Search This Blog

Monday, July 18, 2011

மாறன்களும் மர்டோக்கும்! ஓ பக்கங்கள் - ஞாநி

பல ஆண்டுகள் முன்பு சன் டி.வி.யின் அதிபர் கலாநிதி மாறன் ஒரு பத்திரிகைப் பேட்டியில் இந்தியாவின் ரூபர்ட் மர்டோக் ஆக வளர்வதே தம் லட்சியம் என்று சொல்லியிருந்ததாக நினைவு. அதாவது பத்திரிகை, டி.வி, சினிமா, மீடியா என்று எல்லாத் தகவல் தொடர்புத் துறைகளிலும் மர்டோக் ஆதிக்கம் செலுத்துவது போல, தமிழ் நாட்டில் இந்தியாவில் முதல் இடத்தைத் தமது குழுமம் கைப்பற்ற வேண்டும் என்பதே தம் ஆசை என்று அவர் சொல்லியிருந்தார். 


இந்த வாரம் கலாநிதி மாறன், ரூபர்ட் மர்டோக் இருவர் பெயர்களும் செய்திகளில் அடிபடுகின்றன. கலாநிதிக்கும் மர்டோக்குக்கும் நிறைய ஒற்றுமைகள் உண்டு. இருவரும் ஏற்கெனவே அப்பா ஆரம்பித்து நடத்திய பத்திரிகைத் தொழிலில் நுழைந்து அடுத்து பெரு முதலாளிகளாக வளர்ந்தவர்கள். ஏற்கெனவே இருக்கும் நிறுவனங்களைக் கைப்பற்றித் தங்கள் குழுமத்தை விரிவுபடுத்துவது, போட்டி நிறுவனங்களை வளர விடாமல் முடக்குவது, தொழில் வளர்ச்சிக்கு அரசியல் தொடர்புகளைப் பயன்படுத்துவது முதலிய அணுகு முறைகள் இருவருக்கும் பொதுவானவை.  

அரசியல் சார்ந்த தொழில் சிக்கலில் இருவரும் இப்போது சிக்கியிருக்கிறார்கள். இதன் விளைவாக உலகத்தின் மூத்த வார இதழான ‘நியூஸ் ஆஃப் தி வேர்ல்ட்’ பத்திரிகையையே மர்டோக் மூடவேண்டியதாகி விட்டது. சன் குழுமத்தில் சுமங்கலி கேபிள் விஷன், சன் பிக்சர்ஸ் எல்லாம் அதே நிலைமையைச் சந்திக்கக்கூடிய ஆபத்தில் இருக்கின்றன. பங்கு மார்க்கெட்டில் சன் குழும பங்குகள் கடந்த இரு மாதங்களாகப் பெரும் சரிவைச் சந்தித்து வருகின்றன.  ரூபர்ட் மர்டோக் உலகத்தின் ஒரு பெரும் பத்திரிகை, டி.வி, கேபிள், சினிமா தொழிலதிபர். ஆனால் நிச்சயம் ஒரு முன்னுதாரணமாக இளைஞர்கள் கொள்வதற்கான தொழிலதிபர் அல்ல. தான் ஆதரிக்கும் கட்சியை ஆளும் கட்சியாக்க முயற்சிப்பது, அல்லது ஆட்சிக்கு வரும் கட்சியை, தனக்கு சாதகமான முடிவுகள் எடுக்கும் கட்சியாக ஆக்குவது என்ற அரசியல் விளையாட்டில் சுமார் 50 வருடங்களாகத் தொடர்ந்து ஈடுபட்டு வந்திருப்பவர் இப்போது 80 வயதாகும் மர்டோக். 


ஆஸ்திரேலியாவில் பிறந்து, தொழில் சட்டங்களை வளைக்கும் வசதிக்காக அமெரிக்கக் குடிமகனாகப் பதிவு செய்து கொண்ட ரூபர்ட் மர்டோக்கின் மீடியா சாம்ராஜ்யத்தில் இருக்கும் நிறுவனங்கள் எல்லாம் பிரபலமானவை. ஆஸ்திரேலியாவில் ஹெரால்ட், பிரிட்டனில் சன், சண்டே டைம்ஸ், டைம்ஸ், அமெரிக்காவில் ஸ்டார், நியூயார்க் போஸ்ட், வால் ஸ்ட்ரீட் ஜர்னல் என்று பல பத்திரிகைகள். ட்வெண்டியத் செஞ்சுரி ஃபாக்ஸ், ஃபாக்ஸ் நியூஸ், ஸ்டார் டி.வி. (நம்ம ஊர் ஸ்டார் விஜய் உட்படத்தான்) என்று மீடியா கம்பெனிகள் எல்லாம் மர்டோக்கின் நியூஸ் கார்ப்பரேஷனுடையவைதான். 

அமெரிக்காவின் பெரும் பணக்காரர்களில் 38வது இடம் மர்டோக்குடையது. உலக அளவில் 117வது இடம். ஆனால் வரி ஏய்ப்பில் மன்னன். இதுவரை அவர் லாபத்தில் ஏழு சதவிகிதத்துக்கு மேல் வரியாகக் கட்டியதில்லை. வரி ஏய்ப்பதற்காகவே பல கம்பெனிகளை உருவாக்கி அவற்றையெல்லாம் வரிச் சலுகைத் தீவுகளில் பதிவு செய்து வைத்திருக்கிறார். கடைசியாக மர்டோக் தொடர்பான சர்ச்சை, பத்திரிகைத் துறைக்கே அவமானத்தையும் களங்கத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. கடைசியாக கலாநிதி மாறன் சிக்கியிருக்கும் சர்ச்சையும் அப்படிப்பட்டது தான். சாமியார் - நடிகை தொடர்பானது என்று சன் டி.வி. ஒளிபரப்பிய ஆபாசமான வீடியோ, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வீடுகளில் பார்க்கக்கூடிய விதத்தில் பல முறை வர்த்தக நோக்கில் ஒளிபரப்பப்பட்டது. மீடியா நெறி முறைகளுக்கு விரோதமானது. 


மர்டோக் அண்மையில் இழுத்து மூடிய நியூஸ் ஆஃப் தி வேர்ல்ட் வார இதழ் கடைசியாக 28 லட்சம் பிரதிகள் விற்று வந்தது. ஐம்பதுகளில் இந்த இதழ் 90 லட்சம் பிரதிகள் வரை விற்றிருக்கிறது.நியூஸ் ஆஃப் தி வேர்ல்ட் இதழ் பற்றிப் படிக்கும்போது சில தமிழ் பத்திரிகைகளின் ஞாபகம் வரக் கூடும். ‘நியூஸ்’ எப்போதுமே பரபரப்பான செய்திகளை நம்பியே இயங்கி வந்திருக்கிறது. அரசியல்வாதிகள், சினிமா, டி.வி.நடிகர்கள், விளையாட்டு வீரர்கள் ஆகியோர் பற்றிய செக்ஸ் தொடர்பான விஷயங்களைத் தோண்டித் துருவி வெளியிடுவதுதான் ‘நியூஸ்’ இதழின் பிரதான வேலை.நியூஸ்’ இதழால் அவதூறு செய்யப்பட்டவர்கள் பலர் வழக்கு போட்டு ஜெயித்திருக்கிறார்கள். பல வழக்குகளை கோர்ட்டுக்கு வெளியே சமரசமாகப் பணம் கொடுத்துத் தீர்த்துக் கொண்டிருக்கிறது. ஒரு சிலர் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்கள். ஆங்கில நடிகர் டெனாம் எலியட்டின் மகள் ஜெனிஃபர் தெருவில் திரியும் வேசியாக வாழ்க்கை நடத்துகிறார் என்று ‘நியூஸ்’ தொடர்ந்து எழுதியதையடுத்து ஜெனிஃபர் தூக்கு போட்டுக் கொண்டு செத்தார். 

குழந்தைகளிடம் வலுக்காட்டாயமாக செக்ஸ் உறவு கொள்வோரை அம்பலப்படுத்தும் வேலையில் ‘நியூஸ்’ ஈடுபட்டது. இதில் சில உண்மையான குற்றவாளிகள் சிக்கினார்கள். சில அப்பாவிகள் அவதூறுக்குள்ளானார்கள்.  ‘நியூஸ்’ வெளியிட்ட பரபரப்பு செய்திகளில் உண்மையாக இருந்து தாக்கத்தை ஏற்படுத்திய செய்தி கிரிக்கெட் வீரர்கள் பணம் வாங்கிக் கொண்டு ஆட்டத்தை ஃபிக்ஸ் செய்வது பற்றியதாகும். மூன்று பாகிஸ்தான் கிரிக்கெட் ஆட்டக்காரர்கள் பணம் வாங்குவதை வீடியோ எடுத்து ‘நியூஸ்’ வெளியிட்டதையடுத்து மூவரும் பத்தாண்டுகளுக்கு விளையாட்டிலிருந்து தடை செய்யப்பட்டார்கள்.‘நியூஸ்’ இதழின் பரபரப்பான செய்திகளுக்குப் பின்னால் இருந்த முக்கிய அம்சம், அது அவற்றைத் திரட்டுவதற்காகச் செய்த ஊழல்களும் லஞ்சம் தரும் நடவடிக்கைகளுமாகும். பல போலீஸ் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து ஒரு வழக்கின் ரகசியத் தகவல்களைப் பெறுவதை ‘நியூஸ்’ வாடிக்கையாக வைத்திருந்தது. (தமிழ்நாட்டிலும் சில தினசரிகள் காவல் நிலையங்களில் இருக்கும் கீழ்மட்ட கான்ஸ்டபிள்களை ‘கவனித்துக்கொள்ளும்’ வழக்கம் இருந்து வருகிறது.)


இந்த நடவடிக்கைதான் இப்போது பத்திரிகையையே மூடும் நிலைக்குக் கொண்டு வந்து விட்டுவிட்டது. கடந்த சில வருடங்களாக பிரபலங்களுடைய ஃபோன்களையும், கோர்ட் வழக்குகளில் சம்பந்தப்பட்டிருப்பவர்களுடைய ஃபோன்களையும் ஒட்டுக் கேட்பதை ‘நியூஸ்’ இதழ் பத்திரிகையாளர்கள் போலீஸ் உதவியுடன் செய்து வந்தனர். டெலிஃபோன்களின் வாய்ஸ் மெயில்களைப் பயன்படுத்தி செய்திகளை எழுதினார்கள்.  நான்கு வருடங்கள் முன்பு, பிரிட்டிஷ் அரசக் குடும்ப ஃபோன்களை ‘நியூஸ்’ ஒட்டுக் கேட்டது அம்பலமானது. இளவரசர் வில்லியம் தொடர்பான செய்திகளை ‘நியூஸ்’ தொடர்ந்து வெளியிட்டபோது, ஓரிருவருக்கு மட்டுமே தெரிந்தவற்றை எப்படி வெளியிடுகிறார்கள் என்று வில்லியம் சந்தேகம் எழுப்பினார். தொடர்ந்து நடத்திய விசாரணையில் ஒட்டுக் கேட்பு அம்பலமானது. ‘நியூஸ்’ நிருபர் க்ளைவ் குட்மேன் (!) இதை ஒப்புக் கொண்டு நான்கு மாத சிறைத் தண்டனை பெற்றார்.

‘நியூஸ்’இதழுக்கும் போலீசுக்கும் அரசியல்வாதிகளுக்கும் எந்த அளவு நட்பும் உறவும் இருந்தன என்பதற்கு மேற்படி வழக்கே ஓர் அடையாளம். ஏனென்றால் அந்த வழக்கை விசாரித்த போலீஸ் அதிகாரி ஹேமேன் பதவியிலிருந்து விலகி நியூஸ் இன்டர்நேஷனல் பத்திரிகைகளின் பத்தி எழுத்தாளராகிவிட்டார்.ஒட்டுக் கேட்பு மோசடி அம்பலமானதையடுத்து பத்திரிகையின் ஆசிரியர் ஆண்டி கல்சன் பதவியிலிருந்து விலகவேண்டி வந்தது. அவரோ அடுத்தபடியாக இப்போதைய பிரதமரான கேமரோனின் செய்தி ஆலோசகராகப் பொறுப்பேற்றார்! ரூபர்ட் மர்டோக் தன் அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி ‘நியூஸ்’ இதழுக்கு எதிரான விசாரணைகளை நிறுத்திவைக்க முயற்சித்தார். ( ஒற்றுமைகள் தொடர்கின்றன?) மேலும் மேலும் தகவல்கள் கசிய ஆரம்பித்தன. காணாமற்போய் கொலை செய்யப்பட்ட ஒரு சிறுமியின் ஃபோன் வாய்ஸ்மெயில்களையெல்லாம் ‘நியூஸ்’ ஒட்டுக் கேட்டதும் அம்பலமானது. ஆயிரக்கணக்கான ஃபோன்களை ‘நியூஸ்’ ஒட்டுக் கேட்டிருப்பது தெரியவரவும், மூன்று ‘நியூஸ்’ நிருபர்கள் கைது செய்யப்பட்டனர்.


 நியூஸ்’ இதழின் டெலிஃபோன் ஒட்டுக் கேட்பு மோசடிகளை அம்பலப்படுத்தியது இன்னொரு பத்திரிகையான கார்டியன். பிரிட்டிஷ் பாராளுமன்றம் வரை இந்த விவகாரம் ஒலித்தது. நாடாளுமன்றத்தின் செலக்ட் கமிட்டி இது பற்றி விசாரித்தது. ‘நியூஸ்’ இதழின் நிருபர்கள் கமிட்டி முன்பு பொய்கள் சொன்னதாகப் பதிவாகியிருக்கிறது. கடைசியில் பிரதமர் கேமரோன் தம் ஆலோசகர் கல்சனை வீட்டுக்கு அனுப்பி விட்டதோடு நிற்காமல் கைது செய்யவும் உத்தரவிட்டார். ரூபர்ட் மர்டோக், பத்திரிகையை இழுத்து மூடி விட்டார். இன்னும் பல தலைகள் மீது நடவடிக்கை தேவை என்று குரல்கள் எழுந்துள்ளன. மர்டோக்கின் ‘நியூஸ்’ இதழ் மட்டுமல்ல, இதர பத்திரிகைகளான, சன், டைம்ஸ் ஆகியவையும் டெலிஃபோன் ஒட்டுக் கேட்பு மோசடிகளில் ஈடுபட்டதாக புகார்கள் வந்திருக்கின்றன. முன்னாள் பிரதமர் கார்டன் பிரவுனின் மகனுடைய நோய் என்ன என்று அறிவதற்காக ஈ மெயில்கள் மூலம் மருத்துவ ரிகார்டுகளையெல்லாம் திருடியதாகவும் குற்றச்சாட்டுகள் வந்துள்ளன.

 எல்லா விவரங்களும் இன்னும் முற்றாக வெளிவரவில்லை. சில வழக்குகளில் கோர்ட்டுக்கு வெளியே சமரசம் செய்து பணம் நஷ்ட ஈடாகக் கொடுத்துவிடும்போது அந்தத் தகவல்களைப் பகிரங்கப்படுத்தத் தேவையில்லை என்ற சட்ட வசதியை ‘நியூஸ்’ இதழ் குழுமம் பயன்படுத்தியிருக்கிறது. தமிழ்நாட்டிலும் சில பத்திரிகைகள், டி.வி. சேனல்கள் சட்ட விரோதமான நடவடிக்கைகளில் ஈடுபடுவதும், பரபரப்புக்காக அவதூறுகளை வெளியிடுவதும், பல அதிகாரிகள், பொது வாழ்வில் இருப்போரை பிளாக் மெயில் செய்வதும், அரசியல் செல்வாக்கையோ பண பலத்தையோ பயன்படுத்தி இவற்றையெல்லாம் அமுக்கப் பார்ப்பதும் நடந்துகொண்டுதான் இருக்கின்றன.

பிரிட்டன் போன்ற நாடுகளில் இவை நடந்தாலும், அமபலமாகும் வாய்ப்பும், அடுத்து கடும் நடவடிக்கைகள் எடுக்கும் வாய்ப்பும் நம்மைவிட அதிகமாக இருப்பதுதான் நமக்கும் அவர்களுக்கும் உள்ள முக்கியமான வேறுபாடு.  இதழியல் நாம் கண்டுபிடித்ததல்ல. மேற்கிலிருந்து நமக்கு வந்ததுதான். ஆனால் அங்கிருந்து யாரை ரோல்மாடலாக எடுத்துக் கொள்கிறோம் என்பதுதான் முக்கியம். பெஞ்சமின் பிராங்க்ளினா, புலிட்சரா, ரூபர்ட் மர்டோக்கா ? மர்டோக் காயிருந்தால், அதே படுகுழியில்தான் விழ வேண்டி வரும்.

 ஒரு பின்குறிப்பு: ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் செய்தி ஒளிபரப்பு நிறுத்தப்படவும், நான் தொடர்ந்து பங்கேற்ற ‘மக்கள் யார் பக்கம்’ நிகழ்ச்சி நிறுத்தப்படவும் அப்போது தயாநிதி மாறனின் அமைச்சகத்தில் மர்டோக்கின் ஸ்டார் டி.வி. அதிகாரிகளுடன் நடந்த ஒரு சந்திப்புதான் காரணம். நிகழ்ச்சிகள் நிறுத்தப்படாவிட்டால், சேனலின் உரிமங்கள் ரத்தாகும் என்று சொல்லப்பட்டது.

இந்த வாரப் பூச்செண்டுகள்!

1. ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் அரசிடம் ஆண்டுதோறும் தெரிவிக்கும் தங்கள் சொத்துக் கணக்குகளை, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் எல்லா பொது மக்களும் தெரிந்துகொள்ள உரிமை உண்டு என்று தீர்ப்பு வழங்கியிருக்கும் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் முருகேசன், சசிதரன் ஆகியோருக்கும், இந்த வழக்கை விடாப்பிடியாக நடத்தி வெற்றி பெற்ற சமூக ஆர்வலர் மாதவுக்கும் இ.வா.பூ. 

2.படுகேவலமான நிலையில் இருக்கும் ஆயிரக்கணக்கான தலித் மாணவர் விடுதிகளை சீரமைக்க நிதி ஒதுக்கியிருப்பதற்காக ஜெயலலிதா அரசுக்கு இ.வா.பூ.  

இந்த வாரக் கேள்விகள்!


1. ஒவ்வோராண்டும் ஆடிப் பௌர்ண மியையொட்டி தன் கூட்டங்களில் காணிக்கை வசூல் செய்யும் ஆர்.எஸ்.எஸ். அதற்கு முறையான கணக்குக் காட்டுகிறதா? ஒரு குறிப்பிட்ட தொகைக்கு மேல் நன்கொடை என்றால் செக்தான் வாங்குவோம் என்று பி.ஜே.பி. சொல்வதைப் போல ஏன் ஆர்.எஸ்.எஸ். சொல்வதில்லை? 

2. சன் பிக்சர்ஸ் மீது திரைப்பட வியாபாரம் தொடர்பாக புகார்களைப் பல தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், கொட்டகை உரிமையாளர்கள் அளித்து வரும் சூழலில், சன் பிக்சர்சின் கடைசி பிரம்மாண்டப் படமான எந்திரன் தொடர்பாக இயக்குனர் ஷங்கர், நடிகர் ரஜினிகாந்த் ஆகியோரிடம் ஜெயலலிதாவின் போலீஸ் விசாரணை நடத்துமா? ஜெ.வின் வளர்ப்பு மகன் திருமணச் செலவு விசாரணையில் ஏ.ஆர்.ரகுமானிடம் கருணாநிதியின் போலீஸ் விசாரித்ததைப் போல? 

No comments:

Post a Comment