவையை பூர்த்தி செய்வதுபோல நம் இன்ஃப்ரா திட்டங்கள் இருக்க வேண்டும்.
 
 
இந்திய அரசு பட்ஜெட்டில் மானியங்களுக்கு என்று மட்டும் ஆண்டுக்கு சில லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் செலவாகிறது. ஆனால், அனைத்து பணமும் மக்களுக்குப் போய் சேருகிறதா என உறுதியாகச் சொல்ல முடியாது. ஒரு ரூபாய் செலவு செய்தால் 15 பைசாதான் மக்களுக்குப் போய்ச் சேருவதாக ராஜீவ்காந்தி கண்டுபிடித்துச் சொன்னார். இப்போது அது 15 காசுக்கும் குறைவாக இருக்கலாம்.சமீப காலம் வரை மிகவும் பின்தங்கிய மாநிலம் என்று சொல்லப்பட்ட பீகார் இன்று அபாரமான வளர்ச்சி கண்டு வருகிறது. காரணம், அங்கு தரப்படும் சில மானியங்கள் யாருக்குப் போய்ச் சேர வேண்டுமோ, அவர்களின் வங்கிக் கணக்கிலேயே நேரடியாக வரவு வைக்கப்படுகிறது. இதனால் அரசு ஒதுக்கும் பணம் முழுமையாக மக்களைச் சென்றடைகிறது.  நம் நாட்டின் வருமானத்தில் சுமார் 11 சதவிகித தொகையை (1,43,570 கோடி ரூபாய்) மானியத்துக்கென மத்திய அரசு செலவிடுகிறது. வரும் காலத்தில் இந்த தொகை இன்னும்கூட அதிகரிக்கலாம். மானியம் கொடுப்பதே தவறு; அதை ஒழித்துக் கட்ட வேண்டும் என்று பேசுவதைவிட, மானியங்கள் முழுமையாக மக்களைச் சென்றடைய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 
 
விவசாயத்தை ஒரு தொழிலாக செய்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்துகொண்டே வருகிறது. தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் வந்த பிறகு விவசாய வேலை செய்ய கூலி ஆட்கள் கிடைப்பது குதிரைக் கொம்பாகி விட்டது. இப்படியே போனால், இன்னும் சில வருடங்களில் விவசாயம் செய்ய ஆட்களே இருக்கமாட்டார்கள்.தண்ணீர் தட்டுப்பாட்டால் இந்தியாவில் தரிசாக மாறும் நிலங்கள் அதிகரித்தபடி  இருக்கிறது. தவிர, நம் அடுத்த தலைமுறை விவசாயம் செய்வதற்கு தயாராக இல்லை. நாம் எவ்வளவுதான் பணம் சம்பாதித்தாலும் அரிசியைதான் சாப்பிட வேண்டும் என்பதை யாரும் மறந்துவிடக் கூடாது.ஒரு பக்கம் கணக்கு வழக்கில்லாமல் நல்ல தண்ணீர் வீணாக கடலில் கலக்கிறது. இன்னொரு பக்கம் விவசாயத்துக்கு தண்ணீர் கிடைக்காதச் சூழ்நிலை இருக்கிறது. உதாரணத்துக்கு, தமிழக ஆறுகளில் இருந்து கடலில் கலக்கும் தண்ணீர் மட்டும் 400 டி.எம்.சி. அப்படியானால் இந்தியா முழுவதும் எத்தனை ஆறுகள் இருக்கிறது, எவ்வளவு டி.எம்.சி. தண்ணீர் கடலில் கலக்கும் என்று யோசித்து பார்க்கலாம். கடலில் கலக்கும் தண்ணீரில் ஒரு பகுதியையாவது நாம் பயன்படுத்தினாலே நம் விவசாய உற்பத்தி அதிகரித்துவிடும். இதற்கு இந்தியா முழுவதும் இருக்கும் நதிகளை கூடுமானவரை இணைக்க வேண்டும்.இதற்கு நிறைய செலவாகலாம். ஆனால், ஒருமுறை கஷ்டப்பட்டு இணைத்துவிட்டால் அடுத்துவரும் பல நூறு ஆண்டுகளுக்குத் தண்ணீர் தட்டுப்பாடு இருக்காது. எந்தவிதமான நவீன தொழில்நுட்பமும் இல்லாமலே நூறு வருடங்களுக்கு முன்பு நம்மவர்கள் பல அணைகளை கட்டினார்கள். அப்போதும் அவர்களுக்கு பல நெருக்கடி இருந்திருக்கும். அதுபோல இப்போது எவ்வளவு நெருக்கடி இருந்தாலும் நதிகளை இணைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.வட்டி விகிதத்தை உயர்த்தினால் மட்டும் பணவீக்கம் குறைந்துவிடாது. உற்பத்தியையும் அதிகரித்தால் மட்டுமே விலைவாசியைக் குறைக்க முடியும். மேலும், இந்திய ஜி.டி.பி.யில் சேவை மற்றும் தொழில் துறைகளே அதிகம் பங்களித்து வருகிறது. ஜி.டி.பி.யில் விவசாயத்தின் பங்கினையும் அதிகரிக்க மத்திய அரசு  போர்க்கால நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
 
 
ஏற்றுமதி மூலம் பெருமளவு வருமானத்தைப் பெறுகிறது சீனா. நமக்கு ஏற்றுமதியின் மூலம் வருமானம்கூட வரவேண்டாம். குறைந்தபட்சம் நம் இறக்குமதியை சமன் செய்கிற மாதிரியாவது இருக்க வேண்டாமா? நாம் செய்யும் ஏற்றுமதியைவிட, நம் இறக்குமதி அதிகம். மென்பொருள் மற்றும் சில சேவைகள் ஏற்றுமதி செய்வதன் மூலம் கிடைக்கும் வருமானத்தைச் சேர்த்து பார்த்தால்கூட நம் இறக்குமதி அதிகமாக இருக்கிறது.இதற்கு காரணம், கச்சா எண்ணெய்தான். (இன்றைய சூழ்நிலையில் ரூபாயின் வீழ்ச்சியால் கூடுதல் சுமை வேறு !) 2010-11-ம் நிதியாண்டில் நமது ஏற்றுமதி 250 பில்லியன் டாலர்கள். ஆனால், இறக்குமதி 380 பில்லியன் டாலர்கள். இதில் கச்சா எண்ணெய்யின் பங்கு 25%- கிட்டத்தட்ட 85 பில்லியன் டாலர்கள். இந்த தொகை அடுத்த வருடம் 110 பில்லியன் டாலர்களாக அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது.
 
 
 
ஒவ்வொரு ஆண்டும் இப்படி பற்றாக்குறையில் இருக்கும்போது இறக்குமதி செய்ய நமக்கு அதிக டாலர்கள் தேவை. டாலர்களை பெற நேரடி அந்நிய முதலீடு (திஞிமி) அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் (திமிமி) தேவை. ஆனால், அந்நிய நேரடி முதலீடு நம் நாட்டுக்குள் வருவதில் நமக்கு ஒருமித்த கருத்தில்லை.இப்போதே இவ்வளவு கச்சா எண்ணெய்யை நாம் இறக்குமதி செய்தால், வருங்காலத்தில் இன்னும் அதிகமாகத் தேவைப்படும். இதற்கு ஒரே வழி, பெட்ரோலுக்கு இணையான ஒரு மாற்று எரிபொருளை நாம் கண்டுபிடிப்பதுதான்.
 
 
கடந்த இருபது வருடங்களாக ஐ.டி. துறை மிக வேகமாக வளர்ந்து வந்தது. நிறைய வேலைவாய்ப்பு உருவானது. இதன் காரணமாக அப்பா, அம்மாக்கள் ஓய்வுபெறும் வயதில் வாங்கிய சம்பளத்தை மகன்/மகள்கள் நுழையும்போதே வாங்கினார்கள். கடந்த சில வருடங்களாக அதிவேக வளர்ச்சி கண்ட ஐ.டி. துறை இனி ஒற்றை இலக்க வளர்ச்சியில்தான் வளரப் போகிறது. அதனால் முன்பு நடந்தது போல நிறைய வேலைவாய்ப்பை இத்துறையினால் உருவாக்க முடியாது.இதேபோலதான் டெலிகாம் துறையும். கடந்த சில வருடங்களாக அதிக வேலைவாய்ப்பை உருவாக்கியது. இனி இதே அளவுக்கு வேலைவாய்ப்பை உருவாக்குமா என்பது சந்தேகமே. இதனால் ஒரு குறிப்பிட்ட வயதினர் செல்வ செழிப்பாகவும், அடுத்த தலைமுறையினர் வேலை இல்லாமல் சிரமப்படும் சூழ்நிலையும் உருவாக வாய்ப்பிருக்கிறது.தற்போதைய சூழ்நிலையில் இந்தியாவில் வேலை இல்லாத மக்கள் 11 சதவிகிதம் என்ற அளவில் இருக்கிறது. சீனாவில் வெறும்4 சதவிகிதத்தினரே வேலை இல்லாமல் இருக்கிறார்கள். மக்கள் தொகை பெருக்கத்தை சீனா பெரிய அளவில் கட்டுப்படுத்தி இருக்கிறது. நாம் அதையும் செய்யவில்லை. வருங்காலத்தில் மக்கள் தொகையும் அதிகரிக்கும்; வேலை இல்லா திண்டாட்டமும் அதிகரிக்கும். இந்த பிரச்னைக்கு தீர்வாக புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க மத்திய அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 
 
மின்சாரமும் இன்ஃப்ரா துறையின் கீழ்வரும் என்றாலும் அதை தனியாக கவனிக்க வேண்டியது கட்டாயம். தற்போதைய நிலையில் உற்பத்திக்கும் தேவைக்கும் 10 சதவிகித அளவுக்கு வித்தியாசம் இருக்கும் என்று மத்திய மின் ஆணையம் தெரிவித்திருக்கிறது. மேலும், மின் பகிர்மான இழப்புகள் 20 சதவிகிதம் என்ற அளவில் இருக்கிறது. மேலும், ஸ்டேட் எலெக்ட்ரிசிட்டி போர்டுகள் 2010-ம் வருடம் மட்டும் சுமார் 68,000 கோடி ரூபாய் இழப்பினை சந்தித்திருக்கிறது. இந்த தொகை இந்திய ஜி.டி.பி.யில் ஒரு சதவிகிதம். மின் உற்பத்தியை அதிகரிக்கும் திட்டம் இருந்தாலும், அது இந்தியாவின் தேவையை தீர்க்கிற அளவுக்கு இருக்குமா என்று தெரியவில்லை. யானைப் பசிக்கு சோளப்பொரி போலத்தான் புதிய மின் திட்டங்கள் இருக்கின்றன. தவிர, தற்போது உற்பத்தியாகும் மின்சாரத்தில் 65 சதவிகிதம் நிலக்கரி மூலம்தான் தயாராகிறது. 
 
 
நீர் மின் நிலையங்கள் மூலம் 20 சதவிகிதம் தயாராகிறது.ஆனால், மாற்று சக்திகளான காற்று, சூரிய சக்திகளை கொண்டு நாம் மிக குறைந்த அளவே தயாரிக்கிறோம். பெட்ரோல் போல நிலக்கரியும் இயற்கையில் கிடைப்பது. அதை நாம் உற்பத்தி செய்ய முடியாது. தவிர, இந்திய அனல் மின் நிலையங்கள் இந்தோனேஷியா, சீனா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் இருந்து நிலக்கரியை இறக்குமதி செய்கிறது. இந்நாடுகளில் நிலக்கரி உற்பத்தி குறைய குறைய அதன் விலை அதிகரிக்கும். விலை அதிகரித்தால் மின் உற்பத்தி செலவு அதிகரிக்கும். அதனால் இப்போதே மாற்று சக்திகளின் மீது அரசு கவனம் செலுத்துவது நல்லது.இதை தாண்டியும் இந்தியாவின் வளர்ச்சியை சீராக்குவது, பணவீக்கத்தைக் கட்டுபடுத்துவது, ரூபாயின் மதிப்பை குறையாமல் பார்த்துக் கொள்வது, நிதிப்பற்றாக்குறையை குறைப்பது என பல பிரச்னைகளும் இருக்கின்றன.
 
 
இறுதியாக, எந்த விஷயமாக இருந்தாலும் இந்த அரசு முடிவெடுக்கத் தயங்குகிறது. பல விஷயங்களில் முடிவெடுக்க முடியாமலே திணறுகிறது. பல முக்கியமான மசோதாக்கள்  ஆண்டுக் கணக்கில் கிடப்பிலேயே இருக்கிறது.நேரடி வரி விதிப்பு (டி.டி.சி.,), சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு (ஜி.எஸ்.டி.,) போன்ற மசோதாக்கள் இதுவரை அரங்கேறவில்லை. இந்த மசோதாக்கள் நிறைவேற முதலில் நாடாளுமன்றம் பிரச்னை இல்லாமல் நடக்க வேண்டும். நாட்டுநலன் என்று வரும்போது அத்தனை கட்சிகளும் வேற்றுமைகளை மறந்து ஒரே மாதிரி சிந்தித்து, செயல்பட வேண்டும். அப்போதுதான் 2012-லிருந்தாவது இந்தியா மீண்டும் முன்னேற ஆரம்பிக்கும்.
 
- வா.கார்த்திகேயன்
 
 விகடன் 
 
 
 
 

3 comments:

  1. புத்தாண்டு சிறப்புப் பதிவு
    இந்தியாவுக்கான சிறப்புப் பதிவாக
    சிந்திப்பதற்குரிய பதிவாகத்தந்தமைக்கு
    வாழ்த்துக்கள்
    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்தங்களுக்கும்

    ReplyDelete
  2. ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் தோழரே

    ReplyDelete
  3. எந்த விஷயமாக இருந்தாலும் இந்த அரசு முடிவெடுக்கத் தயங்குகிறது. பல விஷயங்களில் முடிவெடுக்க முடியாமலே திணறுகிறது.

    சிறப்பான கண்ணோட்டம்..பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..

    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete