தேர்தல் தோல்விக்குப் பிறகு ஜூலை 23, 24ல் கோவையில் தி.மு.க.
பொதுக்குழுவும், செயற்குழுவும் கூடுகின்றன. தொண்டர்களின் குமுறல்
வெடிக்குமா?
காட்சி - 1:
சமீபத்தில் ஒரு முக்கிய தி.மு.க. பிரமுகரின் வீட்டில் ஒரு சுபநிகழ்வு.
இளைய, மூத்த தொண்டர்கள், வட்ட, பகுதிச் செயலாளர்கள் என்று ஏக கூட்டம்.
ஆங்காங்கே
வட்டமாக அமர்ந்து கொண்டு கட்சியின் தோல்வியைப் பற்றி விவாதித்துக்
கொண்டிருந்தார்கள். தலைவர் அழகிரி, கனிமொழி, தயாநிதி மாறன் என்று
குடும்பத்தினரை அரசியலில்
இறக்கியிருக்கக் கூடாது" என்றார் ஒரு மூத்த உடன்பிறப்பு. அழகிரி பையனும்,
ஸ்டாலின் பையனும், சன் பிக்சர்ஸ் நிறுவனமும் சினிமாத் துறையில் அடித்த
கொட்டம் தாங்க
முடியாதுப்பா" என்றார் திரைத் துறையில் பணியாற்றும் ஓர் இளைஞர். கட்சி
பெயரை டேமேஜ் செய்தது மாவட்டங்கள்தான்; அதுவும் அமைச்சராக இருந்த
மாவட்டங்கள் இந்த
ஐந்து வருட காலத்தில் சொத்து சேர்த்த வேகத்தைப் பார்த்து மக்கள் வெறுத்துப்
போயிட்டாங்கப்பா..." இப்படியாகக் கருத்துப் பரிமாற்றங்கள்.
காட்சி - 2:
தோல்விக்குப் பிறகு தலைமையைச் சுற்றி வழக்கமாக இருக்கும் மாஜி அமைச்சர்கள்
சொன்ன காரணம் ஒன்றே ஒன்றுதான்: தலைவரே...! காசை வாங்கிட்டு மாற்றி வோட்டு
போட்டுட்டாங்க... எல்லா இலவசங்களையும் வாங்கிக் கொண்டு மக்கள் நம்மை
ஏமாத்திட்டாங்க..." இவர்களில் யாரும் கலைஞரின் குடும்ப ஆதிக்கம், விலைவாசி
உயர்வு,
மின்வெட்டு அலைக்கற்றை ஊழல் போன்ற பிரச்னைகள்தான் கட்சியின் தோல்விக்கான
காரணங்கள் என்று சொல்லத் தயங்கினார்கள். பூனை கண்ணை மூடிக் கொண்டது போல்
மூடிக்
கொண்டு தங்கள் தவறுகளை மறைத்துக் கொண்டு, மக்களைக் குறை சொன்னார்கள்.
உண்மையான தி.மு.க. தொண்டனுக்கு கட்சியின் தோல்விக்கு என்ன காரணம் என்று
தெரிந்திருக்கிறது. ஆனால் அவனால் முணுமுணுக்கவும், புலம்பவும் முடிகிறதே
தவிர,
மனம்விட்டுப் பேச முடியவில்லை. அதுவும் பொதுக் குழுவில் நிச்சயம் பேச
முடியாது. துணிந்து பேசினால் சத்தம் போட்டு உட்கார வைத்து விடுவார்கள்.
அப்புறம் கட்சியிலிருந்தே
ஓரம் கட்டிவிடுவார்கள். அப்படியென்றால் தொண்டர்களின் குமுறலை எப்படி
வெளிப்படுத்துவது? வழக்கமாகத் தலைமை சிலரை அடையாளம் காட்டும். அவர்கள்
தான் பொதுக்குழுவில்
பேசுவார்கள். அதுவும் தலைவர் என்ன விருப்பப்படுகிறாரோ அதைத்தான் பேச
முடியும். அப்படியென்றால் குறைகளைச் சரிசெய்து கொண்டு கட்சி மீண்டும்
செழுமைப்பட
வாய்ப்பில்லையா?
குமுறல் - 1:
இது குறுநில மன்னர்களாகத் திகழ்ந்த மாவட்டச் செயலாளர்கள் பற்றியது.
விழுப்புரம், கடலூர், சேலம், மதுரை, திண்டுக்கல், கோவை, ராமநாதபுரம்,
திருச்சி, தூத்துக்குடி
என்று பல மாவட்டங்களில், கட்சிக்காரர்களைக் கடுப்படிக்க வைத்தது மாவட்டச்
செயலாளர்களின் மகன்கள், மகள்கள் மற்றும் உறவினர்கள் தான். கட்சி
விவகாரங்களில் இவர்கள்
எடுப்பதுதான் முடிவு. இது பற்றி யாராவது தலைமைக்கு எழுதினால், அந்த
பெட்டிஷன், சம்பந்தப்பட்ட மாவட்டச் செயலாளருக்கே வந்து சேர்ந்துவிடும்.
அவ்வளவு தான்! கடிதம்
எழுதியவர் கட்சிப் பணியிலிருந்து ஓரங்கட்டப்படுவார். இதன் காரணமாகப் பல
மாவட்டங்களில் மாவட்டச் செயலாளருக்கு எதிராக ஒரு கோஷ்டி உண்டு. கடந்த
தேர்தலில் இப்படி
ஒவ்வொரு மாவட்டத்திலும் இருந்த அதிருப்தி கோஷ்டி தங்களால் முடிந்த அளவு
உள்ளடி வேலை பார்த்து, தோல்விக்கு வழி செய்தது. இன்று உண்மையான தி.மு.க.
தொண்டன்
இந்தத் தோல்வி கட்சிக்குத் தேவைதான்" என்று கருதுகிற அளவுக்கு
அதிருப்தி; வெறுப்பு! இந்த அதிர்ச்சி கட்சியைச் சீரமைத்து ஒளிமிகுந்த
எதிர்காலத்துக்கு வழி வகுக்கும்
என்று நம்புகிறான். அவன் எதிர்பார்ப்பு பொய்த்துப் போனால் கட்சி காணாமல்
போய்விடும்.
குமுறல் - 2 :
தியாகம் செய்து அடிபட்டு, சிறை சென்று கட்சியே கதியென்று இருந்த
பிரமுகர்களும் தொண்டர்களும் ஒதுக்கப்படுவது, திடீரென்று கட்சிக்கு
வருபவர்களுக்கு பதவிகள்,
மரியாதை... அதிலும், குறிப்பாக அ.தி.மு.க.விலிருந்து வந்தவர்கள்தான்
கலைஞரைச் சுற்றியும் தளபதியைச் சுற்றியும் கோலோச்சுகிறார்கள் என்று
பொருமுகிறார்கள் தொண்டர்கள்.
கருப்பசாமி பாண்டியன், கே.கே.எஸ்.எஸ்.ஆர்., ரகுபதி, செல்வகணபதி, எ.வ.வேலு,
ஜெகத்ரட்சகன், முத்துசாமி போன்றோரைக் குறிப்பிடுகிறார்கள் தொண்டர்கள்.
இன்று
காசில்லாதவர்களுக்கு கட்சியில் துளிக்கூட மரியாதை கிடையாது" என்கிறார்
காஞ்சிபுரம் மாவட்ட பிரமுகர் ஒருவர்.
குமுறல் - 3 :
கலைஞரின் குடும்ப அதிகார மையங்கள் நடத்திய ராஜ தர்பார். மதுரைக்குத்
தெற்குப் பக்கம் அழகிரி நடத்திய அராஜகம். தேர்தலின்போது பிரசாரம் செய்வது
தவிர மற்ற
வேலைகளைக் கவனிக்கவே எங்களுக்கு நேரம் இருக்காது. ஸ்டாலின், அழகிரி,
கனிமொழி இவர்களை வரவேற்று ஏற்பாடுகளைக் கவனிப்பதற்கே நேரம் சரியாக
இருக்கும்"
என்றார் ஒரு பிரமுகர். ஒவ்வொரு அமைச்சருக்கும் கலைஞரின் குடும்ப
அங்கத்தினர் ஒருவர் கார்டியனாக இருப்பார். எனவே அமைச்சர் என்ன தவறு
செய்தாலும் தலைமை
கண்டுகொள்ளாது.
குமுறல் - 4 :
கட்சிக்காகப் பாடுபட்ட தொண்டர்கள் மகனுக்கு வேலை மாற்றல் என்று வந்தால்
அமைச்சர்கள் அலட்சியப்படுத்தியது. அதே சமயம் கட்சிக்கு
சம்பந்தமில்லாதவர்களுக்குக்
காரியங்கள் ‘நடத்திக் கொடுப்பது’, அ.தி.மு.க.காரர்களோடு கூட்டணி அமைத்து
பினாமி பெயரில் காண்ட்ராக்ட் எடுப்பது, மணல் கொள்ளையடிப்பது.ஆனால் இதுபோன்ற குமுறல்கள் பொதுக் குழுவில் எதிரொலிக்காது. தோல்விக்கான
உண்மையான காரணங்கள் அலசப்படாது. கனிமொழி கைது செய்யப்பட்டபோதும், ஜாமீன்
மறுக்கப்பட்டபோதும் உயர்மட்டக் குழு கூட்டப்பட்டதைப் பார்க்கும்போது,
கலைஞரின் குடும்பத்தை மையமாக வைத்து மட்டுமே கழகம் இயங்குவது தெரிகிறது.
கிராமங்களோடு நமக்கு
டச் விட்டுப் போய்விட்டது" என்று சொல்லியிருக்கிறார் அன்பழகன். என்றைக்கு
தி.மு.க. கூட்டம் நடத்த காண்ட்ராக்ட் விட்டார்களோ அன்றே மக்கள்
தொடர்பிலிருந்து கட்சி
விடுபட்டுப் போகிறது என்பதை அவர் புரிந்து கொள்ளவில்லை. அலைக்கற்றை ஊழலைப்
பற்றி மிகைப்படுத்தி செய்யப்பட்ட பிரசாரம்தான் தோல்விக்குக் காரணம்" என்று
ஸ்டாலின்
பேசியிருக்கிறார். உண்மையில் பார்க்கப் போனால் அலைக்கற்றை ஊழலின் முழுப்
பரிமாணமும் மக்கள் முன் வைக்கப்படுமானால் தி.மு.க.எந்தக் காலத்துக்கும்
தலைதூக்காத
நிலை உருவாகலாம்! தவறு செய்தவர்களைப் பாதுகாக்கும் வேலையை விட்டுவிட்டு
அவர்களை, கட்சியை விட்டு ஒதுக்கி வைத்தால், தலைமையின் மீது நம்பிக்கை
இன்னமும்
வளரும்" என்கிறார்கள் கழகப் பிரமுகர்கள். மாவட்ட அரசியலில் மகன்களை,
வாரிசுகளை இறக்கிய அமைச்சர்களை, மாவட்டச் செயலாளர்களை கட்சித் தலைமை
தட்டிக்
கேட்க முடியாமல் போனதற்குக் காரணம், தலைமையும் தன் குடும்ப உறுப்பினர்களை
அரசியலில் திணித்ததுதான்.
இந்தச் சூழலில் மாவட்டச் செயலாளர் என்ற பொறுப்பை எடுத்து விட்டு
பாராளுமன்றத் தொகுதி அமைப்பாளர்கள், சட்டமன்றத் தொகுதி அமைப்பாளர்கள்
போடலாமா என்று
பொதுக்குழு உறுப்பினர்களிடம் கருத்து கேட்கப்பட்டுள்ளது. இப்போது 32
மாவட்டச் செயலாளர்கள் இருக்கிறார்கள். பாராளுமன்றத் தொகுதி என்றால் 39 பேர்
இருப்பார்கள்.
புதிதாக அதிக அளவில் பொறுப்புக்கு வரும் வாய்ப்பு குறைவு. கட்சியை மேல்
மட்டத்திலிருந்து கீழ் மட்டம் வரை மாற்றி அமைக்க வேண்டும். போலி
உறுப்பினர்களைக் கொண்டு
கட்சித் தேர்தல் நடத்தக் கூடாது. இனி சும்மா அறிக்கை விட்டுக்
கொண்டிருந்தால் எடுபடாது. அடிமட்ட அளவில் பிரசாரத்தை பலப்படுத்த வேண்டும்.
தவறு செய்பவர்களைத்
தண்டிக்கும் துணிச்சல் வேண்டும். இனியும் தாமதிக்காமல் மு.க. ஸ்டாலின்
கையில் கட்சியை ஒப்படைக்க வேண்டும். கலைஞரும் பேராசிரியரும் ஆலோசகர்களாக
இருந்து
வழிநடத்த வேண்டும். ஸ்டாலினுக்கும் 60 வயதாகிவிட்டது. விமர்சனங்களுக்குள்
சிக்காமல், தனிநபர் தாக்குதலில் ஈடுபடாமல், பண்பட்ட அரசியல் நடத்துபவர்
ஸ்டாலின்"
என்கிறார் பொதுக் குழு உறுப்பினரான கந்தன்.
இந்தப் பொதுக்குழுவிலேயே ஸ்டாலினை தலைவராக அறிவிக்க வேண்டும் என்று
தொண்டர்கள் விரும்புகிறார்கள். ஆனால் ஸ்டாலின் குறித்து கலைஞரைப் போன்று
நிர்வாகத்
திறமையில்லை; பேச்சுத் திறமை இல்லை; அவரை நம்பி வருபவர்களைக் காப்பாற்ற
மாட்டார்; அதிகாரிகள் சொல்வதற்கு தலையாட்டுவார்" என்றெல்லாம் விமர்சனங்கள்
உண்டு.ஸ்டாலினுக்கு கட்சியில் முழுமையான அதிகாரத்தைக் கொடுக்க வேண்டும் என்று
மக்களும் தொண்டர்களும் விரும்புகிறார்கள். மேயர், அமைச்சர், துணை முதல்வர்
என்று
பல பதவிகளை வகித்து சிறப்பாகச் செயல்பட்டவர் அவர். கலைஞரின்
குடும்பத்திலிருந்து அவர் ஒருவரையே மற்றொரு தலைவராக தி.மு.க. தொண்டர்களும்
மக்களும்
ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். மற்ற குடும்ப உறுப்பினர்கள் விலகி நிற்பது
கட்சிக்கு நல்லது. அனுபவம் அவரை மேலும் பக்குவமாக்கும்" என்கிறார் மூத்த
பத்திரிகையாளர்
சோலை.
கட்சியைத் தங்கள் கைக்குள் வைத்திருந்த சில மாவட்டச் செயலாளர்களோ,
பாராளுமன்றத் தொகுதி அமைப்பாளர்" என்ற புதிய முறையை வர விடக் கூடாதென்று
உள்ளடி
வேலைகளில் இறங்கி இருக்கிறார்கள். கட்சியில் எந்த மாற்றமும் தேவையில்லை.
ஐந்து வருடத்துக்கு ஒருமுறை ஆட்சி மாற்றம் நிச்சயம். கூடிய விரைவில்
அ.தி.மு.க.வும்,
தே.மு.தி.க. வும் பிரிந்துவிடும். பின்னர் வாய்ப்பு நமக்குத்தான்,"
என்கிறார்கள் அவர்கள்.
மக்கள் நம்மை ஏன் தண்டித்தார்கள் என்ற உண்மையான காரணத்தை அலசி, துணிச்சலான
சில முடிவுகளை பொதுக்குழு எடுக்க வேண்டும். வெறுமனே கூடி, உப்பு
சப்பில்லாத தீர்மானங்களைப் போட்டுக் கலைந்தால் கட்சியை அப்புறம்
காப்பாற்றவே முடியாது" என்கிறார் ஒரு முன்னாள் அமைச்சர்.
ப்ரியன்
No comments:
Post a Comment