'மதுரையை மீட்பேன்!' என்று தேர்தலுக்கு முன்பு
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா அதிரடியாக சபதம் போட்டு இருந்தார்.
கடந்த வாரம் அந்த சபதத்தை நிறைவேற்றத் துவங்கிவிட்டார் முதல்வர் என்று
புளகாங்கிதப்படுகிறார்கள் அ.தி.மு.க. தொண்டர்கள்! மதுரையில் போலீஸ் கமிஷனராக இருந்த கண்ணப்பன், சட்டமன்றத் தேர்தலின்போது
தி.மு.க-வினருக்கு சிம்மசொப்பனமாகத் திகழ்ந்தார். தேர்தலை முடித்த கையோடு,
துறை ரீதியான பயிற்சிக்காக வெளி மாநிலம் கிளம்பிப்போனவர், அதை
முடித்துக்கொண்டு கடந்த 12-ம் தேதி மீண்டும் மதுரைக்குள் நுழைந்தார்.
போலீஸ் கமிஷனர் பதவியில் மீண்டும் அமர்ந்தவர், தென் மண்டல ஐ.ஜி. பதவியையும்
கூடுதலாக கவனிக்கிறார்.
தேர்தல் நேரத்தில் அவருக்குத் துணையாக இருந்தவர் மதுரை ரூரல் எஸ்.பி-யாக
இருந்த ஆஸ்ரா கர்க். அவரை திடீரெனச் சென்னைக்கு மாற்றியபோது,
கண்ணப்பனுக்குக் கைகொடுக்க யார் வரப்போகிறார்களோ என்ற நியாயமான கவலை
போலீஸ்காரர்கள் மனதில் நிழலாடியது. ஆனால், அடுத்த சில நாட்களிலேயே,
மீண்டும் மதுரை எஸ்.பி-யாகவே வந்தார் ஆஸ்ரா கர்க்.
கண்ணப்பன் அண்ட் ஆஸ்ரா கர்க் டீம் ஜோடியாகக் கைகோத்துக் களத்தில்
குதித்தது. மதுரையைச் சுத்தப்படுத்தும் காரியம் இவர்களிடம்தான்
கொடுக்கப்பட்டது. ஏற்கெனவே கலெக்டராக சகாயம் இருக்கிறார். அதனால்,
'நிர்வாகத் தடங்கல்’ இல்லாத டீம் இது!
கண்ணப்பன், ஆஸ்ரா கர்க் இருவரும் இரண்டு வருடங்கள் முன்பு, திருநெல்வேலி
சரகத்தில் ஒன்றாகப் பணி புரிந்தனர். அப்போது, சண்முக பாண்டியன் என்ற
அ.தி.மு.க. பிரமுகர் நில ஆக்கிரமிப்பு விவகாரங்களில் ஈடுபடுவதாகச் சொல்லி,
வள்ளியூர் பகுதி மக்கள் கடும் அதிருப்தியில் இருந்தனர். இதைக் கேள்விப்பட்ட
இருவரும், உடனே அந்த ஊரில் மக்கள் குறை கேட்பு முகாம் நடத்தினர். வீடுகள்,
கடைகள் ஆக்கிரமிப்பு, கொலை முயற்சி, மிரட்டல் செய்வதாக சண்முக பாண்டியன்
மற்றும் அவரது ஆட்கள் மீது மக்கள் ஏராளமான புகார்கள் தந்தனர். அதற்காகவே
காத்திருந்தவர்கள்போல் அதிரடியாக ஆக்ஷன் எடுத்து அவரவர் சொத்துகளை மீட்டு
பாதிக்கப்பட்டவர்களிடம் ஒப்படைத்தார்கள். சண்முக பாண்டியன் மீது
எடுக்கப்பட்ட கடுமையான நடவடிக்கைகள் காரணமாக, வள்ளியூர் பக்கம் அவர் இன்று
வரை திரும்பவில்லையாம். இதே பாணியில், மதுரை மாநகரம், புறநகர் மற்றும்
மாவட்ட மக்களிடம் நேரிலும், பத்திரிகைகள் மூலமாகவும் கண்ணப்பன் பேசினார்.
''நில அபகரிப்பு, நில மோசடி, வீடு காலி செய்ததில் அட்டகாசம், போலி ஆவணம்
தயாரித்து சொத்துகள் அபகரிப்பு போன்ற ரீதியில் யாராவது பாதிக்கப்பட்டு
இருந்தால், உடனே என்னை அணுகலாம். நியாயம் இருந்தால், உடனே சொத்தை மீட்டு
ஒப்படைப்போம்!'' என்று சொன்னார்.
அடுத்ததாக, காவல் நிலையங்களில் ஏட்டு முதல் எஸ்.ஐ. வரையிலும் அனைவரையும்
தனித்தனியாக சந்தித்து, மதுரையில் கடந்த காலங்களில் போலீஸின் மானம் போன
நிகழ்வுகளை எழுதி ரகசியமாகத் தன் பெயருக்கு கடிதமாக அனுப்பும்படி
வேண்டுகோள் வைத்தாராம் கண்ணப்பன். இந்த வகையில், சின்ன லெவலில் ஆரம்பித்து
பெரிய லெவல் வரை போலீஸாரை எப்படி எல்லாம் கேவலப்படுத்தினார்கள் என்பது
தெரியவந்ததாம். மேலும் போலீஸில் உள்ள கறுப்பு ஆடுகளையும் கண்டுகொண்டாராம்.
அட்டாக் பாண்டி குறித்துப் பேசிய நில மீட்பு டீம் போலீஸார்,
''அவனியாபுரத்தில் உள்ள எல்.ஐ.சி. அதிகாரி பிருத்விராஜின் வீட்டை அபகரித்த
அட்டாக் பாண்டி, அத்தோடு விடவில்லை. அந்த வீட்டுக்கு அடுத்து இருந்த
ரிட்டயர்டு ஆர்.டி.ஓ. ஒருவரின் இடம், சௌராஷ்டிரா சமூகத்தை சேர்ந்த
இன்னொருவரின் இடத்தையும் அபகரித்து தனது கஸ்டடியில் வைத்துக்கொண்டாராம்.
அந்த இருவரும் எங்களைத் தேடி வந்தால், உரிய நடவடிக்கை எடுத்து, இடத்தை
மீட்டுத்தர தயாராக உள்ளோம்!'' என்கிறார்கள்.
கண்ணப்பனின் அடுத்த மூவ்
'மூன்று கோணங்களில் கண்ணப்பன் போலீஸாரை முடுக்கிவிடுகிறார். முதலாவதாக,
விமான நிலையம் அருகே ஒரு தோப்பில் தனது கூலிப் படைக்காகவே ஜிம் நடத்தி
வந்தாராம் ஒரு தி.மு.க. பிரமுகர். அதற்குள் நுழைய ஏகப்பட்ட செக்போஸ்ட்கள்.
ஒரு கொலைக் குற்றவாளியைத் தேடிப் போன எங்கள் போலீஸ் எஸ்.ஐ. ஒருவரையே,
விரட்டி அடித்தார்கள். அந்த ஜிம் பார்ட்டியை இப்போது சும்மா விடப்போவது
இல்லை.
அடுத்து கீரைப்பாளையம் போலீஸ் ஸ்டேஷன் அருகே ஒரு தனியார் இடத்தைப் பிடுங்கி
அந்த இடத்தில் படிப்பகம் அமைத்து இருக்கிறார்கள். ஆனால், அங்கே கேரம்
விளையாடுவது, மது குடிப்பதுபோன்ற காரியங்களைத்தான் ரவுடிகள் செய்து
வருகிறார்கள். போலீஸாருக்குத் தெரிந்தும் ஏதும் செய்ய முடியாத நிலைமை. அந்த
இடம் யாருடையது என்று விசாரித்து வருகிறோம்.
அரசுத் திட்டங்களுக்காக கான்ட்ராக்ட் விடப்பட்டால், அதில் பங்கேற்க வரும்
வெளி நபர்களை மறித்து ஒரிஜினல் ஆவணங்களைப் பறித்துக்கொண்டு ஓடிவிடுவார்கள்.
அவர்கள் கண் எதிரிலேயே கிழித்தும் போடுவார்கள். போலீஸார் முன்னிலையில்
மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்ட் கடைகள் ஏலம் விடப்பட்டபோதுகூட இப்படித்தான்
நடந்தது. தி.மு.க-வின் முக்கியப் புள்ளிகளாக இருக்கும் இந்த
கொள்ளையர்களுக்கும் விரைவில் ஆபத்து வருகிறது. .
வில்லாபுரம், கூடல் நகர் ஏரியாவில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய
இடங்களை அபகரித்தவர்கள் பற்றி புகார் வந்துள்ளது. இது தவிர, வெளி ஊர்களில்
உள்ள இட உரிமையாளர்களை மிரட்டியதாக அட்டாக் பாண்டி மற்றும் சிலர் மீதும்
புகார்கள் வருகின்றன.
பத்திரப் பதிவுத் துறையில் உள்ள நேர்மையான அதிகாரிகளை, தங்கள் கஸ்டடிக்கு
கொண்டுவந்து சட்டத்துக்கு விரோதமான முறையில் நிலப் பதிவுகளைச் செய்ய
வைத்தாகவும் சிலர் புகார் செய்ய முன்வந்துள்ளனர். அவை எந்தெந்த நிலங்கள்
என்று கண்டறியும் முயற்சியில் விஜிலென்ஸ் அதிகாரிகள் இறங்கிவிட்டார்கள்.
நிலங்களை அபகரித்துக்கொண்டு வேண்டும் என்றே நீதி மன்றங்களில் பொய் வழக்குப்
போட்டு அப்பாவிகளை இழுத்தடிப்பவர்களின் பட்டியலும் நடவடிக்கைக்குத் தயார்.
திருமலை நாயக்கர் மஹால் அருகே உள்ள ஒரு கடையை அட்டாக் பாண்டியின் மைத்துனர்
அடாவடியாகப் பறித்தாரா? மாட்டுத்தாவணி ஏரியாவில் இரண்டு ஏக்கர் நிலத்தை
வேலி போட்டு வைத்திருக்கும் தி.மு.க பிரமுகர் யார்? ராஜாம்மாள் நகரில் ஒரு
ஏக்கர் தரிசு நிலத்தை உழுது பயிர் செய்து வருவதாக போலி ஆவணம் தயார் செய்து
ஆக்கிரமித்த நபர் யார் என்ற விவரங்களையும் சேகரித்துள்ளனர். அட்டாக்
பாண்டியின் வீட்டைத் தாண்டிக் குடியிருக்கும் ஒரு பிரமுகரின் மூன்று ஏக்கர்
நிலத்தை அபகரித்து தோட்டம் போட்டுவிட்டார்களாம். அந்த நிலத்தின்
உரிமையாளரும் போலீஸாரைத் தேடி வரவிருக்கிறார்...
No comments:
Post a Comment