Search This Blog

Wednesday, July 27, 2011

நான்காவது 'ஜி' ப.சிதம்பரமா? ப.சிதம்பரமா? ப.சிதம்பரமா?

ஸ்பெக்ட்ரம் புயலில் காங்கிரஸ்

தொலைத் தொடர்புத் துறை​யில் இரண்டாம் தலை​முறை,மூன்றாம் தலை​முறை எனப்படும் தொழில்​நுட்பத்தைத்தான் 2ஜி, 3ஜி என்​கிறார்கள். வரும் அக்டோபர் மாதம் 4ஜி தொழில்நுட்பம் அறிமுகமாகிறது.இதை வைத்தே, டெல்லியில் தமிழக அரசியல்​வாதிகளைக் கிண்டல் செய்கிறார்கள். ஏற்கெனவே ராசாஜி, கனிமொழிஜி, தயாநிதிஜி என்று மூன்று 'ஜி’-க்கள் ஸ்பெக்ட்ரம் வழக்கில் சிக்கிப் பதவியை இழந்துவிட, விரைவில் நான்காவது 'ஜி’ சிக்குகிறார் என்கிறார்கள். அவர், ப.சிதம்பரம்ஜி.

4ஜி எனப்படும் நான்காம் தலை​முறைத் தொழில்நுட்பத்தில் நான்கு விதமான வசதிகள் இருக்கும்.  என்ன பொருத்த​மோ... ப.சிதம்பரம் மீதும் நான்கு விதமான குற்றச்சாட்டுகள். சிதம்பரம் மீது முதன் முதலில் சந்தேகம் எழுப்பியவர் சுப்ரமணியன் சுவாமி. இதைத் தொடர்ந்து, கடந்த 15-ம் தேதி பி.ஜே.பி. மாநிலங்களவை உறுப்பினர்கள் பிரகாஷ் ஜவடேகர், மாயாசிங் மற்றும் மக்களவை உறுப்பினர் சிவகுமார் உடேசி, பி.ஜே.பி-யின் செயலாளரும் வழக்கறிஞருமான பூபேந்திர யாதவ் ஆகியோர் சி.பி.ஐ. தலைமை அலுவலகம் வந்து, சி.பி.ஐ. இயக்குநர் ஏ.பி.சிங்கிடம் சிதம்பரம் மீதான புகார் மனுவைக் கொடுத்தனர்.

குற்றச்சாட்டு - 1:


2ஜி ஸ்பெக்ட்ரம் சம்பந்தமாக, கடந்த பிப்ரவரி மாதம் 24-ம் தேதி பிரதமர் மன்மோகன் சிங் மாநிலங்கள் அவையில் பதில் கொடுத்தபோது, '2003-ம் ஆண்டு அமைச்சரவையில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில் ஸ்பெக்ட்ரம் விலை நிர்ணயிக்கப்படவேண்டும் என்கிற கொள்கை முடிவை அரசு எடுத்து இருந்தது. அதிலும் குறிப்பாக நிதி அமைச்சரும் தொலைத் தொடர்பு அமைச்சகமும் சேர்ந்து முடிவு எடுக்க அறிவுறுத்தப்பட்டது. ஆவணங்களின் அடிப்படையில், ஆரம்பத்தில் நிதி அமைச்சர் தொலைத் தொடர்பு அமைச்சரோடு ஸ்பெக்ட்ரம் விலை நிர்ணயிக்கப்படுவதில் வேறுபட்டு இருந்ததாக 15.1.2008 அன்று தெரிவிக்கப்பட்டது. பின்னர் நிதி அமைச்சரும் தொலைத் தொடர்பு அமைச்சரும் கலந்து பேசியதில் ஸ்பெக்ட்ரம் விலை நிர்ணயிப்பதில் ஒருமித்த கருத்து ஏற்பட்டது என்று 4.7.2008 நடந்த கூட்டத்தில் எனக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது’ என்று பிரதமர் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

இதில் இருந்து ஸ்பெக்ட்ரம் விலை நிர்ணயம் செய்ததில்,  தொலைத்தொடர்பு அமைச்சராக இருந்த ஆ.ராசாவும் நிதி அமைச்சர் ப.சிதம்பரமும் கலந்து பேசி முடிவு எடுத்துள்ளனர் என்பது தெரிய வருகிறது. 'ராசாவுக்குத் தெரிந்த மாதிரியே சிதம்பரத்துக்கும் எல்லா விவரங்களும் தெரியும்!’ என்று பிரதமரே சொல்கிறார். இரண்டு துறை அமைச்சர்களும் ஒன்றாக உட்கார்ந்துதான் இறுதி முடிவு எடுத்து உள்ளனர். தொலைத் தொ​டர்பு அமைச்​சர் ஆ.ராசா குற்றவாளி என்றால், நிதி அமைச்சராக இருந்த ப.சிதம்பரமும் குற்றவாளிதானே?

குற்றச்சாட்டு - 2 :


டிபி ரியாலிட்டி, யுனி​டெக் போன்றவை டெலிகாம் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் இல்லை. ஆனால், இவர்கள் ஸ்பெக்ட்ரம் உரிமங்களைப் பெற்றனர். அதோடு, தங்கள் நிறுவனத்தின் பங்குகளை வெளிநாட்டு டெலிகாம் நிறுவனங்களுக்கு விற்றனர். வெளிநாட்டு நிறுவனங்கள், இந்தியாவில் முதலீடு செய்வதற்கும் பங்குகளை வாங்குவதற்கும் நிதி அமைச்சகத்தின் அனுமதி தேவை. இதற்கு இந்த நிறுவனங்கள் விண்ணப்பித்து அனுமதி பெற்றுள்ளனர். இதைப் பரிசீலனை செய்து அனுமதி கொடுத்தது, நிதி அமைச்சகம். ஸ்பெக்ட்ரம் விலை நிர்ணயம் செய்ததில் ஒரு ஊழல். இந்த ஊழல் முடிந்து மற்றொரு ஊழலும் தொடர்ந்து உள்ளது. இதுவும் நிதி அமைச்சகத்துக்கு வந்தது. ஸ்வான் மற்றும் யுனிடெக் பங்குகளை பெற்ற வெளிநாட்டு டெலிகாம் நிறுவனங்கள் எஃப்.ஐ.பி.பி-யிடம் அனுமதி பெற்றுள்ளன. இந்த எஃப்.ஐ.பி.பி., நிதி அமைச்சகத்தின் கீழே இருப்பதுதானே? நிதி அமைச்சகம் எப்படி இப்படி அனுமதி கொடுத்தது? ஸ்வான் டெலிகாம் 1,650 கோடிகளுக்குத்தான்தான் ஸ்பெக்ட்ரம் உரிமங்களை வாங்கியது. ஆனால், இந்த நிறுவனம் 50 சதவிகிதப் பங்குகளை மட்டும் விற்றதன் மூலமே 10,000 கோடியை சம்பாதித்து உள்ளது. நிதி அமைச்சகம் அனுமதி இல்லாமல் பங்குகள் திருப்பிவிடுவதற்கு வாய்ப்பு இல்லை. அப்போது நிதி அமைச்சராக இருந்த ப.சிதம்பரம்தானே  இதற்கு முழுப் பொறுப்பு?

குற்றச்சாட்டு - 3


ஆ.ராசா எழுதிய குறிப்புகளை நாங்கள் தகவல் பெறும் உரிமை சட்டத்தின் மூலம் சம்பந்தப்பட்ட துறைகளிடம் இருந்து பெற்றோம். பத்திரிகைகளில் இந்த ஊழல் குறித்துச் செய்தியாக வந்த நேரத்தில், நிதி அமைச்சருடன் தான் சந்தித்துப் பேசியதை ஆ.ராசா குறிப்பிடுகிறார். 'பங்குகள் மாறியுள்ளன, வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்கும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் வியாபார விருத்திக்கும்தான்’ என்று ராசா குறிப்பிடுவதோடு, 'பங்குகள் விற்பனையானதை, ஸ்பெக்ட்ரம் உரிமங்கள் விற்பனை செய்யப்பட்டதாக எடுத்துக்கொள்ள முடியாது என்றும், கம்பெனி சட்டத்துக்கு உட்பட்டுத்தான் இந்த பங்குகளின் பரிவர்த்தனைகள் நடந்து உள்ளன’ என்று சிதம்பரத்திடம் கூறியதாக ஆ.ராசா குறிப்பு எழுதி இருக்கிறார். அப்படி ஆ.ராசா கூறி இருந்தால், சிதம்பரம் அதை ஏற்றுக்கொண்டாரா?

குற்றச்சாட்டு-  4 :


தொலைபேசி ஒட்டுக்கேட்பில், நீரா ராடியாவும் ராசாவும் பேசிய விவகாரங்கள் வெளியாகின. இதில் ப.சிதம்பரம் பெயரும் வருகிறது. இது குறித்து சி.பி.ஐ. விசாரிக்க வேண்டாமா?''

இன்னொரு புயல் கண்ணுக்குத் தெரிகிறது!



ஜூனியர் விகடன்

No comments:

Post a Comment