Search This Blog

Tuesday, July 26, 2011

கணக்குக் கேட்ட சேரன்! கண் கலங்கிய பாரதிராஜா! - படப்பாளிகள் பாலிடிக்ஸ்


வில்லங்கமான சேரன் விவகாரத்தை ஊதிப் பெரிதாக்கிய அமீர்; சங்கடத்தில் நெளிந்த சமுத்திரக்கனி; உருக்கம் காட்டிய செல்வமணி; மேடையில் பதவியை ராஜினாமா செய்யத் துடித்த பாரதிராஜா;இவர்களைச் சமாதானப்படுத்திய ‘திடீர்’ நாட்டாமை கே.எஸ்.ரவிக்குமார்.இப்படிப் பல பரிமாணங்களைக் காட்டியது தமிழ்ப்பட இயக்குனர் சங்க நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா.


வடபழநி கமலா தியேட்டரில் 13 ஜூலை அன்று நடைபெற்ற பதவி ஏற்பு விழா; படைப்பாளிகளுக்குள் இருக்கும் ‘ஈகோ’ யுத்தத்தை வெளிச்சம் போட்டுக் காட்டியது.பாரதிராஜா மேடையில் அனலில் பட்ட புழுவாய் நெளிந்து கொண்டிருந்தார். செல்வமணியிடம், ஏண்டா என்னை இப்படி வம்பில் மாட்டி விட்டு வேடிக்கை பார்க்கிறே?" எனக் கேட்டபடி இருந்தார்.முதலில் பேசிய செல்வ மணி, சங்க இருப்பு மூன்று கோடியே இருபதாயிரம் என கணக்குக் காட்டியவர். டி-40, இயக்குனர்கள் சங்கம் நடத்திய கலை விழாவில் வருகிறேன் என்று சொல்லி ஏமாற்றிய கமல், மரியாதைக்காக வந்த ரஜினி, மேக்கப் போட்டு மேடையில் மூன்று மணி நேரம் காத்திருந்த ராதா ரவி, கடைசி நேரத்தில் காலை வாரிய சன் டி.வி. என ஒவ்வொன்றாகப் புட்டுப் புட்டு வைக்க, கூட்டம் முழுதும் செல்வ மணிக்கு ஆதரவு தெரிவித்தது. ஒன்றரை மணி நேரம் பேசிய செல்வமணி ‘பிரியாவிடை பெறுகிறேன் பதவி ஏற்பு விழா நடக்கும்’ என்று தேர்தல் அதிகாரி கவிஞர் பிறை சூடனை அழைத்தார்.அதுவரை பதவி ஏற்பு விழா சுமுகமாக நடக்கும் என்றுதான் எல்லோரும் எண்ணிக் கொண்டிருந்தார்கள்.


ஆனால் மேடையேறிய சேரன், மைக்கைப் பிடித்து 2010 டிசம்பர் வரை செல்வமணி கணக்கு கொடுத்துள்ளார். 2011 ஜனவரி முதல் ஜூலை வரை வரவு செலவு கணக்கு கொடுத்தால்தான் பதவி ஏற்பு விழா. அதை இப்போதே இந்த மேடையில் கையெழுத்துப் போட்டுக் கொடுக்க வேண்டும்" என்று கூறியதும் அதை அமீரும், ஜனநாதனும் ஆதரிக்க, செல்வமணியோ என்னை பிளாக்மெயில் செய்கிறார் சேரன்" என்று சொல்ல, ஒரே கூச்சல் குழப்பம். வார்த்தைகள் வெடித்தன. கே.எஸ். ரவிக்குமார் மேடை ஏறி, சேரன் செய்வது நியாயமல்ல" என்று சேரனையும், அமீரையும் ஒரு பிடிபிடிக்க, கூட்டம் கே.எஸ். ரவிக்குமாரை ஆதரித்துக் கரவொலி எழுப்பியது. மொத்தக் கூட்டமும் சேரன் மீது கடுப்படைந்ததால் மூடு- அவுட்டான சேரன் மூலையில் ஓரமாக ஒதுங்கிக் கொண்டார்.


 சேரனுக்கு இது தேவையா? என மொத்தக் கூட்டமும் கேட்பது போல் இருந்தது. தமக்கு எதிராகக் கரவொலி எழுப்பி, கை தட்டியவர்களைப் பார்த்து சேரன், கணக்குக் கேட்பது தவறா?" என்று கேட்டாலும் அவர் பக்கம் ஏனோ அனுதாபம் ஏற்படவில்லை.அதற்குப் பின்னர் பதவி ஏற்கும்போது சேரன், நான் வோட்டுப் போடாமல் தேர்வு செய்யப்பட்டேன், நான் அப்படித்தான் திமிராகத்தான் பேசுவேன். என்னை யாரும் ஒன்றும் செய்ய முடியாது" என்ற தொனியில் பேசியது, நிச்சயமாக அந்தக் கூட்டத்தில் சேரன் எல்லோர் மனத்திலும் ஒரு ‘மகா வில்லன்’ ஆகத்தான் தெரிந்தார். அதற்குப் பின் மைக் பிடித்த பாரதி ராஜா, கண்களிலே கண்ணீர்; குரல் தழுதழுத்தது.‘எனக்கு இது தேவையா?’ என அங்கலாய்ப்போடு, என் இனிய படைப்பாளிகளே, நான் சினிமாவில் உதவி இயக்குனராய் பத்து வருடம், இயக்குனராய் இருபத்தைந்து வருடம் என முப்பத்தைந்து வருடங்கள் கடந்து விட்டேன். மூன்று முதல்வர்களிடம் பழகிவிட்டேன். நான் நினைத்திருந்தால் அரசியலில் சேர்ந்து பெரும் புகழைச் சம்பாதித்திருப்பேன். நான் பதினாறு வயதினிலே, கிழக்கே போகும் ரயில், நிறம் மாறாத பூக்கள் என மூன்று ஹாட்ரிக் படங்கள் கொடுக்கும் வரை சங்கம் எங்கு உள்ளது என்று தெரியாது. அதன்பின்தான் சங்கத்தில் சேர்ந்தேன். ஆனால் இன்று 2020 உறுப்பினர்கள் சேர்ந்து விட்டார்கள். இருப்பு 3 கோடி என்கிறார்கள். அதனால் பெரிய கூச்சல். சரி, இருக்கத்தான் செய்யும்; தாய் உணர்வோடு இதை ஏற்றுக் கொள்கிறேன்.


இப்போதே ராஜினாமா செய்து விடுவேன். எனக்காக வோட்டுப் போட்ட 1300 பேர் வைத்துள்ள மரியாதை என்னை அப்படிச் செய்ய விடாமல் தடுக்கிறது. இந்த மேடையில் சேரன், சமுத்ரக் கனி இருவரும் துணைத் தலைவர்கள், அவர்களிடம் என் பொறுப்பையும் சேர்த்து ஒப்படைக்கிறேன்" எனக் கூறி அமர்ந்தார். சிக்கல் ஏற்பட்டால் என்னிடம் வாருங்கள். நான் தீர்த்து வைக்கிறேன்" என்றார். அதன் பின் பொதுச் செயலாளர் பொறுப்பேற்ற இயக்குனர் அமீர், செல்வமணியை ஒரு பிடி பிடித்தார்.நாங்கள் என்ன சங்கப் பணம் 3 கோடியைக் கொள்ளையடிக்க, குறுக்கு வழியில் வந்துள்ளோமா? ஒன்றரை மணி நேரம் நல்லவர் போல் செல்வமணி பேசி கூட்டத்தின் அனுதாபத்தை வாங்கிக் கொண்டார். நாங்கள் கணக்குக் கேட்பது தவறா?" என்று பேசினாலும் கூட்டம் அவரைத் தொடர்ந்து பேச அனுமதிக்கவில்லை.

கடும் எதிர்ப்புக்குப் பிறகு நன்றி கூறி முடித்துக் கொண்டார்.  மேடையில் வெயில் வாட்டத்தை விட வாடிப்போன வசந்த பாலன், மைனா சந்தோஷத்தை இழந்த பிரபு சாலமன், மங்காத்தா குஷி இல்லாத வெங்கட் பிரபு, ஆர்வம் காட்டாத ஸ்டேன்லி. இப்படி பதவி ஏற்பு விழா ஒரு யுத்த விழாவாகவே காட்சியளித்தது. பார்வையாளர்கள் மத்தியில் எந்த நேரத்தில் என்ன நடக்குமோ? என்ற பரபரப்பு கடைசி வரை இருந்தது. 

- சுமதி, கல்கி

1 comment:

  1. பகிர்வுக்கு நன்றி நண்பரே...

    ReplyDelete