Search This Blog

Wednesday, January 05, 2011

திருந்தாத தி.மு.க.! ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் அதிரடி!

ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் சில நாட்கள் அமைதிக்குப் பிறகு தி.மு.க.வை நோக்கித் தமது சர வெடிகளைக் கொளுத்திப் போடத் தொடங்கிவிட்டார். “தி.மு.க.வுடன் கூட்டணி தொடர்ந்தால் தோல்விதான்” என்பது அவரது சமீபத்திய அணுகுண்டு. “காங்கிரஸ் தலை மையையே மிரட்டுகிறார் இளங்கோவன்!” என்று பதிலடி கொடுத்திருக்கிறார் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம். இளங்கோவன் சும்மா இருப்பாரா? இதோ சீறி எழுகிறார்...

சில நாட்கள் அமைதியாக இருந்த நீங்கள் ஸ்பெக்ட்ரம் விவகாரம் வெடித்தவுடன் கணைகளை வீசத் தொடங்கியுள்ளீர்கள். மேலிடம் அமைதியாக இருக்கச் சொன்னதா?

“காங்கிரஸ் ஒரு ஜனநாயக இயக்கம். தொண்டர்களின் கருத்துகளுக்கு நான் ஒரு வடிகாலாக இருக்கிறேன். எனக்கு யாரும் வாய்ப்பூட்டு போட முடியாது. ‘மேலிடம் சொல்லித்தான் அமைதியாக இருந்தேன்’ என்று கருதும் நீங்கள், நான் கருத்துகளைச் சொல்லும்போது, ‘அவர்கள் சொல்லித்தான் பேசுகிறேன்’ என்பதையும் ஏற்றாக வேண்டும்!”

காங்கிரஸ் தலைமையை நீங்கள் மிரட்டுவதாக வீரபாண்டி ஆறுமுகம் சொல்கிறாரே?

“ஆறுமுகத்தைப் பொறுத்தமட்டில் தி.மு.க.வில் அவருக்கு இறங்கு முகம். எனவே தமது இடத்தைத் தக்க வைத்துக் கொள்ள என் மீது பாய்கிறார். கொலைக் குற்றவாளியைச் சிறையில் சென்று பார்த்து ஆறுதல் சொல்லும் ஆறுமுகத்துக்கு நான் பதில் சொல்ல முடியாது.”

தில்லியில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கூட்டம் நடந்தபோது, நீங்கள் உட்பட தமிழ்நாட்டு காங்கிரஸ் தலைவர்கள் சோனியாவைச் சந்தித்தீர்கள். கூட்டணி பற்றி ஏதேனும் சிக்னல் கிடைத்ததா?

“தொண்டர்களின் உணர்வுகளை எடுத்துச் சொன்னோம். கூட்டணி குறித்து இறுதி முடிவு எடுக்க வேண்டியது தலைமைதான். அதை ஏற்று நடப்போம். அதேசமயம் தி.மு.க.வுடன் கூட்டணி தொடர்ந்தால் தோல்வி என்பதுதான் தமிழகத்தின் இன்றைய யதார்த்த நிலை.”

தி.மு.க.வுக்கு ஸ்பெக்ட்ரம் ஒரு களங்கம் என்றால் காங்கிரஸ் மீதும் வரிசையாக ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளனவே?

“காங்கிரஸ் மீது குற்றச்சாட்டுகள் சொல்லப்பட்டவுடன் விசாரணைக்கு முன்னரே சம்பந்தப்பட்டவர் மீது நடவடிக்கை எடுக்கிறோமே! ஐம்பது வருடங்களுக்கு முன் ‘முந்த்ரா’ விவகாரத்தில் விசாரணைக்கு முன்பே டி.டி.கிருஷ்ணமாச்சாரி ராஜினாமா செய்தார். சமீபத்திய கல்மாடி அசோக் சவாண் மீதும் நடவடிக்கை பாய்ந்ததே? ஆனால், அதேசமயம் கர்நாடக முதல்வர் மீது பா.ஜ.க. நடவடிக்கை எடுத்ததா? ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் பிரதமர் ‘வெளியே போங்கள்’ என்று சொல்வதற்கு முன்பு ராசா ராஜினாமா செய்திருக்க வேண்டும். அது போல செய்திருந்தால் பெரிய சரிவை ஓரளவு தடுத்திருக்கலாம். இன்னமும் ராசாவைக் காப்பாற்ற முனைவதைப் பார்க்கும்போது திருந்தமாட்டார்கள் என்பது போலத்தான் தெரிகிறது.”

1.76 லட்சம் கோடி ரூபாய் தொகை வெறும் வருமான இழப்புதான் என்றும் அதை ஊழல் என்று சொல்வது தவறு என்றும் கருணாநிதி பேசுகிறாரே?

“ஊழல் நடந்திருக்கிறதா என்பது விசாரணையின் முடிவில் தெரியும். ஆனால், நடந்து முடிந்த இடைத்தேர்தல்களில் தமிழகத்தில் உள்ள குறிப்பிட்ட கட்சி வோட்டுக்கு 3,000, 5,000 ரூபாய் கொடுத்ததாகச் செய்தி வரும்போது ஊழல் நடந்திருக்குமோ என்று மக்கள் சந்தேகிக்கிறார்கள்.”

ஸ்பெக்ட்ரம் விஷயத்தில் பல திருப்பங்களுக்குப் பிறகும் கருணாநிதியும் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர்களும் ‘கூட்டணி தொடரும்’ என்றுதானே சொல்லி வருகின்றார்கள்?

“காங்கிரஸுடன் இருந்தால் தங்களுக்கு ஏற்பட்டிருக்கும் அவப்பெயரைத் துடைத்து விடலாம் என்று தி.மு.க. முயற்சி செய்கிறது. ஆனால், அதன் இரண்டாம் வரிசை பேச்சாளர்கள் அன்னை சோனியாவையும் ராகுலையும் தாக்கிப் பொதுக்கூட்டங்களில் பேசுகிறார்கள்.”

தி.மு.க.வுடன் நாளை கூட்டணி தொடர்ந்தால் உங்களைப் போன்ற தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர்களுக்குச் சங்கடமாகாதா?

“தனிப்பட்ட முறையில் எங்களுக்கு ஏற்படும் சங்கடங்களை விடுங்கள். மேலிடம் அப்படி ஒரு முடிவு எடுக்குமானால் அதன் பாதிப்பு தமிழ்நாட்டு மக்களுக்கும் காங்கிரஸுக்கும்தான். எனவே அப்படி ஒரு முடிவு எடுக்க மாட்டார்கள் என்று நம்புகிறேன்.”


கருணாநிதியைச் சந்திக்க நீங்கள் நேரம் கேட்டும் பல மாதங்களாக அவர் உங்களைச் சந்திக்க மறுத்து வருவதால் கோபம் கொண்டுதான் தி.மு.க.வைத் தாக்குகிறீர்கள் என்கிறார்களே?

“உண்மைதான். ஏதோ என் தனிப்பட்ட விவகாரத்துக்கோ அல்லது பங்கு கேட்கவோ அவரைச் சந்திக்க முயற்சி செய்யவில்லை. தமிழ்நாட்டு மக்கள் தி.மு.க.வின் மீது எப்படிப்பட்ட அதிருப்தியில் இருக்கிறார்கள் என்பதைச் சொல்லவே சந்திக்க விரும்பினேன். அதற்கு வாய்ப்பு கொடுக்காததால் வெளிப்படையாகச் சொல்ல வேண்டிய நிலை.”

நன்றி - தமிழ் வரை இதழ் 

3 comments:

  1. அழகிரி பரபரப்பு பேட்டி கேட்டீர்களா....ராசா, கனிமொழி இருவர் மீதும் நடவடிக்கை எடுக்க சொல்லி இருக்கிறார்...இனி என்னவெல்லாம் நடக்குமோ..

    ReplyDelete
  2. Unable to vote..Add it in indli.

    ReplyDelete
  3. thala, ennakum therila eppadi mathrurathu nu .. I think HTML things..

    ReplyDelete