Search This Blog

Saturday, July 30, 2011

நில மோசடி சில தகவல்கள்..

5 கோடிக்கு 50 லட்சம் தான்!

மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே வெங்கடசமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் சிவனாண்டி - பாப்பா தம்பதிகள். இவர்களுக்கு நெடுஞ்சாலையை ஒட்டினாற்போல இருந்த விவசாய நிலத்தை விற்று விடுவது என்று முடிவெடுத்தார்கள். ஐந்து கோடி மதிப்புள்ள அந்த நிலத்துக்கு நான்கு கோடி வரை கேட்டுப் பார்த்தனர் பலர். இந்த நிலையில்தான் மதுரை தி.மு.க. புள்ளியின் ஆட்கள், தம்பதிகளைச் சந்தித்தனர். மரியாதையா நிலத்தை எங்களுக்கு விற்றுவிடு," என்று மிரட்டினர். அந்த வயதான தம்பதிகளுக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை.

எவ்வளவோ சொல்லிப்பார்த்தும் அந்தப் புள்ளியின் ஆட்கள் பயமுறுத்தி வெறும் 50 லட்ச ரூபாய்க்கு நிலத்தை கிரயம் செய்துவிட்டார்கள். பாவம் அந்தத் தம்பதிகள். லோக்கல் போலீஸ், மதுரை என்று அலைந்தும் பலனில்லை. அவங்ககிட்ட ஏன் மோதறீங்க?" என்று ஆளாளுக்குக் கழன்று கொண்டார்கள். ஆட்சி மாறியது. நில அபகரிப்புப் புகார்கள் பெறுகிறது போலீஸ் என்று கேள்விப்பட்ட சிவனாண்டி - பாப்பா தம்பதிகள் மதுரை காவல் துறையில் புகார் கொடுத்தார்கள். புகாரை விசாரித்த காவல்துறை, அழகிரியின் நெருங்கிய தோழர்களான மாவட்டச் செயலாளர்கள் தளபதி, பொட்டு சுரேஷ், எஸ்.ஆர்.கோபி ஆகியோரை, கொத்தாகக் கைது செய்து பாளையங்கோட்டையில் கம்பி எண்ண வைத்திருக்கிறது.

இதே புகாரின் பேரில் மதுரையில் தி.மு.க. பிரமுகர் அட்டாக் பாண்டியும் கைதாகியிருக்கிறார். சேலத்தில் முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம், நாமக்கல்லில் முன்னாள் தி.மு.க. எம்.எல்.ஏ. ராமசாமி ஆகியோர் நில அபகரிப்புப் புகார்களில் சிக்கியுள்ளனர். தவிர, தமிழகமெங்கும் சுமார் 2500 புகார்கள் வந்திருக்கின்றன. இதில் 200 புகார்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுவிட்டது.  கீழ் மட்டங்களில் உள்ள தி.மு.க. பிரமுகர்கள் ரியல் எஸ்டேட் பிரமுகர்களோடு சேர்ந்து கொண்டு இந்த நில அபகரிப்புகளில் ஈடுபட்டனர்," என்கிறது காவல் துறை.

தேர்தல் பிரசாரத்துக்கு முன்பே, ஜெயலலிதாவுக்கு இது தொடர்பாகக் கடிதங்கள் வந்தன. விசாரித்த போது தி.மு.க.வினர் மிக பரந்துபட்ட அளவில் அபகரிப்பில் ஈடுபட்டிருந்தது தெரியவந்தது. எனவேதான் அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில், ‘கருணாநிதி குடும்பம், மற்றும் முன்னாள் தி.மு.க. அமைச்சர்களின் கூலிப்படையினர், மக்களிடம் அநியாயமாக மிரட்டி பறிக்கப்பட்ட நிலங்கள், சொத்துக்கள் மீட்கப்படும்,’ என்று சொல்லப்பட்டிருந்தது.ஒரு நிலத்தையோ வீட்டையோ அடாவடியாக ஆக்கிரமித்துக் கொள்வது, அடியாட்களைக் கொண்டு காலி செய்து மடக்கிப் போடுவது, போலி ஆவணங்களைத் தயாரித்து உண்மையான உரிமையாளருக்குத் தெரியாமல் உரிமையை மாற்றுவது, தங்களுக்கு வேண்டிய சொத்தை மிரட்டி, அடிமாட்டு விலைக்கு வாங்குவது என நான்குவிதமான குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்கள் மீது புகார் கொடுக்கிறார்கள்.

பெரும்பாலும் மூத்த குடிமக்களும், விதவைகளுமே பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்," என்கிறார் சட்டம் - ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி. ஜார்ஜ்.தி.மு.க. பிரமுகர்கள், காவல் துறையில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது என்று கேள்விப்பட்டதுமே புகார் கொடுத்தவரோடு பேச்சுவார்த்தை நடத்தி கணக்கை செட்டில் செய்து வழக்கிலிருந்து தப்பிப்பதும் நடக்கிறது. சென்னையை ஒட்டியுள்ள தாம்பரத்தில் ஓர் அடுக்குமாடிக் குடியிருப்புக்காக 35 லட்சம் முன்தொகையாகக் கொடுத்தார் ஒரு பெண். ஆனால் பில்டர், குடியிருப்பையும் கொடுக்கவில்லை; பணத்தையும் கொடுக்கவில்லை. அந்தப் பெண் பரங்கிமலை ஐ.ஜி. அலுவலகத்தில் புகார் செய்ய, விஷயத்தைக் கேள்விப்பட்ட அந்த பில்டர், சில மணி நேரத்துக்குள்ளேயே பணத்தை அந்தப் பெண்ணுக்குக் கொடுத்து விட்டார்.இந்த நில அபகரிப்புப் புகார்கள் வண்டி, வண்டியாகக் கிளம்ப, தமிழகமெங்கும் கீழ்மட்ட தி.மு.க. பிரமுகர்கள் மிரண்டு போயிருக்கிறார்கள். 

இதில் மற்றொரு மோசடியும் நடக்கிறது. எங்களிடம் அப்போதிருந்த மார்க்கெட் ரேட்டுக்கு நியாயமாக விற்ற ஒருவர், இப்போது அதன் மதிப்பு ஏறியிருக்கிறது என்று தெரிந்தும், ‘ஏமாற்றிவிட்டார்கள்’ என்று புகார் கொடுக்கிறார்கள். இதைக் கீழ்நிலையில் உள்ள சில காவல் துறை அதிகாரிகளும் தங்களுக்கு ஆதாயம் கிடைக்கும் வகையில் கட்டைப் பஞ்சாயத்தில் இறங்குகிறார்கள்," என்று சொல்கிறார் சென்னை மாநகராட்சி கவுன்ஸிலர் ஒருவர். கொடுக்கப்பட்ட புகார்கள் எல்லாம் வழக்குகளாகப் பதிவு செய்யப்படுவதில்லை. புகார்களை விசாரிக்கிறோம் என்று புறப்படும் அடிமட்ட காவல்துறை அதிகாரிகள் அவர்கள் பங்குக்கு கொஞ்சம் ஆடுகிறார்கள்," என்கின்றனர் தி.மு.க.வினர்.இந்தச் சூழலில் புகார்களைப் பற்றி விசாரிக்க சிறப்பு காவல் பிரிவுகளும் வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதி மன்றங்களும் அமைக்க இருக்கிறார்கள். குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஏழாண்டு வரை தண்டனையாம்.  

உள்ளாட்சித் தேர்தலுக்குள் கட்சியின் முதுகெலும்பாக உள்ள லோக்கல் பிரமுகர்களை ‘உள்ளே போடும் வகையில் அரசு செயல்படுகிறது,’ என்று புலம்புகிறார்கள் தி.மு.க. பிரமுகர்கள். அதனால்தான் உள்துறைச் செயலாளர், மற்றும் கவர்னரிடம் புகார். தொடர் போராட்டம் என்றெல்லாம் அறிவித்திருக்கிறது தி.மு.க. தான் அபகரித்த சிறுதாவூர் நிலத்தை ஜெ. திருப்பிக் கொடுக்கட்டும்," என்று சொல்கிறார் கருணாநிதி. அபகரிப்புப் புகார்களுக்கு அ.தி.மு.க. வினரும் தப்பவில்லை. அமைச்சர் அக்ரி. கிருஷ்ண மூர்த்தி, எம்.எல்.ஏ. கருப்பையா மீதும் ‘எந்தப் பாரபட்சமும் இல்லாமல் நடவடிக்கை வேண்டும்,’ என்று நடுநிலையாளர்கள் எதிர்பார்க்கிறார்கள். 

 

நில அபகரிப்பு வழக்குகளில் சிக்கிக் கொண்ட அழகிரியின் வலது கையான பொட்டு சுரேஷ் மீது குண்டர் சட்டம் பாய்ந்திருக்கிறது. தொடர்ச்சியாக, மதுரை அட்டாக் பாண்டி, எஸ்.ஆர்.கோபி, சேலம் வீரபாண்டி ஆறுமுகம், அவரது உறவினர் பாரப்பட்டி சுரேஷ் ஆகியோர் தவிர பல மாவட்டங்களில் முக்கிய தி.மு.க. பிரமுகர்களை உள்ளே குண்டாஸில் போட ஏற்பாடு நடக்கிறதாம். நிலம் விவகாரம் என்பது சிவில் மேட்டர் என்றும் அதை கிரிமினலாக மாற்றுவது நீதிமன்றம் முன் நிற்காது என்றும் சொல்கிறது தி.மு.க. தரப்பு. முன்பெல்லாம் மூன்று வழக்குகளுக்கு மேல் ஒருவர் மீது பதிவு செய்தால் குண்டாஸில் போடலாம். இப்போதெல்லாம் ஒரு வழக்கு போடப்பட்டால் கூட குண்டாஸில் போடலாமாம்.

- ப்ரியன் 

 

2 comments: