Search This Blog

Wednesday, July 06, 2011

பத்மநாப சுவாமி திருக்கோயில் ..


ந்தியாவையே, திருவனந்தபுரம் நோக்கித் திரும்பிப் பார்க்க​வைத்து​விட்டார், ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ். அதிகாரியான சுந்தர்​ராஜன்! கேரள உயர் நீதிமன்றத்தில், 'பத்மநாப சுவாமி கோயில் நிர்வாகத்தை அரசே ஏற்க வேண்டும். உள்ளே இருக்கும் நகைகளைக் கணக்கெடுக்க வேண்டும்!’ என அவர் அதிரடி வழக்கு தொடர... 'கோயிலை அரசே ஏற்று நடத்தலாம்’ என உத்தரவிட்டது உயர் நீதிமன்றம். 108 வைணவத் திவ்ய தேசங்களில் ஒன்றான இந்தப் பழைமையான கோயிலை நிர்வகிக்கும் திருவாங்கூர் மன்னர் பரம்பரைக்குச் சொந்தமான அறக்கட்டளை, உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. அதை விசாரித்த நீதிபதிகள், கோயிலை அரசாங்கம் கையகப்படுத்த உயர்நீதி​மன்றம் அளித்த தீர்ப்புக்குத் தடை விதித்தனர். ஆனாலும், 'ரகசிய அறைகளில் பாதுகாக்கப்படும் ஆபரணங்களையும், மதிப்பு வாய்ந்த பொருட்களையும் மதிப்பீடு செய்ய​லாம்’ என உத்தரவிட்டனர். இதற்காக உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதிகள் என்.என்.கிருஷ்ணன், சி.எஸ்.ராஜன் ஆகியோர் தலைமை​யில் ஏழு பேர்கொண்ட குழுவை நியமித்தனர். இதை அடுத்துதான், கோயிலின் பாதாள அறைகளில் டன் கணக்கில் கிடந்த தங்கமும் வைரமும் அம்பலம் ஆனது. இதைப்பார்த்து நாடே ஆச்சர்யத்தில் மூழ்கிக்கிடக்கிறது!


 இந்தக் குழு, ஜூன் 27-ம் தேதி முதல், ரகசிய அறைகளைத் திறந்து நகைகளைக் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டது. ஒவ்வொரு அறையிலும் கொட்டிக்கிடக்கும் நகைகள், தங்கக் காசுகள், வைரம் உள்ளிட்ட பொருட்​களைப் பார்த்ததும் மலைத்துப்போனது கணக்கெடுப்புக் குழு. அதில் இடம் பெற்ற அதிகாரிகளிடம் பேசியபோது, ''முதல் இரண்டு அறைகள் கடந்த 160 வருடங்களாகத் திறக்கப்படாமல் பூட்டியே கிடக்கின்றன. அடுத்த நான்கு அறைகளை கோயிலில் பூஜைகளைக் கவனிக்கும் பெரிய நம்பி, தெக்கெடம் நம்பி ஆகியோர் அவ்வப்போது திறந்து, அதில் இருக்கும் நகைகளை சுவாமிக்கு அணிவிப்பார்கள். அதனால், நீண்ட காலம் திறக்கப்படாத அறைகளில் ஏதாவது விஷ ஜந்துகள் இருக்கலாம் என்பதால், அவற்றை ஒதுக்கிவிட்டு வழக்கமாகத் திறக்கும் அறைகளை ஆய்வு செய்தோம். முதல் நாளில் மூன்றாவது அறையைத் திறக்க, அதில், தங்கத்தால் தகதகத்த 20 பெரிய குடங்கள், 340 சிறிய குடங்கள் இருந்தன. தங்கத்தில் செய்யப்பட்ட எழுத்தாணி, சிலைகள் மற்றும் வெள்ளிப் பொருட்களும் சிலைகளும் கொட்டிக்கிடந்தன. அடுத்த நாளில் இரு அறைகளில் இருந்த பொருட்களை மதிப்பீடு செய்தபோது... தங்க நகைகள், வைரம் பதிக்கப்பட்ட ஆசனங்கள், குடம் குடமாகப் பொற்காசுகள், வைரம் பதிக்கப்பட்ட கலை நயம்கொண்ட பொருட்களும் குவிந்துகிடந்தன...'' என்கிறார்கள் வியப்போடு.

திருவாங்கூர் மன்னர் பரம்​பரை குறித்து அறிந்த வரலாற்று ஆய்வாளரான கோபால கிருஷ்ணனிடம் பேசினோம். ''அந்தக் காலத்தில் திருவாங்கூருக்குப் பக்கத்தில் இருந்த காயம்குளம், செம்ப​கசேரி, கோட்டயம், கொச்சி ஆகிய இடங்களின் மன்னர்கள் மீது படையெடுத்து வெற்றி பெற்றபோது, இந்த நகைகளை அள்ளிக்கொண்டு வந்து கோயிலில் ஒப்படைத்தனர். இடையில் மொகலாயர்கள், பிரெஞ்சுக்காரர்கள் படையெடுப்பின்போது, அவர்களிடம் இருந்து இவற்றைப் பாதுகாக்க ரகசிய அறைகளில்வைத்து இருக்கிறார்கள்!'' என்றார்.

சமூக ஆர்வலரும், உச்ச நீதிமன்ற முன்னாள்  நீதிபதியுமான வி.ஆர்.கிருஷ்ண அய்யர், ''கோயிலில் கிடைத்து இருக்கும் நகைகளைத் தனி நபர்கள் யாரும் பயன்படுத்த உரிமை இல்லை. இவற்றைப் பாதுகாக்க தனியாக ஓர் அறக்கட்டளை அமைக்க வேண்டும். அதன் பலன், ஏழை, எளிய மக்களைச் சென்றடையும் வகையில் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்!'' என வலியுறுத்தினார்.

இந்த விவகாரம் ஏற்படுத்தி இருக்கும் நெருக்கடி குறித்து முதலமைச்சர் உம்மன் சாண்டி, ''நகைகள் அனைத்தும் கோயிலுக்கே சொந்தம். உச்ச நீதிமன்றத்தின் ஆலோசனையைப் பெற்று நகைகளைப் பாதுகாப்பதுபற்றியும், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்தும் முடிவு செய்வோம்!'' என்றார்.கோயிலில் செல்வம் குவிந்து இருக்கும் காரணத்தால்,  இப்போது மக்கள் கூட்டம் அலை மோதுகிறது!

உள்ளே சில சுவாரஸ்யங்கள்...

இருட்டாக இருக்கும் பாதாள அறைகளின் உள்ளே பாம்புகள் இருக்கக்கூடும் என்ற அச்சம் இருந்ததால் ஊழியர்கள் ஜாக்கிரதையுடன் முதலில் உள்ளே சென்று பார்த்த பிறகே அதிகாரிகள் குழுவினர் நுழைந்தனர்.

ஓர் அறையின் கதவில் பாம்பு சின்னம் பொறிக்கப்பட்டு இருந்தது. மிகவும் அச்சத்துடன் திறக்கப்பட்ட அந்த அறையில், தங்கமும் வைரமும் குவிந்து கிடந்ததே தவிர வேறு எதுவும் இல்லை.

பாதாள அறை ஒன்றில் சுரங்கப்பாதை இருப்பதாகவும் அங்கே இருந்து கோவளம், சங்குமுகம், கொட்டாரம் மற்றும் குமரி மாவட்டத்தின் வட்டக்கோட்டை, பத்மநாபபுரம் அரண்மனைக்கு எல்லாம் செல்லமுடியும் என்று மக்கள் பேசிக்கொண்டனர். ஆனால், இதை கோயில் நிர்வாகமோ, ஆய்வுக் குழுவினரோ உறுதி செய்யவில்லை.

பத்மநாப சுவாமி கோயில் 10-ம் நூற்றாண்டைச் சேர்ந்தது. இந்தக் கோயிலைப் பற்றி நம்மாழ்வார் பாடி இருக்கிறார். 1686-ல் தீ விபத்தில் கோயில் அழிந்துவிட்டதால் 1729-ல் அப்போதைய திருவிதாங்கூர் மன்னரான மார்த்தாண்ட வர்மா கோயிலைப் புதுப்பித்தார்.  

திருவிதாங்கூர் ராஜாவான மார்த்தாண்ட வர்மா தனது ராஜ்ஜியம், செல்வம் முழுவதையும் பதம்நாப சுவாமி கோயிலுக்கு எழுதிக்கொடுத்து, தன்னுடைய தங்க வாளையும் சுவாமியின் பாதத்தில் வைத்தார். அதன் பின்னர் திருவிதாங்கூர் அரச பரம்பரையினர் 'பத்மநாப தாசர்’ என்று அழைக்கப்பட்டனர்.

பத்மநாப சுவாமி கோயிலில் எடுக்கப்பட்ட நகைகள், தங்க விக்கிரகங்கள், ஆபரணங்கள் உள்ளிட்டவற்றின் மதிப்பு 1 லட்சம் கோடியைத் தாண்டி இருப்பதால்,  இதுவரையிலும் பணக்காரக் கோயில்களாகக் கருதப்பட்ட திருப்பதி மற்றும் பொற் கோயிலையும் முந்திவிட்டது, பத்மநாப சுவாமி திருக்கோயில். 

ஆண்டனிராஜ்

விகடன் 


No comments:

Post a Comment