Search This Blog

Monday, July 04, 2011

அரசு கேபிள் - வெடிக்கும் புதுத் தகவல்கள்


ஆட்சியைப் பறிகொடுப்பதற்குச் சில மாதங்களுக்கு முன்னர் பத்திரிகையாளர்கள், கருணாநிதியிடம், ‘அரசு கேபிள் எப்படிச் செயல்படுகிறது?’ என்று கேட்டார்கள். அதற்கு கருணாநிதி அவருக்கே உரிய பாணியில், அடக்கமாகச் செயல்படுகிறது" என்று சொன்னார். அவர் சிலேடையாகச் சொன்னாரோ அல்லது உண்மையைச் சொன்னாரோ தெரியாது. 2008ல் மாறன் சகோதரர்களுடன் மோதல் ஏற்பட்டு கருணாநிதி குடும்பம் பிரிந்திருந்த சமயம், மாறனின் சுமங்கலி கேபிள் விஷனின் ஆதிக்கத்தை ஒழிக்க அரசு பணத்தில் தொடங்கப்பட்டதுதான் அரசு கேபிள் டி.வி. கார்ப்பரேஷன்.


2009 பாராளுமன்றத் தேர்தலுக்கு முன்னர் இரு குடும்பங்களுக்கும் சமரசம் ஏற்பட்ட பிறகு அரசு கேபிள் அலட்சியப்படுத்தப்பட்டது. வேலூர், நெல்லை, தஞ்சை, கோவை ஆகிய மாவட்டங்களில் சுமார் 100 கோடி அரசு முதலீட்டில் தொடங்கப்பட்டு 50,000 நுகர்வோர்களைக் கொண்டிருந்த அரசு கேபிள், கலைஞர் குடும்ப சமாதானத்துக்குப் பிறகு ஆழக் குழிதோண்டி அடக்கம் செய்யப்பட்டது என்பதுதான் உண்மை. இன்று இந்த மாவட்டங்களில் உள்ள அரசு கேபிள் கட்டுப்பாடு அறைகளில் மிக விலை உயர்ந்த மின்னணு இயந்திரங்கள் புழுதி படிந்து கிடக்கின்றன. அடக்கம் செய்யப்பட்ட அரசு கேபிளைத்தான் மீண்டும் செயல்பட வைக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறார் ஜெ.  


இன்னமும் மூன்று மாதங்களுக்குள் அரசு கேபிள் டி.வி. செயல்படும் என்று ஜெயலலிதா சொல்லியிருக்கிறார். இது சாத்தியம்தானா? தனியார் நிறுவனங்களின் பிடியில் இருக்கும், இந்தத் தொழிலில் வருடத்துக்கு 1000 கோடி புரள்கிறதாம். அவ்வளவு சுலபத்தில் சன் தொலைக்காட்சி உட்பட சில நிறுவனங்கள் தங்கள் ஆளுமைக்குள் இருக்கும் இந்தத் தொழிலை விட்டுக் கொடுத்து விடுவார்களா? தமிழகத்தில் உள்ள ஒன்றரை கோடி கேபிள் கனெக்ஷன்களில் பாதியைக் கையில் வைத்திருக்கும் சன் நெட்வொர்க்கின் சுமங்கலி நிறுவனம் சவாலைச் சந்திக்கத் தயாராகிறது. இந்த விவகாரத்துக்குப் போகும் முன் கேபிள் டி.வி.யை மாறன் சகோதரர்கள் எப்படி வளைத்துப் போட்டார்கள் என்பதைப் பார்க்கலாம். 


1989ல் திரைப்படச் செய்திகளைத் தொகுத்து ‘பூமாலை’ என்ற பெயரில் வீடியோ கேஸட்டுகளாக வெளியிட்டது மாறன் குடும்பம். வீடியோ நூலகங்கள் இந்தக் கேஸட்டுகளை வாங்க வற்புறுத்தப்பட்டன. ஆனால் 1991ல் ஜெ. ஆட்சிக்கு வந்த பிறகு இது சாத்தியப்படவில்லை. இரண்டு மூன்று வருடம் பொழுதைப் போக்கிய மாறன் சகோதரர்கள், 1993ல் சன் தொலைக்காட்சியைத் தொடங்கினார்கள். அடுத்த சில வருடங்களில் மேலும் பல தமிழ் சேனல்கள் வந்தன. அப்போதெல்லாம் ஹாத்வே போன்ற சில தனியார் நிறுவனங்களே கேபிள் டி.வி.க்களை நடத்தி வந்தன. 2000 வருடம் சென்னை மாநகராட்சி தி.மு.க. வசம். மாநிலத்திலும் தி.மு.க. ஆட்சி. தானாகவே சன் குழும பாக்கெட்டுக்கு வந்தது கேபிள் உலகம். ஹாத்வே போன்ற தனியார் கேபிள் நிறுவனங்கள் முடக்கப்பட்டன. 


ஆனால், எஸ்.சி.வி. மாநிலம் முழுவதும் தன் சிறகுகளை விரிக்காமல் ஆறு மாநகராட்சிகளில் மட்டுமே செயல்படத் தொடங்கியது. மற்ற மாவட்டங்களில் பாலிமர், மலர், ஆகாஷ் போன்ற நிறுவனங்கள் செயற்கைக் கோளிலிருந்து சேனல்களைப் பெற்று சிறு ஆபரேட்டர்கள் மூலம் விநியோகித்து வந்தன. இந்த நிலைதான் இன்றும் தொடர்கிறது. இடையில் எஸ்.சி.வி.யை முடக்க, மதுரையில் ராயல் கேபிள் விஷன் என்ற ஒன்றைத் தொடங்கினார் அழகிரி. ஆனால் எஸ்.சி.வி.யோடு போட்டி போட முடியவில்லை. அதன் பிறகு குடும்ப சமரசம் ஏற்படவே ராயல் கேபிள் அமுங்கிப் போயிற்று. லேட்டஸ்டாக அழகிரி மகன் ஜாக் என்ற கேபிள் டி.வி.யைத் தொடங்கி சென்னையையொட்டியுள்ள மாவட்டங்களில் செயல்படத் தொடங்கியிருக்கிறார். ஆனால், யாரும் மோதி வெற்றி பெற முடியாத அளவுக்கு அசுரத்தனமாக வளர்ந்திருக்கிறது. 

கருணாநிதியுடன் மோதல் இருந்தபோதே அவர் அமைச்சரவையில் இருந்த அமைச்சர் ஒருவர் துணையுடன் அரசு டி.வி. கேபிள்களை அறுத்துப் போட்டது எஸ்.சி.வி. நிர்வாகம் என்ற குற்றச்சாட்டும் உண்டு. அரசு டி.வி. செயல்பட என்னென்ன தடை போட வேண்டுமோ அத்தனையும் போட்டார்கள். இதை எதிர்த்துப் போராடிய அரசு டி.வி. மேலாண்மை இயக்குனர் உமா சங்கர்தான் இறுதியில் கருணாநிதி அரசால் பந்தாடப்பட்டார். குடும்ப சமரசத்துக்குப் பின் தன் ஆதிக்கத்தைத் தொடர்ந்தது எஸ்.சி.வி. ஆனால் என்றைக்கும் தன் தொழிலில் போட்டியிருக்கும் என்ற நிலையில்தான் சன் டைரக்ட் என்ற டி.டி.ஹெச். சர்வீஸைத் தொடங்கியது.  அரசு கேபிள் தொழிலைக் கையிலெடுத்துக் கொள்ளும் நிலையில் சன் நிறுவனம் டி.டி.ஹெச்சை மக்களுக்கு இலவசமாகக் கொடுக்க முன்வந்தாலும் ஆச்சர்யமில்லை. மற்றபடி முன்பு போல ஏகபோகம் காட்ட முடியாது. நீதிமன்றம் போனாலும் வெற்றி பெற முடியாது என்கின்றன கேபிள் தொலைக் காட்சி சங்கங்கள்.

இப்போது கேபிள் டி.வி. தொடங்குவது என்றால் தபால் நிலையத்தில் லெட்டர் கொடுத்து அங்கீகாரம் வாங்கினால் போதுமாம். அது தவிர, சாலைகளில் கேபிள் எடுத்துச் செல்ல உள்ளூர் நிர்வாகத்துக்கு வருடம் ஒரு தொகை கட்ட வேண்டும். 50 ரூபாயிலிருந்து, 200 ரூபாய் வரை கேபிள் கட்டணமாக வசூலிக்கப் படுகிறது. செட்டாப் பாக்ஸ் கொடுப்பது கட்டண சேவைகளுக்காக என்றாலும் இலவச சேனல்களில் எண்ணிக்கை அதிகப்படுத்த வேண்டும். இப்போது சென்னையில் ‘சன்’ இலவசம்; வெளியூரில் கட்டணம். இது எப்படி? இலவச சேனல்கள் எண்ணிக்கை ஏற ஏற, பார்ப்பவர் எண்ணிக்கை அதிகமாக கட்டணமும் குறைக்கப்படும் வாய்ப்பு இருக்கும். சேனல்களுக்கும் டி.ஆர். பி.ரேட்டிங் ஏறி விளம்பர வருமானம் கூடும்.  எனவே கூடியவரை கட்டணம் சேனல்களின் எண்ணிக்கையைக் குறைப்பது நல்லது. ஒரு கட்டத்தில் அரசு கேபிளின் வீச்சு மக்களிடம் பரந்துவிட்ட நிலையில் பல கட்டண சேனல்கள் இலவசமாகக் கூட வர வாய்ப்புண்டு" 


 இந்தச் சூழலில் அரசு கேபிளுக்கு உமாசங்கரை மீண்டும் மேலாண்மை இயக்குனராகப் போடுவார்களா என்பதும் சந்தேகமாக இருக்கிறது. அரசு கேபிளுக்காகத் துணிச்சலாகக் களத்தில் இறங்கிப் போராடியவர் அவர். கேபிள் தொழிலின் முழுப் பரிமாணம் தெரிந்தவர் மட்டுமல்ல; மிக லேட்டஸ்ட்டான தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியையும் அறிந்து வைத்திருப்பவர். தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை மறந்து அவரைப் போன்ற திறமையானவர்களை ஜெயலலிதா பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இல்லையேல் மிக யோக்கியமான, திறமையான அதிகாரிகள் மிகவும் சுணங்கிப் போய் விடுவார்கள்"

ஆனால் முதல்வரைச் சுற்றியுள்ள சில அதிகாரிகள் உமாசங்கர் மீது தனிப்பட்ட முறையில் கடுகடுப்புடன் இருக்கும் நிலையில் மீண்டும் அவர் அரசு கேபிளுக்கு பொறுப்பில் வர சாத்தியமில்லை என்றுதான் தெரிகிறது. 



No comments:

Post a Comment