தொலைத்
தொடர்பு கொள்கையில் மாற்றம் செய்யப்பட்டதால் செல்போன் கட்டணங்கள்
உயருகிறது. இந்தியாவில் தொலை தொடர்பு புரட்சியை ஏற்படுத்துவதற்காக செல்போன்
சேவை தொடங்குவதற்கான லைசென்சும், 2ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீடும்
ஒன்றாக இணைத்து வழங்கப்பட்டு வந்தன. இதற்கு
மிகக் குறைந்த கட்டணமே வசூலிக்கப்பட்டு வந்தது. 2001-ம் ஆண்டில்
நிர்ணயிக்கப்பட்ட விலைக்கே 2008-ம் ஆண்டிலும் ஸ்பெக்ட்ரம் விற்பனை
செய்யப்பட்டது. இதனால் அரசுக்கு இழப்பு ஏற்பட்டதாக தலைமை கணக்கு
தணிக்கையாளர் குற்றம் சாட்டினார். இதனால் பெரும் சர்ச்சை எழுந்தது.
இதையடுத்து தொலை தொடர்பு கொள்கையில் மாற்றம் செய்து புதிய அறிவிப்பினை
மத்திய தொலைத்தொடர்பு மந்திரி கபில்சிபல் வெளியிட்டார்.
செல்போன்
சேவை வழங்குவதற்கான லைசென்சும், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடும் இனி தனித்தனியாக
வழங்கப்படும் என்று அறிவித்தார். அவர் கூறியதாவது:- 1999-ம் ஆண்டில் புதிய
தொலை தொடர்பு கொள்கை அறிமுகம் செய்யப்பட்டது. டெலிபோன் சேவையை அதிகரிக்க
வேண்டும் என்ற நோக்கத்துடன் உருவாக்கப்பட்ட அக்கொள்கையில் தொலை தொடர்பு
லைசென்சும், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடும் சேர்த்து வழங்கவேண்டும் என்று
கூறப்பட்டு இருந்தது. ஆனால்
தற்போது தொலைத்தொடர்பு துறையில் போட்டி அதிகரித்து விட்டதால் புதிய
கொள்கைக்கு மாற வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. எனவே இனி லைசென்சும்,
ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடும் ஒன்றாக வழங்கப்பட மாட்டாது, உரிமம் பெற்றவர்கள்
எந்த விதமான தொலைபேசி சேவையை வேண்டுமானாலும் தொடங்கி கொள்ளலாம். அதற்கு
தேவையான ஸ்பெக்ட்ரத்தை சந்தை விலை கொடுத்து வாங்க வேண்டும். இந்த புதிய
கொள்கை உடனடியாக நடைமுறைக்கு வருகிறது.
புதிய தொலை தொடர்பு கொள்கை காரணமாக ஏர்டெல், ஏர்செல், வோடா போன் ஆகிய நிறுவனங்கள் கூடுதலான ஸ்பெக்ட்ரத்தை கூடுதல் விலைக்கு வாங்க வேண்டும். மேலும் லைசென்ஸ் வழங்கும்போது தொலை தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் ஏலம் அல்லது எந்த வழிமுறையை பரிந்துரைக்கிறதோ அந்த வழி முறை கடைபிடிக்கப்படும். இந்த புதிய கொள்கையால் செல்போன் கட்டணங்கள் உயர்ந்து உள்ளன. முதல் வரிசையில் உள்ள ஏர்டெல் நிறுவனம் உயர்த்தி உள்ளது .
இந்தியாவின் முன்னணி தொலை தொடர்பு நிறுவனமான ஏர்டெல் நிறுவனம், பிரீ-பெய்டு
கட்டணங்களை 20 சதவீத அளவிற்கு உயர்த்தியுள்ளது. அட்வான்டேஸ் பேக்
பயனாளர்களுக்கு நிமிடத்திற்கு 50 பைசாவாக உள்ளூர் அழைப்புகள் மற்றும்
எஸ்டிடி அழைப்புகளுக்கு இனி, 60 பைசா என்ற அளவிலும், லேண்ட்லைன்
அழைப்புகளுக்கு நிமிடத்திற்கு 90 பைசா என்ற அளவிலும்
அதிகரிக்கப்பட்டுள்ளது. அதேபோல், உள்ளூர் எஸ்எம்எஸ்களுக்கான கட்டணம் ரூ. 1
என்றும், தேசிய எஸ்எம்எஸ்களுக்கு ரூ. 1.50 என்ற அளவிலும் அதிகரிக்கப்பட்டுள்ளது. ப்ரீடம் பேக் எனப்படும் செகண்ட்ஸ்
அடிப்படையாகக் கொண்ட சந்தாதாரர்களுக்கு செகண்டிற்கு 1 பைசா என்ற அளவில்
இருந்த உள்ளூர் மற்றும் எஸ்டிடி கட்டணம் இனி, செகண்டிற்கு 1.2 பைசா என்ற
அளவில் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய கட்டண உயர்வு முதற்கட்டமாக,
டில்லி, குஜராத், ராஜஸ்தான், ஆந்திரா, கேரளா மற்றும் மத்தியபிரதேசத்தில்
அமலுக்கு வந்துள்ளதாகவும், விரைவில் மற்ற பகுதிகளுக்கும்
விரிவுபடுத்தப்படும் என்று ஏர்டெல் நிறுவனம் வெளியிட்டுள்ள
செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய கட்டண உயர்வு
உடனடியாக அமல்படுத்தப்படுகிறது. ரேட் கட்டர் கார்டு உபயோகிப்பவர்கள், அந்த
கார்டின் வேலிடிட்டி முடிந்தவுடன் இந்த புதிய கட்டணம் வசூலிக்கப்படும்
என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பகிர்விற்கு நன்றி...வாழ்த்துக்கள் நண்பரே...
ReplyDelete