Search This Blog

Tuesday, July 12, 2011

பால் குடிப்பதால் மாரடைப்பு, நீரிழிவு..?


காலையில் எழுந்ததுமே 'பால் பாக்கெட்' முகத்தில் விழிப்பவர்கள்தான் இங்கே அதிகம். 'சத்து நிறைந்தது' என்ற நினைப்பில் காலை, மாலை மற்றும் இரவு என்று மூன்று நேரமும் காபி, டீ, சத்து பானங்கள் என்று ஏதாவது ஒரு ரூபத்தில் குடித்துக் கொண்டிருக்கிறோம். இந்த நிலையில், 'பால் நமக்கு பகை’ என்று ஆராய்ச்சி அலறல் வந்தால்?

'ஜெர்ஸி, ஹோல்ஸ்டைன் மற்றும் கலப்பின மாடுகளின் பாலைக் குடிப்பதால் மாரடைப்பு, நீரிழிவு நோய் போன்றவை ஏற்படுகின்றன என்று ஆராய்ச்சியாளர்கள் கருத்து தெரிவித் துள்ளனர். இது உண்மையா என்பது குறித்த ஆராய்ச்சி, தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் நடைபெறு கிறது’ என்றொரு செய்தி, தற்போது பதைபதைப்பைக் கிளப்பி யுள்ளது!

'என்னதான் உண்மை?'

பால் பற்றிய இந்த குற்றச்சாட்டு பல ஆண்டு காலமாகவே முன் வைக்கப்படுகிறது. ஆனால், அதைப் பற்றிய புரிதல் இன்றி தொடர்ந்து பயன்படுத்திதான் வருகிறார்கள். எந்த இன மாட்டின் பாலைக் குடித்தால் நன்மை என்று 1990-ம் ஆண்டு முதலே ஆய்வுகளும் நடக்கின்றன.

பாலில் கால்சியம், வைட்டமின் ஏ, புரதம் போன்ற சத்துக்கள் உள்னன. புரதச் சத்திலும் கேசின் ஏ-1, கேசின் ஏ-2 ஆகிய இரு புரதங்கள் உள்ளன. இதில் கேசின் ஏ-1 புரதம் மனிதர்களுக்கு தீங்கு செய்யக்கூடியது. கலப்பின மற்றும் அயல்நாட்டு ரகங்களில் ஓரிரு மாடுகளைத் தவிர்த்து, பெரும்பாலான மாடுகளில் கேசின் ஏ-1 புரதம் மட்டுமே அதிகமாக இருக்கிறது. இவற்றின் பால், மனிதக் குடலில் செரிக்கும்போது நொதி மாற்றமடைந்து நீரிழிவு, நரம்புத் தளர்ச்சி, மூளை வளர்ச்சியைப் பாதித்தல் (ஆட்டிசம்) போன்ற வியாதிகளை உண்டாக்குவதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், பாரம்பரிய இனங்களான காங்கேயம், உம்பளாச்சேரி, மணப்பாறை, சிந்து, தார்பாக்கர், ஓங்கோல் போன்ற... மாடுகளில் கேசின் ஏ-2 புரதம் அதிகமாக இருக்கிறது. இது மனித உடலுக்குத் தீமை செய்யாத புரதம்.


பால் ஒவ்வாமை மற்றும் நீரிழிவு நோய் உள்ள குழந்தைகள், கேசின் ஏ-2 புரதமுள்ள பாலைக் குடிக்கும்போது பிரச்னைகள் வருவதில்லை. அதனால்தான் நியூஸிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் தனி வாரியம் அமைத்து, இந்தியா மற்றும் ஆப்பிரிக்கா போன்ற இடங்களில் இருந்து பாரம்பரிய மாடுகளின் பாலை இறக்குமதி செய்கிறார்கள். நம் நாட்டில் அந்தத் தெளிவு இதுவரை ஏற்படவில்லை.

இப்போது கிடைக்கும் பாக்கெட் பால், கொழுப்பு நீக்கப்பட்டது என்று தானே கூறப்படுகிறது. அதோடு சேர்ந்து இந்த கேசின் ஏ-1 புரதமும் காணாமல் போயிருக்கும் அல்லவா என்கிற சந்தேகம் சிலருக்கு ஏற்படலாம். ஆனால், நீக்கப் படுவது அதிகப்படியான கொழுப்புதானே தவிர, புரதம் அல்ல. அது பாலில் அப்படியேதான் இருக்கும்.


அதிக பால் உற்பத்திக்காக வெளிநாட்டு மாடுகளை வரவழைத்தோம். செயற்கைக் கருவூட்டலும் செய்தோம். அதோடு நின்றுவிடாமல், ஹார்மோன் ஊசிகளைச் செலுத்துதல், மரபணுக்களை மாற்றுதல் என நவீன மருத்துவ உதவியோடு அதிக பால் சுரக்க வைக்கும் வேலைகளையும் செய்கிறோம். ஆண்டில், 300 நாட்களுக்கும் பால் கறக்கும் மெஷினாகவே மாடுகளை மாற்றி வைத்திருக் கிறோம். அந்த ஹார்மோன்களின் எச்சங்கள் பாலோடு கலந்து விடுகின்றன. அதைக் குடிக்கும் நபர்களுக்கு மூட்டு வலியில் இருந்து மூளைக் கோளாறு வரை ஏற்படுகிறது.  அதற்கு வலு சேர்க்கும் விதமாக கால்நடைப் பல்கலைக்கழகமும் ஆராய்ச்சியில் இறங்கியிருப்பது வரவேற்கத் தக்கது .




- டாக்டர் பிரசன்னா                                                 காசி. பிச்சை
கால்நடை மருத்துவமனை                                       கால்நடை மருத்துவர்
திருநள்ளாறு,                                                          திருமானூர்
புதுச்சேரி மாநிலம்.                                                  அரியலூர் 


No comments:

Post a Comment